இயற்பியலின் தாவோ
பிரிஜாப் காப்ரா Fritjof Capra
மொ பெ போன். சின்னத்தம்பி முருகேசன்
சந்தியா பதிப்பகம்
#இயற்பியலின்_தாவோ படிக்கத் துவங்கி இருக்கிறேன். பிரிட்ஜாப் காப்ரா எழுதியது. ஐந்தாண்டுகளுக்கு முன்பே வாங்கி ஆரம்பித்து நிறுத்தி ஆரம்பித்து நிறுத்தி டவுன் பஸ் போல வாசிப்பு. இம்முறை முழுமையாக படித்துவிட வேண்டும் என்று ஆசை. வழக்கம் போல நத்தை போன்ற அதிவேகத்தில்தான்.
அனைத்து விஞ்ஞானத் துறைகளிலும் இயற்பியல் என்பதுவே முதன்மையான அறிவியற் புலமாக இருக்கும் சாத்தியங்கள் உண்டு என்று எண்ணுகிறேன். இயற்பியல் மாணவனான எனக்கு இதன் abstract தன்மை எப்போதுமே சவாலானதும், பிடித்தமானதும் ஆக இருந்து வருகிறது. இயற்பியல் கருதுகோள்களை நிரூபிக்க கணிதக் கோட்பாடுகள் ஆராய்ந்து உருவாக்கப்பட்டன. ஐன்ஸ்டீன் கண்டுபிடித்த சார்பியல் கொள்கைக்கு நிரூபணத் தேவைகளுக்கு டென்ஸர் கால்குலஸ் கண்டுபிடிக்கப் பட்டது என்பார்கள். கண்களால் காண முடியாத ஆனால் கணக்கீடுகள் தேவைப்படும் வஸ்துக்களுக்கு வெளி என்ற பொருளில் இதை பயன்படுத்துகிறது.
இந்த புத்தகம் நவீன இயற்பியலின் கொள்கைகள் கிழக்கத்திய தத்துவங்களுக்கு எந்த வகையில் எல்லாம் ஒத்துப் போகிறது என்பதை பற்றி துழாவும் விளக்கங்கள். விஞ்ஞானம் என்பதும் ஆன்மிகம் மற்றும் தத்துவம் என்பது வெவ்வேறு துருவங்கள் என்று தட்டையான புரிதல்கள் நிரம்பி இருக்கும் தற்கால நிலைமையில், அடிப்படையில் அவை எங்கே ஒன்றுபோல சிந்திக்கின்றன என்பதை குறித்து பேசும் புத்தகம். இதில் சிறப்பு என்னவென்றால் அறிவியலும், ஆன்மீக/தத்துவமும் ஒன்றை பற்றி ஒன்று பொருட்படுத்துவதே இல்லை. ஆகவே இந்த இயல்பின் அடிப்படையில், அவற்றின் சிந்தனை மற்றும் கருதுகோள்கள் எப்படி ஒப்புமை கொள்ளத்தக்க வகையில் அமைகின்றன என்பது ஆராயும் புத்தகம் இது.
காப்ரா ஒரு இயற்பியல் விற்பன்னர். நவீன இயற்பியலும் கீழைத்தேய மாயாவாதம் குறித்து ஆராய்ந்தவர். எழுத்தின் கலைவடிவத்தை செழுமையாக்கிய போர்ஹெஸ் மகாபாரதத்தை வியந்திருக்கிறார்.
இதெல்லாம், சூழலை குளுமையாக்கும் சந்திரகாந்த கல்லால் ஆன மாளிகை ராவணனிடம் இருந்ததால் என்றோ ஏசி ரூம் இருந்தது என்று அறிவியலை சிறுமையாக்கும் நோக்கமோ - தன்னையே காப்பற்றிக்கொள்ள முடியாத ஏசு நம்மை எப்படி காப்பாற்றுவார் என்ற பாரபாஸ் தனமான போக்கோ - ராமர் என்ஜினீயரா எனும் எள்ளலோ - மேலும் இது போன்ற முட்டுச்சந்து ஞான விவாதத்தில் ஈடுபாடு அற்ற ‘போரடிக்கும்’ சப்ஜெக்ட் இந்த புத்தகம்.
அறிவியல் மற்றும் இயற்பியல் எப்படி மெல்ல மெல்ல கேள்விகளால் உருப்பெற்று மாறி மாறி நவீனத்தை அடைந்தது என்ற படிநிலைகளை ஒவ்வொன்றாக ஆராய்கிறது. மேற்கத்திய ஆன்மிகம் என்னவாக இருந்தது. கிழக்கத்திய ஆன்மீக தத்துவங்கள் என்னவாக உருப்பெற்றன என்பதை ஆராய்கிறது. இந்துமதம், புத்தம், தாவோயிசம் போன்றவை வெவ்வேறு அணுகுமுறைகள் கொண்டிருப்பினும் உள்ளீடாக ஒன்றை நோக்கியே சுழல்கின்றன என்பதால் இவற்றை மொத்தமாக கிழக்கத்திய தத்துவம் என்று பொதுமைப் படுத்திகொண்டு அதே சமயம் பிரித்து பொருள் கொண்டபடி ஆராய்ந்து போகிறார். இப்படி நவீன இயற்பியலின் அடிப்படைகளுக்கு நெருக்கமாக கிழக்கத்திய தத்துவங்கள் இருப்பதை கண்டு அவற்றை தொகுக்கிறார்.
கிரேக்கர்களின் வாழ்வுமுறையில் அறிவியல், தத்துவம், ஆன்மிகம் என்பவற்றை அவர்கள் வெவ்வேறாக பொருட்படுத்திக் கொள்ளவில்லை என்று ஒரு வரி இருக்கிறது. பருப்பொருட்களை ஆய்ந்து அவற்றின் தன்மைகளை இயக்கங்களாக மாற்றும் இயந்திரவியல் பிறக்கும்போது அது தனியாக நழுவி செயல்பட ஆரம்பிக்கிறது. நவீன அறிவியலின் ஆரம்ப புள்ளி அந்த கருதுகோள்தான்.
இயற்பியல், ஒரு பருப்பொருளின் உள்ளடக்கமாக உள்ளவை எந்த தன்மை கொண்டிருக்கின்றன என்பதையும் அதுவே அந்த பொருளின் தன்மையாக இருப்பதையும் ஆராய்கிறது. அதிலிருந்து இயக்கம் உண்டாகிறது. ஆகவே இயக்கம் என்பது வெளியில் இருந்து உருவாவது அல்ல. உள்ளிருந்தே இயங்குவது. அதே சமயம் அது தொடர்பு கொள்ளும் சக்தியும் வெளியே உள்ளது. வெளியேயும் உள்ளேயும் இருப்பது ஒன்றே என்று கருத அறிவியல் இடமளிக்கிறது. இப்போது இது ஆன்மீக கருத்துக்கு அருகில் வருவதை காண முடிகிறது.
தெகார்தேயின் கார்டீசியன் வாதம், பார்மெனிடஸ் கருத்து, ஹிராக்ளிடசின் தீ எனும் கொள்கை போன்ற பலவற்றின் அறிமுகத்தோடு துவங்குகிறது. ஆகவே சிறிய அளவில் அவர்களை தெரிந்து கொண்டு வாசித்துக்கொண்டே போகவேண்டும். பார்மேநிடஸ் சாக்ரடீசுக்கு முந்தைய கிரேக்க தத்துவவாதி. Out of nothing, nothing comes என்றவர்.
மாற்றம் என்பது தோற்றம்தான் மற்றபடி மாறுவது இல்லை என்று ஒருவர், எல்லாம் மாறிக்கொண்டே இருக்கிறது என்று ஒருவர். அவர்களுடைய மாற்றான கருத்துக்களை நாம் படிக்கும்போதும் ஆர்வமூட்டும் வகையில் தெளிவான கருத்துக்களை வைக்கும்போது அது அறிவுக்கு விருந்து.
படித்துக்கொண்டே தொடர்ச்சியாக இவற்றை பதியலாம் என்றிருக்கிறேன். யாரேனும் ஒரே ஒருவருக்கு இது போய் சேர்ந்தால் கூட போதும்; அது காப்ராவுக்கு செய்யும் மரியாதை.
No comments:
Post a Comment