Monday 8 June 2020

மனைமாட்சி

எம் கோபாலகிருஷ்ணன்

தமிழினி

63 நாச்சியம்மை நகர் சென்னை 51 – 9344290920. tamilinibooks@gmail.com



எம் கோபாலகிருஷ்ணனின் மனைமாட்சி - இல்லாள், நல்லாள், பொல்லாள்


சூத்ரதாரி எம் கோபாலகிருஷ்ணனுடைய  மணற்கடிகைக்கு அடுத்து நீண்ட இடைவெளிக்குப் பின் வந்திருக்கும் சற்று பெரிய  நாவல் மனைமாட்சி. 640 பக்கங்கள். மூன்று கதைகளை, வாழ்க வளமுடன், திருச்சிற்றம்பலம், கடவுள் செய்த குற்றமடி என்ற மூன்று பிரிவுகளாக  எழுதிச்சென்றிருக்கிறார். முதலாவதன் களம் கோவை, இரண்டாவது சிதம்பரம், மூன்றாவது ஈரோடு. மூன்றுமே குடும்ப கதைகள். குறிப்பாக கணவன் மனைவி உறவுகள் பற்றியவை. நாவல் வீச்சில் வரும் பெண்கள் சிக்கல்களை உருவாக்குபவர்களாகவும், சிக்கலை தீர்ப்பவர்களாகவும் இருக்கிறார்கள். ஒன்றுக்கொன்று தொடர்பற்ற மூன்று பெருங்கதைகளையும் உள்ளீடாக இணைப்பது 'குடும்பத்தின் பெண்' என்ற உருவாக்கம்


நடுத்தர குடும்பங்களின் சிக்கல்கள் பற்றிய கதைகளை 'சோற்றுமூட்டைகள்' என்று குறிப்பிட்டிருந்தார். அப்படிக்  கேட்க சற்று சோர்வாக இருந்தது. ஆனால் இந்த நாவலை படிக்கும்போது இன்னும்  சோற்றுமூட்டைகளில் விதவிதமான ருசிகள் உண்டு என்று அறிய நேர்கிறது. தின்று தீராத சோற்று மூட்டைகள் இருக்கவே செய்கின்றன. இன்னும் சற்று  விரிந்த பார்வையுடன் மேலே சென்றால் - உலகத்தில் ஒரே கதைதான். அவரவரும் அதன் துளியை பாடிக்கொண்டே இருக்கிறார்கள் என்பதாக லாசார சொல்வதும் கேட்கிறது.

 வாழ்க்கையின் தினுசுகளே வாழ்ந்து தீர்க்க முடியாத போது அதை பற்றிய கதைகளும் பேசி தீர்க்க முடியாதவைதானே.

நாவல் சுருக்கத்தை மூன்று பகுதிகளாக தந்திருக்கிறேன். (சற்று நீண்ட பதிவுக்கு பொருத்துக்கொள்ளவும்)


I வாழ்க வளமுடன்


இந்த நாவலில் மைய சரடாக ஒரு கதையும் இடையே அதிலிருந்து கிளைக்கும் ஒரு கதையாகவும்  அமைந்திருக்கின்றன - மல்லிகை செடியை பதியன் போட்ட மாதிரி. கதை நிகழிடங்கள் கோவை, பள்ளிபாளையம், விஜயவாடா, ராஜமன்றி, பொள்ளாச்சி, கும்பகோணம், திருவையாறு.


முதல் கதை நாம் சற்றும் எதிர்பார்க்காத மூர்க்கமான பெண் சாந்தியின் பாத்திரப்படைப்பு. ஸ்ட்ரோக் வந்து மருத்துவமனையில் படுத்திருக்கும் தியாகுவை நண்பன் செந்தில் பார்க்க வருவதும்,மனைவி சாந்தி அணுக்கமாக பணிவிடை செய்யும் காட்சியுடன் நாவல் துவங்குகிறது. ஆனால் அவன் நோய்க்கெல்லாம் அவளே காரணம் என்பதே சுவாரசியமான முரண்.  தியாகுவை வெறியோடு காதலிக்கிறாள். கல்யாணம் செய்து அழைத்துப்போய்விடு என்று வற்புறுத்துகிறாள். வேலையில் சேர்ந்து ஆறுமாதத்தில் திருமணம் செய்துகொள்ள உறுதி சொல்லிவிட்டு தியாகு விஜயவாடா செல்ல, ஒரு நாள் பெட்டியோடு அவன் அலுவலகத்தில் வந்து நிற்கிறாள். கனகதுர்கா கோவிலில் எளிமையான திருமணம். தியாகுவின் பெற்றோர்கள் உடன்பட்டாலும் சாந்தியின் பெற்றோர்கள் பகிஷ்கரிக்கிறார்கள். சாந்தி அவனுடன் ரொமான்ஸ் செய்வதில் கூட ஒரு முரட்டுத்தனம் இருக்கும். அவளிடமிருந்து  கடிபடாத முத்தங்கள் அவனுக்கு அரிது.  பொதுவாக தமிழ் எழுத்தில் முத்த காயங்கள் பெண்களுக்குத்தான் அதிகம் உண்டுஇந்த நாவலில் ஆணுக்கு காயங்கள். முரட்டுத்தனம், முன்கோபம், ஆத்திரம், அடிதடி - ஆமாம் அடிதடிதான்  -  எல்லாமே அதிகம். அவளொரு  ஊதாரி செலவாளி. கேள்வி கேட்டால் அவனுக்கு அடிதான். ரத்தம் வரும்படி அவன் முகத்தில் குத்துவது முதல் இரும்பு குழாயால் காலில் எலும்பு முறிவு ஏற்படும்படி அடிப்பது வரை. ஆனால் அவன் மீது தீராத காதலுண்டு.  அவள் செய்வது எதையும் கேள்வி கேட்க கூடாது. கடனட்டைகள் தீரும் வரை செலவு செய்வாள். இரண்டு பெண் குழந்தைகள் இவர்கள்  செல்ல சண்டையை   பார்த்து வளர்கின்றனர். ஒரு நாள் இவன் எதையோ கேட்கப்போய் அவனை குளியல் அறையில் இருக்கும்போது வைத்து வெளியே தாழிடுகிறாள். மறுநாள் காலைவரை அவன் அப்படியே உள்ளேயே இருக்கிறான். ஒரு முறை அவள் பொறுப்பில்லாமல் இருப்பதால் கோபமுற்று அவன் கை ஒங்க அவனது முஷ்டியை முறுக்கி முதுகில் திருப்பி அடிக்கிறாள். ஒரு முறை அயர்ன்பாக்ஸை அவன் நெஞ்சில் தேய்க்கிறாள்ஆனால் வெளி உலகத்திற்கு அவளைப்போல ஒரு பணிவான பெண்ணை பார்ப்பது கஷ்டம் என்பதாக இருக்கும். மருத்துவர்கள் உங்கள் மனைவியின் கனிவு உங்களை குணப்படுத்திவிடும் என்கிறார்கள். ஆனால் அவனை  அடித்துப்போட்டதே அவள்தான். தியாகு மனதில் ஒட்டிக்கொண்டிருந்த ரம்யானை நண்பன் செந்தில் திருமணம் செய்துகொள்கிறான். அவள் அண்ணன் குமரேசன் கோபம் கொண்டு பேசுவதில்லை. புது வீடு புது பள்ளி புது வீட்டு உபயோக பொருட்கள் என்று வாங்கி தள்ளுகிறாள்.  கடைவீதி காரர்களே அவள் கேட்கும் பொருட்களை இல்லை என்று சொல்லி அனுப்பி 'இந்த அம்மா புருஷன் பாவம்' என்று கரிசனம் கொள்ளும் அளவுக்கு பெரும் செலவாளிகடன் மீறுகிறது. குழந்தைகளுக்கு எதிர்காலத்துக்கு மிச்சம் இருக்காது என்று பயந்து சேமிக்கிறான். அவற்றையும் இவள்  கண்டு பிடித்து செலவு செய்கிறாள்.  நாமினியாக மனைவி அப்பா என இருவராக போடாமல் பி எப் கணக்கு முழுதும் தானே நாமினியாக நியமிக்க சொல்லி வற்புறுத்தி இல்லாவிட்டால் நிர்வாணமாக தெருவில் இறங்கி நடப்பேன் என்று உடைகளை கழற்ற ஆரம்பிக்கிறாள்.  சிறு வயதில் கிராமத்தில் அப்படி செய்தவள்தான்


உன்னுடைய பணத்தேவை என்ன இப்போது அதை சொல் போதும். தருகிறேன். நாமினி விஷயமெல்லாம் எதற்கு என்று கேட்கும்போது தன்னை ஏமாற்ற அவன் அப்படி செய்கிறான் என்று கோபம் கொள்கிறாள். இந்த பேப்பரில் கையெழுத்து போடு என்கிறாள். இதெல்லாம் அப்படி பேப்பரில் எழுதி கொடுத்து  செய்ய முடிவது இல்லை. அலுவலகத்தில் படிவங்கள் மூலம் முறையாக  செய்யப்படவேண்டும்  என்கிறாள். எல்லா படிவமும் உள்ளது. அதில் போடு என்கிறாள். யோசிக்கும் அவன் முன் ஒவ்வொரு உடையாக கழற்றி போட்டுவிட்டு மேலுடைகளை ஏறக்குறைய களைந்த பிறகு பாவாடையை கழற்றிக்கொண்டு 'நீ பார்த்ததை ..ஊரெல்லாம் பார்த்தால் எப்படி இருக்கும் ?" என்று கேட்கும் வன்மம் உச்சம்அவன் கையெழுத்தைப் போட்ட பிறகு வந்து அப்படியே அணைத்துக் கொள்கிறாள்.


சாந்தி சிறுமியாக வளர்கையில் பெற்றோர்கள் இருவரும் வெளியூரில் வேலைக்கு செல்கிறார்கள். அப்பத்தாவிடம் வளர்கிறாள். அன்பு கிடைக்காமல் ஏங்கி பிடிவாதம் இறுகுகிறது என்பது பின்புல காட்சியில் சொல்லப்படுகிறதுவிழுந்து அடம்பிடிப்பது முதல், சைக்கிள் போட்டியில்சக நண்பனை தண்டிப்பது வரை, பிடிவாதத்தில்  உடைகளை துறந்து தெருவில் ஓடுவது வரை.


கிளைக்கதையாக குமரேசனின் அப்பா வைத்யநாதன் இளமைக்கால வாழ்வும் ராஜம் என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டு வந்து அவளது கைகள் பளபளப்பாக இருப்பதும், நெருப்பை தொட்டால், விரல்கள் காயமுற்றால் ரத்தம் வந்தால் கூட  கூட வலி இல்லாமல் இருக்கும் அவளை பெருவியாதி கொண்டவள் என்று நான்கே நாளில் அவளை துரத்தி விடுகிறார்கள். அடுத்த திரும ணம் செய்து பிள்ளைகள் பெற்று தற்போது ஒய்வு பெற்ற வைத்தி, இத்தனை வருடங்களாக கடமை தவறாமல் அவளுக்கு மணியார்டர் அனுப்பிக்கொண்டிருந்த கணவர் வைத்திதற்போது முதல் மனைவி  மெஸ் வைத்து கும்பகோணத்தில் இருக்கும் இடம் தெரிந்து சந்திக்கிறார். அந்த தவிப்புகளும், குடும்பம் அவரை 'இந்த வயசில் ஆசையா' என வெறுக்க  மறுபடி தேடிப்போய் இணைவதுமாக அந்த கதை நகர்கிறது


நான்கு நாள் திருமண வாழ்க்கை பற்றிய ஊமை வலியில் முப்பது ஆண்டுகளாக வாழ்ந்தபடி, மிகவும் குறைவாக பேசும் தன்மை கொண்ட, தன்னைச் சுற்றி எப்போதும்  ஆண்கள் உலவும் சூழலில், பல ஆண்கள் உள்ள இடத்தில் இருப்பதே தனக்கு பாதுகாப்பு என்று மாற்றிக்கொண்டு வாழும் சாமர்த்தியத்துடன் உள்ள ராஜம்மா பாத்திரம் பேசும் மற்றும் பேசப்படும் இடங்கள் சில லாசராவை நினைவூட்டியது.

சாந்தியின் அட்டகாசம் தாங்காமல் அவளது அம்மாவிடம் பேசிப்பார்க்கலாம் என்றால் அவர்கள் அவளை கைகழுவி விட்டுவிட்டதை புதுப்பிக்க விரும்புவதில்லை. அவளை மனநல விடுதிக்கு அனுப்பும் துணிவும் இல்லாமல் (அதற்கு அவள் இன்னும் என்னவெல்லாம் செய்வாளோ என்று அஞ்சி ) ஒரு நாள் குழந்தைகளையும் அப்பாவையும் அழைத்துக்கொண்டு ரகசியமாக ஹைதராபாத் சென்று விடுகிறான். அவள் தேடுவதற்கான எந்த தடயமும் இல்லாமல்.


நாவலில் ஓரிரு விஷயங்களை கவனித்தல் அவசியம். சாந்திக்கு உள்ள பிரச்னைக்கு காரணம் அவளது பெற்றோர்கள்.  தனது மகள்களுக்கு அத்தகைய இறுக்கம் ஏற்பட்டு விடக்கூடாது என்று அவன் எச்சரிக்கையுறுகிறான். மற்றொன்று, தான் இருப்பதால்தான் அவளுக்கு தனது வெடிப்புகளை மோத ஒரு இலக்கு இருக்கிறது. தான் இல்லாவிட்டால் அவளால் யார் மீதும் இப்படியிலான வன்மத்தை பிரயோகிக்க முடியாது. மேலும் அவளை இந்த அளவுக்கு பொறுத்துக்கொள்வதற்கு காரணமாக அவன் சொல்வது – “தான் அவளை அனுசரித்துப் போகாவிட்டால் அவளை அனுசரிக்க யார் இருக்கிறார்கள்என்று. தயிர்க்காரி எனும் கன்னட சிறுகதை ஒன்றில் இப்படியான மனப்பாங்கு உள்ள கணவன் பேசப்படுவான்.  இது குடும்ப நலனில் உள்ள முதிர்ச்சியின் உச்சப்புள்ளி. சராசரி புத்தி கொண்டவர்கள் இதை தியாகம் என்று குறுக்கிவிடக்கூடும். அது தியாகமே அல்ல.


குடும்பத்தை மையமாக வைத்து எழுதப்படும் நாவலில் இப்படியானவையே அவற்றை  ‘சோற்று மூட்டைகளாக ஆகிவிடாமல் மேலெழச்செய்பவை.


சாந்தி தன்னுடைய குணத்தை சில சமயங்களில் உணர்ந்து கண்ணீர் விடுகிறாள். தியான வகுப்புகளுக்கு செல்கிறாள். ஆனால் அவள் திமிறியபடியேதான் இருக்கிறாள்.  செலவுகளுக்கு ஆதரவாக தனக்கு கடன் அட்டையை மட்டும் விட்டுவைத்துவிட்டு, தியாகு, பிள்ளைகளுடன்  சென்றுவிட்டான் என்று உணர்ந்து தற்கொலைக்கு முயன்று காப்பாற்றப்பட்டு அம்மா வந்து உடனிருக்கிறாள்.  காத்திருக்கிறார்கள்.  மறுமுனையில் வயதுக்கு வந்துவிடும் வயதில் உள்ள மகளை வளர்த்துக கொண்டு ஹைதராபாதில் தியாகு அங்கே இருக்கிறான் என நாவல் முதற்பகுதி  முடிகிறது.



II திருச்சிற்றம்பலம்


இரண்டாவது கதையான திருச்சிற்றம்பலம் இருப்பவற்றுள் மிகவும் சிறப்பாக அமைந்திருக்கிறது என்று எனக்கு தோன்றியது.  படித்துக்கொண்டே செல்லும்போது காஸ்யபனின் 'அசடு' நாவலை நினைவு படுத்திக்கொண்டே இருந்தது


மதுமதிக்கு மணமான புதிது. தாலியின் மஞ்சள் வாசனை மாறாத இரண்டாம் நாள். உச்சி பிள்ளையார் கோவிலுக்கு வரும் கும்பலில்,  “ஒரு நிமிடம் இரு வருகிறேன் என்று சொல்லிவிட்டு போகும் கணவன் மகாதேவன் வெகு நேரம் ஆகியும் வரவில்லைஎன்ன செய்வது? தேடிச்சென்றால் நிற்க சொல்லி சொன்ன இடத்தில் இல்லாமல் போனதற்காக சிக்கல் வரும். மண்டை பிளக்கும் வெய்யில். வந்து போவோர் அவளை வித்யாசமாக பார்க்கிறார்கள். மெதுவாக தேடிப்போகும்போது ஒரு ஜன்னல் வழியாக பார்க்கிறாள். ஓட்டலுக்குள் உட்கார்ந்து தோசை சாப்பிட்டுக்கொண்டிருக்கிறான் புதுக் கணவன். இப்படி ஒரு காட்சியுடன் ஆரம்பிக்கும் நாவல் தொடர்ந்து செறிவாக பயணிக்கிறது.


கோவிலைப் பார்க்காமலேயே திரும்பும்போது நகரும் பஸ்ஸில் ஏறி போய்விடுகிறாள். இவன் அவளை தேடி அலுத்து தனியாக வீட்டுக்கு வருகிறான். 'அவளை தொலைச்சிட்டு வந்து நிக்கறியே' என்று அவனை வசை பாடுகிறார்கள். அவள் அம்மா வீடான, சிதம்பரத்துக்கு போய்விடுகிறாள். திருமணம் ஆன மறுநாளே நடு வீதியில் நிறுத்திவிட்டு தனியாக சென்று சாப்பிடும் ஒருவனை நம்பி வாழ முடியாது என்று தீர்மானமாக சொல்லி விடுகிறாள். நாவல் இறுதிவரை அவள் இவனிடம் திரும்புவதில்லை


அவள் ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தில் வேலையில் இருப்பவள். மகாதேவன் பெற்றோரை இழந்த சிறுவனாக சித்தி சித்தப்பாவால் பசிக்கு சோறின்றி வளர்க்கப்பட்டு, படிப்பு வராமல், விவசாயத்தை பார்த்துக்கொண்டு வளர்ந்தவன். பெரியவர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணம்


உடன் பணி புரியும் சரவணன் மீது ஈர்ப்பு இருக்கிறது. அவன் ஆதரவாக இருக்கிறான். போலீஸ் துறை நண்பன் (திருமணம் ஆனவன் ) கூட அவளுக்கு ஆதரவாக இருப்பவன். லோகுவுக்கு திருமண வயது சகோதரிகள் இருப்பதால் அவன் திருமணத்துக்கு தயாராக இல்லை. ஆனால் இவளோடு முழு நெருக்கத்தில் இருக்கிறான். இரண்டு லட்சம் வரை  வெவ்வேறு சமயங்களில் அவனது கஷ்டத்துக்கு இவள் தந்து உதவி இருக்கிறாள். (இப்படியாக உறவை exploit பண்ணிக்கொள்ளும் ஆண்கள் உண்டு.  அதை உறவு என்பதை விட தொடர்பு என்றே சொல்லலாம். அன்புக்கும் பணத்தேவைகளுக்கும் ஒரு உணர்வு ரீதியான முடிச்சை போட்டுக்கொண்டு, ஆனால் கமிட்மென்ட் இல்லாமல் இருப்பது. இமயம் எழுதிய 'எங்கதே' (என் கதை ) நாவலில் இப்படி ஒரு இடம் வரும்.  ஆதரவாக செயல்படும் போலீஸ் நண்பன்  அவளுடன்  தேக உறவின் சாத்தியத்தை எதிர்ப்பார்த்து இருப்பான். அதை அவன் பிற்பாடு வெளிப்படுத்த தயங்குவதும் இல்லை. அவள் அதை அறிந்தவளாக ஆனால் நட்புக்கூடிய தைரியமாக  தவிர்ப்பாள்


நாவலின் ஒரு இழையில், பள்ளியிலிருந்து மழை காரணமாக சற்று முன்னதாகவே வீட்டுக்கு வரும் வரும் சிறுமி மதுமதி  பெற்றோர்களின் படுக்கையறை நெருக்கத்தை பார்க்கிறாள். அந்த காட்சியால், அங்கிருந்து வரும் சப்தத்தால் அவளுக்கு அவர்கள் மேல் அருவருப்பு ஏற்படுகிறது. மேலும் ஒரு நாள் அம்மாவுடன் அப்படி இருக்கும் நபர் அப்பா இல்லை என்பதையும் காண்கிறாள். மேலும் எரிச்சல் கொள்கிறாள். பிறகு அப்பாவுக்கு இது தெரியும் என்பதையும் அறிகிறாள். அதை வைத்து வெறுப்பை அதிகரித்தபடி அவர்களை துச்சமாக நடத்தும் போது போலீஸ் நண்பன் முத்தரசு சொல்கிறான் "முதலில் அவர்கள் ஒரு ஆணும் பெண்ணும். பிறகுதான் உன் அப்பா அம்மா ". அவளதை ஜீரணிக்க முடிவதில்லை.  அவனுடன் பிச்சாவரம் காடுகளில் படகு சவாரி செய்கிறாள்


பிறகு ஏதோ ஒரு சமயத்தில் சரவணனின் ஆண் ஸ்பரிசத்தை அவள் உணர ஆரம்பிக்கிறாள். திருமணம் செய்து கொள்ளாமலேயே அவனோடு சேர்ந்து வாழ தயாராகி தன்னுடைய வீட்டிற்கே வரவழைக்கிறாள். வீட்டில் பெற்றோர்கள் இருந்தாலும் வேண்டுமென்றே அவனை இரவு தங்க வைக்கிறாள். தான் சிறுமியாக இருந்தபோது பெற்றோர்கள் கூடலின் போது எழுப்பிய வகை சப்தங்களை, தான் எழுப்பி அவர்களை  காயப்படுத்தி  மகிழ்கிறாள்.

இதனிடையே மனைவியை தேடி வரும் கணவன் மகாதேவன் கோவிலருகே சுற்றி வருகிறான். அப்போது அவனை கண்ட மங்கை வேண்டுமென்றே சரவணன் என்பவனை உடனடியாக வரச்சொல்லி, கணவனின் பார்வையில் படுமாறு, கைகோர்த்துக்கொண்டு, சந்தேகம் எழும்படி நடந்து கொள்கிறாள். அதன்படி கணவனுக்கு சந்தேகம் வலுக்கிறது. இந்த திருமணத்தை ஏற்பாடு செய்த பிரம்மச்சாரியாக வாழும் சோமு வாத்தியாரிடம் கோபமாக செல்கிறான். அவர் 'நீயெல்லாம் ஒரு ஆம்பளையாடா " என்று கேட்கிறார். எப்போதும் சாப்பாடு நினைவும் சாப்பாடுமாக இருப்பதும், முதலிரவில் தரையில் ஜமக்காளம் விரித்து படுத்துக்கொள்வதுமாக உள்ள மகாதேவன், ஒரு உத்தியோகத்தில் இருக்கும் மங்கைக்கு பொருந்தும் கணவனே இல்லை


இந்த சமயத்தில் கோவில் படியில் உட்கார்ந்து அழுது கொண்டிருக்கு அவன் மேல், பஜனை கோஷ்டியில் பாடிச்செல்லும் கூட்டத்தில் உள்ள ஒரு பெண்ணின் பார்வை படுகிறது. அவள்தான் மங்கை. அவள் படி இறங்கி வந்து அவனுக்கு ஆறுதல் சொல்கிறாள். அவர்களிடம் சிநேகம் நெருக்கமாகிறது. அவள் கணவனால் கைவிடப்பட்ட பெண். கடன் தொல்லை தாங்காமல் கடன் தந்த போக்கிரி ஆசாமி கடனை இவள் மூலம் சரி செய்து கொள்ள முயலும்போது, இவள் பெற்றோர்களால் ஊர் ஊராக செல்லும் இந்த பஜனை கோஷ்ட்டி குருவிடம் அடைக்கலம் அனுப்பப்படுகிறாள். பஜனை கோஷ்டி தலைவர் அண்ணாவுக்கு தற்போது முளைத்த இவளது காதல் கோபமூட்டுகிறது.


மகாதேவனுக்கு மங்கைக்கும் நெருக்கம் அதிகமாகி,  தனது வீட்டுக்கு அவளை அழைத்து வருகிறான். மனைவியை விட்டு தனியனாகி இருந்த வீட்டின் கொல்லைப்புறம் புதர்கள் மண்டி கிடக்கின்றன. மங்கை வந்த பிறகு அவற்றை ஆட்களை வைத்து சரி செய்கிறாள். அன்றைய இரவு அவளோடு கழிக்க வேண்டும் எனும் ஆசை அவனுள் ஊறி வருகையில் அந்த மாலை பளபளவென்று ஒரு பாம்பு ஊர்ந்து செல்கிறது. இத்தனை நாளாக கவனிக்கப்படாமல் புதர் அண்டிய இடத்தில் இருந்து கிளம்புகிறது என்று ஒரு வரி வருகிறது. காமத்தை குறிக்கும் அந்த  வரி அதன் பிறகும் நீண்டு ஒரு பத்தி எழுதப்படுகிறது. இது கவித்துவம் கூடி வந்த ஒரு இடத்தை தனது விவரிப்பால் நீர்க்கடித்து விட்டது. இரவைக் கழிக்கிறார்கள். தன்னை அவன் ஆணாக உணரும் சந்தர்ப்பங்களை உருவாக்கி தந்து தனது பெண் உணர்வுகளை அவளும் மீட்டுக்கொள்கிறாள்.


பிறகு ஒரு நாள் திருமணம் இப்போதைக்கு சாத்தியம் இல்லை. பஜனை அண்ணாவிடம் அனுமதி வாங்க வேண்டும். இவனுக்கும் இன்னும் விவாக ரத்து ஆகவில்லை போன்ற காரணங்கள் சொல்லி மங்கை தற்காலிக பிரிவு கொள்கிறாள். எங்கோ மகாராஷ்டிரா கோவிலுக்கு பஜனை குழு இடம் பெயர்கிறது.


இவனுக்குதன்னை விரும்பவும் ஒரு பெண் இருக்கிறாள் என்பதை ருசுப்பிக்கவும், ருசி கண்ட காமத்திற்கு பதில் சொல்லவும், தனது வீடு என்ற அடையாளம் கொள்ளவும் விருப்பம் ஏற்பட்டு மங்கையிடமிருந்து விவாகரத்து கோரி சோமு வாத்தியாரிடம் செல்கிறான். அதே சமயம் விவாக ரத்து கோரி மதுமதியும் லோகுவை வாத்தியாரிடம் அனுப்புகிறான். இங்கே சோமு வாத்தியாரின் பாத்திரம் அழகாக படைக்கப்பட்டிருக்கிறது. ஜானகிராமனை நினைவுக்கு கொண்டு வருகிறது. அவருக்கு அவனது  விவாகரத்திலும்,  அந்த பஜனை கோஷ்டி பெண்  இவனுக்கு அமைவதில் உள்ளூர விருப்பம் இல்லை. அம்மாஞ்சியான இவனுக்கெல்லாம் கூட ஒரு பெண் சுகம் கிடைக்கிறதே என்ற ஆதங்கம் சோமு வாத்தியாருக்கு தனது வாலிபம் போன சமயத்தில்  உண்டாகிறது. ‘நினைப்பின் முதைச்சுவற் கலித்த முற்றா இளம்புல்என்ற குறுந்தொகைப் பாடல் சொல்லும், இளம்புல்லை தின்ன முடியாமல் பழைய நினைவாக நக்கிக் கொள்ளும் பசுவைப் போல நிறைவுறா காமத்தில் இருக்கிறார் சோமு வாத்தியார்.


அதனால்  மங்கையை தனக்கு மணம் முடித்து வைக்க பஜனை அண்ணாவிடம் சிபாரிசுக்காக மகாதேவன் சோமு வாத்தியாரை அழைத்துப் போகும்போது,  அவள் மேல் இவர் கண்கள் மேய்கின்றன. ஏதோ ஒப்புக்காக பேசி ஆறுமாதம் ஆகட்டும் என்று பேசிவிட்டு வந்து விடுகிறார். மேலும் மகாராஷ்டிரத்தில் இருந்து திரும்பிவிட்ட அவளை காணவும் பஜனை அண்ணாவிடம் பேசி முடிக்கவும், சிபாரிசு துணைக்கு அழைக்கும்போது தனக்கு வெளியூர் போகும் வேலை இருப்பதாக பொய் சொல்லி தவிர்க்கிறார். தனக்கு வேறு ஆதரவே இல்லை என்று நம்பும் மகாதேவனுக்கு இப்படி ஒரு மெல்லிய துரோகம் செய்கிறார். ஆனால் அப்போதும் அவன் அவரை தவறாக எண்ணாமல்  'என்ன ஆச்சு இவருக்கு" என்று சொல்லி போகிறான். மகாதேவன் ஒரு சாப்பாடு பெருச்சாளி. அவனது விவாக ரத்து விஷயமாக சரவணன் பேச வரும்போது குடிக்க ஏதாவது கொண்டுவா என்று சோமு வாத்தியார் உள்ளே அனுப்பும்போது, உள்ளே சென்று அங்கிருந்த அப்பளத்தை நொறுக்கி வாயில் போட்டுக்கொண்டு  பானத்தை கொண்டு வருகிறான். மனைவி விட்டுவிட்டுப்போன வருத்தமாக வந்து கோவில் படியில் உட்கார்ந்து கொண்டு இருக்கும்போது கூட அங்கே பிரசாதம் தருகிறார்கள் என்று போய் வாங்கிக்கொள்கிறான்.


இதன் நடுவே அந்த பஜனை கோஷ்டி பெண் மஞ்சு, கோவில் படிக்கட்டும் வரச்சொல்லி மதுமதியிடம் பேசுகிறாள். மதுமதி தீர்மானமாக இணைய மறுக்கிறாள். அந்த பெண் மிகுந்த முதிர்ச்சியுடன் பேசுகிறாள்.  'நீயார் இதை பேச ' என்று ஒரே வார்த்தையில் கேட்டு அவளை திருப்பி அனுப்பி விட நினைத்து வந்த மதுமதிக்கு,  ஆச்சரியம் தருகிறது.  'ஒரு ஆணை வெல்லவேண்டும் என்பதெல்லாம் இல்லை. அப்படியே வெல்வது என்றாலும் அது ஆணின் துணையோடுதான் சாத்தியம்' என்று சொல்கிறாள். அதை உதறி விட்டு போகும் மதுமதி, லோகுவுடன் அத்தனை சமரசத்தோடும் உடன்பட்டு சேர்ந்து இருக்க ஒப்புக்கொள்கையில் அந்த பெண் சொல்வது ஞாபகத்துக்கு வருகிறது.  மிகவும் நுட்பமான ஒரு இடம் இது.


இளவயதில் பெற்றோர்களை இழக்கிறான். சித்தி கொடுமை. சித்தப்பா மரணம். ஆளுமைத்திறனோ படிப்பு அறிவோ இல்லை. ஏதோ ஒரு 'ஆள்' என்ற அளவில் அவனுக்கு திணிக்கப்பட்ட மனைவி அவனது அசட்டு தனத்தால் ஒரே நாளில் விட்டு பிரிகிறாள். யாரோ ஒரு பெண் அவனிடம் அன்பு காட்டி அவனுக்குள் ஆசைகளை உயிர்ப்பிக்கிறாள். தற்காலிக பிரிவை கொடுக்கிறாள். அவன் நம்பும் ஒரே ஆள் தனக்கு மணம் பேசி முடித்த சோமு வாத்தியார்.  அவர் அவன் அறியாமல் - ஏன்.. தானே அறியாமல்அவனுக்கு மெல்லிய துரோகம் செய்கிறார்.

இந்த நிலையில் மங்கை பஜனை கோஷ்ட்டி அண்ணாவின் துர்குணம் அறிந்து,  ஒரு நாள் இவளை தேடிவந்த அவனிடம் இவள் இல்லை என்று சொல்லி, மறுபடி வந்தால் உதைப்பேன் என்று மிரட்டி அனுப்புகிறார். இதை அறிந்த அவள் அண்ணாவை முகத்தில் ரத்தம் வரும்படி அடித்து நையப்புடைக்கிறாள். மகாதேவனோடு சேர்கிறாள்.


மதுமதிக்கு சரவணன் கிடைக்கிறான். ஆனால் இன்னமும் திருமணம் கைகூடுவதில்லை. போலீஸ் நண்பன் முத்தரசு  மனப் பொருமலோடு  அவர்களை வாழ்த்துகிறான். அதை அவளிடமே சொல்லவும் செய்கிறான்.





III கடவுள் செய்த குற்றமடி


மூன்றாவதாக உள்ள கடவுள் செய்த குற்றமடி - எனது பார்வையில் சற்று கட்டுக்குறைவான பகுதிசிறிய கதைத்தன்மை மீண்டும் மீண்டும் சுழன்று வருகிறதுதவிர மூன்றாவது பாகமாக ஒரே தன்மையை மீண்டும் படிக்கும் காரணமாக கூட இருக்கலாம்.


அருவியில் குளிக்கும் கணவன் ஆனந்த சங்கர் திடீரென பெருகும் வெள்ளத்தால் அடித்துக் கொண்டு போவதை கையாலாகாமல் பார்த்துக்கொண்டிருக்கும் மனைவி மஞ்சு தான் முதல் காட்சி. கணவனை இழந்து குழந்தைகளோடு அவன் நினைவுகளோடேயே வாழும் அவள். அவளுக்கு மறுமணம் செய்துவிட நினைக்கும் மாமியார், அவள் மீது விருப்பம் கொண்டிருக்கும் லோகு அவளுக்கு திருமணம் ஆனதை அறிந்து அவள் கணவன் உடன் தறி வேலைக்கு சேருகிறான். கண்ணியமான நடத்தையுடன். கணவனின் தம்பி மஞ்சுவை வேறு விதமாக கையகப்படுத்த நினைப்பதும், ஆனால் அவன் மனைவி பெரும் கோபக்காரி என்பதால் அச்சமுற்று கிடப்பவனாகவும் நகரும் அவர்கள் கதை அவள் லோகோவை ஏற்பதாக முடிகிறது.


இணையாக நகரும் மற்றொரு கதையில் முதலிரவன்றே கணவன் கண்ணப்பனிடம் மனைவி வாணி (கலைவாணி ) தனக்கு முன்பே ஒரு காதலன் இருப்பதாக சொல்கிறாள். (மௌனராகம் சினிமா பார்த்த தமிழ் சமூகத்துக்கு இது அதிர்ச்சி தருவதில்லை.) அவளை புரிந்து கொள்ளும் கண்ணப்பன் தன்னை ஏன் பலி கடா ஆக்கவேண்டும் ? தனது பெற்றோரை ஏன் ஏமாற்ற வேண்டும் ? என்ற கோபமே கொள்கிறான். இதை வேண்டுமென்றே மறைத்த அவர்கள் பெற்றோர் மேலும் கோபம் கொள்கிறான்இதை தாண்டி அவளது காதல் பற்றி கேட்கிறான்.

சசி எனும் மலையாளி அவளது காதலன். எதிர் வீட்டு பையன். ஆனால் அம்மாவுக்கு அடக்கியவன். கல்யாண பேச்சை எடுத்தால் தவிர்ப்பான். அம்மாவிடம் அனுமதி பெரும் தைரியம் கிடையாது. சொல்லும் தைரியம் கூட இல்லை. இந்த நிலையில் இந்த திருமணம் நடக்கிறது. திருமணம் ஆன பிறகு ஆறு மாதத்தில் வந்து அழைத்து போய்விடுகிறேன் என்கிறான். அவன் சொல்வதும், இவள் அதை ஏற்பதும், கணவனிடம் சொல்வதும், அவன் அவர்களை இணைத்துவைக்க விரும்புவதும் கதை.



தனது பெற்றோர்கள் இதை அறியாத படியும், அலுவலகம் அறியாத படியும் சமாளிக்கிறான். இதனிடையே முதலிரவு அன்றும், அதன் பிறகான சமயங்களிலும், தவிர்க்க முயன்று முடியாது போன தோல்விகளிலும் இவர்களிடம் சிலமுறை உடலுறவு நிறைவேறுகிறதுதந்து வீட்டில் மூடிய அறையில் அழுகையோடு அவள் சசிக்கு மொபைலில் பேசுகிறாள். அனைத்தையும் அறிந்து கொண்டு 'சசி என்ன சொல்றார் ? எப்ப வாறாராம் " என்று கேட்டுக்கொண்டிருக்கிறான் கண்ணப்பன்.



இறுதியில் அவளை அம்மா வீட்டுக்கு அனுப்பி வைக்க முடிவு செய்து கிளம்பி போகிறார்கள். அங்கே மாமியார் வீட்டில் இவனால் நிலை கொள்ள முடிவதில்லை. இதனிடையே தனது பெற்றோருக்கும் அவளது பெற்றோருக்கும் பேச்சு துவங்கி வாய்ச்சண்டை அநாகரிக எல்லைகளை தொடுகிறது. ஆனால் வாணி சசி வந்தால் போதும் என இருக்கிறாள். வாணியின் அம்மா எடுத்திருக்கும் தங்கை வாழ்க்கை கருதி இந்த அப்பட்டமான அத்து மீறலை எதிர்க்கிறாள். முன்தலை வழுக்கையுடன், தட்டு வேட்டியுடன் வரும் சசியை பார்த்தது இவனிடம் என்ன ஈர்ப்பு கொண்டு காதலித்தால் என்று ஆச்சரியம் கொள்கிறான் கண்ணப்பன். சசியை வெளியே சென்று தனியிதத்தில் சந்திக்கிறாள். அவனோடு உடலுறவு கொள்கிறாள்அவளை விட்டு விட்டு தற்காலிகமாக கணவன் விடைபெற்று போகிறான். இங்கு வாணி இருந்த நாட்களில் அவளை சந்திப்பதை தவிர்க்கிறேன். சமயம் கிடைக்கும் இடங்களில் அவளது நெருக்கத்தை கொள்கிறான். 'கலை கலைனு கண்ட இடத்தில் கை வைக்க மட்டும் தெரியுது. ஆனால் கூட்டிட்டு போறதுக்கு பயந்து சாகிறாய்' என்கிறாள்.



இப்போதைக்கு நீ பெங்களூரில் உள்ள கணவனிடம் செல். நான் வந்து அழைத்து போகிறேன் என்று அனுப்பி வைக்கிறான். போ போ னு சொல்றியே அவன் ஏன் புருஷன். என்னை தொடாம  விட்டு வைப்பானா? என்று கேட்கிறாள். அவர்களோடு தேக உறவு நடந்திருக்கிறதா என்று கேட்க தயங்கும் சசியிடம் தான் அதை தவிர்க்க முடியாது என்பதை அப்பட்டமாகவே சொல்கிறாள். இத்தனை மனச்சிக்கலில் கணவன் என்ற ஆணுடன் உறவை ஏற்று திளைத்தது சசி என்பவனை நினைத்தா ? தனது காமத்துக்கான தீர்வா ? என்ற கேள்வி அவளிடம் எழுகிறது.



இந்த நிலையில் சசிக்கு வேறு ஒரு ஊரில் திருமணம் ஆகிவிடுகிறது என்ற செய்து கிடைக்கிறது. அது அவன் அம்மாவின் நிர்பந்தம்தான். மறுபடி வந்து தன்னை அழைத்து போவான் என்று இன்னும் நம்புகிறாள். இதற்கிடையே இப்போதைக்கு ஊருக்கு கிளம்பலாம் என்று முடிவு செய்து ஒரு மாலையில் ஆற்றுப்பக்கம் வருகிறாள். மழை வருகிறது. ஓடும் நீரில் நீல நிற விஸ்பர் பிளாஸ்டிக் தாள் சிக்கி அலைகிறது. தனது விலக்கு நாட்கள் பற்றிய யோசனை வருகிறது. விலக்கு தள்ளி போனதை அறிகிறாள். இந்த கருவுறல் செய்தி அவளுக்கு இரண்டு அதிர்ச்சிகள் தருகின்றன. சசி வந்து அழைத்து போவான் என்று இருக்கும் சமயத்தில் இப்படி ஆகி விட்டதே என்று . இதன் தந்தை யார் என்பது மற்றொன்று ? ஆற்றில் குதிக்கிறாள். காப்பாற்றப் படுகிறாள். மனநல மருத்துவரிடம் செல்கிறாள். யார் என்று முடிவாக தெரியாத நிலையில் கணவனே தந்தை என்று சொல்ல அறிவுறுத்துகிறார்.  


சுய கழிவிரக்கத்திலும், மன்றாடும் மன நிலையிலும்  அழுதுகொண்டு அவள் கணவன் கண்ணப்பனை அழைக்கிறாள். அழைத்துப்போக அவன் வருகிறான் என்று முடிகிறது நாவல்.

இந்த பகுதியின் பலவீனங்கள் நிறைய உண்டு. சசியிடம் இத்தனை தூரம் மன்றாடுவதற்கு எந்தவிதமான காதல் நெருக்க முகாந்திரமும் சொல்லப்படவில்லை, இத்தனை தூரம் விட்டு கொடுத்து ஏற்றுக்கொள்ள கண்ணப்பனுக்கு என்ன காரணம் என்பதும் தெரியவில்லை (அவனது தங்கை இப்படி காதலித்தது ஒருவனை, திருமணம் செய்து கொண்டது ஒருவனை என்ற காரணம் வலுவாக இல்லை), சசி கலைவாணியை தன் வாழ்வின் பகுதியாக உணரும் தருணம் ஒன்று கூட இல்லை, காதலன் விரைவில் வந்து அழைத்து போவான் என்று நம்பி திருமணத்துக்கு கழுத்தை நீட்டும் அளவு வாணி அப்பாவியாக இல்லை, காதலி வேறொருவன் மனைவியாக ஆனபிறகு தைரியமாக வந்து அழைத்துப்போகும் அளவுக்கு சசியின் ஆளுமையோ தீவிரமா எங்கும் காணப்படவில்லை. இப்படி கண்ணப்பன் வாணி திருமணம் நடக்கும் அளவுக்கு விபரீத நிகழ்வுகளோ தவிர்க்க முடியாமையோ எதுவும் நிகழவில்லைதவிர வாணி தன்னை என்னவாக  உணருகிறாள்?  இரண்டு ஆண்களின் விருப்பத்துக்கு - ஒருவன் உரிமையோடும் மற்றொருவன் நம்பிக்கை தராத உரிமையோடும் -   தான் உடன்படுவது என்பது என்னவாக இருக்கிறது அவளுக்கு ? இத்தனை மனித தவறுகள் இருக்கும் பகுதிக்கு 'கடவுள் செய்த குற்றமடி ' என்ற தலைப்பு ஏன்இப்படியான மனிதர்களை படைத்ததாலா ?



இறுதியாக

மனைமாட்சி


மூன்று கதைகளை ஒரே தொகுப்பில் வைத்திருப்பதால் ஒரு ஒட்டுமொத்த புரிதலை நாம் எதிர்பார்க்கிறோம். மூன்றிலும், குடும்பம், கணவன், மனைவி, உறவு, காமம், பிரிவு, தன்னிச்சையான உணர்வுகள், ஏமாற்றம், சுயநலம் போன்றவை ஊடுருவி செல்கின்றன.  ஏறக்குறைய, இதில் பெண்கள் முதல் நிலையிலும் ஆண்கள் இரண்டாம் நிலையிலும் அமைந்திருக்கின்றார்கள்.  சாந்தி, மதுமிதா, வாணி - மூவரிடமும் ஒருவித கனிவுக்கு பின்னால் பதுங்கி இருக்கும் குரூரம் கசிந்தபடியே இருக்கின்றது


மூன்று கதைகளின் ஆரம்ப காட்சிகள் வித்யாசமாக துவங்குகின்றன. ஸ்ட்ரோக் வந்து கிடைக்கும் கணவனுக்கு அணுக்கமாக பணிவிடை செய்யும் மனைவிதான் சிக்கலுக்கே காரணம் (இரு முகங்கள் ) - தீர்மானம் ஆகி மறுநாள் கோவில் கும்பலில் மனைவியை தனியாக நிற்கவைத்து விட்டு ஓட்டலில் சென்று சாப்பிட்டுக்கொண்டிருக்கும் கணவன்  - விளையாட்டாக குளித்துக்கொண்டு இருக்கும் கணவன் பெருகும் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்படுவது.


மங்கலம் என்ப மனை மாட்சி என்ற குறளில் மனைவியின் செய்கைகள் என்ற பொருளில் அமைவதால், இந்த நாவலில் பெண்களின் பங்கு என்பதை விட மனைவியாக அமைந்த பெண்களின் பங்கு என்று எடுத்துக்கொண்டு பேசுவதே தலைப்புக்கும் எழுத்தாளருக்கும் நியாயம் செய்யும்.


தொகுப்பின் முதல் இரண்டு பெருங்கதையில், இரண்டிரண்டு சிறு கதைகள் நிகழ்கின்றன. ஒன்றோடொன்று தொடர்பு கொண்டிருக்கின்றன. ஆனால் மூன்றாவது கதையில்  இரு கதைகள் ஒன்றோடு ஒன்று சம்மந்தம் இல்லாமல் தனித்தனி கதையாக போகின்றன.


நாவலில் சூழல்கள் பற்றிய விவரணைகள் இயல்பாக மனதில் ஒட்டிக்கொள்கின்றன. வெளிச்சம், வெயில், இரவு, விளக்கு, மலை, அணைக்கட்டு, எல்லாம் . மரங்கள், பயிர்கள் என்று பொதுவாக சொல்லாமல் - வேங்கை, புங்கம், வாகை, பூவரசு, தீக்கொன்றை, வேம்பு, மரமல்லி, முருங்கை மரம், மனோரஞ்சிதப்பூ, கருவேலம், மஞ்சள் பூங்கொன்றைவேர்க்கடலை, மஞ்சள், சோளம், - என பெயர்களை குறிப்பிட்டு நிறைய எழுதுகிறார்.


முக்கியமாக மூன்று ஆண் பெண் கட்டமைப்புகளை பார்த்தோமானால்


1) தியாகு, செந்தில், வைத்தி  -  சாந்தி, ரம்யா, ராஜம், சாவித்ரி,

2) அசடு, சோமு வாத்யார், அண்ணா, லோகு, சரவணன், போலீஸ் நண்பன் முத்தரசு  மதுமதி,  மங்கை

3) லோகு, கண்ணப்பன், சசி, - மஞ்சு, வாணி


தியாகுவுடன் படுக்கையறை வரை  சுதந்திரம் கொண்ட சிநேகிதிகள் லதாவும், மணிமேகலையும்கண்ணப்பனின்  தங்கை ஜோதியும் - நாவலில் பங்கு இருந்தும், உலவாத  பாத்திரங்களாக இருக்கின்றனர்.

முதல் கதையின் தியாகுவுக்கும் மூன்றாவது கதையின் கண்ணப்பனுக்கும் நிறைய ஒற்றுமை உண்டு. ஆனால் அவ்வளவு பொறுமையான குணத்தை மேற்கொள்ளவேண்டிய ஒரு நியாய அழுத்தம் தியாகுவுக்கு இருப்பதை உணரமுடிகிறது. ஆனால் கண்ணப்பன் பாத்திரத்துக்கு அப்படி எதுவுமே இல்லாமல் இருக்கிறது. ஒரு லட்சிய புருஷனாக உள்ளீடற்ற  கோளமாக தெரிகிறான்.


இந்த நாவலில் ஒரு இடம் - பஜனை கோஷ்டி பெண் மங்கைமதுமதியை (சாப்பாட்டு பிரியன் மகாதேவனிடமிருந்து ஒரே நாளில் விலகியவள் ) சிதம்பரம் கோவிலில் சந்திக்கும் இடம்மங்கை மதுமதி சொல்லும் காரணங்கள் மேம்போக்கானவை என்பதை எளிதாக நாடி பிடித்து விடுகிறாள். அப்போது சொல்கிறாள் "இதையெல்லாம் தாண்டி உனக்குள்ள ஒரு பயம் இருக்கு. அதா உன்னோட கம்பீரத்தை வைத்து மத்தவாகிட்ட இருந்து மறைச்சுக்கற" என்கிறாள். பிறகு "அப்படி ஏதாவது பயம் இருந்தா அதையும் ஒரு ஆம்பிளையோட ஒத்தாசையோடதான் தாண்ட முடியும்".  இந்த வரிகள்தான் நாவலில்  வெவ்வேறு புள்ளிகளை தொடும் சாரமாக உள்ளன. குடும்ப உறவுகள் என்று நிலவுகின்ற சிக்கலான வலைப்பின்னலில், இந்த சமர்கள்தான் நிகழ்கின்றன - குறிப்பாக இணைகளுக்கு இடையில்.


இது பெரிய நாவலாக இருப்பதால் இதை படித்த நண்பர்கள் சந்தித்து உரையாடலாம். அப்போது இந்த கட்டுரையில் சொல்லப்படாத பலவும் வெளிவரக்கூடும்.


குடும்பம் என்பது ஆணும் பெண்ணும் இணைந்து உண்டாக்கும் நிதர்சன பிம்பம். அதில் குழந்தைகள், பெற்றோர்கள், உறுப்பினர்  என்று பலரும் இருந்தாலும் குடும்ப அமைப்பு என்பது ஸ்தூலமாக தெரியும் வெறும் நபர்கள் அல்ல. அது கண்ணுக்கு தெரியாமல் அவரவரும் உண்டாக்கும் மன அமைப்பின் மகரந்தங்களால் கட்டப்படும் தேன் கூடு. இனிப்போ கசப்போ, அது ஒட்டுமொத்த திரவம். அது ராணித் தேனீக்களால்தான்  கட்டமைக்கப் படுகிறதுஒரு பெண் ஏற்கப்பட்டாலும், நிராகரிக்கப்பட்டாலும், அது அவளது இருப்பாலும் சரி, இன்மையாலும் சரி குடும்ப அடையாளத்தில் முக்கிய ஒன்றாக இருக்கிறது. இதற்கு காரணம், ஆணும் பெண்ணும் நேரடியாகவோ மறைமுகமாகவோ , தமது பரஸ்பர அதிகாரங்களால் உருவாக்கும் அமைப்பு இது. பெண்கள் சிக்கலை உருவாக்குபவர்களாகவும், அதற்கு களிம்பாக இருப்பவர்களாகவும் இருக்கிறார்கள்.


இது பற்றி எழுதவேண்டும் என்றால் இதன் பின்னணியில் வேறொரு கட்டுரைதான்  எழுதவேண்டும்.



இயற்பியலின் தாவோ - பிரிட்ஜாஃப் காப்ரா

இயற்பியலின் தாவோ பிரிஜாப் காப்ரா Fritjof Capra மொ பெ போன். சின்னத்தம்பி முருகேசன் சந்தியா பதிப்பகம் #இயற்பியலின்_தாவோ படிக்கத்  துவங்கி இர...