சனி மூலை - கட்டுரைகள்
ராகவன் தம்பி
சிறுவாணி வாசகர் மைய வெளியீடு - பவித்ரா பதிப்பகம்.
வடக்கு வாசல் பென்னேசன் என்ற பெயர்தான் பரிச்சயம். அந்த ராகவன் தம்பி தனது டெல்லி வாழ் நாட்களைக் குறித்து எழுதப்பட்டிருக்கும் கட்டுரைகள். இப்படி எல்லோருமே எழுதலாம். ஆனால் இரண்டு விஷயங்கள் இந்த கட்டுரையின் பொருண்மையைக் கூட்டுகின்றன. அவர் நவீன நாடக, இலக்கிய விஷயங்களில் தீராத ஈடுபாடு கொண்டிருக்கும் - அதை விட முக்கியமாக செயல்பட்டிருக்கும் - ஒரு டெல்லித்தமிழன். அப்படியான செயல்பாடுகளால் நஷ்டப்பட்டவர் என்பதால் நிச்சயமாக அந்த செயல்பாடுகள் இலக்கியத் தீவிரமும் நேர்மையும் கொண்டிருக்கக் கூடும் என்பது தமிழிலக்கிய ஜாதகத்தின் கூறு. மற்றொரு விஷயம் கொஞ்சமும் போலித்தனம் இல்லாமல் தன்னையே கூட சமயத்தில் நையாணி செய்துகொள்ளும் இயல்பான சொல்முறை.
எல்லோரும்தான் வாழ்ந்து மடிகிறார்கள். பிறப்புச் சான்றிதழில் ஆரம்பித்து மரண சர்டிபிகேட்டுடன் முடிந்துவிடுவது ஆதார்கார்டு வாழ்க்கைதானா வாழ்க்கை? என்றொரு கேள்வியை எழுப்பிக் கொண்டால் மனிதன் உருப்படியாக ஒரு துரும்பையாவது நகர்த்தும் ஆற்றல் பெற்றுவிடுவான். அதில் ஆக்கபூர்வமாக சிறியதொன்றைச் செய்ய முயன்றால் கூட போதும், சமூக ஊடகத்தில் நாம் பார்க்கும் அலப்பறைகள் இல்லாமல் போயிருக்கும். என்ன செய்வது. புதுமைப்பித்தன் மனிதனை எவ்வகையான மகத்தானவன் என்று சொன்ன வரி, என்றைக்குமான சத்தியமாக போய்விட்டதுதான், தமிழன் பெருமை. ஆக்வே, இப்படி பகிர்ந்து கொள்ளத்தகு அனுபவங்களை கலை இலக்கிய ருசிகள் சாத்தியப்படுத்துவதால், வாழ்வனுபவக் கட்டுரைகளில் மெருகு கூடிவிடுகிறது.
இதிலுள்ள 32 கட்டுரைகளும் டெல்லி வாழ்க்கை சார்ந்த்தவையே. இங்கிருந்து இடம் பெயர்ந்து டெல்லி போன்ற நகருக்கு செல்பவனின் நிலைமை, பிறகு அங்கேயே ஒட்டி இருக்க வேண்டிய சூழல், அங்கு தன்னைப் பொருத்திக் கொண்டு நகரும்போது தான் ஈடுபாடு கொண்டிருந்த டெல்லி இலக்கிய மற்றும் நாடகச் சூழல், அதிரிலிருக்கும் சவால்கள், ஏமாற்றங்கள், சந்தோஷங்கள், போலித்தனங்கள், நிறைகள், குறைகள், சந்தித்த ஆளுமைகள், அப்போதைய நாடகச் சூழல், அதில் தன் பங்களிப்பு, ஆர்வம் உள்ளிட்ட பலவும் -அனுபவ நாட்கள் மூலம் வெளிப்படுகின்றன. அதனால்தான் ஒரு பழைய நான்கு பத்தாண்டுகளை நாம் திரும்பிப் பார்க்க முடிகிறது.
தான் நடத்திய ‘வடக்கு வாசல்’ இதழில் தானே கட்டுரைகள் எழுதுவதின் மேல் பெரும் தயக்கமுற்றவராகவே இருக்கிறார். சுப்புடு விடாமல் வற்புறுத்தி அவ்வப்போது எழுதவைக்கிறார்.
இதில் பலவும் பழங்கதையாக இல்லாமல், நின்று நோக்கி யோசிக்க வைப்பவை. உதாரணமாக – காமன்வெல்த் விளையாட்டு ஏற்பாடுகளுக்காக டெல்லியே அதகளப்பட்டுக் கொண்டிருக்கிறது. திரும்பிய பக்கமெல்லாம் காமன்வெல்த் பேச்சுதான். டெல்லியில் உள்ள அரசு குடியிருப்பு பராமரிப்புகளுக்கு ஆள் பற்றாக்குறை. விளையாட்டு வீரர்களை தங்கவைக்க குடியிருப்புகள் கட்ட பிஹார் சத்தீஸ்கர் உ.பி போன்ற இடங்களிலிருந்து ஆட்களை வரவைக்கிறார்கள். காமன்வெல்த் விழா துவங்கி வெளிநாட்டு விருந்தினர்கள் வர ஆரம்பித்ததும், டெல்லியில் வசிப்பதற்கான அடையாள அட்டை இல்லை என்று அனைவரும் பேருந்திலும் ரயிலிலுமாக கூண்டோடு வெளியேற்றப்படுகிறார்கள். டெல்லியை அழகுபடுத்துவதற்காக வரவழைக்கப்பட்டவர்கள்தான் இவர்கள். ஆறு லட்சம் தற்காலிக தொழிலாளர்களில் இரண்டு லட்சம் பெண்கள். சொந்த நாட்டிலேயே அன்னியரைப் போல போலீஸால் நடத்தப்பட்டு வெளியேற்றப்படுகின்றனர்.
செல்லப்பா ஆவணப்பட முயற்சி கட்டுரையில் நாம் செல்லப்பாவை ஏறக்குறைய நேரடியாக உணர்ந்துவிடுகிறோம். நாம் இதுவரை கேள்விப்பட்ட செல்லப்பாவை சட்டென பொருத்தி புரிந்துகொண்டு விடுகிறோம். இதுவரை அதிக பரிச்சயம் இல்லாதெ செல்லப்பாவிடம் அவருடைய கோபம் தெரிந்தும் துணிந்து செல்கிறார். ஒருவாறாக ஒத்துக் கொண்டவர் “கையிலிருந்து செலவெல்லாம் பண்ணாதே” என்று எச்சரிக்கிறார். அந்த சொல்லில் எவ்வளவு அக்கறையும் ஏமாற்றமும் கலந்திருக்கிறது! காமிரா கொண்டுவரவேண்டும் நாளை வருகிறேன் எனும்போது “நாளைக்கு உயிரோடுதான் இருப்பேன் வரலாம்” என்கிறார். வெளிச்சமற்ற அறை. ஒளியுமிழ் விளக்குகளின் வெப்பம் அவரை துன்புறுத்தும் என்பதால் சிரமம் தராமல் ஒருவாறாக படமக்குகிறார். வீடெல்லாம் ‘சுதந்திர தாகம்’ நாவல் பகுதிகள் இறைந்து கிடக்கின்றன. கட்டிலின் மீது தலையணைகளை வைத்து ராஜா மாதிரி கம்பீரத்துடன் உட்கார்கிறார் செல்லப்பா என்று எழுதுகிறார். செல்லப்பாவின் கோபம் பிரசித்தம் என்பதால் அவருடைய மனைவியிடம் செல்லப்பா கோபித்துக் கொண்டதில் ஒன்றிரண்டை சொல்லக் கேட்கும்போது ‘புருஷன் பொண்டாட்டிக்குள்ள ஆயிரம் இருக்கும். அதையெல்லாம் உங்ககிட்ட சொல்லிண்டிருக்க முடியாது’ என்கிறார். செல்லப்பா மனைவியாயிற்றே! நேர்காணலின்போது மைக்கை அவசரத்தில் தட்டிவிட ஒலிப்பதிவுக் கருவியில் தடை ஏற்பட்டதால் ‘கட்’ சொல்கிறார் இவர். I am not your actor. Don’t say cut என்று கடிந்து கொள்கிறார் செல்லப்பா. செல்லப்பா மறைந்துவிட்டாரா என்ன!
பள்ளி மாணவர்களுக்கு நாடகப் பயிற்சி, திஹார் சிறைவாசிகளுக்கு நாடகம், கோமல் என்ற மனிதரின் ஆளுமை, மேடை நாடக அனுபவங்கள், அப்பாவின் இறுதி நாட்கள், யமுனை குறித்த கலையும் சித்திரம், டெல்லி கொண்டாட்டங்கள் போன்ற பலவற்றை எழுதியிருக்கிறார்.
மிகவும் கெடுபிடியானவர் என்று கருதி நெருங்கத் தயங்கிய கோமல் இவருக்கும் பெரும் உந்துதலாக இருந்திருக்கிறார். அவ்வப்போது கருத்து மாறுபட்டு பிணங்கிய வெ.சா தான் இந்த தொகுப்புக்கு முன்னுரையே முன்பு எழுதியிருக்கிறார். நிகழ் இலக்கிய சூழலில், இவற்றையெல்லாம் இன்று ஏக்கமாகவே பார்க்கும் நிலைக்கு நாம் ‘உயர்ந்து’விட்டோம்.
டெல்லித் தமிழர்கள்தான் என்றாலும் அனைவரும் அப்படி ஒரு கட்டுக்கோப்போடு இருந்தார்கள். இலக்கிய நாடக உலகில் மற்றும் அரசாங்க பதவிகளில் இருந்தவர்கள் தமிழுணர்வும் ஸ்நேகமுமாக வலம் வந்தார்கள் என்றெல்லாம் ‘கப்ஸா’ விடாமல், தோலை உரித்து எழுதி இருக்கிறார் சில இடங்களில். முன்னுரையில் “ஒளிக்காமல் பல விஷயங்கள் பதிவாகியிருக்கின்றன. அதற்கான சால்ஜாப்புகளை கற்பித்துக் கொள்ளாமல், நடந்தவற்றைப் பதிவு செய்யும் இந்த குணம் ராகவன் தம்பிக்கு தன்னைத் தமிழன் என்று சொல்லிக்கொள்ளும் தகுதியை மறுக்கிறது.” என்கிறார் வெ.சா. இந்த கசந்த நிஜங்கள் பலவற்றை கொண்டிருக்கும் இனிய கட்டுரைகள் சில உண்டு இந்த தொகுப்பில்.
அமானுஷ்ய நிகழ்வு பற்றிய கட்டுரை சற்று திகைக்க வைக்கிறது. தில்லிக்கு பெருமை சேர்க்கும் தமிழ் அதிகாரிகள் கட்டுரையில் பொடியின் காரம் இருக்கிறது. கையில் மஞ்சள் பையுடன் வேட்டியை மடித்துக் கட்டிக்கொண்டு வந்து தமிழ் முகம் உள்ள நம்மைப் பார்த்து இந்தியில் பேசும் கனவான்கள் பற்றிய குறிப்புகள் - விபத்தின் போது கோரமான காட்சிகளை க்லோசப்பில் காட்டும் தமிழ் ஊடக காமிராக்களின் குரூரம் - நாடகம் நடத்த விண்ணப்பித்தால் சென்னையிலிருந்து டெல்லி வந்து அதை கெடுக்கும் இலக்கியவாதிகளின் உட்டாலங்கடி திறமை - போன்ற பலவும் கட்டுரைகளில் விரவி நிரடுகின்றன.
பேருந்து நெரிசலில் தமிழ் யாருக்கு தெரியப்போகிறது என்ற தைரியத்தில் ‘கொஞ்சம் முன்னால நகர்ந்து தொலையலாம் இல்லையாடா மயிரு..’ என்று சின்னக்குரலில் நாம் கோபித்துக் கொண்டால் ‘முன்னால் இருக்கறவன் நகர்ந்தாதாண்டா நகர முடியும் மயிரு..’ என்று திருப்பி தாக்குவார்கள் என்பது போல அன்றாட நகைச்சுவைகள் பலவும் உள்ளன. தகவல்கள், புகைப்படங்கள், நாடகப் பிரதிகளின் கோப்பு போன்றவற்றை சரியாக பராமரிக்காத தனக்குள் இருக்கும் ‘ஒழுங்கீன மிருகத்தை’ பற்றியும் சொல்லிக் கொள்கிறார்.
குளிர்காலத்தில் பனிக்காற்றுப் பொழிவில் விறைத்துக் கிடக்கும் வீடற்ற ஏழை உடல்கள் பற்றிய கட்டுரையில் இவர்களுக்கு உதவும் சில அமைப்புகள் இருந்தாலும் அரசாங்கம் - பல கோடி ஊழல்கள் நிலவும் தொகையில் மிகச்சிறு பகுதி செலவு செய்தாலே இத்தகைய அவலனமான மரணங்களைத் தவிர்க்கலாம். ஆனால் யார் செய்வது என்ற கேள்வி இம்சை செய்கிறது.
சரளமாகவும், கிண்டல்கள் விரவிக் கிடக்கும் கட்டுரைகள் பல உண்டு. பிறரைப் பற்றி அல்ல தன்னையேயும் கூட. ஒரு விளம்பரப்படம் தமிழில் எடுக்க இவரையும் சக நாடக நடிகர்களையும் நாடும்போது அது பற்றி ‘என்னைவைத்து ஒரு காமெடி’ கட்டுரையில் எழுதுகிறார். படப்பிடிப்பு தளத்தில் இறந்து போன தந்தையின் படம் ஒன்று வேண்டும் என்று தேடுகிறார்கள். இனி, அவருடைய வரிகளை இங்கே பகிர்கிறேன். // அந்த வங்காளிப் பெண் சாப்பாட்டுத் தட்டைத் தூக்கிக் கொண்டு என்னை நோக்கி வந்தது. அந்தப் பெண்ணின் கவனத்தைக் கவர வங்க நாடக ஆசிரியர் பாதல் சர்க்காரின் நாடகம் ஒன்றைத் தமிழில் இயக்கியிருப்பதாக சொன்னேன். என் துரதிருஷ்டம் அந்தப் பெண்ணுக்கு பாதல் சர்கார் யாரென்றே தெரியவில்லை. ரிதிவிக் கட்டக் இயக்கிய மேகே டாக தாரா படங்கள் பற்றி பேசினேன். அதைப் பற்றியெல்லாம் எவ்விதத்திலும் சட்டையும் செய்யாது சிரித்துக் கோண்டே “உங்களை ஒரு புகைப்படம் எடுக்க வேண்டும். கொஞ்சம் நேரம் கழித்து வைத்துக் கொள்ளலாமா” என்று கொஞ்சம் உரிமையுடன் கேட்டுக் கொண்டது. புரிந்தது. நான் வேறு மாதிரியாக பார்த்திருக்கிறேன். அந்தப் பெண்ணும் வேறு மாதிரிப் பார்த்து இருக்கிறது. பார்வைக்கு பார்வை வித்யாசப்படும் இல்லையா?:. தோட்டத்தில் நிறுத்தி ஒப்பனைகள் செய்து செத்துப்போன அஒப்பாவாக நடிக்க வேண்டிய புகைப்படமாக என்னைப் படம் பிடித்தார்கள். அடுத்தநாள் அதை பெரிதாக்கி லாமினேட் செய்து எடுத்து வந்தார்கள். அதைப் பிரிக்கும்போது கணேஷின் உதவியாளன் முகத்தில் நக்கலான சிரிப்பு இருந்ததைப் போல எனக்கு தேவையில்லாமல் தோன்றியது. சும்மா சொல்லக்கூடாது. உங்கள் முகத்தில் ஒரு பொறுப்பான அப்பாவுக்கான களை முகவும் அற்புதமாக இருக்கிறது என்று கணேஷ் சிரித்துக்கொண்டே சொன்னான். அவன் சொல்ல வரும் களை என்னவென்று நன்றாகவே புரிந்தது //
சில அழகிய தருணங்களை சுருக்கமாக சொல்லிப் போகிறார் ராகவன் தம்பி. நாடகம் என்று பொறுப்பில்லாமல் சுற்றும் மகன் மீது அதிருப்தி கொண்ட அவருடைய அப்பா உடல் நலம் குன்றி இருக்கும்போது அவர் தலையணைக்கு கீழ், மகனுடைய நாடகங்கள் மற்றும் செயல்பாடுகள் குறித்து செய்தித்தாளில் வந்தவற்றை கத்தரித்து வைத்திருக்கும் காகிதங்கள் காணக்கிடைக்கின்றன.
சாகித்ய கலா பரிக்ஷத் அமைப்புக்காக போட்ட நாடகத்தின் முதல் காட்சியே பிணத்தைத் தூக்கி வந்து கொள்ளி வைப்பதாக இருக்க அதை மாற்றலாம் என்ற ஆலோசனைகள் வர, மாற்றாமல் அப்படியே வைத்து ஒத்திகை நடத்துகிறார். ஆனால் இருபது நாட்கள் கழித்து அதே ஒத்திகைக் காட்சி பல நூறு மைல்களுக்கு அப்பால் உள்ள அவரது வீட்டில் மீண்டும் நடந்த்தேறுகிறது - நிஜத்தில்.
தனக்கு மிகவும் நெருக்கமாக உணர்ந்த கோமலின் கடைசி நாட்களில் அவர் மிகுந்த அவதிப் படுவதை கேள்விப்பட்டு வந்து, ஆனால் நேரில் பார்க்க தைரியமின்றி மதுவில் கழித்து, பார்க்காமலே டெல்லி திரும்பிப் போய், அவர் மறைந்த செய்தி கேட்டு குமைவதும் மிக நேர்மையாக பதிவாகியிருக்கிறது.
ராகவன் தம்பியின் செல்லப்பா குறித்த ஆவணப்படத்தை தேடிப்பிடித்துப் பார்க்கவேண்டும்.
No comments:
Post a Comment