Tuesday, 21 September 2021

கைநிறை செந்தழல் > சவிதா > பரிதி பதிப்பகம்

                   
  












கனிகளாகும் கண்ணீர் துளிகள்  

கைநிறை செந்தழல் > சவிதா > பரிதி பதிப்பகம் >7200693200

 கவிதை என்பது எப்போதுமே தன்மொழியில் முகிழ்ப்பது.  மலையிடையே சுனைக்குள் ஊரும் நீர் போல. அது பெருகி, வெளிப்பட்டு, ஆறாகி பெருகுவது எல்லாம் பிறகுதான். காவிரி நீரைக்  கையில் அள்ளும்போது அது உருவான சிறிய நீர்குகை மனதில் தோன்றினால் – ஒரு கணமேனும் – அவன் கவிதையை ரசிக்கும் வாசகனுக்கு மிக அருகில் இருப்பவன்.

சவிதாவின் இந்த கவிதை தொகுதியில் புராண கால மாந்தர் முதல் நம் முன் நேற்று ஸ்கூட்டி ஓட்டுபவர் வரை பேசப்பட்டாலும், அந்த கவிதைகள் உருவான கணங்களை திரும்பி பார்க்க வைக்கின்றன. நினைத்து பார்க்க வைக்கின்றன.

எழுதியவருக்கும் படிப்பவருக்கும் எந்த சம்மந்தமும் கிடையாது. சம்மந்தம் எல்லாம் படைப்புக்கும் படிப்பவருக்கும் இடையேதான். அதற்கு பிறகுதான் எழுதியவரைப் பற்றிய அடையாளம் உருவாக வேண்டும். கறந்த பாலென.

 சவிதா, சாதாரணமான வார்த்தைகளைத்தான் உபயோகிக்கிறார். ஆனால் அவற்றின் சேர்க்கையில் ஒரு இறுக்கத்தை உருவாக்க முயன்று வாசகன் அதை தாண்டும்போது அதன் தொடர்ச்சியை எளிதாக கைப்பிடித்துக்கொள்ள வைத்து விடுகிறார்.

 சில கவிதைகளில், வாசகன் ஏற்கெனெவே கொஞ்சம் விஷயங்களை தெரிந்து கொண்டு கவிதை படிக்க வரவேண்டும் என்று எதிர்பார்க்கிறார். எளிமைக்கும் நீர்த்துப் போனதற்கும் உள்ள வித்யாசமே தெரியாத அளவு வெறும் வார்த்தைக் கோர்வைகளை கொண்டிருக்காத கவிதைகள் இதில் உண்டு.

 அன்றாடத்தின் கீற்று ஒன்றை எடுத்து அதில் புலப்படும் நேரடித்தன்மையை வைத்து ஒரு அபிப்ராயத்தை பகிர்ந்து கொள்ள முனைகிறார்.  அதிருஷ்டவசமாக பெரும்பாலான கவிதைகளில் அபிப்ராய திணிப்பு இல்லை.

 இத்தொகுப்பில் மரபின் சில சொட்டுக்களை விரவலாக வைத்திருக்கிறார். பெண்மனது கொள்ளும் அவசங்களை புகார்களாக இல்லாமல் பொருண்மைகளாக வைக்கிறார். கவிதைகளை காட்சிப்படுத்தி வரைந்த படத்தின் விளக்கங்களாக வடிவமைக்கிறார். பெரும்பாலும் புலம்பல்கள் இல்லை. சுய கழிவிரக்கம் இல்லை. வன்மம் மூலம் தன்னை நிறுவிக்கொள்ளும் அவசரம் இல்லை. மிக இலகுவாக மரபின் பார்வைகளை கொச்சைப் படுத்திவிடவேண்டிய வீம்பு இல்லை. கிழித்து தொங்கவிட வேண்டும் என்ற ஆத்திரங்கள் இல்லை. தோலுரித்து காட்டுவதில்தான் முனைப்பு கொள்கிறார். இத்தனை ‘இல்லை’கள் இருப்பதால் இந்த கவிதைகளை உவப்புடன் வாசிக்கப் புகலாம். 

 பொதுவாகவே, சற்றே நீண்ட கவிதைகள் இவருடையவை. தொகுப்பில் உள்ள 45 கவிதைகளில் ஒரே பக்கத்துக்குள் அடங்குபவை மூன்று கவிதைகள்தாம். நீண்ட கவிதைகளின் இடையே நல்ல வரிகள் சில அடுக்கம் பெறுகின்றன.  

 சிலவற்றைப் பார்க்கலாம் - 

மனம் கசங்கி வலிகள் வழியும் சிலவற்றை சொல்லும்போது -

 கழற்றி பாலில் போடப்பட்ட

தாயின் மஞ்சள் கயிற்றிலிருந்து

தங்கத்தை பிரித்தெடுத்திருக்கிறீர்களா?

 நடுத்தர வாழ்வின் வழக்கமான இரவுக்கு வரவிருக்கும் கணவனை சொல்லும் மனைவியின் அலுப்பை சொல்லும்போது –

 அனைத்து

அந்தரங்க அலைபேசி செயலிகளிலும்

வழிந்து ததும்புகின்றன

மறைக்கப்பட்டும்

மறுக்கப்பட்டும்

ஒளியிழந்த காதலும்

விழிகூசும் காமமுமாக

 இறுக்கமான ஒரு மனோ நிலையைப்பற்றி சொல்லும்போது -

 முழுகிப்போக

முடிவெடுத்தபின்

கிணற்றுக்கும் கடலுக்கும்

உப்பு மட்டும்தான் வித்யாசம்

 எத்தனை சிதிலப்பட்டாலும் எளிதில் தீர்ந்துவிடாத அன்பைப் பற்றி சொல்லும்போது –

 உருவாகி அழிந்தபின்னும்

அன்பின் முட்டுதல்

இடையறாது நடைபெறுகிறது

ஒவ்வொரு அலையிலும்

 காதலிலும் காமத்திலும் செயல்படும் முத்த வித்யாசத்தை பற்றி சொல்லும்போது -

 தாய்ப்பூனை

குட்டியின் கழுத்து கவ்வும் பாதுகாப்பை

நீ என்றேனும் முத்தத்தில் உணர்ந்திருக்கிறாய் எனில்

இன்று உனக்கும் முத்த தினமே

  ஒரு ஸ்திரமற்ற ஆனால் விட்டுவிடமுடியாத உறவின் சீண்டலைப் பற்றி சொல்லும்போது --

 எப்போதும் தோற்றுக் கொண்டிருக்கிறாய்

இருபக்கமும் சமமான நிறையை நிறுவ முடியாமல்

என்றேனும் சமமாய் நிறுவ

உன்னால் முடிந்ததெனில்

அன்று பொருள் கொள்

உனை என்னைவிட்டு விலக

நான் அனுமதித்துவிட்டேன் என

 என சிலவற்றை குறிப்பிட்டுச் சொல்லலாம்.

 திரியில் எரியும் தழலின்

தன் முறைக்காக கணம்தோறும் தவமிருக்கிறது

ஒவ்வொரு எண்ணெய்த் துளியும் –

போன்ற சில வரிகளில் நுட்பமான அவதானங்களும் அவற்றை சரியான இடங்களில் உவமிக்கவும் முடிகிறது இவரால்.

 புராணிக பாத்திரங்களின் குணாம்சங்கள் சில கவிதைகளில் கனமானதொரு அம்சமாக அமைகிறது. சில கவிதைகளை நீர்க்கடிக்கிறது.  பகிர்ந்து கொள்ள வரும் ஒன்றைப்பற்றி தனக்கு தோறும் எல்லாவற்றையும் அடுக்கி சொல்லிவிடவேண்டும் எனும் ஒரு மெல்லிய அவசரம் தெரிகிறது. அது தேவையில்லை. வாளால் வெட்டும்போது கடத்தப்படும் அழுத்தம் சுருள்கத்தியை சுழற்றும்போது கிடைப்பதில்லைதானே!

 நடராஜர், பிரகலாதன், ஜமதக்னி, யூதாஸ், பார்த்தன், அல்லி, திரெளபதி, சீதை, சூர்பனகை, துர்வாசர், நளன், வாசுதேவன், தேவகி, ரேணுகா, கிளியோபாட்ரா, ஹெலன், விசித்ரவீர்யன், பாசுராமர், திருதிராஷ்டிரன், சஞ்சயன், என பாத்திரங்கள் உலவுகின்றன.  சிம்பு, விஜய் சேதுபதி, புதுமைப்பித்த, நாபா, போன்ற பெயர்களும்.

புராண நிகழ்வுகளைச் சொல்லி அந்த கதைமாந்தர்களை நடப்புலகின் வெளிச்சத்தில் கொண்டுவந்து உருட்டிப் பாக்கிறார். உரசிப் பார்க்கிறார். அதன் மூலம் அவர் வெளிக்கொணரும் மன உணர்வுகள் எண்ணப் பொறிகளை உருவாக்குகின்றன. சாணைக்கல்லின் பொறிகளாக சீறி மறைகின்றன.

உதாரணமாக – ‘பானை ஒன்று வனைய அகழ்ந்தெடுத்த களிமண்ணை’ என்ற கவிதையில்  ஜமதக்னி, ரேணுகா புராண கதையிலிருந்து ஒரு பெண்ணுணர்வை எடுத்துக்கொண்டு அதை ரேணுகாவைப் பற்றி சொல்வதன்மூலம் நமக்கு சொல்கிறார். இன்னும் கூட வரிகளை சுருக்கி இருக்கலாம் என்றாலும் மிக நல்லதொரு கவிதை. அதில் ஒரு பகுதி -

 முழுக்க நனைந்தவள்

தலை முழுகிய பின்னரே

கரை ஏறினாள் கடைவாயோரம்

வழிந்திருக்கும் பெண்மையைத் துடைத்தபடி.

ரேணுகாவை இன்றைய ஒரு பெண் மனதுக்குள் வைத்து எளிதாக இந்த கவிதைக்குள் நுழைந்து வெளியே வரலாம். வரும்போது சாரத்தின் மகரந்தங்கள் நம்மேல் ஒட்டி இருக்கும்.  இது இவரது இத்தகைய பார்வையின் அல்லது உத்தியின் பலம் என்று கூட சொல்லலாம். இவ்வகை கவிதைப் பார்வையை இவர் தனது தனித்துவமாக கூட எதிர்வரும்காலத்தில்  மெருகேற்றலாம். ஆனால் ஆழமான பரிசீலனைகளுக்கும் பொருத்தப்பாடுகளுக்கும் பிறகே அந்த பாதையை தேர்ந்தெடுக்கவேண்டும். தீவிரத்தை விட ஆழங்களே இதில் முக்கியம்.

ஆனால் இதே புராண அம்சம் ‘இணையாய் சபையில் ஆட உடை ஒத்துவராத உபத்திரவம்’ என்ற கவிதையில்  செறிவாக ஆரம்பித்து பல புராண பாத்திரங்களை பட்டியலிட்டுப் போகிறது. கவிதை நீர்த்துக்கொண்டே போகிறது. இறுதியில் கீர்த்தி சுரேஷ் தொண்டை எரிய புட்டியை கவிழ்த்துக் கொள்கிறாள், சியர்ஸ் சொல்லிப் போகிறாள் டெனிம் அணிந்த அதே துரகத்தழல் எரித்த இன்னொருத்தி என்று முடிக்கும்போது அந்த முடிச்சு நன்றாக விழுகிறது. ஆனால் கவிதை சோபிக்கவில்லை. ஏன் என்று மறுபடி மறுபடி வாசிக்கும்போது புரியும்.  உண்மையில் இது ஒரு நல்ல கவிதை. ஆனால் அதில் செதுக்கலில் தள்ளவேண்டிய பிசிறுகள் சில உள்ளன.

 முத்தங்களை பற்றிய கவிதையில், முத்தம் என்பதை பாதுகாப்பின் மென் கவ்வலாக காண்கிறார். இது ஒரு பெண்ணைப்பார்த்து பேசும் கவிதை போலத்தான் இருக்கிறது. முத்தம் என்பதை உடல் சார்ந்த இயக்கமாக, அது ஒரு தொழிற்பெயர் என்கிறார்.

 காமத்தில் சேர்த்தியில்லை

அந்த காதலின் உதடொற்றுதல்.

காதலில் சேர்த்தியில்ல

அந்த காமத்தின் கவ்வுதல் என்று மெல்லிய வித்யாசத்தை காண்பிக்கிறார். ஆனால் நிறைவாக இருப்பது எதுவென்றால் -

 தாய்ப்பூனை /  தன் குட்டியின் கழுத்து கவ்வும் பாதுகாப்பை /

நீ என்றேனும் முத்தத்தில் / உணர்ந்திருந்தாய் எனில்/ இன்று உனக்கும் முத்த தினமே/  என்று முடிக்கிறார்.

 இதில் ஒருமை கூடி வரவில்லை. கவிதையை கவனிப்போம்.  ‘வேட்கையின்றி வேறென்ன தொழிற்பெயர் அது ?” என்று அதை ஒரு சாதாரண உடலியக்கமாக குறிப்பிடுகிறார்.  பிறகு ஒற்றுதல், கவ்வுதல் என்று முத்தத்தின் பேதங்களை ரசனையாக சொல்கிறார். முத்தமொழி பேசுபவனுக்கு இல்லை உடற்தேசபேதம் என்று – அன் விகுதி மூலம் ஆணைப் பற்றிய ஒரு விமரிசனமாக சொல்கிறார். பிறகு பூனைக் கவ்வலின் பாதுகாப்பு முத்தத்தில் இருந்தால் உனக்கும் இன்று முத்த தினமே என்று முத்தம் என்பது மனதின்பாற் செயற்படும் ஒன்றாக சொல்கிறார். தவிரவும் கவிதை ஒரு பெண்ணை நோக்கி பேசும் கவிதையாக மாறிக்கொண்டே வருகிறது.

 பெண் மனது விரும்பும் மேன்மைகளை, துய்க்க விரும்பும் மிருதுக்களை பித்தேறிய ஆணால் அடையாளம் கண்டு கொள்ள முடிவதில்லை என்பதை அழகான உவமைக் காட்சி ஒன்றின் மூல காட்சிப்படுத்துகிறார்.

 ஓங்கியளந்தானை

பட்டாம் பூச்சி மட்டும்தான் பிடித்து தரக் கேட்டேன்

நிதமும் என்ன வேண்டுமென கேட்ட பொழுது

ஒரேயொருமுறை

அவன் பூக்களுக்கிடையே நுழையத் தெரியாமல்

இலைகளை

துவம்சம் செய்து கொண்டிருக்கிறான்.

சுதந்திர மனத்துடன் ஏற்படுத்திக் கொண்டுவிட்ட சிநேகங்கள் தங்கள் அதிகாரத்தை நிறுவ முயல்கையில், தள்ளி வைப்பதற்கு சற்றும் யோசிப்பதில்லை என்பதை சற்று ஜனரஞ்சகமாக

 அல்லிக்குப் பிறகு

அரசாளும் திமிரெல்லாம்

உன்னிடம் வந்துவிட்டதென

வாட்ஸப்பில் பத்தி பத்தியாய் திட்டிய

பார்த்தனை நேற்றிரவு

ப்ளாக் செய்துவிட்டேன்.

 இதில் வாட்ஸப், அல்லி, இரவு, ப்ளாக் செய்வது போன்றவை மிகவும்  நடப்புலகு சார்ந்த சிநேகிதச் சிக்கல்களை சொல்கிறது. அநாயசமாக. இன்றை அதனுள் தைத்து வைத்திருக்கிறது இக்கவிதை.

 சில கவிதைகள் நினைவுகளின் வாசமாக வரிகளில் அடைத்து வைத்து விட்டிருக்கிறார்.

வீட்டை விட்டுப் போன

மோகன் மாமா வாங்கித்தந்த புடவை

கிழிந்தபின்னும் தூங்குகிறது

அம்மாவின் பெட்டியில்

* * *

முதல்முறை தொட்டபோது

அணிந்திருந்த புடவையை

துவைக்காமல் வைத்திருக்கிறேன்

உன் வாசத்தை தொலைத்துவிடும் பயத்தில்

 தனித்தனி நினைவுப்பிசிறுகளை அடுக்கி இருக்கும் நீளமான கவிதை  ஒன்றில்

                     சேலை கட்டும் பெண்ணின் வாசத்தை

                    கமலளவு ரஜினி புரிந்து கொண்டதாகவே தெரியவில்லை

                    தர்பார் வரை

 போன்ற வாரப்பத்திரிககளுக்கான துணுக்குகள் இருக்கும் அதே கவிதையின் கடைசியில்தான்

 அடர்ந்த கருப்பில்

வாடாமல்லிப் பூக்கள் இறைத்த புடவையில்

உத்தரத்தில் தொங்கி இருந்த சரசு அக்கா

துணிக்கடைக் காரனின் பாக்கியை

அலமாரிக்குள் வைத்துவிட்டே இறந்திருந்தாள்

 என்ற கனமான கவிதையும் விழுந்திருக்கிறது. தொகுப்பின் சிறந்த வரிகளுள் சில இவை.

இது கலாப்ரியாவின் சிநேகிதனின் தாழ்வான வீடு என்ற கவிதையை நினைவூட்டியது. வறிய வீட்டின் பல இடங்களை பழைய நினைவுகளால் சுட்டிப்போகும் நீண்ட கவிதையில்  

 நின்றால் எட்டிவிடும்
உயரம்
என்று சம்மணமிட்டு
காலைக் கயிற்றால் பிணைத்து -
இதில் தூக்கு மாட்டித்தான்
செத்துப்போனார்
சினேகிதனின்
அப்பா.

                                                             - கலாப்ரியா

பெண்ணைப் புரிந்து கொண்ட அல்லது அனுசரித்த அல்லது ஏற்றுக்கொண்ட இன்னொரு பெண்ணாக ஒரு கவிதை. காலம் போகப்போக எத்தனையோ எரிச்சல்கள் காலம் தந்த களிம்புகளால் வடு நீங்கிப் போன்கின்றன என்பதாக –

 கையளவு சரிகை குறைந்ததற்காக

திருமணத்தில்

சண்டையிட்ட மாமியாருக்கு

நைட்டியிட்டு அழகுபார்க்கிறாள்

நடையிழந்த காலத்தில்.

 இதில் ‘அழகு பார்க்கிறாள்’ என்கிற வார்த்தை இல்லாவிட்டால் இது வன்மத்தை சொல்லும் கவிதையாக மாறிவிடும் அபாயம் இருக்கிறது.  கவனமாக இதை எழுதி இருப்பார் என்றே தோன்றுகிறது.

* * *

இரவின் ஆணவம், டான்டேலியின் இறகு, மோகக்கனல், கருப்பித்துப் போகிற இருட்டு, கைநிறை செந்தழல் போன்ற நல்ல கவிதைக்கு தேவையான சொற்ப்ரயோகங்கள் இருக்கின்றன.  ஈருருளி, பக்க கைகாட்டி என்றெல்லாம் அவஸ்தைப் படவேண்டாம். பின்னால் ப்ரேக், சிங்கிள் மதர் ‘போரடிக்கிறது’ என்ற வார்த்தைகள் வந்து தங்கள் வேலையை செய்திருக்கின்றனவே.

* * *

 சவிதாவுக்கு நட்புடன் ஆலோசனை சொல்லவேண்டுமெனில் – நிறைய எழுதுங்கள் அவற்றில் மேலும் செறிவாக்குங்கள் தொகுப்பை மேலும் வெற்றிபெற செய்ய இந்த அடர்த்தி உதவும். ஏனென்றால் கவிதைகள் தொகுப்புக்கு செல்வதில்லை. வாசகர்களை தேடி செல்கின்றன.

* * *

 தொகுப்பில் செறிவான கவிதைகளில் இரண்டைச் சொல்ல வேண்டும் என்றால்

                  அவளுடைய நிலையாமை உங்களை

    இவ்வளவு பதற்றத்துக்கு உள்ளாக்குகிறது ”  என்ற கவிதையும்

  “பானை ஒன்று வனைய அகழ்ந்தெடுத்த களிமண்ணை “ என்ற கவிதையும்.

இந்த இரண்டிலும் மிகச்சன்னமானதொரு ஒரு பொருத்தமின்மை இருக்கிறது எனது பார்வையில். ஆனாலும், அவற்றை மீறி இந்த இரண்டு கவிதைகளும் நல்ல இரு கவிதைகள் என்பேன். பேசுபொருளை சரியாகவே கடத்துகிறது என்பதால். அந்தரங்க உணர்சிகள் மிகவும் கவித்துவமாக வெளிப்பட்டிருப்பதால்.. 

* * *

 கவிதைகள் எல்லாவற்றிலுமே பெரும்பாலும் ஒரு வலி இருக்கிறது.  நேரடியாகவோ மறைமுகவாகவோ அது சொல்லப்படுகிறது. அது இழப்பு, பிரிவு, கண்ணியம், துக்கம், நிராகரிப்பு போன்ற பலவற்றால் இருக்கலாம். சொல்லமுடியாதவற்றை உணர்த்திவிட முயலும் கவிதை வரிகளில் துளிர்த்து சொட்டிவிடும் கண்ணீர் துளிகள் இருந்தாலும், அவை பரிதாபத்தை கோருபவையாக அல்லாமல், சீற்றத்தை தெறிப்பதாக அல்லாமல், அழகிய சிறு கனிகளாக உதிர்கின்றன. இனிப்பும் உவர்ப்புமாக.

நீங்கள் அடுத்த தொகுப்பை கொண்டுவரும்போது மேலும் மெருகேறிய சவிதாவை காணமுடியும் எனும் நம்பிக்கையை இந்த தொகுப்பு தருகிறது.

 

No comments:

Post a Comment

கொடை மடம் - சிந்தாந்தப் பின்னணியி (யா)ல் கை நழுவும் காதலைப் போலொன்று

    கொடை மடம் - நாவல் சாம்ராஜ் பிசகு வெளியீடு, சென்னை   சிந்தாந்தப் பின்னணியி (யா)ல் கை நழுவும்   காதலைப் போலொன்று ஒரு நாவல் எ...