Monday 25 May 2020

கவிதைகள்


கவிதைகள்


சமீபமாக கவிதைகளை நெல் கொத்தி பறவை போல ஏதோ எங்கோ ஒன்றாக படித்ததில் நன்றாக இருந்த சிலவற்றை பகிர்கிறேன். படித்த எனது மன நிலை கூட அதற்கு ஒரு காரணமாக இருக்கலாம். ஒரு கவிதை எப்படி நம்மை தொடுகிறது என்ற அம்சம்தான் கவிதையின் தொடர்பு அலைவரிசை.

ஐந்து கவிதைகள். சிறியவைதான்.

அகச்சேரன்
மனுஷி
கயல்
பா ராஜா
பூவிதழ் உமேஷ்  – எழுதியவை
=================================================================================================
ரத்த உறவு – அகச்சேரன்  கவிதை

நேற்றைக்கு நாம் சேர்ந்துபோன
பாதையில் முட்களை விளைக்கிறது
காலம்

பொழுதுகளை
சிறுபிராயத்தைவிட மூர்க்கமாக
சண்டையிட்டு நாம் வீணாக்கலாம்

பார்
நாம் தனித்தனியே அழுகின்ற அளவிற்கு
வளர்ந்துவிட்டோம்  (தங்கைக்கு )


இந்த கவிதையில் தங்கைக்கு என்ற குறிப்பு மற்றும் ரத்த உறவு எனும் தலைப்பும் கவிதையின் மையத்தை தெளிவாகவே சொல்லி விடுகின்றன. உத்தேசித்து உள்செல்ல எதுவும் இல்லை. ஆனால் நல்ல கவிதைகளில் சாதாரண வரிகள் எங்கேயோ கவிதையாகி  விடுகின்றன என்பதை கண்டு கொள்கிறது மனம்.  .

சேர்ந்து போவதற்கான பாதையை தந்ததும் காலம்தான். இன்று முட்களை விளைவித்திருப்பதும் காலம்தான். இங்கே இரண்டு விஷயங்களை நாம் கவனிக்கலாம். முட்கள் ஏன் முளைத்தன ? என்பதும் காலம் என்பது என்னவாக அவர்களிடம் உள்ளது? என்பதும். நடக்கப்படாத பாதைகளில்தான் முட்கள் முளைக்கும். “மனிதர்கள் நடப்பதற்கான பாதைகள் மனிதர்கள் நடந்து நடந்தே உருவானது” என்று ஒரு யுவன் கவிதை உண்டு. காலத்தின் முன் சேர்ந்து நடந்த இருவர் இப்போது சேர்ந்து நடக்காததால் முட்கள் உண்டாகி உள்ளன.  இதை படித்து முடிக்கும் கணத்தில் பாதை என்பதும் முட்கள் என்பதும் பூமிப்பரப்பில் உள்ள விஷயம் அல்ல. அக உலக விஷயம் என்பது தெளிகிறது. காலத்தை காரணமாக சொன்னாலும் காலத்தின் முன்பு பிரிந்தும் திரிந்தும் நின்றுள்ள அந்த இருவரேதான் காரணம். காலம் எனும் கண்ணாடியில் நாம் நமது பிம்பங்களை பார்த்துக்கொண்டு கண்ணாடியின் மேல் காரணம் சொல்லும் மனித மனநிலை இது. அதையே இந்த கவிதை அழகாக சொல்கிறது. 

அடுத்து ‘பொழுதுகளை வீணாக்கலாம்’ என்று வரி விழுகிறது. நடப்பில், இன்றைய மணித்துணிகளை பற்றிய பிரக்ஞை வரும்போது பொழுது என்று உணரப்படுகிறது. சிந்தும் இந்த மழைத்துளியை வீணடிக்காதே என்றும் பதைப்புதான் அது.


இறுதி வரி “தனித்தனியே அழுகின்ற அளவுக்கு நாம் வளர்ந்து விட்டோம்” எனும்போது வளர்ச்சி என்பது வெறும் நாட்களின் நகர்வாக, வயதாக குறுகி நிற்கிறது. சிறுபிராயத்தின் விசாலங்கள் மறைந்தொழிந்து போயின. வளர்ந்தவர்களின் அழுகை என்பது ஆற்றாமையாலும், தவறவிட்ட தருணங்களாலும், கை நழுவிப்போனவற்றாலும்,  வளைந்துகொள்ள முடியாமல் முதிர்ந்த மூங்கிலின் இறுக்கமாகவும், பரிதவிப்பாகவும் மட்டுமே இருக்க முடிகிறது. காம்பில் ஒன்றாக துளிர்த்து எதிரெதிர் திசைகளில் நீட்சிகொள்ளும் இலைகளின் நிலை போல ஆகிவிடுகிறது. இதில் சரி தவறு என்றெல்லாம் பிரித்து பார்க்க ஒரு காரணத்தை பற்றியும் கவிதை உபதேசிப்பதில்லை . திரும்பி பார்த்து அழுகிறோம் என்பது மட்டுமே அங்கிருக்கிறது. அது சொல்லும் ஒன்றின் பின்னால் சொல்லாத கண்ணீர் துளிகள் பலவும் இருக்கலாம்.
வாழ்த்துக்கள்.

==================================================================================================

மனுஷி எழுதிய கவிதை 

அந்தப் பாறைகளின் மேல்
இருகைகளை அகல விரித்து
அண்ணாந்து பார்த்தேன்.
ஆர்ப்பரிக்கும் கடலின் நடுவில்
இரு சிறகுகளை விரித்துப்
பறந்து கொண்டிருந்தது
அப்பறவை.
அதன் பெயர் எனக்கு முக்கியமில்லை.
அந்தப் பறவைக்கும் என் பெயர் முக்கியமில்லை.
நீலமும் பச்சையும் ஒன்றரக் கலந்து
சொல்லில் அடங்கா ஓர் வண்ணம் கொண்டு
ஒய்யாரமாய் அசைந்து
கரை சேர்ந்து திரும்பும் அலைகளுக்கும்
எங்கள் பெயர் முக்கியமில்லை.
வானத்தின் அடியில்
கடலின் அருகில்
பறவையின் நிழலில்
அலைகளின் இசையில்
அந்திவானத்தின் ஓர் புள்ளியில்
பெயர் ஏதுமற்று
யாரோவாகி
நெடுநேரம் அமர்ந்திருந்தேன்.

இந்த கவிதையில் மூன்று பகுதிகள் இயங்குகின்றன. நான், இயற்கை, பறவை. இதில் பிறரைப்பற்றி எதையும் கருதாமல் தன்னைப்பற்றியும் எந்த சுய நியதிகளோ இல்லாமல் அந்த சமயத்துக்கு அதுவாக இருப்பது இயற்கையும் பறவையும்.

இந்த மூன்று பகுதிகளின் பரஸ்பர தொடர்பில் மிக சுவாரசியமாக ஒரு அசைவின்மையும் அசைவும் வைக்கப்படுகிறது.
அசையாத பாறை. அசையும் கடல்.
நிற்கும் நான். பறக்கும் பறவை.
அசைவற்ற வானம். அதன் கீழ் கடல்.

அதனால் இந்த கவிதை காட்சி பூர்வமாக ஒரு சித்திரத்தையும், அதிலிருந்து உணர்வு பூர்வமாக ஒரு மன காட்சியையும், அதிலிருந்து ஒரு அந்தரங்க அர்த்தத்தையும் தருகிறது. 'நான்' என்று எழுதுபவர் அந்த கணத்தை எழுத்தில் பதிக்கும் ஒரு நோக்கம் தவிர பிரகடனப்படுத்தும் குரல் அதில் எழவில்லை என்பதே முக்கிய அம்சம். இதனால் அவர் தனக்கே சொல்லிக்கொள்ளும் ஒரு குரலை வாசகன் தனது குரலில்  சொல்லிப் பார்க்கையில் கவிதை இடம் மாறுகிறது.  இந்த இடப்பெயர்ச்சி வாசகனின் மன அலைவரிசையை அல்லது ரசனையை சார்ந்து மேல் தளத்துக்கு உயருகிறது.

பறவை பெயர் எனக்கு முக்கியமில்லை. எனது பெயர் பறவைக்கு முக்கியமில்லை. அலைகளுக்கு இவர்கள் பெயர் முக்கியமில்லை. இதில் இரண்டு அலைகளுக்கும் பறவைக்கும் கற்பனைகள் இல்லை. தம்மை இயற்கையின் அங்கமாக இருப்பதை தவிர வேறு எதுவுமே அங்கு இல்லை. அப்படி அங்கமாக இருக்கிறோம் எனும் பிரக்ஞை கூட அவற்றுக்கு இல்லை.ஆனால் மனிதனுக்கு உண்டு.  அப்படி இருக்கையில் அவற்றைப் போலவே மனித மனமும் இயல்பாக இருக்க முனைகையில் தன்னை இகக்கட்டுகளில் இருந்து விலகி நிற்க முயல்கிறது.

இறுதி  வரிகளில் வானத்தின் அடியில், கடலுக்கு அருகில், பறவையின் நிழலில், அலைகளின் இசையில், அந்தி வானத்தில் ஒரு புள்ளியில் பெயர் ஏதுமற்று யாரோவாகி நெடுநேரம் அமர்ந்திருந்தேன். முன்பு சொன்ன இயற்கையில் இருவித இருப்புகளுக்கு இடையே - அசைவு மற்றும் அசைவின்மைகளுக்கு இடையே  - ஒரு மனம் அவை அனைத்தின் பிரசன்னங்களுக்கு நடுவே தனிப்புள்ளியாக 'யாரோவாகி' அமர்ந்திருக்கிறார். இந்த கூடுபாய்தலே கவிதை. தான் எப்படியானவன்/ள் என்பதை ஒருவர் உணரும்போதே தான் பிரிதோருவராக மாறுவதை அவதானிக்க முடியும். இந்த சுய அறிதலை அதன் விளிம்பில் நின்று கொஞ்சம் மேலே பறக்கும் முயற்சிதான் இந்த கவிதை.

ஒரு மனிதன் எத்தனை முயன்றாலும் அவன் பறவையாகி, கடலாகி மீண்டும் இந்த பூமியில் கால் பதிக்கவே விதிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் சொற்ப கணமேனும் அந்த யாரோவாதல் என்பது முக முக்கியம். அடிமனத்துக்கு முக்கியம். அது ஒரு பேரனுபவம். யோகங்கள் சொல்ல வருபவை இதையேதான். நீ இந்த பிரபஞ்சத்தின் சிறு துளி.  ஆனால் அந்த துளியே ஒரு பிரபஞ்சம் எனும் ரூமியின் வாக்கு போல. இத்தகு நிலைகள் மதம் அல்லது பக்தி சார்ந்த ஒன்றாக குறுகி புரிந்து கொள்ளப்படும் சாத்தியங்களே அதிகம். ஆனால், அதிஷ்டவசமாக ஒரு கவிதை அந்த நிறங்களை உடைத்து இயல்பான கவிதையாக அமர்கிறது.  கவிதையின் இந்த வரிகள் நீண்ட தூரம் பறந்து பயணம் செய்து ஒரு சிறு கிளையில் அமர்ந்து தனது சிறகுகளை மடித்து ஒடுங்கிக்கொள்ளும் ஒரு கணம் போல அவ்வளவு கச்சிதமானது. 

அலைகளுக்கு இணையான ஓய்ச்சலற்ற ஒன்று உண்டென்றால் அது மனம்தான். நடுக்கடலும் ஆழ்கடலும் அலைகலற்றவை அமைதியானவை. நீ கேட்பது அலைகளின் ஒலியைத்தான். கடல் ஒலியற்றது என்ற ஜெயமோகனின் அழகான வரி ஒன்று உண்டு.  அப்படியான ஒரு ஒலியற்ற கடலை தனக்குள் உணர முயலும் சிறு புள்ளிதான் இந்த கவிதை.
வாழ்த்துக்கள்.

==================================================================================================

கட்டங்கள் -  பா ராஜா கவிதை

எப்போது
செஸ் விளையாட சொல்லித்தருவாய்
சிணுங்குகிறாள் சிறுமி
வாசலில் நிற்கும்
காலொடிந்த குதிரையை
தூக்கிக்கொண்டு ஓடுகிறான்
அப்பாவிற்கு
அனைத்தும் தெரியும் என்கின்ற
ஆட்டத்தின் முன்
நிற்பதென்பது இயலாத காரியம்


இந்த கவிதையில் ஒரு அப்பாவின் சுகமான பொறுப்பு கனத்தை அழகிய கவிதை செய்திருக்கிறார்.  சிறுமி கேட்பது என்னவோ செஸ் விளையாட்டு. ஆனால் அப்பாவாக இவன் என்னவோ கால் ஒடிந்த குதிரை பொம்மையை தூக்கிக்கொண்டு ஓடுகிறான். அவனுக்கு செஸ் தெரியாது என்பது சொல்லப்படாத குறிப்பு. குழந்தைகளின் விழைவுகளுக்கும் அவற்றை நிறைவேற்றுதலுக்கும் உள்ள இடைவெளியில் எல்லா அப்பாக்களுமே ஏதோ ஒரு நொண்டிக் குதிரைகளை வைத்து பவனி வருகிறார்கள். பிள்ளைகளை பவனி வரவைக்கிறார்கள். ஆசைப்படும் குழந்தைக்கு ஆசை என்பதை தவிர வேறு நோக்கங்கள் இல்லை. அப்பாவுக்கு ஆசையை எதிர்கொள்ளும் சவால் தவிர வேறு நோக்கங்கள் இல்லை.

இங்கே அப்பா செஸ் விளையாட்டை தவிர்ப்பதற்கான சமாதான முயற்சிகளை எதுவும் செய்வதில்லை. அப்பாவுக்கு புரிகிறது குழந்தையின் அந்த வேண்டுதலில் இருப்பது செஸ் என்ற விளையாட்டு அல்ல. விளையாட்டு மனம்தான். மனத்தை விளையாட வைக்க அவனுக்கு ஒரு குதிரை – அதுவும் ஒரு கால் ஒடிந்த குதிரை போதுமானதாக இருக்கிறது. ஒரு அப்பாவாக அவன் சிறுமியின் வார்த்தைகளில் இருந்து சொல்லப்படாத ஒரு துளியை உணர்ந்து கொள்கிறான். அவள் கேட்பதற்கும் இவன் செய்வதற்கும் சம்மந்தமே இல்லை. ஆனால் அங்கே நிச்சயம் ஒரு விளையாட்டு நிறைவேறிவிடும் எல்லா சாத்தியமும் இருக்கிறது.  ஏனென்றால் அப்பாவும் ஒரு குழந்தையாக மாறும் சிறிய தருணம் அது. சிறுமிக்கு இன்று செஸ். நாளை வேறொன்றாக இருக்கலாம். மறுநாள் வேறொன்றாக இருக்கலாம். குழந்தைகள் வளர வளர பெற்றோர்களுக்கு அவர்கள் வளரும் குழந்தைகள்தான். ஆனால் அப்பா, குழந்தை ஏதாவது ஒன்றை கேட்கும்போது அவளை அனுசரிப்பதற்கு எதையோ ஒன்றை தூக்கிக்கொண்டு ஓடுவதற்கு சித்தமாகவே இருக்கிறான். முழு ஈடுபாட்டுடன் அதை செய்கிறான். 

அப்பாவுக்கு எல்லாம் தெரியும் எனும் குழந்தையின் மனத்திற்கு ஈடு கொடுப்பது சாதாரணமான காரியம் இல்லை. தனக்கு தெரிந்ததை வைத்து தான் அறிந்திருப்பதாக கருதும் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய முடியாவிட்டாலும், அதை நோக்கிய தனது அதிக பட்ச காலடியை எடுத்து வைப்பவன்தான் அப்பா. அது செய்து முடிக்கும் இலக்கை நோக்கியது அல்ல. அன்பு மகளை நோக்கியது  மட்டுமே – காந்தத்தின் முள் எப்போதும் வடக்கை நோக்கி  இருப்பது போல.
வாழ்த்துக்கள்.

 =============================================================================================


கயல் எழுதிய ஒரு கவிதை

இருள் ருசியின் பரிபூரணத்தில்
செம்மாந்து படுத்து கிடக்கின்ற மலையை
தொந்தரவு செய்த படி இருக்கிறது நிலா

எரிச்சலுடன் அண்ணாந்து பார்க்கின்ற பாறை
தலையில் அகலோன்று ஏற்றுகிறாள்
தலைச்சன் பிள்ளையை
மருத்துவமனை அறுவை மேசையில்
விட்டு வந்த தாய்க்கிழவி

சற்றே புரண்டு காற்றுக்கு முதுகுகாட்டி
சுடரழியாது காக்கும் மலைக்கரங்களுக்கு
கருப்பையின் நிறம்


இந்த கவிதையை வரிகளை பிரித்து தொடர்ந்து பொருள் அறியும் முன்பாக ஏதோ ஒரு வாசிப்பு திருப்தி வந்து அமர்ந்து கொள்கிறது. இருளில் மலை படுத்திருக்கும் விஷயம் நிலவின் ஒளியால் மட்டுமே தெரியக்கூடும். இருளை ருசிக்கும் மலையின் மேல், வெளிச்சம் பொழிந்து தொந்தரவு செய்கிறது நிலவு. இதனிடையே அறுவை சிகிச்சை மேசையில் பிள்ளையை விட்டுவிட்டு பிரார்த்தனையுடன் அகல் விளக்கேற்றும் முதிய தாய் கவிதைக்குள் பிரவேசிக்கிறாள். அவளது நம்பிக்கை எல்லாம் அகலின் ஒளி. அவளது நம்பிக்கை மலை.

அகலின் சுடரை அணையாமல் காப்பாற்றும் பொறுப்பு இப்போது மலைக்கு வந்துவிடுகிறது. முதிய தாயின் வேண்டுதலுக்கு நெகிழ்ந்து காற்று வீசி அடிக்காமல் இருப்பதாக எழுதி இருந்தால் இது கவிதையாகாமல் போயிருக்கும். ஆனால் காற்றுக்கு முதுகு காட்டி மலை புரண்டு படுப்பதாக வரும் வரி கவிதையை சட்டென்று மேலே கொண்டு போகிறது. அசையாத மலை புரண்டு படுக்கிறது என்பதை படிக்க மனம் ஏற்கிறது. அறிவை தூக்கி தூர வைக்கிறது. இப்படி ஒரு மன அவசத்தை நமக்குள் ஏற்டுத்தும் இந்த கவிதை,  மலைக்கு கருப்பையின் நிறம் என்று அடுத்த துள்ளலை வைக்கிறது. குழந்தையின் வாழ்வுக்கு போராடும் முதிய அன்னைக்கு புரிந்துணர்வோடு புரண்டு படுக்கும் மலை மற்றொரு ஆதி அன்னை.

மனிதனின் அன்றாட கவலை வலியுறும் இடத்தில் அதை இயற்கையின் பிரம்மாண்டமான மடியில் வைத்து அதையும் கனிந்து இறங்கிவர – புரண்டு படுக்க - வைக்கின்றது இந்த கவிதை.
வாழ்த்துக்கள்.


==================================================================================================

மகிழ்ச்சியான காகம் – பூவிதழ் உமேஷ்

‘ந’ என்று எழுதி
காகம் வரைந்த குழந்தை
காகத்திற்கு
கொஞ்சம் தானியங்களை வைக்கிறது
கீழே
தன் பெயரில் உள்ள புள்ளிகளில்


ஒரு மழலையின் ஸ்படிக மனத்தை மிகச்சிறிய வரிகளில் திறந்து விட்டிருக்கும் அழகான கவிதை. கவிதையில் ஒரு காட்சி வடிவம் உருவாகிறது. இது - மொழிபெயர்ப்பு செய்ய முடியாத தமிழுக்கே உரித்தான கவிதை. குழந்தைகளுக்கு காட்சி வடிவமும் விளையாட்டுமே முதல் திறப்புகள். கதைகளாலும் காட்சிகளாலும் நிரம்பவேண்டிய குழந்தைகள் உலகம் கைபேசிகளில் சீரழிகிறது.

என் அனுபவத்தில் - சில ஆண்டுகளுக்கு முன் ஒரு விளையாட்டு மழலைச்சிறுவன் ஆங்கில எழுத்துகளை எழுதி பழக  அறிமுகம் ஆக சாக்பீஸ் கொடுத்து தரையில் எழுத வைத்தபோது (கவனித்து பாருங்கள், தானே ஒரு ஆசிரியரைப்போல கம்பீரம் குழந்தைகளுக்கு வரும் சாக்பீஸில் எழுதும்போது) – பெரிதாக H என்று எழுதியவன் அதை மேலும் பெரிய H ஆக மாற்றி பிறகு H மேல் H ஆக எழுதிக்கொண்டே போனான்.  இது என்னடா என்றால் அதன் மேல் அப்படியே குனிந்து தனது பிஞ்சு கை கால்களால் தவழ்ந்து கொண்டே போனான். கேட்டால் ஏணி என்றான்.

குழந்தைகள் மனம் வியப்பூட்டும் வகையில் சுதந்திரமானதும் கலாபூர்வமானதும் ஆகும்.

இந்த ‘ந’ கவிதையை படிக்கும்போது எழுதியவர் தான் குழந்தையாக மாறுகிறார். பிறகு படிப்பவரை குழந்தையாக மாற்றுகிறது கவிதை. எழுத்துருக்களில் படங்கள் வரைந்து விளையாட்டாக கற்பிப்பது மரபான முறை.  நன்னன் (நெட்ப்ளிக்ஸ் தலைமுறைக்கு தெரியாது) சொல்வார் தமிழ் எழுத்துக்களை குழந்தைகளுக்கு அ ஆ விலிருந்து சொல்லி தராதீர்கள்.  ட ப ம என்று ஆரம்பியுங்கள் என்பார். குழந்தை கற்றலில் இருந்து விளையாட்டுக்கு விளையாட்டில் இருந்து கற்றலுக்கு தாவும் அழகே தனி.  இந்த கவிதையில் ந வில் காகம் எழுவது ஒரு பகுதி. அதற்கு தானியம் வரைவது என்பதை தனது பெயரின் புள்ளிகளில் இருந்து தெளிப்பது எனும் வரியில் இது குழந்தை உலகை அறிந்த ஒருவரின் அழகான கவிதையாகிறது. அருமையான கற்பனை.  (பெரியசாமியின் குட்டி மீன்கள் கவிதைகள் சிலவற்றை நினைவூட்டுகிறது இந்த மழலையுலக கவிதை.  அவரது பெயரின் தலைப்பெழுத்து கூட ந என்பது சுவாரசியமான ஒன்று )
வாழ்த்துக்கள் !

Thursday 21 May 2020

காதுகள் - எம் வி வெங்கட்ராம்

காதுகள்
எம் வி வெங்கட்ராம்
(சொல்வனம் இணைய இதழில்  30மே 2014ல்வெளியானது )

(மணிக்கொடி எழுத்தாளர் எம்.வி.வெங்கட்ராம் அவர்களின் – சாகித்திய அகாதமி பரிசு பெற்ற நாவல் “காதுகள். அவருடையா சமகால பிரபல எழுத்தாளர்களை ஒப்பிட்டால் அதிகம் பேசப்படாத எழுத்தாளர் அவர். இந்த நாவலும் அப்படியே. இந்த நாவலை நான் தேடாத இடம் இல்லை. கடைசியில் மதுரையில் எம்.வி.வி ரசிக வாசகர் திரு.துளசிராம் ஒளிநகல் எடுத்து அனுப்பினார். அவருக்கு நன்றி.)


 மாலி எனப்படும் மகாலிங்கம் என்ற எழுத்தாளனின் வறுமை – காதுகளில் சதா ஒலிகளும் குரல்களும் எப்போதும் கேட்டுக்கொண்டே இருக்கும் அவஸ்தை – தீய சக்தியாக ஒருவித நாசகாளி – நல்ல சக்தியாக குருவாக முருகன் இவர்களுக்கு இடையே மாலி படும் அக அவஸ்தை – இவற்றின் பின்னலாக அமைந்த இந்த நாவல் – உளவியல் ரீதியான நாவல் எனவும் – ஆன்மீக சம்பந்தம் எனவும் சிலாகிக்கப் பட்டதுண்டு. ஆனால் அறிவியல் பூர்வமாக – லாஜிக் பார்ப்பவர்கள் இதில் எதுவும் உளவியல் சிக்கலாக அணுகப் படாததால் சற்று ஒதுங்கியே போய்விட்டிருக்கிறார்கள் என்று தோன்றுகிறது (நான் அறிந்தவரை). மேலும் தனக்கு எந்த “இஸங்“களும் தெரியாது என்று சொல்லியிருக்கிறார் எம்விவி.
இந்த நாவல் தன்னுடைய வாழ்வில் தான் அனுபவித்ததன் ஒரு பகுதியே என்று எம்விவி சொல்லி இருக்கிறார். கதை நாயகன் மாலியும் எழுத்தாளன் – வியாபாரி – முருக பக்தன் – வசதியைக் கண்டவன் – வறுமையிலும் வாடுபவன். தாம்பூல வாயுடன் குறைவாய்ப் பேசுபவன்.–மாலி-எம்விவி க்கு நிறைய ஒற்றுமைகள் உண்டு. இது வெறும் கட்டுக்கதை அன்று.  அதனால் இதை சற்று மரியாதையோடும் தீவிரமாகவும் அணுக வேண்டியது நியாயம்.
கூச்ச சுபாவம் உள்ளவன் மாலி. அக்கம் பக்கத்தில் பண நோட்டுக்குச் சில்லறை வாங்கிவரச் சொன்னால் கேட்க கூச்சப்பட்டு இல்லை என்று வந்துவிடுபவன். படிப்பாளியாக்க வேண்டும் என்று அவன் தந்தை விரும்பிட மாலி சுமாராகப் படிக்கிறான் – கதைகள் பலவும் படிக்கிறான். பெண்களின் கண் கலந்தாலே கூச்சமடையும் அவன் அப்பாவின் சொற்படி கேட்டு கல்யாணம் செய்துகொண்டு – பகுதி நேரத்தில் கதைகள் எழுதிக்கொண்டே வியாபாரமும் செய்கிறான். புத்தகப் பிரியன். யாரிடமும் கடன் கேட்பதற்கு அச்சம்.  ஆனால் கடன் கேட்பவருக்கு கொடுத்துவிடும் மனிதாபிமானி. நேர்மையாளன். கடவுள் பக்தன். ஏமாற்று வித்தைகள் தெரியாது. நியாயவான். இது போதாதா ஒருவன் வசதியான வாழ்வை இழந்து வறுமையில் விழுவதற்கு! அதுவே மாலிக்கு நடக்கிறது. பொருளாதார இழப்பு – தந்தை நோய்ப்படுக்கையில் –இந்நிலையில் மனைவி காமாட்சியை அவள் அம்மா தனிக்குடித்தனம் வைத்தால்தான்அனுப்புவேன் என்று வீட்டுக்கு அழைத்துப்போய்விடுகிறாள். பிறகு புனே சென்று சம்பாதித்துத் திரும்பி வந்து நிறைய எழுத ஆரம்பிக்கிறான். காமாட்சி திரும்ப வருகிறாள். “மனைவியை உலுக்கியதில் குழந்தைகள் உதிர்ந்தன.“ என்று எழுதுகிறார்.
கடவுளை நம்பாமல் இருந்த மாலி ஒருநாள், கும்பேஸ்வர்ரர் கோவிலில் தண்டாயுதபாணி சிலையருகே ஒரு சாமியார் நின்று இவன் தோளை தழுவ நிறைய குழந்தைகள் இவர்களைச் சுற்றி ஆடுவதாக ஒரு கனவு காண்கிறான். மறுநாள் முதல் ஆன்மீகவாதி முருக பக்தனாக மாறிவிடுகிறான்.  கடவுள் நாட்டம் அதிகமாகி மனிதர்களைக் குருவாக கொள்வதில்லை. முருகன் மட்டுமே எனக் கந்தர் அநுபுதி சொல்லி வழிபடுகிறான். நாட்பட வியாபாரம் நொடிக்கிறது. அப்போது அவன் காதுகளில் ஒலிகளும் குரல்களும் ஒலிக்க ஆரம்பித்து அவனை அலைக்கழிக்கின்றன. இதனிடையே காம சிந்தனைகள் அவனை துரத்தி துரத்தி பிடுங்குகின்றன. அவன் அதை – அல்லது அது அவனை – விடுவதே இல்லை. போதாக் குறைக்கு அவன் கனவுகள் பலவும் பலித்து விடுகின்றன. இந்த அவஸ்தையை தன் குருநாதன் முருகன்தான் தீர்த்து வைப்பான் என்று கதையின் கடைசி நொடிவரை நம்பி – தீய சக்திகளின் அச்சுறுத்தலில் அலைக்கழிவதுதான் கதை.
“வேதநாரயணப் பெருமாள் கோயில் வாயிலின் மூன்று படிகள் ஏறி நாலாவது படிமீது கால்வைத்தபோது மகாலிங்கத்துக்கு ஒரு பெரிய சந்தேகம் வந்துவிட்டது. “எனக்கே சகிக்க முடியாத ஆபாசம் எனக்குள் சேர்ந்திருக்கிறது. இதை சுமந்துகொண்டு  உள்ளே போனால் கோயில் தோஷப்பட்டுவிடுமோ?“ என்று தயங்கியபடி அவன் வலது காலை மூன்றாவது படிக்கே மீட்டுக்கொண்டான். நிமிர்ந்தபோது வெகுதொலைவில் விளக்குச் சுடருக்கு அப்பால் ஒளிக்கலங்களில் மறைந்து நின்று பெருமாள் கவலை மிகக் கொண்டவராய்த் தன்னைப் பார்த்துக்கொண்டு இருப்பதைக் கண்டான“. நான் உள்ளே வந்துவிடுவேனோ என்று பெருமாள் பயப்படுகிறார் போலும்” – என்ற பாராவுடன் ஆரம்பிக்கிறது நாவல்.
இந்த நாவலை படிப்பாளி எழுத்தாளன் மாலி1 – காதில் ஒலிகளால் அலைக்கழியும் மாலி 2 – இவர்களைக் கவனித்து நம்மிடம் கதை சொல்லும் மாலி 3 என்று பிரித்துக்கொண்டால்  கதைக்குள் நீந்துவது எளிதாக இருக்கலாம்.  இதில்  ஒரு மாலி இன்னொரு மாலியாக எப்போது மாறுகிறான் என சொல்ல முடிவதில்லை என்பதே பரிதாபம். (ஷங்கரின் ‘அந்நியன்’ மாதிரி இல்லை). இந்த மாற்றம் அவனுக்கு மட்டுமே தெரியும். பிறருக்கு, எதிரில் இருப்பவருக்கு, – மனைவிக்கே கூட தெரியாது என்பதுதான் கொடுமை.
அந்த சப்தங்கள் சப்த ஜாலங்கள் என்கிறார். பம் பம் பம் என சங்கு ஊதுவது போல – ஜ்ஜோஹ்.. ஜ்ஜோஹ்..என அலைகளின் ஓலம் – டாங் டாங் என் கோவில மணி முழக்கம் – ஞிணிங் ஞிணிங் என் பூஜைமணி முழக்கம் – டம் டம் என தமுக்கு – எனப் பலப்பலவாய்.
ட்ரல ட்ரல ட்ரல லலல…  ட்ரல ட்ரல ட்ரல லலல…
ட்ரல ட்ரல ட்ரல லலல…  ட்ரல ட்ரல ட்ரல லலல…-
என பலவிதமாய் இம்சிக்கின்றன. நாவலின் பல இடங்களில் ‘சப்தங்களை’ அப்படியே ‘சொற்களில்’ – – தான்(மாலி) உணர்ந்தவாறே – எம்விவி எழுதிப் போகிறார். நாம் படிக்கும்போது அவற்றை ‘அதே’ சப்தத்துடன்-சற்று வாய்விட்டு ஒலியுடன் படித்தால் – அவர் என்ன விதமான அவஸ்தை பட்டிருக்கிறார் என்று அறிய முடியும். படிக்கையில் சிலசமயம் பயமாய் இருக்கிறது.
24 மணி நேரமும் அவனை தூங்க விடாமல் யோசிக்க விடாமல் தியானத்தில் உட்கார முடியாமல் – நடக்கும்போதும் உட்காரும்போதும் படுக்கும்போதும் ஒலிகளும் – குரல்களும் – உரையாடல்களும் ஒலித்துக்கொண்டே ..ஒலித்துக்கொண்டே ..ஒலித்துக்கொண்டே இருக்கின்றன.  மிக மிகப் பரிதாபமாக இருக்கிறது.  ஒருவருடன் பேசினால் உள்ளே இருந்து இரண்டு குரல்கள் – இவனது உரையாடல் சம்மந்தமாக – ஒன்றுக்கொன்று சண்டைபோட்டுக்கொண்டு – சப்தமாக ஒலிக்கின்றன , தன்  குரலே இவனுக்கு மறந்துபோகும் அளவுக்கு.
இன்னொரு பெரிய அவஸ்தை – காதுகளில் ஒலிப்பது ஒலிகள் மட்டும் இல்லை. குரல்கள். உரையாடல்கள். அவற்றை கண்கள் காட்சியாக – கனவாக  காணுகின்றன. மூக்கு துர்நாற்றங்களை  உணர்கிறது. வாய் கசந்து சமயத்தில் வாந்தி வந்து விடுகிறது. காதில் ரேடியோ ஒலிச்சித்திரம் போல ஆபாச நாடகங்கள் உரையாடல்கள் நிகழ்நது கொண்டே இருக்கின்றன. தூக்கம் என்பதே அரிதாகிவிடுகிறது. மேலும் பலவித குரல்கள். இந்த காதொலிகளை “அகச்சந்தை“ என்கிறார்.
சாயா என்ற பிரமைப் பெண் தானத்தன தானத்தன தானத்தனதா எனப் பாடிக்கொண்டு வந்து பாலுறவு பற்றி அப்பட்டமாய் பேசுகிறாள். பிச்சமூர்த்தி குபரா பற்றிகூட பேசுகிறது. பொண்ணு வேணும்  பொண்ணு வேணும் பொண்ணு வேணும்டோய்“ எனப் பாடுகிறாள். உனக்கு காமசுகப் பரவசத்தால் ஆத்மஞானம் தரப்போகிறேன் என்கிறாள். தான் என்ற உணர்வு ஆழத்தில் அமிழ ஆடு மாடு சிங்கம் புலி என பலவித உருவங்கள் கிளம்புகின்றன.  அவள் பாடப்பாட சொற்கள் விழுந்து குவிந்துகொண்டு போய் பாறையாக மலையாக உருப்பெற்று – அந்தச் சொல்பாறையை யாரோ படீர் படீர் என அடித்து உடைக்க சிறுசிறு சொல்லாகச் சிதைந்து அணுவாக மாறி உடலின் ஒவ்வொரு ரோமக்காலிலும் நுழைவதாக அந்த அவஸ்தையைப் பற்றி எழுதுகிறார்.
டாக்டர் ஜெகிலும் மிஸ்டர் ஹைடும் எனும் ஆங்கில நாவல் நினைவுக்கு வர தன்நிலையை ஒப்பிட்டுப் பார்த்துக்கொள்கிறார்.
வீட்டில் அவனுக்கென்றே ஒரு மூலை – அதில் கார்டினர், அகதா க்ரிஸ்டி, செயிண்ட. பெர்ரி மேசன், விவேகானந்தர் என பலரின் நூல்களைப் படிக்கிறான். கால்சியம ஊசி போல தனக்கு காமவெறி ஊசி போடப்படுவதாய் உணருகிறான்.  கண்களை இறுக்கி மூடிக்கொள்கிறான். ஆனால் கண்கள் திறந்துகொள்கின்றன. நீ என்னை லவ் பண்ணாவிட்டாலும் நான் உன்னை லவ் பண்ணுகிறேன் என்று அணிகலன்கள் முதல் ஒவ்வொன்றாய் களைந்துவிட்டு அவனை அணுகுகிறது. அவன் அகமுகமாய் முருகனை ஜபித்தாலும் அவள் பாய அவன் தரையில் சாய்கிறான். அவள ஒதுங்கிப்போன பின்பு தன் நாற்றம் தனக்கே சகிக்காமல் குமட்டிக்கொண்டு வருகிறது.
உடல் வலிகளையும் – வேண்டாம் என்று தவிர்த்தாலும் பின்னிருந்து நெட்டித் தள்ளும் காமத்திலும் அவன் ஆளுமை விழுந்து புரள்கிறது. அடுத்த கணம் அசூயை கொண்டு உடலே வெறுப்பு ஆகிறது. இப்படி ஐம்புலன்களும் அவனை விடாமல் துரத்தித் துரத்தி இம்சிக்கின்றன. இதைப் புலன்களின் சுயாட்சி (autonomy of sense organs)  என்கிறார். சில சமயங்களில் உடலுக்குள் புகுந்து கொண்டு விடுகிறது – ஒரு முறை கருப்பன் எனும் உருவம் சிறிதாகி வாய்க்குள் புகுந்து கொள்ள – முருகன் உதட்டின் மேல் நின்று அவனுக்கு கட்டளை பிறப்பிக்கிறார். கறுப்பனின் மனைவி மாலி மேல் காதல் கொண்டு அவனுக்குள் எங்கோ மறைந்து இருக்கிறாள் என்று அவனை தேடுகிறது. தொண்டைக்குழி வரை இறங்கி தேடுகிறது. டொக் டொக் டொக் என்று பற்களை தட்டி தட்டி பார்க்கிறது. அங்கிருந்து மூக்குக்குள் போகிறது. மாலிக்கு தும்மல் வந்துவிடுவதாய் அவஸ்தை வருகிறது. ஆனால் தும்மக் கூடாது என முருகன் கட்டளை இடுகிறான். அவன் படும் அவஸ்தை சொல்லில் அடங்காது.
உள்ளிருந்து ஒரு குரல் “என்னை நினைவில்லையா? நான் நாசகாளி. பல பிறவிகளாய் என்னைக் கும்பிட்டு என்னோடு சுடுகாட்டில் அலைந்து கொணடிருந்த நீ என்னை விட்டு….முருகனை எப்படி கும்பிடலாம். உன்னை விடமாட்டேன்” எனப் பயமுறுத்துகையில் “ எந்த பிறவி எந்த தெய்வம் எனக்கெப்படி தெரியும்? கடவுளை எப்படி அழைத்து கும்பிட்டால் என்ன? யாரை எப்படி கும்பிடுவது என்பது பக்தன் உரிமைதானே?“ என்றெல்லாம் கேட்கிறான்.
தீர்வுக்கான வழி முருகன் துணை மட்டுமே என்று எந்த சிகிச்சைக்கும் போகாமல் இருக்கிறான். அதுதான் மிகச் சரி என்று அவன் தீவிரமாக நம்புகிறான். குடும்பம் நலிந்து நலிந்து வீட்டில் உள்ள புத்தகங்களை விற்று சாப்பாட்டுக்கு பொருட்கள் வாங்கும் நிலை வந்து விடுகிறது.
ஆக அவன் சித்தப் பிரமை கொண்ட பைத்தியம் அல்ல. தன்னை ஒவ்வொரு கணமும் அவதானித்தபடியே இருக்கிறான். தனது செயல்கள் மேல் விமர்சனங்களை வைத்தபடியே இருக்கிறான். அவன் தன்னை ஒரு போதும் பிரக்ஞை அற்றவனாக உணர்ந்ததே இல்லை. புத்தகங்களைப் படித்துக் கொண்டே இருக்கிறான்.
ஒருநாள் இரவு வீட்டுக்குள் கறுப்பன் வருதாக  பிரமை வந்து பயந்துபோகிறான். விளக்கைப் போட்டுக்கொண்டு இருக்க மனைவி சலித்துக்கொள்ளுகிறாள். அப்போது கறுப்பன் “வெளிச்சத்தில் மறைந்து கொள்கிறான்“ என்று எழுதுகிறார். விவரம் சொல்ல மனைவி ஆசுவாசப்படுத்தி ஒரு சாமியாரிடம் அனுப்புகிறாள்.  அவர் தியானத்தில் இருக்கையில் நடுவில் கலைந்து மறுபடி தியானித்து உன்னைச் சுற்றிவரும்  துஷ்ட தேவதைகள் என்னையே குறுக்கிட்டு கலைக்கிறது. ஆனால் குருநாதர் உன் கையைப் பிடித்தபடி ராஜவீதியில் நடந்து போகிறார். அவர் என் துணை என்கிறார்.
இதை உளவியல மருத்துவரிடம் போவதற்கு முகாந்திரமில்லை. இது தெய்வ வினை. இதைத் தெய்வ ஈடுபாட்டின் மூலமே தீர்க்கமுடியும் என திடமாக நம்புகிறான். ஒருபோதும் அதை விடாமல் சிக்கெனப் பற்றுகிறான்.
நண்பர்களில் வற்புறுத்தலில் ஒரு சாமியாரைப் பார்க்க போகிறான். அவர் நீ செய்வதுதான் சரி. குருநாதன் மட்டுமே உன் துணை. அவர் உன் பிரச்சனை தீர்ப்பார் என்கிறார். எனக்கு என்னென்னவோ பிரமை வருகிறது. கனவு வருகிறது. ஒரு முறை கூட அவர் வருவதில்லை. அவரை எப்படி நம்புவது என்கிறான். இத்தனை பிரச்சனையாலும் நீ பைத்தியம் ஆகவில்லை. சித்தப்ரமை கொண்டு சாகவில்லை. உன் ஒவ்வொரு செயலும் சொல்லும் எண்ணமும் உனக்கு நன்றாகத் தெரிகிறது. அதனால்தான் நீ பைத்தியம் ஆகாமல் இருக்கிறாய்.  இந்த அருள் சாதரணமா ? என்கிறார். இந்த அவஸ்தை எவ்வளவு வருடம் படுவது. இந்த ஜென்மம் முழுதும் இப்படித்தானா ? எத்தனை காலம் ஆகும் என்று கேட்கையில் – கால வரம்பு சொல்ல முடியாது – இந்த ஜென்மம் முழுதும் இருந்தாலும் இருந்து விட்டு போகட்டும் – அடுத்த ஜென்மம் இருக்கிறதே என்கிறார் !
இவன் காமத்தால் அலைக்கழிவது இன்னொரு பிரச்சனை – அது அவன் கூடவே வருகிறது. ஆனால் ஒருபோதும் அவன் முறை தவறி நடப்பதில்லை. இந்த காமம் இயல்பானது அல்ல. திடீரென் இரு குரல்களுடன் உரையாடல் – பாலியல் தூண்டும்படி பேசி – காட்சியாகி அவனை நெட்டித் தள்ளுகிறது. அவன் மனைவியோடு கூடுவதையும் தள்ளி நின்று அவை பார்க்கின்றன. திரும்பிப் பார்க்கும் இடங்கள் எல்லாம் பாலியல் காட்சிகளும்-சப்தங்களும்- உறுப்புகள் புணரும் காட்சிகளும் விரவிக் கிடக்கின்றன. இதைப் பலவிதக் கோணங்களிலும் – கோணல்களிலும் என்கிறார் எம்விவி. ஒரு முறை ஒரு நாசகாளி உருவம் வந்து இவனை புணர்ந்துவிட்டு கெக்கரித்துவிட்டுப் போகிறது. கடவுள் என்மேல் காமம் கொள்வதா எனத் தன்னையே நொந்துகொள்கிறான். ஒரு முறை அந்த தெருவைச் சார்ந்த கறுப்புப் பெண் வந்து அவரிடம் குழைகிறாள்.  மோகத்தில் ஒரு கணம் நிலை தடுமாறி அவளை அணுகியபோது  செருப்பால் அடிப்பது போல ஒரு துர்நாற்றம அவளிடம் வர, குமட்டிக்கொண்டு வருகிறது. உடம்பே வற்றுகிறது. இப்படி காம்ம் பலவிதமாய அவனை ஆட்டுவிக்கிறது.
வறுமை தாண்டவம் ஆடுகிறது. சாப்பிட வழி இல்லை. இந்நிலையில் ஆறாவது குழந்தை நிறைமாத கர்பிணியாக இருக்கும் மனைவியை ஆவேசமாக கூடுகிறார். அவள் பாவம் பாவம் என்று மனது சொல்கிறது. உடல் கேட்பதில்லை. இது அவருக்கு சுய வெறுப்பு என்றால் – அவளைக் கூடும்போது அவள் எவ்வளவு இன்பம் பெற்றாள் கண்டாயா என்று ஒரு காளி உருவம் கேட்கும்போது – மாலி குறுகிப் போகிறான். அது மட்டுமின்றி பிரசவத்தில் குழந்தை இறந்து பிறக்கையில் – இவனுடைய காம வெறிதான் காரணம் என்று வேறு இரு குரல்கள் அவனுள் சண்டை இடுகையில் அவன் மனம் படாத பாடுபடுகிறது.  அவனுடைய காமத்தைப் பற்றி காதுக்குள் உரையாடல் குரல்கள் “மேட்னி ஷோவெல்லாம் நடக்குதே“ என்று கேலி பேசுகின்றன. அவனுடைய செய்கைகள் எதுவும் அவன் இஷ்டத்தில் இல்லை. ஆனால் அதன் விளைவுகள் அனைத்திற்கும் அவனே பொறுப்பாகிறான்.
அவனுக்கு சம்பாத்தியம என்பதே நின்று போன காலத்தில் கையில காசே இல்லாத ஒரு இரவில் மனைவிக்கு பேறுவலி வருகிறது. மூக்குத்தியை கழற்றித தந்து ஆஸ்பத்திரிக்கு ஏற்பாடு செய்யவும் டப்பாவில உள்ள ஒரு ரூபாயை வண்டிக்கு ஏற்பாடு செய்யவும சொல்கிறாள். “வண்டி எதுக்கு. நடந்தே போய்விடலாமே” என்கிறான். வறுமையின் கோரத்தில் வந்த வார்த்தைகள் அவை. அவள் தாங்காது என்கிறாள். பிறகு பெரிய ஆஸ்பத்திரிக்கு போக வண்டிக்காரனிடம் கடன்சொல்லிப் போகிறார்கள். பிரசவத்தில குழந்தை இறக்கிறது. இவன் வீடுவந்துவிடுகிறான். மறுநாள் போனால் குழந்தையை அடக்கம் செய்ய பணம் கேட்கிறார்கள். அவர்களே அடக்கம் செய்திருப்பார்கள் செலவில்லாமல் போகும் என்று எண்ணிப் போனவனுக்கு அதிர்ச்சி. சண்டையில் அவர்கள் இறந்த குழந்தையை துணியில் கட்டி தந்துவிட, அதை சைக்கிள் ஹேண்டில்பாரில் பை மாதிரி மாட்டிக்கொண்டு வந்து வீட்டு கொல்லைப்புறத்தில் அப்படியே வைத்து – கரண்டி ஒன்றால் குழி நோண்டி புதைக்கிறான். “என்ன?“ என்று கேட்ட மகள் சாவித்திரியிடம் “சொல்லவதானல் சொல்லுவேன். இது என்ன கேள்வி“ என எரிகிறான். பக்கத்துவீட்டு கிழவி சத்தம்போடுகிறாள். பிறகு விஷயம  அறிந்து ஆழப்புதைக்கவேண்டும் என்றும இல்லாவிட்டால் நாய்கள் நரிகள் வந்து எடுத்துவிடும் என்று எச்சரித்துப் போகிறாள். மனதைப்பிழியும் வறுமைநிலை இது.
இதைத்தாண்டியும் மறுபடியும் ஒரு பிரசவம் கலைந்து மனைவி மோசமான நோயாளியாகிறாள். நடக்க முடியாமல் தவழ்ந்தே போகிறாள். பிறகொரு நாள் கனவில் கோவணாண்டியாக ஒருவன் தலையருகே நின்று பேச பிறகு அது கடவுளாக இருக்குமோ என்று   எண்ணி விழித்துக்கொள்கிறான்.
ஒரு நாள் மகள் சாவித்திரியின் உடல்நிலை காய்ச்சலால் மோசமாகிறது. டாக்டரை அழைக்க  கிளம்பிப் போகிறான். ஏதேதோ யோசனையால் கோவிலுக்குப் போகிறான். பிறகு மனவிழிப்பு வந்து டாக்டரிடம்தானே போகணும் என்று திரும்பி டாக்டரிடம் போக – மறுபடி நினைவின் தடுமாற்றங்களில் உள்ளே ஏதேதோ குரல் கேட்க வேறொரு கோவிலுக்கு போகிறான். மகள் செத்து கிடக்கக் கோவிலில் இந்த பைத்தியத்துக்கு என்ன வேலை என அனைவரும் பழிக்கின்றனர். மறுபடி டாக்டரிடம் போக ஏதோ தெருவுக்கு போய் நண்பன் அவனை ஏதோ கேட்க  நினைவு வந்து டாக்டரிடம் போய் – மகள் நிலை பற்றி சொல்கிறான். சாவித்திரி நல்லாதான் இருக்கா. சாதாரண காய்ச்சல்தான் என்கிறார். நான் இப்போதானே வந்து உங்களிடம் சொல்கிறேன் என்றபோது – அரை மணி முன்னால் நான் தெருப்பக்கம் போகும்போது அவளைப் பார்த்துவிட்டு வரலாம் என்று போனேன். மருந்து தந்திருக்கிறேன். சரியாகிவிடும் என்கிறார். என் குருநாதர் என்னை முந்திக்கொண்டு காப்பாற்றிவிட்டார். இந்த வாழ்க்கை ஊசிமுனைத்தவம் என்று எண்ணுகிறான்.
அப்போது மண்டையுள் இருந்து இரு குரல்கள் தாங்கள் பார்த்தபோது மகள் இறந்து கிடந்த்தாகவும் இந்த டாக்டர் மந்திரவாதியோ என்றும் பேசிக்கொள்கிறார்கள்.  சொற்களின் அட்டகாசத்தைப் பொருட்படுத்தாமல் அகமுகக் குரலில் அநுபூதியை பாடியபடி மகாலிங்கம் மெதுவாகவே நடந்தான் என்று நாவல் முடிகிறது.
சிறுவயதில் கூச்சமாக இருந்தவனின் மனதில் இருந்த காமுக எண்ணங்களின் இரட்டைப் பிம்பம்தான் இந்த இரு சக்திகளா? தன்னையே இரு பாகமாகப் பிளந்து உள்நோக்கும் வகையில் இந்த இரு விசைகளா? கடவுளை விரும்பாதவன் ஆன்மீகத்துக்கு மாறுகையில் வந்த நம்பிக்கைச் சிதைவின் விளைவுகளா? காரண அறிவும், பொருள்விளங்காப் பேருணர்வும் மோதிக்கொள்ளும் சிதறலா? வறுமையை எதிர்கொள்ள முடியாத பேதைமையில் ஏற்பட்ட சறுக்கலா? மருத்துவ உதவிகளை நாடாமல் அத்துமீறிப்போன அவஸ்தையா என்றால் – அவன்  சுயபிரக்ஞையில் எப்போதும இருக்கிறான். அவனது நடவடிக்கைகளில் எந்த மாற்றமும் பிறருக்கு தெரிவதில்லை.
தீய எண்ணச் சக்திகளிடம் சிக்கும்  மாலி, கடவுள் நம்பிக்கையுடன் விடாப்பிடியாக தெய்வபலத்தை நம்பும் மாலி – இவர்களுக்கிடையில் அப்பாவி எழுத்தாளன் மாலி மட்டுமல்ல – அவன் குடும்பம் – குழந்தைகள் எல்லாம் வறுமையிலும் நோயிலும் பசியிலும் வாடித்தவிப்பது மனதை நோகடிக்கிறது.
குருநாதர் வந்து காப்பாற்ற இனி பிரச்சினை முடிந்ததா என்றால் நாவல் அப்படி முடியவில்லை. அது எதையும் சொல்லாமல் முடிகிறது.  இப்போதைக்கு பிரச்சினை முடிந்திருக்கிறது. ஆனால் மறுபடி பிரச்சினைகள் சோதனைகள் வந்து அலைக்கழிக்கலாம். மறுபடி கடவுளருள் வந்து தீர்த்துவைக்கலாம். ஆனால் பிரச்சினைகள் நிற்கப்போவதில்லை. மறுபடி குரல்கள் பேச ஆரம்பிக்கலாம் என்று நினைக்கையில் – மாலியின் அவதியும்– அவன் குழந்தைகளின் நிராதரவான நிலையும் நினைக்க மிகப் பரிதாபமாக இருக்கிறது. தீயவற்றுக்கும் சரி நல்லவற்றுக்கும சரி முடிவு இல்லை. அவற்றிக்கான போராட்டம நடந்துகொண்டேதான் இருக்கும். பிரபஞ்சம் உள்ளவரை.
இதை நாவலை என்னவென்று கொள்வது? லாஜிக் எதிலும் அடங்கமறுக்கிறதே என்றால் – இதைப் பற்றி எம்.வி.வி ஒரு நேர்காணலில் சொன்னதைதான் சொல்ல வேண்டும்.
இந்த நாவல் என் வாழ்க்கையின் ஒரு சிறிய பகுதி. என் வாழ்க்கை உங்கள் வாழ்க்கை போன்றது அல்ல என்பதே இதன் தனித்தன்மை. பகுத்தறிவையும் அறிவியலையும் நம்புகிறவர்களுக்கு அது திகைப்புத் தருகிறது. அதற்கு நான் என்ன செய்ய?”

Wednesday 13 May 2020

தயா - லாசரா



தயா
லா ச ரா
வானதி பதிப்பகம் 1993
தி நகர் சென்னை 17
044 2434 2810

தொகுப்பில் எட்டு கதைகள். எல்லாமே பெருமளவு பேசப்பட்ட கதைகள். தயா, சுருதி, நேரங்கள், மாயமான், ராணி, ஜிங்லி, மன்னி, பிராயச்சித்தம்.
லாசரா-வின் தயா தொகுப்பில் மன்னிசிறுகதை. அடிக்கடி லாசராவை சென்று வாசிப்பது ஒரு நல்ல அனுபவமாகவே இருக்கும். மொழியின் மயக்கம் இருந்தாலும் அதில் மயங்குவதற்கு காத்திரமான விஷயத்தை அதன் பின்னால் வைப்பவர்.  ஒரு நான்கு கதைகள் பற்றி மட்டும் (நீளம் கருதி )
தயா
‘தயா’ சிறுகதையில் கல்யாண வீட்டில் பட்டாம் பூச்சி போல வளைய வரும் தயா எனும் பெண்ணை -  யார் இவள் இவ்வளவு சுறுசுறுப்பாக பொறுப்பாக என்று கேட்டு அழைத்து நீ பெண் வீடா பையன் வீட என்று கேட்க அப்படி ஒரு பிரிவு இங்கு இருக்கிறதா என்ன என்று கேட்டு அசர வைப்பவள் – கொடுத்து வைத்த உன் புருஷன் யார் என்று விசாரிக்க, சட்டென்று சுடர் அணைந்த விளக்காக ஆகி இருளில் முகப் புதைத்துக் கொள்கிறாள். அவள் தனது மற்ற இரண்டு சகோதரிகளோடு தம் மூவரின் துரதிருஷ்டத்தை பற்றி அம்மாவுடன் பேசிக்கொள்கிறாள். இவள் கணவன் திருமணத்தன்றே வீட்டை விட்டு ஒரு சாதுவுடன் வெளியேறியவன் எட்டு வருடமாக திரும்புவதில்லை. தனது அண்ணன் அண்ணியோடு இருக்கும் இவள் பிச்சைக்கரனுக்கு சோறிடும் வழக்கத்தை குறை காண்கிறார்கள். ஒரு நாள் இரவு தான் சாப்பிட்டுக்கொண்டே இருக்கும்போது அன்னப்பிச்சை என்று வருபவனுக்கு சோறிட அவசரமா செல்பவளை அப்படி என்ன அவசரம் என்று கேட்டு வெளியே செல்கிறான் அண்ணன். சோறிட வேண்டாம் இன்றைய “பாரு யார் வந்திருக்கிறார் என்று” (பாழு பாழு யாழ் வந்திருக்கான்னு என்று அழுகையின் குரலை எழுதுகிறார் ) அழுகிறாள். பார்த்தவனுக்கு முட்டியின் கீழ் கால் விட்டது என முடிக்கிறார். குருட்டு நம்பிக்கைகள்தான் பலருக்கும் ஒரே ஆதரவாக இருக்கிறது. அதில் அறிவுக்காரனங்கள் செல்லுபடியாவதில்லை.

நேரங்கள்

குறும்பு செய்யும் குழந்தையின் அப்பாவாக இருக்கும் ஒருவரது கதை. அலுவல்கள் சூழல் போன்றவை சொல்லப்படுகிறது.  சாலையில் இருந்து கடக்கும் ஒருவனை பற்றிய நினைவு வந்து மனம் தவிக்கிறது. தானே அதுவாக ஆனது போல. பிறகு மழை கொட்டும் நள்ளிரவில்  நண்பனின் மனைவிக்கு பிரசவ வலி ஏற்பட ரிக்ஷா இல்லாமல் மாட்டு வண்டிக்காரன் மாடு மழையில் வராது என்று வண்டியை மட்டும் தர தானே அதை இழுந்து வந்து ஆஸ்பத்திருக்கு அந்த பெண்ணை அழைத்து போக பாதி வழியிலேயே ஒரு திண்ணையில் பிரசவ நடக்க மறுநாள் சின்னஞ்சிறு குழந்தை காண்கிறான். அதன் கண்களை பார்க்க தானே ஆழ்கிறான். நேற்று இறந்தவனும் நானே. இன்று பிறந்தவனும் நானே என்பதாக ஒரு உணர்வு மேலிடுகிறது. மிகவும் தத்துவார்த்தமான இந்த பொறி இந்த கதையில் சரியாக வெளிப்படவில்லை என்றே தோன்றுகிறது.

மாயமான்
கண்டிப்பான அப்பா. அடக்கமான மகன். நோயுற்ற அம்மா. நீண்ட நாள் கழித்து வாலிபனாக ஊருக்கு வருகிறான். வீட்டு சமையில் செய்யும் பெண்ணின் மகள் தற்போது வளர்ந்து பெண்ணாக இருப்பதை கண்டு கிளர்கிறான். ஆனால் அவன் கண்ணில் படாமல் அவளை வைக்கிறார்கள். ஆனாலும் அவள் மீது ஈர்ப்பு உண்டாகிறது. ஆனால் சமையல் மாமி மூலம் அப்படி ஒரு உறவு சாத்தியமில்லை என்ற குறிப்பு தெரிகிறது. அபிதாவின் நாயகி பெயர் சக்கு தான் இதிலும். கதையெல்லாம் இல்லை. ஒரு அருமையான வரிக்காகவே இந்த கதையை மறுபடி மறுபடி படித்தேன். சக்குவை காண மாடி மேல் அவன் தவித்துக்கொண்டிருக்கிறான். இனி லாசரா வரிகளில் –

“இனி என்னால் ஒரு நிமிஷமும் பொறுக்க முடியாது.
இதோ அவள் திடுதிடுவென மாடி ஏறி வரும் சப்தம் கேட்கிறது. எனக்கு பரபரப்பு தாங்க முடியவில்லை. எழுந்து வந்து என் அரை வாசலில் நிற்கிறேன். மாடி வளைவிலிருந்து படிக்குப்படி படிப்படியாய் அவள் உருவம் உயருகையில் மூழ்கிய கோபுர வெள்ளம் வடிந்து கலச தரிசனம் ஆவது போல் வெளிப்படுகிறாள்”

மன்னி
திருமணப் பெண்ணின் குரலில் சொல்லப்படும் இந்த கதையில் திருமணத்திற்கு தன்னை பெண்பார்க்க வரும் நிகழ்வில் ஆரம்பித்து, பையனின் அம்மா மூலம் கொஞ்சம் பேசவைத்து, பொதுவாக பெண்ணை பாடச்சொல்லும் இடத்தில் பையனுக்கு மிக நன்றாக பாடத்தெரியும் என்று சொல்லி, திருமணத்தின் நாள் குறித்து கேட்டு, பையன் சம்பத்தின் மன்னி திருமணம் சீக்கிரம் காணவேண்டும் என்று அவசரப்படுத்துவதை சொல்லி, கல்யாணம் பற்றி கவலை இல்லாமல் சீட்டு விளையாடும் அப்பாவை பற்றிய புகார்களை சொல்லி, ரயிலுக்கு கிளம்பும் போது சீக்கிரம் நடக்க வேண்டும் என்று மன்னியின் செய்தியாக சொல்லி, மன்னி கூட நன்றாக பாடுவாள் என்று சொல்லி, மன்னிக்கும் கொழுந்தனுக்கும் உள்ள ஸ்னேக பூர்வமான உறவை குறிப்பாக சொல்லி (ஒரு வார்த்தை கூட அதை பற்றி வெளிப்படையாக இல்லாமல்) மன்னிய போல தனக்கு மனைவி வாய்க்கவேண்டும் என்று அவன் விழைவதாக சொல்லி , யார் அந்த மன்னி என்று திருமணப் பெண்ணுக்கு யோசனை ஏற்படும்போதே வாசகனுக்கும் உண்டாக்கி, திருமணத்தன்று கூட அவளை முழுதாக காண முடியாமல் போவதை சொல்லி, திருமண முதல்நாள் இரவு உறக்கம் பிடிக்காமல் இவள் வரும்போது பூஞ்சையாக உறக்கம் பிடிக்காமல் இருக்கும் ஒரு உருவத்தை பார்த்து, பிறகு அவளை கண்ணிலேயே காணவில்லை என்று சொல்லி, திருமணம் முடிந்த கையேடு மஞ்சள் நனைத்த புடவையுடன் ஆசீர்வாதம் வாங்க மாமியின் அறைக்கு சென்றால் அது பூட்டி இருக்க, அவசரமாக ஆபீஸ் வேலை என்று அண்ணாவுடன் அம்மாவும் கிளம்பி போனார் என்று சொல்லி, தனது பொருட்களை கட்டிக்கொண்டு கணவனுடன் புது கணவனுடன் அவன் வீட்டுக்கு போனால் வாசலில் திருமண தம்பதியை வரவேற்கும் எந்த தடயமும் இல்லாமல் போக வெளியே நிற்கும்போது அம்மா எதிர்கொண்டு அழைக்க வருகிறாள்.
கதையின் இறுதி பகுதியை லாசராவின் வரிகளிலேயே
“.. ஆரத்தியுடன் காத்திருப்பார் யாருமில்லை. உள்ளே போவதா. வாசலில் நிற்பதா ? ஒன்றுமே புரியவில்லை
அம்மா
அம்மா உள்ளிருந்து வருகிறார். இரு கைகளிலும் சற்று நீளவாக்கில் ஒரு மூட்டையை ஏந்தியபடி நேரே என்னிடம் கொடுக்கிறார். என் திகைப்பில் என்னென்று புரியாமலே வாங்கிக்கொள்கிறேன். சுற்றிய துநியிளில்ருந்து முஷ்டித்த இரு பொம்மைக் கைகள் நெளிகின்றன.
அம்மா கணங்களில் கண்ணீர் வழிந்து கொண்டே இருக்கின்றது. உதடுகள் நடுங்குகின்றன.
மன்னீ... !
என் பக்கத்திலிருந்து கிளம்பிய வீறல் என் கணவருடைய குரலாகவே தெரியவில்லை. அவர் வாயினின்று ஒரு பக்ஷி பறந்து போன மாதிரி எனக்கு தோன்றிற்று.
பிறகு அவர் பாடிக் கேட்டதாகவே எனக்கு ஞாபகமில்லை.
==
கையளவு அகல புத்தக வடிவின் இருபது பக்கங்களுக்குள் கதை ஆரம்பித்து முடிந்து புத்தகத்தை அவள் கையில் திகைப்புடன் வைத்திருக்கும் சிசுவைப்போலவே நம் கையில் புத்தகம் இருக்கிறது.
அந்த பழைய நாட்களின் குடும்ப மற்றும் பேச்சு வழக்கங்களை, நடப்பியல்புகளை வைத்து புரிந்து கொள்ள வேண்டும். அதற்கு கதையிலேயே நிறைய இடங்கள் உண்டு.
மிக இளவயதில் திருமணம் செய்வதால் திருமணம் பற்றிய கனவு ஆண் பெண் இருவருக்கும் இருப்பதுண்டு. அவற்றை வெளிப்படையாக சொல்லும் பக்குவம் வரும் முன்பே திருமணங்கள் நடந்து விடும். தனியாக ஒரே மகளாக இருக்கும் பெண்ணுக்கு அவளது எண்ணங்களே அவள் துணை. அவளது கற்பனைகளே அவள் தோழி. அதில் சிறுமிக்கும் மங்கைக்கும் இடையே உள்ள ஒரு மிதப்பு இருக்கும். இதில் திருமணம் நிச்சயம் ஆனபின்பு கூட வீட்டை விட்டு நகராமல் சீட்டு விளையாடிக்கொண்டிருக்கும் அப்பாவை எரிச்சலுடன் கண்டிக்கும் அம்மாவின் குரலோடு சேர்ந்து இவளுக்கும் வெறுப்பு வரும். ஏண்டி முகூர்த்தத்தை குறிச்சு கூட எழுதிட்டேளே.. உங்காத்து மாமா சும்மா உக்காந்துண்டிருக்காரே. ஐப்பசிலயாவது நடக்குமா.. தைக்கு தள்ளிண்டு போயிடுவேளா என உடனிருக்கும் தெரு மாமிகள் கேட்பதை சொல்லி அப்பாவை கேட்கிறார்.
சீட்டாடிக்கொண்டிருக்கும் அப்பா சுவாரசியமாய் சீட்டை மாற்றி வைக்கிறார்”. அப்பா உங்களை கரிக்கிறேன். என்னதான் ஆண்களுக்கு ஆயிரமே நாங்கள் அடங்கினவர்கள் ஆனாலும் எங்களுக்குரிய மரியாதை எங்களுக்கு கிடைக்காத என்ன ?” என்று கோபமுறுகிறாள்.
கதையின் சில பக்கங்களில் திருமணத்துக்கான வேலைகள் நடக்கின்றன. திருடன் கொண்டு வைத்துவிட்டு போன மாதிரி சாமான்கள் சேர்ந்து கொண்டிருக்கின்றனஎன்று திருமண களைகட்டும் சூழலை சொல்லி பந்தலின் அடைப்பில் வாசல் திண்ணை திடீரென இருள்கின்றது. இந்த இருள் எவ்வளவு இன்பமாயிருக்கின்றது!என்று மிக துல்லியமான ஒரு உணர்வு வரிகளை எழுதுகிறார்.
பிறகு இவள் பேசி பேசி நாங்கள் எங்க ஆதங்கத்தை பேசினாலும் மழுங்குனி என்ற பெயரோடு எல்லா வேலைகளையும் அமைதியாக செய்து வைத்திருக்கும் அப்பாவை அவள் மனம் சொல்கிறதுஅப்பா . இப்போ உங்களை பார்க்க எனக்கு எவ்வளவு ஆசையாயிருக்கு தெரியுமா?”
இந்த கதையில் இப்படியான நுட்பமான உணர்வுகளை பல இடங்களில் பல வரிகளில் காண முடியும். தற்போதைய சூழலில் மேலே சொன்ன அந்த அறியா வயதுபெண்ணின் அந்த அப்பாவித்தனம் கொண்ட ஆனால் திருமண விழைவுடன் கூடிய உணர்வு ஊசலை வைத்து இருபது பக்க சிறுகதை எழுத முடியும்.

இயற்பியலின் தாவோ - பிரிட்ஜாஃப் காப்ரா

இயற்பியலின் தாவோ பிரிஜாப் காப்ரா Fritjof Capra மொ பெ போன். சின்னத்தம்பி முருகேசன் சந்தியா பதிப்பகம் #இயற்பியலின்_தாவோ படிக்கத்  துவங்கி இர...