ஓசூர் 'புரவி' – இரண்டாம் ஆண்டு இலக்கியக் கூடுகை
சாரதேஸ்வரம். தேன்கனிக்கோட்டை
மார்ச் 1 & 2 – இரண்டு நாட்கள்.
நிகழ்ச்சித் தொகுப்பு (தோராயமாக)
நிகழிடம்: சாரதேஸ்வரம். தேன்கனிக்கோட்டை. மலைகள் சூழ்ந்த யானைகள் நடமாடும் சாய் சமவெளிப் பகுதி. போகும் வழியில் பேட்ராயஸ்வாமி கோவிலும் நிகழ்ச்சி நடந்த இடத்திலிருந்து முன்புறமாக குகை நரசிம்மர் கோவிலும் அதை தாண்டி நீர்ப்பரப்பும்… நிறைய வானமும்.
சாரதேஸ்வரம் ஆதரவற்ற குழந்தைகளை, ஆதர’வுற்ற’ குழந்தைகளாக பராமரிக்கும் சேவை நிறுவனம். பெண் பிள்ளைகள். இரண்டு நாட்களும் வந்திருந்தவர்களுக்கு உணவு, தேநீர் மற்றும் உதவிகளை முகமலர்ச்சியுடன் ஆசை ஆசையாய் செய்து மகிழ்ந்தனர். மகிழ்வித்தனர். வந்திருந்தவர்கள் அனைவருமே அவர்களின் புதிய உறவுகளாயினர். மாலையில் அனைவருடனும் சேர்ந்துகொண்டு பாடிக் களித்தனர். நிகழ்வு எவ்வளவு மனதில் தங்குமோ அதே அளவு அந்த குழந்தைகளும் மனதில் தங்கிவிடுவார்கள்.
குன்றுபோல உயர்ந்த இடத்தில்தான் நிகழ்விடம். அங்கிருந்து பார்த்தால் கோவில் கோபுரங்கள் உச்சிகள் தெரியும். (இணைப்புப் படம் காண்க)
தங்குமிடம்: சாரதேஸ்வரம்: பெண் ஆளுமைகள் மற்றும் இறைவிகள் கோமதி, சாரதா, அகிலாண்டேஸ்வரி, காரைக்கால் அம்மையார் என்று பல பெயர்களில் அழகிய சிறிய குடில்கள். எங்கும் மரங்கள், செடிகொடிகள்,பூக்கள். நடுவே கொஞ்சம் தங்குமிடம். கொஞ்சம் நாம். (இணைப்புப் படம்)
விடியற்காலையில், நண்பர்கள் நடைப்பயிற்சிக்காக சரிவு இறங்கி சென்றபோது, தனது நடைப்பயிற்சிக்காக கடந்து கொண்டிருந்த காட்டு யானை இவர்களைப் பார்த்துக்கொண்டே சென்றது. (இணைப்புப் படம்) வரும் பாதையில் மயில் கூட்டம் மேய்ந்துகொண்டிருக்க நமது அரவம் கேட்டு மேலெழுந்து பறந்து அடர்மரங்களில் மறைந்தன.
================================================================
உரை நிகழ்த்தியவர்கள்: இசை, ஞா.தியாகராஜன், தி.பரமேஸ்வரி, டி.தருமராஜ், கார்திக் பாலசுப்ரமணியன், ஆர்.அபிலாஷ், நவீனா, வயலட், ஸ்ரீனிவாச ராமானுஜம்.
நெறியாள்கை: தூயன், மயிலன் சின்னப்பன்.
நிகழ்ச்சித் திட்டமிடல், ஒருங்கிணைப்பு – பா.வெங்கடேசன் மற்றும் பல புரவி நண்பர்கள்.
பங்கேற்றோர்: சென்னை, மதுரை, காஞ்சிபுரம், ஆம்பூர், வாணியம்பாடி, சேலம், தருமபுரி, வேதாரண்யம், புதுக்கோட்டை, கோவை, பெங்களூரு மற்றும் ஓசூரிலிருந்து.
பேசப்பட்ட தலைப்புகள்:
1. 1) கவிதையை இனம் காணுதல் – இந்த நூற்றுண்டுக்கான கேள்விகள்.
2. 2) புதிய புனைவு வாசிப்புக் கலை - வடிவங்களை வாசித்தல்.
3. 3) நாவல்களைப் பன்முகப்படுத்தும் சிறுகதைக் கூறுகள்
4. 4) சொல்லப்பட்ட தத்துவங்களுக்கான புனைவுகளும், புனைவுகள் உருவாக்கும் தத்துவங்களும்.
======================================================================================
நிகழ்வின் உரை கட்டுரை வடிவில் படிக்கவும் பேசவும்பட்டது. அதன் அச்சுவடிவ புத்தகம் விரைவில் கிடைக்கும். நிகழ்வில் கலந்து கொண்டு, என்னால் எடுக்க முடிந்த உச்சபட்சக் குறிப்புகளிலிருந்தும், நினைவிலிருந்தும் தொகுக்கப்பட்ட வடிவம். இது முழுமுற்றான பதிவு அல்ல.
உரையாளர்கள் பேசியதில் சிலவற்றை ‘தோட்டாப்புள்ளி’களாகத் Bullets தந்திருக்கிறேன். உரைகள் புத்தகத்தில் கிடைக்கும் என்பதால், விவாதங்களில் பேசப்பட்டவற்றை முதன்மையாகத் தொகுக்க முயன்றிருக்கிறேன்.
முக்கியமானவை
எவையாவது விடுபட்டிருந்தால், கலந்துகொண்ட நண்பர்கள் பின்னூட்டத்தில் சொல்லலாம். பதிவை
வாசிப்பவர்களுக்கு உபயோகமாக இருக்கும். விடுபடல்கள் ஏதேனும் இருப்பின், பொறுப்பீராக.
அவை எதேச்சையானவையே. என் கவனத்துக்கு இயன்றவரை தொகுத்துள்ளேன். இதில் சொல்லப்பட்ட, குறிப்பிடப்பட்ட பெயர்கள் மற்றும் reference-ல் ஏதேனும் மாற்றம்/ பிழையிருப்பின் அதற்கு நானே பொறுப்பானவனாவேன். பேசியவர்கள் அல்ல
உரையின் சாராம்சத்தை தோட்டாப்புள்ளிகளாக Bullets வும்.
விவாதம்/ உரையாடலில், ஒரு கருத்தை முன்வைக்கும்போதோ, கேள்வி கேட்கும்போதோ அதற்கு >> குறியும்,
அதற்கான மறுவினைகளை << குறியும் இடப்பட்டிருக்கின்றன.
பேசியவர் (பெயர்) அடைப்புக்குறிக்குள் சொல்லப்பட்டிருக்கிறது. இது சற்று கூடுதலான புரிதல் வசதிக்காக.
====================================================================================
முதல் நாள். அமர்வு -1 கவிதையை இனம் காணுதல் – இந்த நூற்றுண்டுக்கான கேள்விகள்.
இசையின் உரையில் –
- கவிதைகளை பிரித்து ஆய்வதைவிட, புகை மூட்டங்களுக்கு மத்தியில் மிதக்க விடுவதில் இன்பம் இருக்கிறது.
- ஒன்றைக் கவிதை தவிர இன்னோரு வடிவிலும் எழுத முடியுமென்றால் கவிதையாக அதை எழுத வேண்டிய அவசியமில்லை என்று மேற்கோள் காட்டினார்.
- கவிதை அருளப்படும் ஒன்று என்பது சிலருக்கு பிடிப்பதில்லை. கவிதையில் கவிஞ்னின் கை இல்லாத ஒன்றும் நிகழவே செய்கிறது. வந்து அமைவது எனலாம்.
- ஒரு படைப்பில் எதைக் காண்பதால் அதை கவிதை என்று ஏற்றுக் கொள்கிறோமோ அந்த இன்றியமையாத தன்மையை கவிதை அம்சம் என்கிறார் மா.அரங்கநாதன் (பொருளில் பொருள் கவிதை)
- மொழி புரிகிறது என்பதால் கவிதை புரிந்துவிடுவதில்லை.
- கவிதை வந்து அமைவதுதான். அது நிகழும் கணத்தை எழுதுபவன் கூட உணரமுடிவதில்லை. அதில் எழுதுபவன் இருக்கிறான்.
- கணினி உலகத்தில் கவிதையின் புழக்கங்கள் பற்றியும் பேசினார்.
- சராசரி கவிதைகளும், காத்திரமான கவிதைகளும் அடுத்தடுத்து ஒரே தளத்தில் வெளியாகின்றன.
- எப்போதுமே கவிதை கும்பலை நம்பி வாழ்ந்ததில்லை. சிதறியுள்ள உதிரிகளாலேயெ வாழ்ந்து வந்துள்ளது.
>> ஒரு கணத்தில் நிகழ்வதுதான் கவிதை என்று சொல்லி ஏன் கவிதைக்கு ஒரு புனிதத்தை ஏற்றுகிறீர்கள்? கவிதையில் ஒன்றுக்கு மேற்பட்ட கணங்கள் இருக்கக் கூடாதா ? அல்லது கவிதையில் ஏன் சிறுகதை இருக்கக் கூடாது? கவிதை குறித்து பேசும்போதும், எழுதும்போதும் நீங்கள் மிக கட்டுப்பெட்டித்தனமாக (ரிலிஜியஸ்) இருக்கிறீர்களோ என்று ஒரு சந்தேகம் எழுகிறது (டி.தருமராஜ்).
<< கவிதைகளில் சிறுகதைத் தன்மை எல்லாம் முயற்சி செய்யப்பட்டிருக்கின்றன. சிறுகதை எழுதுபவர்கள் ‘ஏண்டா எங்க பொழப்பை கெடுக்கறே” என்று கேட்குமளவுக்கு கவிதைகளில் சிறுகதைகளை எழுதியிருக்கிறேன் (சிரிப்பலை நடுவே இசை).
<< வாட்ஸப் சாட் வடிவில், ஸ்க்ரீன் ஷாட் வடிவில் எல்லாம் எழுதப்பட்டுள்ளன (சவிதா)
<<இரண்டு ஸ்டேட்ஸ் மாற்றங்களுக்கு நடுவிலெல்லாம் கவிதைகளை வைத்திருக்கிறோமே (இசை)
<<உரைநடைத் தன்மை கொண்ட வடிவங்கள் வந்திருக்கின்றன (றாம்)
>>கவித்துவம் எல்லா கலை வடிவத்திற்கும் உண்டு. ஆக, கவிதைக்கு இதுதான் வடிவம் என்று ஏன் இறுக்கம் காட்டுகிறீர்கள். சிறுகதை தன்மை ஏன் அதற்கு வரக்கூடாது. சங்கப்பாடல்கள் செய்யுள்கள். அவை பத்திரப்படுத்தவேண்டும் என்பதற்காக எழுதப்பட்டவை. செய்யுள்களில் கவித்துவம் இருப்பினும் அவை கவிதைகள் அல்ல (டி.தருமராஜ்)
<<எங்கள் கவிதையை சிறுகதை என்றே ஏற்றுக் கொள்வதில் உங்களுக்கு என்ன பிரச்சனை (சிரிப்பலை நடுவே இசை)
<<என்னுடைய மூன்று தொகுப்புகளில் வடிவங்களைக் குறித்த முயற்சிகளை செய்திருக்கிறேன் (றாம்)
>>> வந்தமைகிறது என்று நீங்கள் சொல்வது கவிதை நிகழ்கிறது என்று சொன்ன ஞானக்கூத்தனின் வரியை போன்றதுதானா? அல்லது வேறா? (ரமேஷ் கல்யாண்).
<<< அதைப்போன்றதுதான். கவிதை எழுதும் வரை அது எப்படி உண்டானது என்பது எழுதுபவனுக்கே கூட தெரிவதில்லை. சமீபமாக, ரோஸ்லின் கவிதையில், நடக்கும்போது சிறு கல் ஒன்றை காலால் எத்தி எத்தி தள்ளிக்கொண்டே செல்வது உண்டு. இந்த விளையாட்டு எவ்வளவு பழையது என்று நினைக்க்கும்போது அந்த கல் பழைமையின் உருவாக என்னை தள்ளிக்கொண்டு போயிருக்கிறது (இசை).
>> ஒரு கவிதை எல்லோருக்கும் ஒரே மாதிரியாகப் புரிகிறதா? (நவீனா)
<< ஒரே போல இல்லாமல் வெவ்வேறாகவும் புரியலாம். மேலாகவே, கீழாகவோ (இசை)
ஞா.தியாகராஜன் உரையில் :-கவிதையை இனம் காணுதல் – இந்த நூற்றுண்டுக்கான கேள்விகள்
- கவிதை அறிவு சார்ந்ததா? உணர்வு சார்ந்ததா போன்ற கேள்விகள் இருந்துகொண்டே உள்ளன.
- கவிதை எந்த அற்புதத்தையும் நிகழ்த்துவதில்லை. ஏற்கெனவே நிகழ்ந்து கொண்டிருக்கும் ஒரு பெரிய அற்புதத்தை கைசுண்டிக் காண்பிக்கிறது (போகன் சங்கர்).
- கறாராக கோடுகிழித்து கவிப்போக்குகளை பிரித்துவிடுதல் சாத்தியமில்லை
- எண்பதுகள் வரை இருந்த கவிதைகளில் ஆன்மீக தரிசனங்கள் தத்துவங்கள் நிலவின. அதிலிருந்து விலகி ஞானக்கூத்தன் கவிதைகளில் இருத்தலியல் சிக்கல்களைப் பகடியாக்குதல் மற்றும் அன்றாடம் கவிதையானது. அதன் பிறகு கோட்பாடு சார்ந்து மொழி விளையாட்டுக்கள் உருவாயின் (ரமேஷ் பிரேம்). 90-களுக்குப் பிந்தைய போக்குக்கு கல்குதிரையின் பங்கு பெரியது. அது இருணமையின் போக்குகளைக் கொண்டுவந்தது. 90-களுக்குப் பிறகு உலகமயமாக்கலிலி தம் அடையளங்களை எதிர்கொள்ள தொன்ம மீட்டுருவாக்கம் நிகழ ஆரம்பித்தது. ஒரு பாதக அம்சமாக, இருண்மை மேல் பிரமைகள் உண்டாகி அதுவே நவீனம் என்று நம்பும் போக்கும் உருவாயின.
- தன்னை குறிப்பிட்ட நிலப்பரப்புக்கானவராக காட்டிக் கொள்ளும் போக்கும் நிலவின (சா.துரை, முத்துராசா குமார்). பாட்டியின் குரல்வளையைக் காப்பாற்றி வைத்திருக்கிறேன் என்ற தலைப்பில் கீரனூர் ஜாகிர்ராஜா புத்தகம் வந்திருக்கிறது.
- அதிகாரி என்ற தலைப்பில் ‘பிரகாசத்தை வெளிப்படுத்தாத எந்த வார்த்தையும் இருளை நோக்கியதுதான்” என்று தொடங்கும் கவிதை பிறகு கதை தன்மைக்கு சென்று விடுகிறது. பிறகு பகடியுடன் நின்றுவிடுகிறது. பொருண்மையற்ற பாவனைகளும் நிலவுகின்றன. சங்காயம் தொகுப்பில் மொழி ஊசலாடி சரிகிறது.
- 2000 வரை சொற்சிக்கனம் இருந்தது. பிறகு தளர்வான உரைநடைத் தன்மை கொள்கிறது. (பெருந்தேவி, இசை).
- தேவதேவன் இயற்கையை ஆராதிக்கும் மனநிலைகளில் எழுதுகிறார். அந்த மனநிலை இப்போதைய சூழலில் இருக்கிறதா என்று தெரியவில்லை.
- சமூக ஊடக சூழலிகளில் பாவனைகள் மிகுந்து பிறகு அவையே அடையாளிமாகிப் போகும் நிலையும் உருவாகிறது. உடல் ரீதியான புனிதங்களை சுமக்காமல் துய்ப்பினை எழுதி அதன் மோதல்களை எழுத தளர்வான நடைக்கு கவிதைகள் வந்தன (ஸ்ரீநேசன், பெருந்தேவி, இசை)
- பரிணாமம் அடைந்த மொழியின் போக்கில் இல்லாமல், தொண்ணூறுகளின் கற்பித மொழிகளை எழுதும் படியாக பிரதாப ருத்ரனின் கவிதைகள் உள்ளன. (ஆப்டிகல் மாயை).
உரையாடல்/ விவாதங்கள்.
>> தேவதேவன், எமர்சனின் கற்பனாவாதத்தை இணைக்கிறார். பக்தி இலக்கியத்தின் மூலமும் அழகியல் கற்பனை சார்ந்த முலாம் இருக்கிறது. (அபிலாஷ்)
<< வந்தமைவது என்பதில் கவிஞ்னுகு ஒரு பங்கு இருக்கவே செய்கிறது. (பாலசுந்தரம்)
<< ஊசலாட்டம் என்பதை ஒரு பக்கச்சார்ப்பாக பார்க்க முடியுமா? (நவீனா)
>> ட்விஸ்ட் இருக்கலாம் ஆனால் அது கவிதையாகிறதா என்று பார்க்க வேண்டும் (ஞா.தியாகராஜன்)
>>> இயற்கையை எழுதுவது தவறா? அது சரியானதுதானே ? (ரமேஷ். பெங்களூர்)
<<< எழுதலாம். ஆனால் அதை டெம்ப்ளேட் செய்யக் கூடாது என்கிறேன். (ஞா.தி)
>> புறவிஷயங்கள் பற்றி பேசுகிறீர்கள். உள் விசாரணைதான் கவிதையை புரிய முடியும். அதில் காலம் எப்படி செயற்படுகிறது என்பதையும் கவனிக்க வேண்டும். பாவனை என்பதை நிஜம் என்பதிலிருந்து எப்படி பிரித்தறிவீர்கள் ?
>> கவிதையில் காலம் செயல்படுமா ? அங்கே தன்னிலை சிதறடிக்கப் படுகிறது. ஞானக்கூத்தனுக்கு இருந்த நெருக்கடிக்கு அவர் அங்கத அரசியலை எடுத்துக்கொண்டார். இன்றுள்ள சூழலில் தனிமை, தன்னிலை போன்றவற்றுக்கான அனுமதிகள் இல்லாதபோது, நாம் கவிதையை எழுதவே முடியாமல் போகிறோமா ? எதிர் என்பது இன்றைய நெருக்கடியாகிறது (தர்மராஜன்)
>> சிதறுதலில் இருந்து தப்பிக்கவே நான் இயற்கையை நாடுகிறேன். இன்றும் இயற்கை பொருள்படுவதுதான் (இசை)>>
>> கவிதையை முன்முடிவுகளுடன் அணுகி இருக்கிறீர்கள் அதனால் அதன் மீது முடிவுகளை வைக்கிறீர்களோ என்று தோன்றுகிறது (ந.பெரியசாமி)
>> தன்னிலையை இழந்து போகும்போது மற்றொரு வித தன்னிலை உருவாகிறது (ஞா.தி) *
* (ஷங்கர் சுப்ரமணியனை மேற்கோளாக சொன்னார் என்று நினைக்கிறேன்)
<< அதிகாரம் கவிதையை தியாகராஜன் சொல்லும்போது அது ஒரு பார்வையைச் சொல்லி ஆரம்பித்து, பிறகு கதையாகி பிறகு பகடியாக முடிந்து துண்டுதுண்டாக இருப்பதாக சொன்னார். ஆனால் இறுதி வரிதான் அதை கவிதையாக்குகிறது. பிரகாசத்தை வெளிப்படுத்தாத எந்த வார்த்தையும் இருளை நோக்கியதுதான் என்று சொல்லி, அணுகுண்டை ஒரு பாத்திரமாக்கி கதையாக்கினாலும் இறுதியில் கைகட்டி உட்கார்ந்திருக்கிறது எனும்போது – அணுகுண்டு என்ற சொல் பிரகாசத்தை உணர்த்துவது. ஆனாலும் அது உண்டாக்குவது இருண்மை. இந்த முரணை அந்த கவிதை பகடி செய்து சொல்வதாக தோன்றுகிறது. (ரமேஷ் கல்யாண்)
>> 2005-க்குப் பின் கவிதைகள் உடலை விட்டு விலகி, சிதறலை மகிழ்வாகவே பார்க்கும் விதம் ஆரம்பித்துள்ளது (அபிலாஷ்)
>> எண்பதுகளில் வேலையில்லா திண்டாட்டம், தொழிலாளர் சிக்கல்கள் நிறைய எழுதப்பட்டிருக்கின்றன. ஆன்மீகம் சார்ந்த கவிதைகள் எண்பதுகளில் என்பதை எப்படி சொல்கிறீர்கள் ? ஆன்மீகம் என்பதையும் எப்படி வரையறுக்கிறீர்கள் ? (வேல்கண்ணன்)
>>கவிதைப்பரப்பு ஏன் இன்னும் புனிதமாக, கட்டுப்பெட்டித்தனமாக கையாளப்படுகிறது (டி.தருமராஜ்)
<<கவிதை பல சோதனைகளை செய்துபார்த்துவிட்டு இன்று இங்கு வந்திருக்கிறது. கதைகளை பேசியுள்ளன. (நவீனா)
>> செய்யுள்கள், காப்பியங்கள் இவை கவிதைகள் அல்ல. எதிர்காலத்துக்காக பாதுகாப்பு வைப்பதற்காக உண்டான எழுத்துவடிவம். (டி.தருமராஜ்)
<< பூடகத்தன்மைதான் கவிதையை தூண்டுகிறது. சிற்சில முயற்சிகள் நடக்கின்றன. ஆனால் நாவல்கள் அளவுக்கு விரிவாக அல்ல.(றாம்)
<< ஒரு கணத்தை உறையவைக்கும் நிலையில் எல்லாவற்றையும் அதில் சொல்ல முடியாது. ஏனென்றால் அதுவே கவிதையின் இடம். (பா.வெங்கடேசன்)
>> வெவ்வேறு வடிவங்கள், பன்முகத்தன்மை கவித்துவம் ஏன் கவிதையில் இல்லை ? (டி.தருமராஜ்)
>> பலகுரல் தன்மை (polyphony) என்பது நாவல் தன்மை. அது கவிதையில் வருமா ? (நவீனா)
>> இன்று கவிதை முற்காலத்தின் புள்ளிகள் பலவற்றை தாண்ட வேண்டியுள்ளது. எது புரிகிறதோ, இன்பம் தருகிறதோ அதுவே கவிதை என குறுக்கி விடுகிறோம் (ஸ்ரீநேசன்)
<< இலக்கியம் மனிதனைக் கொல்கிறது* என்று சொல்லப்பட்டதுண்டு. ஏனென்றால் தர்கரீதியாக சிந்திக்கும் மனிதனை கற்பனை மூலம் இலக்கியம் மூலம் மாற்றுகையில் அசல் மனிதன் கொல்லப்படுகிறான். (* ஹார்டியை மேற்கோள் சொன்னதாக நினைவு)
>> கவிதை உருவாக்கும் சுயத்தை கவிதையே திரும்பி கேள்வி கேட்கிறது. தமிழில் அப்படி ஏதாவது இருக்கிறதா ? (டி.தருமராஜ்)
<< கற்பனாவாதம் இன்றும் உலகெங்கும் உள்ளது, நிறைய எதிர்கவிதை தன்மைகளும் உள்ளன. சமீபத்தில் படித்த பல மொழி கவிதைகளில் இந்தி, 200 வருடத்துக்கு முன்பு இருக்கிறது. கேரளம், ஆந்திரம் போன்றவை வானம்பாடி காலத்தில் உள்ளன. தமிழ், வங்கம் சமகாலத்தில் உள்ளன. (அபிலாஷ்)
>> உங்கள் வெளிப்பாட்டில் இது கவிதையாகவோ, கட்டுரையாகவோ, கதையாகவோ வெளிப்பட வேண்டும் என்பதை நீங்கள் ஏன் முடிவு செய்கிறீர்கள் ? (டி.தருமராஜ்)
<< நகுலனின் ராமச்சந்திரனா என்று கேட்டேன் என்ற கவிதையைச் சொல்லி, அப்போதைய சூழலில் அது தத்துவார்த்தமாக முடிந்திருக்கிறது. இன்று கவிதை சூழல் அதற்கு பதிலைக் கேட்கும் (பா.வெங்கடேசன்)
>> அதற்கு பதிலைச் சொன்னால் என்ன? ராமச்சந்திர நாயுடு என்று ஏதோ ஒரு பதிலை? (டி.தருமராஜ்)
<< அப்படி பதிலாக முடிந்திருந்தால் அது கவிதை ஆகி இருக்குமா? சொல்லாததால்தானே நாம் நினைவில் வைத்திருந்து பேசுகிறோம் (இசக்கியப்பன்)
>> நீங்கள் நினைவில் வைத்திருக்கிறீர்கள். ஆனால் அதைப்பற்றி நாம் சொல்ல முடியாதே. காலம்தான் சொல்ல வேண்டும். (டி.தருமராஜ்).
முதல் நாள் - அமர்வு 2: புதிய புனைவு வாசிப்புக் கலை: வடிவங்களை வாசித்தல்.
- நாவல் புனைவை அடைய மொழி ஒரு வழி; வடிவம் ஒரு வழி. ஆனால் புனைவு என்பது மொழிக்கு முன்பே வந்திருக்கிறது.
- நாவல்கள் பத்திரிகைகள் மூலம் வரும்போது அதில் மலிவான விஷயங்கள் வணிக நோக்கில் வந்துகொண்டிருந்தன. ஒருவேளை அதனால்தான் பெண்களை, குழந்தைகளை படிக்க கட்டுப் படுத்தி வைத்தார்களோ என்றும் யோசிக்க இடமுண்டு. அப்போதே திருவிக போன்றோர் மலிவு இலக்கியத்தை கண்டித்திருந்தனர்.
- பாரதியின் சின்ன சங்கரன் கதை சுய சரிதம் என்றே பலரும் சொல்லுவதை அறிவோம். அப்படி இருக்க, ஜமீந்தாரின் அதிருப்தியை தவிர்க்க, பாரதி கதைமாந்தரை வேறொரு பெயரில் வேறொரு ஜமீன் பெயரில் எழுதி இருப்பதால், வடிவ சோதனை அப்போதே துவங்கி இருக்க வேண்டும்.
- வரலாற்று புனைவு (கல்கி, சாண்டில்யன்), நவீன புனைவு (கநாசு, ஜானகிராமன்) இலட்சியவாத புனைவு (நா.பா) போன்றவை இருந்தன.
- தொடர்கதைகளாக எழுத வேண்டி இருந்ததால், நாவல்கள் லீனியர் தன்மை கொண்டிருந்தன (மோகமுள், புளியமரத்தின் கதை)
- கிருஷ்ணப்பருந்து நவீனத் தன்மை வெளிப்படுத்தை நாவல்களில் ஒன்று.
- யதார்த்த நாவல் என்றாலும் கரைந்த நிழல்கள், சம்பத்தின் பார்வையில், ரெட்டியின் பார்வையில் என வெவ்வேறு பார்வைகளில் எழுதிப் பார்க்கப்பட்ட நாவல். இன்று நாவலும் அப்படியே.
- கி.ரா கதைசொல்லும் பாணியை எழுதிப் பார்த்தார். ஜேஜே சில குறிப்புகள் நாட்குறிப்பு வடிவத்தை முயற்சித்தது.
- சமூக அல்லது அரசியல் சூழல்கள் நாவலின் வடிவத்தை முடிவு செய்வதில் பங்காற்றி அல்லது தாக்கத்தை உண்டாக்கி இருக்கின்றன.
- நகுலனின் பலவித அடுக்குகள் கொண்ட ‘நினைவுப்பாதை’ முற்றிலும் வேறுபட்ட புதிய வடிவத்தை முயன்று பார்த்தது.
- 90களுக்குப் பின் தலித்தியம், பெண்ணியம் சார்ந்த நாவல்கள் உருவாகி வந்தன.
- மேற்கத்தைய மாய யதார்த்தத்துக்கு இணையாக யுவன் சந்திரசேகரின் மாற்று மெய்ம்மையை நாம் வைத்து பார்க்கலாம். (ஷ்ராடிங்கர் பூனை உதாரணம் சொன்னார்)
- பிரதேசத்தின் குறு வரலாற்றை கொண்ட நாவல்களாக, திருப்பூரை எம்.கோபாலகிருஷ்ணன், பரதவர் வாழ்வை ஜேடி குரூஸ் எழுதினர். இனவரைவியல் தன்மையுடன் சு.வேணுகோபால் நுண்வெளிக் கிரணங்களில் எழுதினார்.
- தன்வரலாற்று வடிவில் சிலுவைராஜ் சரித்திரம் வந்தது.
- 2000-த்துக்குப் பிறகு குறுவடிவங்கள் வெளி வரத்துவங்கின. விரைவாக வெளியிடவோ அல்லது தணிக்கைக்கான நேரமின்மையாலோ அவை வெளிவர ஆரம்பித்தன. (மாயாதீதம், கிளைக்கதை, நீசேவின் வேர்க்கனி, அன்னா). எழுதுவதற்கான கால அவகாசம் மற்றும் திருத்தி எழுதுதல் காத்திரமான படைப்பை தரவல்லன.
- குற்றமும் தண்டனையும் நாவலை தாஸ்தாவ்ஸ்கி டைரிக்குறிப்பு பாணி, பாவமன்னிப்பு பாணி, சிறையிலிருந்து வெளிவந்து எழுதும் குறிப்பு முறை போன்ற மூன்று முறையில் எழுதிப் பார்த்து இறுதியில் இப்போதைய வடிவத்தில் எழுதினார். இத்தனைக்கும் அவருக்கு நீதிமன்ற / பொருளாதார நெருக்கடிகள் இருந்தன.
- குறுவடிவத்துக்கும் பாப்புலர் வடிவத்துக்கும் என்ன வித்யாசம் இருக்க முடியும் என நாம் யோசித்துப் பார்க்கலாம். தொழில்நுட்ப முன்னேற்றத்தால் இலக்கியம் எல்லோருக்குமேயான ஒரே இலக்கியமாக மாறிக்கொண்டிருக்கிறது.
- நிரூபணங்களுக்கான தேவை இல்லாமல் கட்டமைக்கப்படும் உண்மைகள் சமூக ஊடத்தில் post Truth என்பதாக வெளிவருகின்றன. நுண் எழுத்துக்கள் என்றால் காஃப்காவை பிரதி எடுக்கும் படைப்புகள் வந்துவிடுகின்றன.
தி.பரமேஸ்வரி –உரையில் புதிய புனைவு வாசிப்புக் கலை: வடிவங்களை வாசித்தல்
- · உள்ளடக்கமும் வடிவமும் மாறிக்கொண்டே வந்திருக்கின்றன.
வடிவச்சிறப்பை தனியாகக் காட்ட முடியாது. மனப்பதிவையே எழுத முடியும்.
- புனைவின் வடிவம் என்பது காலம், இடம், பார்வைக்கோணம், கதாபாத்திரம், த்வனி போன்றவை இயங்கும் விதம் என்று சொல்லமுடியும்.
- மழையின் குரல் தனிமை குறுநாவலில் (பகுதியைப் படித்துக் காட்டினார்), அவரவர் காலங்களிலிருந்து இறங்கினர் என்ற வரி மூலம் வெவ்வேறு குரலைப் பேச ஆரம்பிக்கும் பா.வெங்கடேசனின் நாவல் அது.
- கரைந்த நிழல்கள் நாவலில் முதலில் சில மணி நேரங்களைச் சொல்லும் நாவல் பிறகு பலவருடங்களுக்குத் தாவுகிறது.
- ராஜா வந்திருக்கிறார் (அழகிரிசாமியின் கதைச் சுருக்கம் சொல்லி) கதையில் பாத்திரங்களின் பார்வைகளை அவரவர் உரையாடல் மூலம் சொல்லும் போக்கு இருக்கிறது. வறிய சிறுவனுக்கு உதவச் சொல்லும் பாத்திரம் பெண் குழந்தைப்பாத்திரம்தான்.
- கிருஷ்ணப்பருந்து நாவலில் வீடும் மாடியும்தான் புனைவின் இடம். அவர் வெவ்வேறு இடங்களுக்கு செல்வதாக இருந்திருந்தால் புனைவின் வடிவம் மாறியிருக்கும்.
- நாளை மற்றுமொரு நாளே-வில் குடிசைஒப்பகுதிதான் இடம். கதை அதை விட்டு வெளியே சென்றிருந்தான் வடிவம் மாறிப்போயிருக்கும்.
-
பெத்தவன் கதையில் சமூக வெளி மற்றும் வீடு என்பதாக
இல்லாமல் இடம் வெவ்வேறாக இருந்திருந்தால் வடிவம் மாறியிருக்கும்.. சமூகத்துக்கான மனிதனாக
ஒரு இடம், குடும்பத்தலைவனாக ஒரு இடம் என இரண்டும் வரும் நாவல் அது.
- சங்க இலக்கியத்தில் குருகு மட்டுமே சாட்சி என்ற பாடல், புனைவின் தன்மை கொண்டிருப்பது. சிலப்பதிகாரத்தில் கதை மாந்தர்கள், இடம், சம்பவம் என பலவும் விரவி இருக்கின்றன. நாம் இப்போது சொல்லும் புனைவின் அங்கங்கள் முன்பே இப்போதிருப்பதைப்போல பகுக்கப்பட்டதில்லை. ஆனால் புனைவுகள் இருந்திருக்கின்றன.
டி.தருமராஜ் – உரையில் புதிய புனைவு வாசிப்புக் கலை: வடிவங்களை வாசித்தல்
·
- மொழியைத் திக்க வைத்தல் (stuttering) என்பதைப் பற்றிப் பேசினார். எழுத்தாளர் திக்கலாம். தடுமாறலாம். ஒரு அனுபவத்தை வெளிப்படுத்த அதைக் காட்சிப்படுத்தி விவரிக்கலாம். மற்றொரு வழி மொழியைத் திக்க வைக்கலாம்.
- அதாவது ஒரு அனுபவத்தை பூரணமாக வெளிப்படுத்தி எழுத ஒரு மைனர் லாங்க்வேஜ் மூலம் திக்க வைக்கலாம். காஃப்கா அதைத்தான் உருமாற்றம் நாவலில் செய்தார்.
- அதுவரை பேசப்படாத மனிதனை புது வடிவத்தில் பேசுதல் நவீன இலக்கியத்தின் பண்பு. அக்னிப் பிரவேசம் அதுவரை பேசப்படாத ஒரு பகுதியை எடுத்துப் பேசியது.
- நவீன எழுத்தாளர்கள் இதுவரை எழுதப்படாதவர்கள் பற்றி – விளிம்புநிலை பற்றி, குரலற்றவர் பற்றி, பழங்குடிகள் பற்றி – எழுதுவதாக சொன்னாலும், சம்மந்தப்பட்டவர்கள் கேட்கும் கேள்வி அதில் நாங்கள் எங்கே இருக்கிறோம்? என்பதே. பெரும்பாலும் அவர்களைப் பற்றி நமது மொழியில்தான் எழுதுகிறோம். அதில் அவர்களுடைய குரல் அடையாளங்கள் இருப்பதே இல்லை என்பதே குற்றச்சாட்டாக எழுகிறது. தலித்தியமோ, பெண்ணியமோ அதில் அவர்கள் இல்லை. அவர்களைப் பற்றி நாகரீக மொழியில்தான் எழுதப்படுகின்றன.
- ஃபூக்கோவுக்கும் தெரிதாவுக்குமான உரையாடல் பிரபலமான ஒன்று. அது மனப்பிறழ்வும் உளவியலும் பற்றியது. உளவியலின் மொழி தனிமொழியாகவே (monologue) இருக்கிறது.
- மனப்பிறழ்வு கொண்டவர்களின் மௌனத்தை எழுதுகிறேன். அவர்களது வரலாற்றை எழுதவில்லை. தொல்லியலை எழுதுகிறேன் என்றார் பூக்கோ. பொ.ஆ 6 க்கு முன்பு வரை, வரலாற்றை எழுத தடயங்கள் இல்லை. தொல்லியல் ஒன்றே வரலாற்றை எழுதக் கிடைத்திருந்த ஒரே வழி. பாறைகள் அகழ்வுகள் மூலம் மீட்டுருச் செய்து வரலாற்றை எழுதுவது.
- ஃபூக்கோவுக்கு பதில் தந்த தெரிதா – நீங்கள் தொல்லியலை எழுதவில்லை. உங்கள் குரலில் அவர்களை குரல்நகல் (மிமிக்) செய்கிறீர்கள். நீங்கள் பேசுவது உங்களுடைய மாற்றுக் குரல்தான். அவர்களுடையது அல்ல. அது வெளியாரால் பேசப்படவே இயலாதது என்றார்.
- இப்படிக் குரலற்றவர்களுக்கு குரலோ, மொழியோ இல்லாவிடினும், முனகல்கள் உள்ளன. அதை அறிந்துகொள்ள நிசப்தத்தை அறியவேண்டும். ஏனென்றால் எல்லா சப்தங்களும் நிசப்தத்திலேயே தொடங்குகின்றன.
- தமிழில் 18 மெய் உள்ளன. 12 உயைர் உள்ளன. நன்னூல் இதை கம்மென்று உள்ளது என்கிறது. முத்துவீரியம் இதை ஊமை என்கிறது.
- ‘க்’ என்ற அரை மாத்திரை எழுத்தை யாராலும் உச்சரிக்க இயலாது. நாம் சொல்லும்போது ‘க்’ என்பதை ‘இ’ சேர்த்து ‘இக்’ என்றே உச்சரிக்கிறோம். அது உயிருடன் சேர்ந்தே வெளிப்படுகிறது. மொழி இவ்வாறாக சப்தமின்மையில்தான் தொடங்குகிறது.
- மௌனம் என்பது குரலற்றது அல்ல. நமக்கு விளங்காத சப்தமாக இருக்கிறது.
- Maths is metaphysics கணிதம் என்பது மீமெய்யியல். மதிப்பை ஏற்றிருக்காத இன்மைதான் விரிவைத் தருகிறது. 1-9 எண்கள் உண்டு. பூஜ்ஜியத்தை இடையிலும் பின்னும் வைத்து அதன் மதிப்பை மிகப்பெரும் விரிவை உருவாக்கலாம். ஒன்றை விரிவாக்க நிசப்தம் தேவைப்படுகிறது.
- இந்த நோக்கில், ஒரு வகையில் குரலற்றவர்களின் நிசப்தமே சமூகத்தை விரித்தும், இழுத்தும் பிடித்துக் கொண்டிருக்கிறது.
- மொழி எப்போது திக்கும் என்றால், தடுமாறும் என்றால் ஒரு முதன்மை மொழியோடு மைனர் மொழி இணையும்போது. மார்க்வேஸ் மொழியைத் திக்க வைத்தவர். இயந்திரத்தனமான வாழ்வை இயந்திரத்தனமான மொழியால்தான் வெளிப்படுத்த முடிகிறது. எழுதப்படாதவர்களைப் பற்றி, குரலற்றவர்களைப் பற்றி இவ்வாறாகத்தான் எழுத்தில் கொண்டுவர முடியும். பிற எல்லாமே நமது ‘குரல்நகல்’கள்தான்.
- நாம் பெரும்பாலும் முன்முடிவுகளைக் கொண்டே கலையை அணுகுகிறோம். மொழியை சோதித்துப் பார்க்காதவரை புதிய வடிவங்கள் நமக்கு கிடைக்காது.
- போர்ஹேஸ் நாவல் எழுதியதில்லை. அவர் சிறுகதைகளில் புதுமொழியைப் பிரயோகித்தவர். சிறுகதைகள் கதை முடிச்சுகளைப் பேசுகின்றன. நாவல்கள் பாத்திரங்களைப் பேசுவன என்றார்.
- தமிழில் ஆற்றுப்படையின் முன் வரைவு பாடாண் திணை. அதில் கைக்கிளை உள்ளது. ஒரு குரல் மட்டுமே பேசும். என் தலைவனோடி கூடி இருந்தபோது இருந்த கொக்கு கூட மீனைத்தான் எதிர்நோக்கி பார்த்துக் கொண்டிருந்தது. அதிலிருப்பது ஒற்றைக் குரல். ஆனால் ‘இங்கு சென்றால் இது கிடைக்கும்’ என்று சொன்ன ஆற்றுப்படையில் டயலாக் இருக்கிறது.
- சமூகம் நம் மீது (நவீன எழுத்து) வைக்கும் கேள்விகளை உள்வாங்கிக் கொண்டு, மொழியைத் திக்க வைத்து கையாளும் புது மொழிதான் புது வடிவங்களை சாத்தியமாக்க வல்லன.
உரையாடல்கள்/ விவாதங்கள்.
>> உங்களுடைய புனைவை சமூகம் சார்ந்தவற்றைக்கொண்டு எப்படி முன்னெடுப்பது ? (அபிலாஷ்)
<< அழகியலைக் குலைத்தலே இங்கு தடுமாற வைத்தலாகும். கட்டுரைத் தன்மையை புனைவில் செலுத்தி, அது நிஜமா புனைவா என மொழியைத் திக்க வைத்தவர் போர்ஹேஸ். Psychoanalysis ஐ வேறொன்றாக பரிசீலிக்கும் Schizoanalysis இருக்கிறது.
>> போர்ஹேஸ் கட்டுரை வடிவை புனைவில் செலுத்திப் பார்த்தவர். இதில் ராமயண மஹாபாரத ஒப்புமையில் – இராமாயணம் உணர்ச்சிகளை பிரதானமாக கொண்டது. பாரதம் உணர்ச்சிக்கூறுகள் அற்றவற்றை பிரதானமாக கொண்டது. பாரதத்தில் கடமையை செய். பலனை எதிர்பாராதே என்று சொல்வதே உணர்ச்சியை நீக்கும் முறையாக பார்க்க முடியும் அல்லவா? (பா.வெங்கடேசன்)
<< தொன்மத்தின் லாஜிக் வேறு. நவீனத்தின் லாஜிக் வேறு. இவை ஒரே மாதிரி செயல்பட முடியுமா என நாம் விசாரணை செய்து கொள்ளவேண்டும். (டி.தருமராஜ்)
<< இந்த மொழியைத் திக்கவைக்கும் போக்கை கைக்கொண்டு எழுதலாம். ஆனால் அது எங்கு கொண்டுபோய் சேர்க்கும் என்பதை ஊகிக்க முடியாது. (டி.தருமராஜ்)
நாள் 2 – அமர்வு 1 நாவல்களைப் பன்முகப் படுத்தும் சிறுகதைக் கூறுகள்.
ஆர்.அபிலாஷ் – உரையில்
- · நாவல் இறக்குமதி வடிவம் என்றாலும் சுபாவத்தால் இந்திய இலக்கிய வடிவமாகவும் கொள்ளலாம்.
- நாவலுக்குள் உள்ள பல்வேறு உப கதையாடல்களை அது எப்படி உள்ளடுக்குகிறது எனப் பார்க்கமுடியும்.
- ஒரு பத்து தலை நாகம் தனது பத்து கண்கள் வழியாக பார்ப்பது போல நாவல் பார்க்கிறது.
- ராமன் என்ற ஒரு தலைக்குள் ஒற்றைப் படை விழுமியங்கள் இருப்பதைப் போல சிறுகதை பயணிக்கிறது. ஆனால் நாவல் ராவணன் போல பத்து தலைகளுடன் இருபது கைகளுடன் ஒற்றை உடலுடன் இருப்பது. பத்து தலையும் ஒவ்வொன்றும் வெவ்வேறாக இருந்து ஒன்றோடு ஒன்று ஒட்டியும், முரண்பட்டும் இயங்குவது போல்தான் நாவல் இயங்கும்.
- விலங்கு மனிதன் என்ற ஒப்பீட்டில் பேசும்போது – விலங்குக்கு தன்னிச்சையான உணர்வுகளே இருக்கும். என்ன தோன்றுகிறதோ அப்படி இருக்கும். அதனால் அதை கணிக்க முடியாது என்பார்கள். ஆனால் மனிதன் என்ன நினைத்தாலும் சூழலுக்குத் தகுந்தபடி தன்னை அமைத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது.
- தெரிதா குறிப்பான் என்பதை வைத்து பரிசீலிப்பதைப் பற்றி பேசினார். பேச்சுமொழி எழுத்து மொழியை விட அதிக சுதந்திரத்தை தருகிறது. பேசும்போது சொல் சொல்லாக கேட்டு அதன் நிழலைத் தொடர்ந்தபடியே நாம் அர்த்தப்படுத்திக் கொள்கிறோம். ஆனால் எழுதும்போது தன்னிச்சை குறைந்து ஒரு திட்டம் அமைந்துவிடுகிறது.
- கதாபாத்திரத்தைப் பேசவைக்கும் எழுத்தாளன், கதாபாத்திரம் உருப்பெற்று வளர வளர அதன் சொற்படி நடக்க வேண்டியவனாகி விடுகிறான். எழுதியவன் தன்னிஷ்டப்படி எதையும் பேச முடிவதில்லை..
- ப்ளேட்டோவின் கதையில் ஒரு குகைக்குள் மனிதர்கள் இருக்க, பின்னிருந்து ஒளிவிழ, தங்கள் நிழல்களைப் பார்த்து விதவிதமாக கற்பனை செய்துகொள்வார்கள். அங்கிருந்து தப்பித்து செல்லும் ஒருவன் தான் காண்பது எல்லாமெ நிஜத்தில் தொட்டுணரும்படி இருப்பதை உணருவான்.
- நாவல் நூற்றுக்கணக்கான செவிகளில் விழுந்த பலவற்றைக் கொண்டிருக்க அது நாவலை சாதிக்கிறது.
- மனிதன் சம்பவ ஜீவியாக இருப்பதால் அவன் சில ஒழுங்கின்படி நடந்துகொள்ள வேண்டியிருக்கிறது.
- வெண்ணிற இரவுகளில் உடல் தனிமை, அகத்தனிமை இரண்டையும் பார்க்க முடியும். ஒரு விதத்தில் அவன் விரும்பும் பெண்ணே அவனது மனப்பிம்பமாகவே பார்க்கவும் முடியும். தனித்து விடப்பட்ட வீடுகள் கண்ணீர் விடுவதாக கூருவதில், தஸ்தாவ்ஸ்கி வெளியையும், கதை சொல்லியையும் இணைக்கிறார்.
- மௌனி இவ்வாறாக மரம், கோயில் விக்ரகங்கள், பிராகரம் போன்றவற்றை மனநிலைக்கு இணையான இடத்தைக் கொடுக்கிறார்.
- மரபில் பாத்திரங்களின் உணர்ச்சிகளை புறப்பொருட்கள் மேலேற்றி எழுதினார்கள். ஆனால் இன்று மனதின் உருவகமாக புறச்சூழலை சித்தரிக்கிறார்கள். எல்லா வருணனைகளும் எழுதுபவரின் குரலில் ஒலிக்கின்றன. இது ஒற்றைப் பரிமாணத்தை உருவாக்கி விடுகிறது. பெட்ரோ பரோமாவில் எந்த பாத்திரமும் முக்கியமாக இல்லை.
- தன்னெழுத்தை எழுதுபவர்கள் கதை சொல்லியையே பாத்திரமாக்கி, அதையே எழுத்தாளராகவும் பாவிக்கிறார்கள். ஆனால் சுயசரிதை அல்ல.
- பா.வெங்கடேசன் பின்நவீன நாவல்களில் கதாபாத்திரன்களின் ப்ரக்ஞை காலத்துக்கு முன்னும் பின்னுமாக தோன்றி புது உலகை, காலத்தை உருவாக்குகிறது.
- நாவல் எல்லாவித வடிவத்தையும் – சிறுகதை, கட்டுரை, கவிதை – எடுத்துக்கொண்டு இயங்கி எழும்போது கட்டுப்படுத்த முடியாத படிக்கு மாறுகிறது.
- ஜானகிராமனின் கதைகளில் வசனங்கள் கதாபாத்திரங்களின் உணர்வுகளை சொல்லிவிடும் தன்மையுடையன.
- இமயம் பல்வேறு பாத்திரங்களைக் கொண்டுவந்து அவற்றின் இயக்கத்துக்க்கு நடுவே கதையை எழுப்புகிறார்.
நவீனா :- உரையில். நாவல்களைப் பன்முகப் படுத்தும் சிறுகதைக் கூறுகள்
- மூன்று படிநிலைகளாகப் பிரித்து பரிசீலித்துப் பேசினார்.
- இடத்தைப் பற்றி சொல்லும்போது பூக்கோ மூன்றுவித இடங்களைச் சொல்கிறார். ஒன்று – இடமற்ற இடம். தண்ணீரின் மேல் மிதக்கும் கப்பல். மற்றொன்று நிலத்தின் மேல் உள்ள கண்ணாடியில் ஒருவன் தன்னைப் பார்த்துக் கொள்வது. மற்றொன்று இரண்டும் இணைந்து செயல்படும் இடங்கள்.
- Utopiya Dystopia இரண்டுக்கும் இடையிலான Hetrotopia ல் கதை இயங்குவதாக உள்ளது.
- நாவலுக்கு முன்னால் தேவதைக் கதைகளே இருந்தன. அதிலிருந்து நாவல்கள் உருவாகி, பிறகு சிறுகதைகள் உண்டாகி மீண்டும் நாவல்களுக்கு திரும்புகின்றன.
- சிறுகதை என்பது எளிமையான கருக்கொண்டதாகவும், அது வளர்ந்து சிக்கலான அமைப்புக்கு செல்லும்போது நாவல் தன்மை கொள்கிறது. மரத்தைப் பற்றிய கதையாக இருந்தாலும், குளத்தங்கரை அரசமரம் எளிதான சிறுகதையாக இருக்க, புளியமரத்தின் கதை நாவலாக பெருகி விரிகிறது.
- ஹாத்தான் கதையில் ஒரு பெண்ணுக்கு தண்டனையாக அவள் நெஞ்சில் A என்ற எழுத்தை அடையாளமாக தொங்கவிட, நாவல் அந்த எழுத்தையே ஒரு கதாபாத்திரமாக்கி விரிந்து கொள்கிறது நாவல்.
- ஜானகிராமனின் கமலம், நாவல் சாத்தியமுள்ள சிறுகதை. God sees the Truth but waiting என்ற டால்ஸ்டாய் கதை ஒரு நாவலுக்குரிய பின்னணியுள்ள கதை. செக்காவின் the Bet பதினைந்து ஆண்டுகளை சொல்லும் சிறுகதை, ஒரு நாவலுக்குரியது.
- பிராய்டு எழுதிய கதையில் இராணுவ வீரனுக்கு ஒரு காதலி இருக்க, அவனைத்தேடிச் செல்லும்போது, இரவில் பகைவன் என்று அவள் சுடப்பட்டுவிட, பிறகு அவன் தற்கொலை செய்துகொண்டுவிடுகிறான். இந்த அமுக்கப்பட்ட உணர்ச்சிகளை எழுதும்போது, எழுதி விவரித்துவிட்ட திருப்தி விரைவில் வந்துவிட்டால் அது சிறுகதையாகவும், விரிவாக சொல்ல வேண்டி இருப்பின் நாவலாகவும் அமைகிறது எனலாம்.
- சிறுகதையா, நாவலா என்ற வடிவத்தை எழுதும்போது கணித்துவிட இயலாது என்கிறார் பாக்னர்.
- பாத்திரங்களை எப்படி நடத்துகிறோம் என்பது சிறுகதையில் இருக்கிறது. அவற்றை மேலும் விரித்துச் சொல்லி அதற்குள் மாற்றங்களை உருவாக்கும்போது நாவலாகிறது.
- அக்னிப்பிரவேசம் சிறுகதையில் பெயர்கள் இல்லை. ஆனால் அதுவே சில நேரங்களில் சில மனிதர்கள் என்ற நாவலாகையில் எல்லாவற்றுக்கும் கங்கா, பிரபு என பெயர்கள் எழுகின்றன.
- கதைக் கருவில் மையம் கொண்டிருப்பது சிறுகதை. விரிந்து சென்று பாத்திரங்களின் மேல் மையம் கொள்வது நாவல்.
- சிறுகதை திறந்த முடிவுடன் முடியச் சாத்தியமுண்டு. நாவல் அப்படி இயலாது.
- படைப்பை ஒரு வட்டம் என்று கொண்டால், சிறுகதையில் கரு நடுவிலும், பாத்திரங்கள் அதன் பரிதிப் பரப்பிலும் இருக்க்கும். நாவலில் பாத்திரங்கள் மையத்தை நோக்கி நகர்கின்றன.
- பக்தின் பற்றி குறிப்பிட்டு, நாவலில் Hetroglocia (பலவகை குரல்கள்) Polyphonic (பியானோவின் விசை போல ) Chronotope (துவங்கி முடிந்து மீண்டும் துவங்கும்) தன்மையைப் பற்றி பேசினார். (பக்தின் dialogism எழுத்தை குறிப்பிட்டு)
- மஞ்சு கபூரின் நாவல் பற்றி சொன்னார். அடிச்சியின் Purple of Hibiscuss நாவலில் அப்பாவுக்கு பயந்த மகள் நாவலில் இருப்பதால், மகள் பாத்திரத்துக்கு மனவோட்டமாக, உரையாடலே இல்லாமல் விவரணையாக சொல்லியிருப்பார்.
- ஒரே குரல் பல பரிமாணம் என்பதில் பலகுரல்தன்மை இருக்கும். கணவன் மனைவிக்கான அந்தரங்க உரையாடல் இருக்கும்போதே, சமூக அரசியல் பேச்சும் அதில் ஒலிக்கும்படி இருக்கும் பாகீரதியின் மதியம் நாவலில் அத் தன்மையைச் சொன்னார். இந்த முறை நாவல் வடிவில் மட்டுமே சாத்தியம்.
- நாவல்களில் பாத்திரங்களோடடு வாசகர்கள் ஒன்றிவிடுதல் அதிகமும் நடக்கும். ஹார்டியின் ஒரு நாவலில் இருவித முடிவுகளைக் கொண்டிருக்கும்படி வெளியானது அரிதான ஒரு நிகழ்வு. அவர் இருக்கும்வரை அவர் எழுதிய முடிவுதான் இருந்தது. பிறகு வாசகர்களின் கோரிக்கைக்கு இணங்கி வேறொரு முடிவை வைத்து வெளியானது.
வயலெட் – உரையில் (நாவலைப் பன்முகப்படுத்தும் சிறுகதைக் கூறுகள்)
- இரண்டிலுமே வடிவம், மொழி என்பது எப்போதுமே பேசப்படுகின்றன.
- சிறுகதை என்பது வடிவில் சிறியதாக அமையும் text என்று பார்க்கலாம். அது விரிவடைந்து நாவலுக்குள் செல்வது.
- ஒரு மன ஓட்டத்தை விரிவாக எழுதும்போது நாவல் வந்துவிடுகிறது
- The passion according to GH (Clarice Lispector) நாவல் பாலிபோனியைக் கொண்டிருப்பது.
- பலகுரல் தன்மைக்கு இடமளிக்காது போவதால், ஒரு சிறுகதை எப்போதுமே நாவலாகாது.
- பைபிளை ஒரு புனைவாக வைத்து யோசித்தால் அதிலிருக்கும் பலவித கதைகள் இருந்தும் அது நாவலாக கொண்டுவிட முடிகிறதா?
- இமயம் எழுதிய பெத்தவன், சிறுகதை வடிவத்தில் உள்ள நாவலாக இருக்கிறது.
- இப்போது கவிதைகள் சிறுகதையின் வேலையை செய்ய ஆரம்பித்திருக்கின்றன. புனைவை மதிப்பீடு செய்யும் நாவலின் வேலையை சிறுகதைகள் செய்ய ஆரம்பிக்கின்றன. இந்த நிலையில் சிறுகதை என்ற வடிவம் நெருக்கடிக்கு உள்ளாவதாக தோன்றுகிறது.
- ஷோபா சக்தியின் சலாம் அலைக் அகதி மற்றும் அரசமைப்பு என்ற இருமையில் குற்றவுணர்ச்சி மற்றும் குற்றவுணர்ச்சி இன்மை என்று செயல்படுகிறது.
- தனிமனிதனுக்கு குற்றவுணர்ச்சி என்பது இருக்கிறது. ஆனால் அவர்கள் சேர்ந்து உருவாக்கும் அரசமைப்பு என்ற அமைப்புக்கு அது இருப்பதில்லை.
- சிறுகதை என்பது Drawing போன்றது. அதற்கு கடந்தகாலம்தான் உண்டு. நாவல் என்பது painting போன்றது. அது இங்கிருந்து எதிர்காலத்தை பார்ப்பதும் கூட.
- சிறுகதைக்கும் நாவலுக்கும் காலம் என்கிற விஷயமே பொதுவில் இருக்கிறது. நாவல்களில் fragments இருக்கலாம். ஆனால் சிறுகதையின் கூறுகளாக அவை இருக்கும் என்பதை ஏற்பது கடினம்.
உரையாடல்/ விவாதம்:
>> முதலில் Polyphony என்ற பலகுரல் தன்மை என்பது என்ன? என்னுடைய புரிதலில் பல விஷயங்களுக்கு மத்தியில் அதை வைப்பது positioning என்று நினைக்கிறேன். உதாரணமாக காந்தி சுடப்பட்ட நாளில் வந்த தினமணியில், அந்த நிகழ்வும் அதைத் தவிர்த்த பிற உதிரி செய்திகள், பிற முக்கிய செய்திகளும் இருந்தும், இவை அமைக்கப்பட்டிருக்கும் பொருத்தப்பாடு. உதாரணமாக விபத்தில் இறந்தவர்கள் பற்றிய செய்தி இருக்கையில், அந்த சம்பவம் சம்மந்தப்பட்டவர்களுக்கு அது என்னவாக அமைந்திருக்கிறது என்பது. (பா.வெங்கடேசன்)
<< அன்றைய தினத்தில் உள்ள பல்வேறு வகையான குரல்களையும் கொண்டிருப்பது பலகுரல் தன்மையைக் கொண்டிருக்கும். அதில் பல பார்வைகளும் இருக்கும்.
<< Polyphony இது அடிப்படையில் நமது மரபுக்குரியதே அல்ல. இந்து மேற்கத்தைய சொல். ஏனென்றால் அங்கே ஹார்மனி என்கிற விஷயம் இசையில் உண்டு. வெவ்வேறு இசைக்கருவிகள் அதனதன் பண்புகளில் இருக்கும். ஆனால் அவை பலகுரல்கள் ஒன்றிசைந்து ஒரு ஓர்மையை உருவாக்குவது. நமக்கு அந்த விஷயம் கிடையாது. நம்மிடம் இருப்பது தெளிவு மட்டுமே. Clarity.
<< ஒரு பியானோவில் ஒவ்வொரு tab ம் ஒரு இசையை உருவாக்கும். அதை முழுமையாக காணவேண்டும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. அப்படி பலவும் ஒலித்து உருவாக்கும் ஒரு பரப்பு. (நவீனா ஒரு மேற்கோளுடன்)
<< முதன்மையான விஷயம் அல்லது பேசுபொருளுக்கு, தொடர்பற்று ஆனால் ஒலித்துக் கொண்டிருக்கும் பலவற்றையும் கொண்டிருப்பதை பாலிபோனியாக கொள்ளமுடியும் என்று தோன்றவில்லை. (பாலகுமார் விஜயராமன்)
நாள் 2 – அமர்வு 2. சொல்லப்பட்ட
தத்துவங்களுக்கான புனைவும்; புனைவு உருவாக்கும் தத்துவங்களும்.
ஸ்ரீநிவாச ராமானுஜம் உரையில் -
தலைப்பபைத் தனித்தனியாக எடுத்துப் பரிசீலித்து, விளக்கி பிறகு தொகுத்து தனது கருத்துக்களை பகிர்ந்தார்.
- புனைவு குறித்த தெளிவு இருக்கும் அளவுக்கு தத்துவம் குறித்து அறுதியிட்டு சொல்லிவிட முடிவதில்லை
- அறிவியல் தத்துவத்தில் தத்துவம் என்ன செய்கிறது ?
- அறிவியலும், தத்துவமும் அனுமானங்களை கொண்டிருப்பன. புனைவு என்பது உணர்வு சார்ந்தது.
- உணர்வு அறிவு இரண்டும் மனம் உடல் இரண்டுக்கும் ஒத்ததாக வைக்கப்படுகிறது.
- உணர்வு நிலையற்றது. அறிவு நிலையானது.
- இந்த சிறிய அறைக்குள் யானை இருக்கிறது என்று புனைவில் சொல்ல முடியும். அறிவுசார்ந்து அப்படி சொல்ல இயலாது என்றெண்ணுகிறோம்.
- உலகை, அறிவியல், சமூகவியல், மானுடவியல், புனைவு என்று ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையில் அணுகுகிறது. ஒவ்வொன்றும் ஒருவகை உண்மை.
- சமூகவியல், வரலாறு, மானுடவியல், உளவியல் போன்ற படைப்புகளை தத்துவ நோக்கிய்ல் வாசிக்க முடியும். அப்படியென்றால் அதெல்லாம் தத்துவ நூல்கள் ஆகிவிடுமா ?
- ஒரு புனைவு பல்வேறு தத்துவங்களோடு உறவு கொள்கிறது. உதாரணமாக யு.ஆர்.அனந்தமூர்த்தியின் பாரதிபுரா, காந்தியத் தத்துவ நாவல் அல்ல. அது காந்திய தத்துவத்தோடு உரையாடுகிறது.
- கொடுக்கப்பட்ட தத்துவத்தை வெளிப்படுத்தும் புனைவு என்பது அடிப்படையில் உலகப் பார்வையை சோதித்து பார்க்கும் களமாகிறது.
- வாழ்வனுபவம் சார்ந்த நுட்ப எழுத்துக்கு அசோகமித்திரனின் 18வது அட்சக்கோடு நாவலை சொல்லலாம். எழுதப்பட்டதை எழுதியவரின் தன்னிலை அனுபவமாக பார்க்க வேண்டியதில்லை. இதைத் தாண்டிய படைப்புக்கு When we cease to understand the world , சார்த்தர், காம்யு நாவல்களை சொல்லலாம்.
- சுந்தர் சருக்கையின் ‘பிரார்த்தனைப் பின் தொடர்ந்து’ நாவல் பிரார்த்தனைகள் எங்கே போகின்றன என்று விசாரிக்கிறது. மூன்று சிறுமிகளுக்கு சாத்தியமாகும் மொழியில் வாழ்வனுபவம் சார்ந்து பேசுகிறது. ஒலியும், மௌனமும் உடல்ரீதியாக ஏற்படுத்தும் பாதிப்பை பேசுகிறது. உணவு கழிவாக வெளியேறா விட்டால் உடல்ரீதியாக் பாதிப்பு உண்டாகும். அது போலவே நமக்குள்ளான சொற்கள் வெளிப்படாவிட்டால் அது பாதிப்பை தரும் என்கிறது. இந்த புனைவு சாதித்ததை தத்துவ எழுத்து சாதிக்க முடியாது.
- அறிவுமுறை சொல்லும் ஒரு கருத்தை வாழ்வனுபவம் சார்ந்த பௌதிகத் தன்மையில் வைத்து பரிசோதிப்பதன் மூலமே அதை பற்றி தீர்மானிக்க முடிகிறது.
- காந்திய அகிம்சையை எதற்கும் உதவாத ஒன்று என்று புனைவில் சொல்லலாம். விளிம்புநிலை மக்கள் எப்படி வன்முறையை தவிர்க்க முடியும் என்று கேட்கலாம். காந்தியை அம்பேத்கர் நிராகரித்தது தவிர்க்க முடியாது என்று தலித் புனைவின் மூலம் சொல்லலாம். எல்லாமே அதனதன் உண்மைக்கு இட்டுச் செல்லும். ஆக, தத்துவம் என்பது வாழ்வனுபத்தோடு மோதிப் பார்த்தே முடிவைச் சொல்கிறது. அதற்கான களமாக புனைவு அமைகிறது.
- புனைவுகள் தத்துவத்தை உருவாக்க முடியுமா? அறிவியல் புனைவு அறிவியலை உருவாக்குமா? சமூகவியல் புனைவு சமூகவியலை உருவாக்குமா? என்று கேட்டு பரிசீலிக்கவேண்டும்.
- அறிவியல் புனைவு கற்பனையை தூண்ட உதவக்கூடும். கரோனா கிருமிக்கு ஒரு ஓவியரே உருவமும் நிறமும் கொடுத்திருக்கிறார்.
- வரலாற்று நாவலில் வரும் ஒரு கற்பனை, வரலாற்றை மாற்றிவிடுமா?
- உருமாற்றம் நாவலில் மனிதன் கரப்பான் பூச்சியாவதை பரிணாம வளர்ச்சி குறித்த கண்ணோட்டம் கொண்ட நாவலாக பார்க்க முடியுமா ?
- மௌனியின் கதைகளில் உள்ள இரண்டு சுயங்களில் ஒன்று மற்றொன்றின் நிழலாக இயங்குகிறது என்கிறார் ஜொனார்த்தன் கானரி.
- பௌத்தம் ‘நான்’ என்ற ஒன்றே இல்லை என்கிறது. இதை விஷய்த்தை மேலும் சிக்கலாக்குகிறது.
- புனைவுகள் வெளிப்படுத்துவதை தத்துவர்த்தமாக வளர்த்தெடுக்க முடியும். ஆனால் அவையே ஒரு தத்துவத்தை முன்வைப்பதில்லை.
- சொல்லப்பட்ட தத்துவங்களுக்கான புனைவு என்பது தத்துவத்தை புனைவில் பரிசோதிக்கிறது. புனைவுகள் உருவாக்குவம் தத்துவம் என்பது வாழ்வனுபவத்தை தத்துவார்த்தமாக விரிக்கும் சாத்தியம் கொண்டிருக்கிறது.
>> தத்துவங்கள் புனைவில் வெளிப்படுகிறது என்றாலும், நமக்கான தத்துவங்கள் உள்ளனவே ? (அபிலாஷ்)
<<
நமக்கான இந்திய/ கீழைத் தத்துவங்கள் நிறைய செறிவாக உள்ளன. நாம் இறக்குமதியான தத்துவங்களையே அதிகம்
பேசுகிறோம். இந்திய/ கீழைத் தத்துவங்களில் ஒன்றோடொன்று உரசி மோதி உருவாகும் பார்வைகளை நாம்
கணக்கில் கொள்ளாமலேயெ இருக்கிறோம். (ஸ்ரீநிவாச ராமானுஜம்)
>>அறிவியலில் தத்துவம் என்பதை விசாரிக்கிறது. மதிப்பிடுதல் அல்ல. அன்றாடத்தை வெளிப்படுத்தாத புனைவு, ஒரு புனைவாக எழ சாத்தியமில்லை.(ஸ்ரீநிவாச ராமானுஜம்)
>> தத்துவம் புனைவாக வெளிப்படும் சாத்தியமுண்டு. படகு என்பது நிலையானதா, அசைவதா; பாம்பின் வாலைப் பிடித்து தூக்குதல், தலையை அல்ல போன்றவை தத்துவ நோக்கு கொண்டவை. தத்துவவாதி பெருமளவும் நியதிகளுக்கு கட்டுப்பட்டவர். புனைவெழுத்தாளர் சுதந்திரமானவர். மொழியின் மூலம் அதை செயல்படுத்துபவர். (டி.தருமராஜ்)
<< மொழி என்பதே abstraction தான். அதுவும் சொல்பவர், கேட்பவர்; எழுதுபவர் படிப்பவர் என்ற இருமுனைத் தன்மைக் கொண்டிருப்பது. (ஸ்ரீ.ரா)
>> மொழி அது இயங்கும் தளத்துக்கு தக்க பொருள்கொண்டமைவது. உதாரணமாக பெண் என்பதை Female என்கிறோம். Woman என்று சொல்கிறோம். Female என்பது பால் ரீதியான அர்த்தம் தரும்போது, என்பது Woman சமூகவியல் சார்ந்த குறியீடாகிறது. (ஸ்ரீநிவாச ராமானுஜம் நவீனாவுடனான உரையாடலில்)
>> தாகூருக்கும் ஐன்ஸ்டீனுக்கும் நடந்த உரையாடல் கொண்ட சிறிய புத்தகம் ஒன்றைப் பற்றி சொல்லி - மனிதர்கள் இல்லாத அறையில் ஒரு நாற்காலி என்பது நாற்காலியாக இருக்குமா என்று கேட்கும்போது, ஐன்ஸ்டீன் இருக்கும் என்கிறார். தாகூர் இருக்காது என்கிறார். அதற்கு தாகூர் நீங்கள் சொல்வது அறிவியல் உண்மை. நான் சொல்வது மானுடவியல் உண்மை. இரண்டு வெவ்வேறு உண்மைகள் என்பதாக சொன்னர்.
>> தத்துவம் என்பது அன்றாடத்தோடு, புனைவொடு தொடர்பிருப்பதாலும் அதை ஏன் நாம் பயிற்றுவிப்பதில்லை. (அபிலாஷ்)
<< அது செய்யவேண்டும். யாரும் முன்னெடுப்பதில்லை. (ஸ்ரீ.ரா)
<< இதுகுறித்து தத்துவப் பேராசிரியர் ஒருவரிடம் கேட்டபோது – தத்துவம் இன்று ஒரு படிப்பாக/ உலகியல்/ வேலை, பணம் என்ற பொருண்மை கொண்டதாக இல்லை. மேலும் தத்துவம் என்பதை மதரீதியாகவே பார்க்க அனைவரும் பழக்கப்பட்டு (படுத்தப்பட்டு) விட்டார்கள். தவிரவும் இங்கு நிலவும் கல்விப்புலம் என்பது மிகவும் இறுக்கமான கட்டமைப்பு கொண்டது. மாற்றத்துக்கு எளிதில் இடம் தருவதில்லை. என்றார். (ரமேஷ் கல்யாண்)
=======================================================================================
ஞாயிற்றின் மாலை கனிய, கலைய மனமின்றிக் கூட்டம் கலைந்து,
ஒருவருக்கொருவர் விடைபெற்றுக்கொண்டு, அங்கிருந்த குழந்தைகள் மற்றும் கௌதம்ஜியிடம் விடைபெற்றுக்கொண்டு அனைவரும் தமது அன்றாடத்தை நோக்கித் திரும்பினர்.
மீண்டு ஒருவருடம் காத்திருக்க வேண்டுமே என்று எண்ணச்செய்யும் இரண்டுநாள் நிகழ்வு இது.
![]() |
view from the venue |
![]() |
Huts view |
![]() |
Elephant sighted |

![]() |
Participants Group photo |
No comments:
Post a Comment