கொடை மடம் - நாவல்
சாம்ராஜ்
பிசகு வெளியீடு, சென்னை
சிந்தாந்தப் பின்னணியி (யா)ல் கை நழுவும் காதலைப் போலொன்று
ஒரு நாவல் என்பது நிறுத்தி வைக்கப்பட்ட புதுத் தேர் போன்றது. அது பார்க்கப்பட்டு, பேசப்பட்டு அது அதன் இருப்பை மீறிய அல்லது தாண்டிய ஒரு உருவை மெல்ல ஏற்க ஆரம்பிக்கும். நிறுத்தப்பட்ட தேருக்கும் பார்க்கப்பட்ட தேருக்குமான சிறு வித்தியாசம் ஒன்று இருக்கும். தேர் தன்மீது படிந்த பார்வைத் துகள்களாலும் சேர்ந்தே காட்சியளிக்கக் கூடியது. அது பரவலாக, விதவிதமாக பேசப்பட்ட விமர்சனப் பார்வைகளைக் பெற்ற கொடை மடம் நாவல் அப்படி தோன்றக் கூடுமென் நினைக்கிறேன்.
***
ஒரு நாவலை சுருக்கிச் சொல்லி விட முடியுமென்றால் அது அப்படி சுருக்கமாகவே சிறுகதையாக குறுநாவலாக எழுதப் பட்டிருக்கக் கூடும். தவிரவும் நாவல் என்பது சாரத்தை பிழிந்து கொடுக்க/பெற்றுவிடக் கூடியது அல்ல. இன்னொரு புறம் நாவலை அப்படி வாசிப்பதோ பொருள் கொள்வதோ கூட ஞாயமான முறையும் அல்ல. ஆகவே நாவல் என்பது தனது விரிவான சார ஒழுங்கை தனது வடிவத்தின் மூலம் வாசகரிடம் காண்பிக்க முடியும் பாங்கே. பல விழுதுகளை கொண்டிருக்கும் ஒரு ஆலமரத்தை பார்க்கும் உணர்வை கொண்டிருப்பதே.
***
கொடை மடம் நாவலின் முக்கியத்துவம் என்னவென்றால் தமிழ்நாட்டில் மா.லெ குழு சார்ந்த மற்றும் இயக்கம் சார்ந்த ஒரு வாழ்க்கை முறையை முகுந்தன், ஜென்னி என்ற இயக்க சார்புள்ள மற்றும் சில கதாபாத்திரங்களின் மூலம் தெரிவிக்க முனைவதே. அதில் இணைந்தவர்கள், விலகியவர்கள், வெறுத்தவர்கள் என பல சாராரும் உள்ளனர். இந்த ஒட்டு மொத்தத்தையும் தொகுக்க முயன்றிருக்கும் நாவல் முழு வெற்றி பெற்றதாக கருத முடியாமல் செய்வது அது ஆரம்பத்தில் கொண்டிருக்கும் அதீத பகடியும், ஒரு குறிப்பிட்ட பார்வைக் கோணத்துக்கு – அதாவது இயக்கம் மேல் காட்டும் விலக்கம் – அதிக இடம் தந்திருப்பது. ஆனால் இப்படி ஒரு அரசியல் பின்னணியில் நாவலை எழுப்பிச் செல்லும் முயற்சிக்கு சாம்ராஜை பாராட்டவேண்டும். நல்ல முயற்சி.
ஒரு நாவல் அனைவரையும் திருப்தி செய்யும்படியாக ‘இலக்கியப் பஞ்சாயத்து’ செய்ய வேண்டிய அவசியம் இல்லை என்றபோதும் நாவலின் முதன்மைப் பார்வை கூர்மை பெறுவது அதன் இணைப் பார்வைகளாலும், பின்னணிச் செறிவினாலும்தான். பென்சில் ஓவியத்தில் நாசியின் வடிவத்தை வரைய அதன் நிழலை சரியாக வரைவதன் மூலம், உருவை வெளிப்படுத்துவது போல.
மேலும், ஒரு நாவல், நாம் விரும்பும்படி, நமக்கு உகந்தபடி அமையவேண்டும், என்று எதிர்பார்ப்பது பொதுவாக கேளிக்கை வாசக வகைமைக்கு உரியது. அதற்கு மேற்பட்ட தளத்தில் விமர்சனப் பார்வையைக் கொண்டிருக்கும், சீண்டும் நாவலை, அது சொல்வதில் உண்மை இருக்கிறதா என்று பார்ப்பதே முறை. அதே சமயம் சொல்லப்பட்ட விதத்தை கேள்வி கேட்கலாம். ஏனென்றால் சொல்லப்படும் விதம் என்பது மறுதரப்பை காலி செய்யும் விதமாக இருந்துவிட்டால், ஒற்றை பரிமாணம் கொண்டுவிடும் அபாயம் இருக்கிறது. குறிப்பாக புனைவு எனும்போது அது வாசக நெருக்கம் கொண்டுவிட வல்லது. அதனால் என்ன? அதுதானே அதன் வெற்றி? என்றால் – அப்படி சொல்லிவிட முடியாது. ஏனென்றால் நாவல் என்பது ஒரு பரந்த நிலத்தைக் காட்டும் landscape ஓவியம் போன்றது.
நாவலின் உள்ள நல்ல அம்சங்கள் என்பவை அது கொண்டிருக்கும் சரளமான நடை. அறுநூறு பக்கங்களைக் கடக்க உதவி செய்வது அதுதான்; காதலர்கள் இருவரின் ஈடுபாடுகள்தான் மையச் சரடு என்றபோதும் அதை ஒரு கால கட்டத்தின் மா.லெ. இயக்கப் பின்னணியில் வைத்து சொல்வது; இந்தப் பின்னணியே, எழுத்தாளரின் விமர்சனப் பார்வையை வைக்க ஏதுவாக இருப்பது; இது வலுவானதொரு முயற்சி. சில முக்கியமான மதுரை நகரத்தின் இடங்களை அவற்றின் கடந்தகால சம்பவங்களோடு சொல்வது - போன்றவை.
இது சாதுரியமானதொரு உத்தியே. அது எந்த அளவில் வெற்றி பெறுகிறது என்பதை நாம் நாவல் சொல்லும் வரம்புக்குள் வைத்து அறிய முயலலாம்.
நாவலின் மையச் செறிவு என்னவென்பதை நாம் எளிதாக உணர்ந்துவிட முடிகிறது. மதுரை நிலப்பரப்பில் எண்பது, தொண்ணூறுகளில் மதுரைப் பரப்பில் நடக்கும் இந்த நாவல் இங்கிருந்த அப்போதைய கம்யூனிஸ, எம்.எல். அமைப்புகளின் செயல்பாட்டை பின்னணியாக கொண்டிருக்கிறது. ஆனால் இந்த நாவலில், ஒரு தரப்பை விளக்கும் முனைப்பு, மறு தரப்பை வைப்பதில் – ஈடு செய்வது என்ற பொருளில் அல்ல – தேவையான கூர்மையைக் கொண்டிருந்திருக்கலாம். அப்படி இல்லாமல் போவதால் நாவல் சார்புடன் இருப்பதாக தோன்றிவிடுகிறது. ஏனென்றால் இந்நாவல் கதை மாந்தர்களின் வாழ்வாக மட்டும் இல்லாமல், ஒரு சித்தாந்தத்தின் பயணமாகவும் இருக்கிறது. அதற்காக, அது வைக்கும் விமர்சனங்களை ஒதுக்கிவிட முடியாது.
நாவலில் வரும் முகுந்தன்தான் கதை சொல்லிக்கு மாற்றுருவாக தெரிகிறான். அதாவது முகுந்தன் இல்லாத பகுதிகளிலும் முகுந்தனின் கண்கள் - அதாவது முகுந்தனின் எண்னப் பார்வை - பார்த்துக் கொண்டே இருப்பதுபோலத்தான் தோன்றுகிறது.
இயக்க நம்பிக்கை கொண்ட ஜென்னி பாத்திரம் ஒரு விதமாய் ஒரு பக்கம் இருக்க, சித்தாந்தத்திற்காக அயராமல் இயக்கத்தில் உழைத்து, அதே இயக்கத்தால் வெளித்தள்ளப்பட்டு, ஆனால் இயக்க உணர்வு நீங்காத சின்னனின் வாழ்வும் இறப்பும் அதன் இன்னொரு அர்ப்பணிப்புப் பக்கமாக இருக்கிறது. மிக நல்ல பாத்திரம் அது. அது மேலும் விரிவாக வெளிப்பட்டிருக்கலாம்.
ஜென்னி பாத்திரம் – அப்பெயர் ஒரு எதிர்பார்ப்பை உருவாக்க முனைந்து – மிக முற்போக்காக துவங்கி, பேசி உருவாகி பிறகு அதன் முதிர்ச்சியின்மையால் சரிந்து விழுகிறது. இதையே கதை சொல்லி வைக்கும் மறைமுக விமர்சனமாக கொள்ளவும் இடமுண்டு. மொத்த நாவலில் ஜென்னி பற்றிய புள்ளிகளை இணைத்தால் மேற்சொன்ன சித்திரம் கிடைக்கும். சற்று நிதானமாக கவனித்தால் ஆணாதிக்க மனோபாவத்தின் எதிர் பிரதிபலிப்பு போலவே ஜென்னி இருக்கிறாள். அதைப் பெண்ணுரிமை என்று எண்ணி பாராட்டும்படியான வாசிப்புக் கிளர்ச்சியைத் தரும் சமயம், ஜென்னி வாசகரை ஏமாற்றிவிடுகிறாள்.
சமூகம் விதவிதமாக பல பத்தாண்டுகளில் மாறி வரும்போது, நாம் இன்னும் பழைய ஒன்றையே சொல்லிக் கொண்டிருக்கிறோமே என்று ஒரு உதிரி பாத்திரம் பேசுவதன் குரல் இதில் உண்டு.
இப்படியான பார்வைகளை வெவ்வேறு எளிய வகைகளில் விரித்தெடுத்திருந்தால் அப் பார்வையின் ஆழம் வாசகனுக்கு புரிய வரும். அப்படி இல்லாமல் போவதால், அவை வெறும் அபிப்ராயங்களாக நாவலுக்குள் திரிந்தபடி உள்ளன.
நாவல் சொல்லும் ஒரு சில புள்ளிகளை கவனித்தால் -
திருமண வரவேற்பு இடத்தில் வாழ்த்து சொல்ல செல்லும் ஜென்னி அங்கு ஒலிபெருக்கியில் வரும் சினிமா பாடலை வெறுக்கிறாள். அவர்களிடம் முறைக்கிறாள். முகுந்தனை முறைக்கிறாள். பெண்ணுடலை நுகரும் ஆண் மனோபாவம் என்கிறாள். பதட்டமுறுகிறாள்.
இன்னொரு பக்கம் – சின்னன் போன்ற ஒருவர் இயக்கத்திலிருந்து நீக்கப்பட்ட பின்பும், மனைவியால் ஏறக்குறைய விவாகரத்து என்ற அளவில் பிரிந்து வாழ்ந்தும், தற்கொலையில் கேட்பாரற்று உடலாக கிடப்பதும் ஒரு சம்பவம்.
முழு மனதளவில் ஒரு இயக்கத் தோழனாக சாகும் வரை வாழ்ந்தவரின் உடலுக்கு மரியாதை செய்வதை தடுக்கும் இயக்கத்தை மீறி, உடலுக்கு வீர வணக்கம் சொல்லும் ஒருவனின் கதை இன்னொரு சம்பவம்.
மனிதர்களை துயரத்திலிருந்து மீட்க இயங்கும் இயக்கம், தனது விதிகளை மீறும், வெளியேறிய ஆத்மார்த்த தோழன் ஒருவனின் இறப்பைக் கூட பொருட்படுத்தாத அதனுடைய இறுக்கமான கட்டுப்பாடுகள் குறித்த பார்வை.
கலை நிகழ்ச்சிக்காக நாட்டுப்புற கலைஞர்களிடம் இயக்க தோழர்கள் செல்லும்போது அவர்கள் கோவிலின் முன் நின்று அட்வான்ஸ் வாங்க வற்புறுத்துவதும், திருநீறு பூசி வாழ்த்தி அட்வான்ஸ் பெறுவதும், பிறகு அதை அழித்துவிட்டு இவர்கள் திரும்புவதுமான ஒரு காட்சி.
இப்படி நாவலின் வெவ்வேறு வகைப்புள்ளிகள் - இறுக்கமான விதிமுறைகள், மீறுபவர்கள் விலக்கப்படுதல்; பொதுச்மூக மனிதர்களின் பண்பாட்டை புறக்கணிக்காமல், அதை ஏற்கவும் செய்யாமல், ஒரு பணியை செய்யும்போது வெளிப்பட வேண்டிய பக்குவம்; பக்குவமின்மை – என வெவ்வேறு வகைகள். இந்த சம்பவங்களின் பின்னால் உள்ள ‘தன்மை’ அழுத்தமாக பதிவாகவில்லை.
இயக்கம் சார்ந்த கலை நிகழ்ச்சியில், சாமியாடுதல் உட்பட பலவும் நிகழ்ந்து அது ஏறக்குறைய கேலியுடனான தோல்வியாக முடிகிறது. இதை மாற்று முகாம்கள் கேலி பேசியதாக ஒரு வரியுடன் கடந்து போகும் இடம் – மேலும் சுய விசாரணையாக விரிந்திருக்கலாம்.
உதாரணமாக – ஒரு இயக்க கலை நிகழ்ச்சியில் அனைவரும் பேசிய பிறகு தாங்கள் உணவு மற்றும் இருப்பிடத்துக்கு உங்கள் உதவி தேவை என்பதாக அறிவிக்கிறார்கள். ஆனால் கூட்டம் கலைந்து போய்க்கொண்டே இருக்கிறது. அப்பொது ஒரு முதியவள் இவர்களிடம் பேசும்போது அவர்கள் பசியாக இருப்பதை அறிகிறாள். அதை சொல்லக்கூடாதா என்று அவள் கேட்கும்போது ‘அதை மேடையில் அறிவித்தோம்’ என்கிறார்கள். ‘ அட.. அதையா சொன்னீங்க சோறு வேணும்னு புரியற மாதிரி சொல்ல மாட்டீங்களா’ என்பதாக அவள் சொல்லும் வார்த்தை முக்கியமான ஒன்று. அப்படியென்றால் நாம் மக்களுக்கு புரியாத மொழியில்தான் பேசிக் கொண்டிருக்கிறோமா என்ற சுய பரிசீலனையை ஒரு பாத்திரம் பேசுகிறது. இது அழுத்தமான பகுதி.
நாவலில் ஜென்னி கதாபாத்திரம் மூலம் சீண்டி விளையாடி இருக்கிறாரா என்றும் தோன்றுகிறது. ஜென்னியை முற்போக்கு இயக்க ஈடுபாடுள்ள பெண்ணாக அறிமுகம் செய்து, உரையாற்றுதல், சக ஆணை கன்னத்தில் அறைதல், திருமணம் மற்றும் உடல்சார்ந்த உறவுக்கு கட்டளைகள் போடுதல் என்று வாசகருக்கு ஒருவித புரட்சி எதிர்பார்ப்பு போதையை உண்டாக்கி, பிறகு மெல்ல மெல்ல அவளுடய அசட்டு முற்போக்குத் தனத்தை சொல்லி இறக்கிக் கொண்டே போகிறார். ஜென்னி கதாபாத்திரம் முன்னுக்கு பின் முரணாக இருக்கிறது என்று ஒரு புறம் தோன்றினாலும், அப்படியான சறுக்கலைத்தான் சுட்டிக் காட்டுகிறாரா என்றும் கருத இடமிருக்கிறது.
தவிரவும் அவள் எந்த இயக்கத்திலும் இன்னும் சாராத நபர் என்பதையும் நாம் நினைவில் கொள்ளவேண்டும். சரியான இயக்கம் எது என்று இன்னும் அவள் தேர்ந்தெடுக்கவில்லை அவள் சேர்ந்து வாழ்வதற்குரிய ஆணையும் இன்னும் தேர்ந்தெடுக்கவும் இல்லை. முகுந்தனை உளமாற விரும்பும் அவள், அவனுடன் காமத்தை அனுபவித்தாலும் – சொல்லப்போனால் சற்று மூர்க்கத்துடனே - வேறொரு நாளில் அவனுடைய விழைவை உணர்ந்து ‘உங்களுக்கு வேற நினைப்பே இல்லையா’ என்று புகாராகக் கேட்கும் ஒரு சராசரி பெண்ணைப் போலத்தான் இருக்கிறாள்.
ஜென்னி முற்போக்கு என்ற பெயரில் செய்வதெல்லாம் சில கூட்டங்களில் சொற்பொழிவு தவிர, சாமானியர்களின் நம்பிக்கைகளை நக்கலடிக்கும் முதிர்ச்சியற்ற பேச்சும், செய்கைகளும் மட்டுமே. இன்னொரு புறம் இயக்கத்தில் சேர்ந்து தந்தையைப் பிரிந்து, சொத்துக்களை கட்சிக்கு தந்துவிட்டு, நக்ஸலைட் குழுவில் சாகசம் செய்யும் சஜிதாவின் பாத்திரம் காத்திரமான ஒன்று. அது சற்று விரிந்திருக்கலாம். சஜிதாவைப் போன்ற சிந்த்தாந்தத் செயல்பாட்டுத் தீவிரம் ஜென்னியிடம் சிறிதளவும் இல்லை.
நாவலின் செறிவை நீர்க்கடிப்பது ஏராளமான உபரித் தகவல்களும் கதைகளும். அவை நாவலுக்கு வலு சேர்க்கவோ, கருத்துக்களை இணைக்கும் புள்ளிகளாக இல்லாமல் உதிரியாக நிற்கின்றன. உதாரணமாக ஒரு லாட்ஜில் தங்கச் செல்லுவதை சொல்ல அதன் உரிமையாளர், அவரது நான்கு மகன்கள், அவர்கள் வியாபாரம், நஷ்டம் போன்றவற்றை விளக்கிப் போவது; இன்னொரு கதாபாத்திரம் சிறு வயதில் நண்பர்களோடு பாலியல் கதை மற்றும் கற்பனைகள் குறித்தது; ஆனால் ஒச்சா எப்படி போலீஸ் உளவாளியாக மாறுகிறான் என்பதை சொல்ல ஒச்சாவின் கதை தேவையானதாக இருக்கிறது.
நாவலில் புழங்கும் சின்னன், சஜிதா, கஜேந்திரன், தாமஸ் போன்ற பாத்திரங்கள் மேலும் சற்றே விசாலமாகி, பிற உதிரிபாகங்கள் குறைக்கப்பட்டிருந்தால் நாவல் மேலும் அழுத்தம் பெற்றிருக்கக் கூடும். சின்னன் பாத்திரத்தை கையாண்டதில் நாவலாசிரியர் வெற்றி பெற்றிருக்கிறார். தாமஸ் குறைவான இடங்களில் வந்தாலும் முக்கியமான ஒரு பாத்திரம்.
முகுந்தன் ஜென்னி என்ற கம்யூனிஸ கொள்கை மேல் ஈர்ப்பு கொண்ட இருவரின் பரஸ்பர மரியாதை, ஈர்ப்பு, தேவைகள் எப்படி செயல்படுகிறது முடிகிறது என்பதை மையப்படுத்தி, பின்னணியில் கம்யூனிஸ, மார்க்ஸிய கட்சிகள், குழுக்களின் செயல்பாடுகளை விமரிசனமாக வைத்து மதுரைப் பரப்பை ஒட்டி எழுதப்பட்டிருக்கும் நாவல் நல்ல முயற்சிதான். இந்த வகைமையை தொடுபவர்கள் குறைவு. இது இந்த சித்தாந்தத்தின் மேல் பேதம் உள்ளவர்களுக்கு உடன்பாட்டு உவப்பையும், கம்யூனிஸம் மேல் ஈடுபாடு கொண்டவர்களுக்கு உள்ளடங்கிய சினத்தையும், பொது வாசகர்களுக்கு – கொஞ்சம் எடிட் செய்யப்பட்டிருப்பின், மேலும் திருப்தியளித்திருக்கும் நாவல். ஒரு திரைக்கதைக்குத் தேவையான காட்சி விவரிப்புகள் நாவலுக்கு தேவையா? என்ற கேள்வியும் எழுகிறது.
முகுந்தனும் சரி, ஜென்னியும் சரி இயக்கத்தின் சார்பு எடுக்கிறார்களே தவிர ஊழியர்களாக இணைத்துக் கொள்ளவில்லை. ஆனால் நமது மனம் அவர்களை அப்படியாகவே நினைக்க வைக்கிறது.
மேலும் முகுந்தன் இலக்கியத்தை முதன்மையாகவும், ஜென்னி இயக்க வாசிப்பை முதன்மையாகவும் கொண்டிருக்கிறார்கள். அந்த வித்தியாசம் அவர்கள் உரையாடலில் வெளிப்பட்டிருக்கிறது. ஆனால் அது விவாதம் மூலம் கூர்மை பெற்றிருக்க வேண்டும். ஏனென்றால் அதுதான் அவர்களிடையே உள்ள முக்கிய வித்தியாசமாக அவர்களைப் பிரிக்கிறது. நாவலை முடித்து வைக்கிறது. ஆனால் முகுந்தன் ஒடுங்கிய மனம் கொண்டவனாக இருப்பதால் அது இறுதிவரை வெளிப்படவில்லை.
நாவலின் இறுதியில் ஜென்னியிடம் “நீங்க புரூஸ்லீ மாதிரி, முகம்மது அலி மாதிரி (வளர்ப்பு பிராணிகள் போல) ஒரு ஆளைத் தேடறீங்க..நீங்க சொன்னா சொன்ன இடத்துல நிக்கற மாதிரி, உட்கார்ற மாதிரி.. ரொம்ப அன்பா இருப்பீங்க.. ஆனா நீங்க சொல்றதைதான் செய்யணும்..அதுதான் சரின்னு மனப்பூர்வமா நம்பணும்.. அப்படி நீங்கள் சொல்றதையெல்லாம் செய்ய முடியாது - என்று முகுந்தன் சொல்கிறான். ஆனால் இந்த விஷயம் வாசகனுக்கு பாதி நாவலிலேயே புரிந்து விடுகிறது. இதெல்லாம் தெரிந்தும் அவன் தொடர்வதற்கு காரணம் அவளிடம் கொஞ்ச நஞ்சமேனும் கிடைக்கும் காமம் என்றே புரிந்துகொள்கிறோம்.
நாவலில் ஜெகதீசன் –பூஞ்சோலை பற்றிய கதை ஒன்று இருக்கிறது. கிராமத்துக்கு இயக்கப் பணிக்கு அனுப்பப்பட்ட ஜகதீசன், கணவனை இழந்த பூஞ்சோலையிடம் கள்ள உறவில் இருக்கிறான். அவ்வப்போது தன் வீட்டிலேயே ரகசியமாக ஓரிரு நாள் வைத்திருக்கிறான். அவளுக்கு வேற்றூரில் சில ஆண் தொடர்புகளுடன் இருப்பதை அறிந்த ஊர் பஞ்சாயத்து அவளை விலக்க வேண்டும் அல்லது கழுதை மேல் ஏற்றி ஊர்வலம் வரவேண்டும் என்கிறது.
இப்பொது அவனுக்கு மனச்சாட்சிக் சிக்கல் எழுகிறது. அவளை திருமணம் செய்து கொள்வதற்கு இயக்கம் தடை விதிக்கும். அப்படியே விட்டால் ஊர் அவளை விலக்கும். கிராமத் தலைவரிடம் பூஞ்சோலையைத் திருமணம் செய்து கொள்வதாக தெரிவிக்க செல்லும் அவன், எதையும் பேசாமலேயே திரும்பிவிட, கழுதை ஊர்வலத்துக்காக அவளுக்கு தரப்பட்ட கருப்புப் புடவையில் தூக்கு மாட்டிக்கொண்டு சாகிறாள்.
இப்போது நாம் - முகுந்தன் – ஜென்னி; ஜெகதீசன் – பூஞ்சோலை என்ற இரு ஜோடிகளின் செயல்பாடுகளை ஒப்பிட்டுக் கொள்ளும் போது, நாவல் வைக்கும் விமர்சனம் வெளிப்படுகிறது. இது தவிர தாமஸ் – காதல் ஜோடி ஒன்றும் தோற்கிறது. இந்த மூன்று தோல்விகளையும் நாம் ஆராயும்போது, நாவலின் குரலை நாம் கேட்க முடிகிறது.
காமம் கட்டுப்படுத்தப்பட்ட மற்றும் குழந்தைகள் இல்லாத ஒரு மண வாழ்வை ஜென்னி விரும்புகிறாள். அதை முகுந்தன் ஏற்பதில்லை. அதை இயக்க கட்டுப்பாடுகள் சார்ந்த சித்தாந்தங்களின் காரணமாக அவள் சொல்லும்போது, இயக்கம் அவனால் கேள்விக்குள்ளாகிறது.
திருமணம் செய்து கொண்டு காமம் இல்லாமல் ஒரு வருடம் இருக்க வேண்டும் என்பதை ஜென்னி சொல்லும்போது, அந்த கட்டுப்பாட்டை திருமணத்துக்கு முன்பாக கடைபிடித்து பார்த்து முடிவு செய்து கொள்ளலாம் என்ற முகுந்தனின் பேச்சை ஜென்னி மறுப்பதன் காரணத்தை நாம் அறிய முடிவதில்லை. திருமணம், பிள்ளைப்பேறு போன்றவற்றை காட்டமாக விமர்சனம் செய்யும் அவளுக்கு, அத்தகைய திருமணங்கள் தருகின்ற பாதுகாப்பு மிகவும் தேவையாக இருக்கிறது என்பதை நாம் கவனிக்கிறோம்.
எப்படியாவது முகுந்தனை திருமணம் செய்தே ஆகவேண்டும் என்று அவனை அறையில் போட்டு பூட்டும் அளவுக்கான அவளது எதேச்சதிகாரத்தை அவள் நியாயப்படுத்திக் கொள்வது அவன் மீதான அன்பு, காதல் என்ற பெயரில். அதிகாரம் செய்யும் அன்பு எப்போதும் காதலாக நிலைப்பதில்லை.
நாமிருவரும் இணைந்து வாழலாம்; ஆனால் அது சமரசத்துக்கு இடம் இல்லாத என்னுடைய விருப்பத்தின் படி மட்டுமே ( எத்தனை முறை உறவு கொள்ளலாம், என்ன படிக்கலாம், என்ன சாப்பிடலாம், எங்கு இருக்கலாம் உட்பட பல) இருக்க வேண்டும் என்று அவள் எதிர்ப்பார்க்கிறாள். திருமணம் என்பதன் அச்சாணியை முறித்துவிட்டு ரதமேறும் அவளது இந்த ஆசையை பற்றி எடுத்துச்சொல்ல முகுந்தனாலும் முடியவில்லை, கதைசொல்லியாலும் முடியவில்லை.
நாவலில் முக்கியமான புள்ளி ஒன்று இருக்கிறது. நாவல் இறுதியில் முகுந்தன் எடுக்கும் தீர்க்கமான முடிவுக்கு காரணம் தோழர் தாமஸின் என்கவுண்டர் மரணம். வாழ்வை சில மரணங்கள் தீர்மானிக்கின்றன என்ற அழகிய முரண் இதில் உள்ளது.
தாமஸ், இயக்க ஊழியன். அவன் விரும்பும் பெண், சிபிஐ நபரின் மகள் என்பதால் அவனது காதல், இயக்கத்தால் மறுக்கப்படுகிறது. ஆராப்பாளையத்திலிருந்து தர்மபுரிக்கு அனுப்பி விடுகிறார்கள் (இயக்கத்தில் பெயர், முகவரி, இருக்கும் இடம் எப்போதும் எல்லோருக்கும் ரகசியம்). காதலை கைவிட முடியாமல் அவதியுறும் அவன் அவளை ஒருமுறை பார்த்துவிட முடியாதா என்று ரகசியமாக மதுரை வருகிறான். முகுந்தனிடம் ஆற்று மணலில் குடித்துவிட்டு புலம்புகிறான். பாதி எஞ்சிய ரம் பாட்டிலை - தான் அனுபவிக்காத மிச்ச வாழ்க்கையைப் போல - புதரில் மறைத்து, யாராவது பார்த்தால் குடிக்கட்டும் என்று – காதலியை பார்க்கமுடியாமல் திரும்பிச் செல்கிறான். சில நாட்களில் என்கவுண்டரில் சாகிறான். போஸ்டரில் வீர வணக்கம் பார்க்கும்போது, காதலுக்கு ஏங்கிய அவன் உள்ளம், வெதும்பல், புலம்பல், இயக்கம் என்பது அன்புக்கு எதிரானதா என்ற அவன் கேட்ட கேள்வி முகுந்தனை இம்சிக்கிறது. முகுந்தனும் ஏறக்குறைய இதே நிலையில்தான் அப்போது இருக்கிறான்.
முகுந்தன் மனம் வெம்பி, குடித்துவிட்டு ஜென்னியின் மடியில் தலைவைத்து அழவேண்டும் என்று செல்லும்போது, இறுகிய கட்டுப்படுகளை கொண்ட ஜென்னியின் கோபமும், பேச்சும் மன விலக்கம் கொள்ள வைக்கிறது. உபதேசம் செய்கிறாள். விரும்பிய எளிமையான வாழ்க்கையை சந்தோஷமாக வாழ இலக்கியம் உதவி செய்வதாகவும், இயக்க இலக்கியம் தகர்ப்பதாகவும் நம்பும் புள்ளிக்கு அவன் தள்ளப்பட்டுக் கொண்டிருக்கையில், தாமஸின் மரணம் அதை ஆமோதிப்பது போல அவனுக்கு அமைய – அவன் ஜென்னியிடம் முதலும் கடைசியுமாக, அவளே வியக்கும் அளவுக்கு, முரண்பட்டுப் பேசுகிறான். ஏனென்றால் அவர்கள் பிரிவு ஒத்துவராத சித்தாந்த ரீதியிலானது.
மலை உச்சியில் அவன் தனிமையில் அழுகிறான். அவனைத் தேடிச் செல்லும் அவளும் அழுகிறாள். அவனை தன் வழிக்கு கொண்டுவர முடியாது என்று உணர்கிறாள். அங்கிருந்து அவனை உதைத்து தள்ளிவிடவேண்டும் போல அவளுக்கு ஆத்திரம் வருகிறது. சொல்கிறாள். பிரிகிறாள். அவள் சென்றபின் முகுந்தன் தனியனாக மண்டியிட்டு அழுகிறான். அது அவள் பிரிவுக்கான, நட்பு முறிவுக்கான அழுகை என்றாலும், அவர்களுடைய திருமண கனவு நொறுங்குவது என்பதற்காக என்றாலும் உண்மையில் அது தாமஸுக்கான – தாமஸை வாழவிடாமல் செய்த இயக்க கட்டுப்பட்டின் மீதான கையறுநிலை அழுகை. இருவருக்குமான பொதுத் தொடுபுள்ளி இதுதான். தான் மற்றொரு தாமஸா என்ற ஆதங்கம் முகுந்தனுக்குள் எழுகிறது.
முகுந்தன், சித்தாந்தத்தால் இறுகிப்போய்விடாத, நெகிழ்வுத்தன்மை கொண்ட வாழ்வை எதிர்பார்ப்பவனாகவே இருக்கிறான். நாவலின் இறுதியில், இறுக்கம் கூடி, நைந்துவிடும் சூழலில் அவன் ஒரு மாதாகோவிலருகே சென்று பார்ப்பாதாக ஒரு இடம் நாவலில் வருகிறது. நவீன நாவலின் இயல்பாக, இதில் முகுந்தன் இன்னமும் எதற்கும் தன்னை ஒப்புக் கொடுக்கவில்லை என திறந்த முடிவுடன் நாவல் முடிகிறது.
நதிகள் உந்திச் சென்று கடலில் கலப்பது போல, நம்பிக்கைகளே சித்தாந்தத்தை நோக்கி உந்துகின்றன. ஆனால் நம்பிக்கைகள் ஒதுங்கிக்கொள்ள இடமளிக்கும் நதிப்பயணம். சித்தாந்தம் கடற்பயணம்.
ஜென்னியைப் போல கம்யூனிஸத்தால் இறுக்கமான, கடினமான கட்டுப்பாடுகளை பேணும் மனம் கொண்டவன் அல்ல முகுந்தன். அவன் கம்யூனிஸ மார்ஸியத்தின் ஞாயங்களை அறிந்து, சக மனிதனுடனான கனிவையும், பரிவையும், வாழ்வையையும் கோரும் இலக்கிய வாசிப்பாளன். அதனால் அவனால் அழ மட்டுமே முடிகிறது.