மொழியின் நிழல் https://www.commonfolks.in/books/d/mozhiyin-nizhal
ந. பெரியசாமியின் மொழியின் நிழல் – தேநீர் பதிப்பகம் தொகுப்பில் அவர் தான் வாசித்த படைப்புகள் பற்றிய பதிவுகள் மற்றும் கட்டுரைகளை தொகுத்திருக்கிறார். முன்பு எப்போதையும் விட, இணையத்தின் வியாபகத்தில் பயிர்களை விட களைகள் வேகமாக வளரும் நிலைமையில், இப்படியான வாசிப்பு குறித்த பதிவு தொகுப்புகள் அதிக தேவையாக இருக்கின்றன. குறிப்பாக அவை அச்சில் வருகையில். காரணம் என்னவென்றால் அச்சு புத்தகம் என்பது செலவு பிடிக்கும் முயற்சி. அதற்கு தரமான கட்டுரைகள் இருந்தாலொழிய தொகுப்பு கொண்டு வர சாத்தியமில்லை. பொதுவாகவே அச்சு வடிவத்தில் வரும் படைப்புகளுக்கு இயல்பாகவே ஒரு கறார் தன்மை வந்து விடுவதால், படிக்குக்க கிடைப்பவை தரமாக இருக்க சாத்தியமுண்டு. ஓரளவுக்கு.
நாற்பது கட்டுரைகள் – அதில் 24 கவிதைகள் குறித்தவை, 7 கட்டுரை தொகுப்புகள் பற்றியவை. சிறுகதை, நாவல், நாடகம் பற்றியவை பிற. கவிஞரான இருப்பதால் அது குறித்து வாசிப்பதும், கட்டுரை வருவதும் இயல்பானதே. தான் படித்தவற்றை பகிர்ந்து கொள்ளும் இந்த விழைவு மிக முக்கியமானது. அதை பெரியசாமி ஆர்வத்துடன் செய்கிறார் என்பதே நாம் கவனத்தில் கொள்ளவேண்டியியாது. தான் படித்த தொகுப்புகள் அல்லது இதழ்கள் குறித்து நண்பர்களிடம் சொல்வது மட்டுமில்லாமல், நேரில் பார்த்து கையில் புத்தகத்தை திணிக்கும் அவரது அன்பும் இலக்கிய ஈடுபாடும் குறிப்பிட்டே ஆகவேண்டிய ஒன்று.
தான் உணர்ந்ததை மிகை இல்லாமல் தனது எண்ணத்தை வைப்பது இந்த கட்டுரைகளில் எளிதாக காண முடிகிறது. ஏனென்றால் இது அவருடைய நிஜ குணமும் ஆகும். தனது மேலதிக எண்ணங்களை படைப்பின் மேல் திணிப்பது கிடையாது. வாசிக்கும் படைப்பில் இருக்கும் ஒரு விஷயத்தை வைத்து கூடுதலாக திரிப்பதோ, நெய்வதோ கிடையாது. அதே சமயம் படைப்பு வெளிப்படுத்தும் ரசனையை வெளிச்சமூட்டி நம்முடைய கவனத்துக்கு கொண்டு வரவும் செய்கிறார்.
பெரும்பாலும், வாசித்தபின் மூன்று வகையான முறையில் கட்டுரையாளர்கள் வினையாற்ற இடமுண்டு. ஒன்று, உயர்வு நவிற்சியாக எழுதிப்போவது. மற்றொன்று, வாசிப்பில் கிடைக்கும் சிறிய இடைவெளியில் புகுந்து தனது விருப்பு வெறுப்புகளை ஏற்றி, படைப்பிற்கே வேறொரு பரிமாணம் கொடுப்பது. மூன்றாது படைப்புக்குள் உலவி தனக்கு காண கிடைப்பவற்றை – நேர்மரையோ எதிர்மரையோ - பொதுவில் வைப்பதும் அதை ஊறு இல்லாமல் செய்வதும். பெரியசாமி இந்த கடைசி வகையில் செய்கிறார். அவரது வரிகளிலேயே சொல்வதானால் “ஒன்றைப் பற்றி சரியான புரிதல் அற்று இருக்க, அது குறித்து பொதுவான கருத்துரைப்பது அறமாகாது’. (கட்டுரை 25). இது கட்டுரையாளனுக்கு நல்லதோ, அல்லதோ – ஆனால் வாசிப்பவனுக்கு மிக முக்கியம். பரந்த முறையான வாசிப்பு அறிமுகத்துக்கு இந்த பண்பு மிக அவசியம் இன்றைக்கு.
கட்டுரைகளை மிக இலகுவான மொழியில் எழுதுகிறார். கவித்துவமான மொழியிலும் சொல்கிறார். அதைவிட அவை தனது அனுபவத்துக்கு எப்படி இணையாக அல்லது பக்கமாக அமைந்திருக்கிறது என்பதை சொல்கிறார். பெரும்பாலும் கவிதை குறித்த கட்டுரைகளில் இது வெளிப்படுகிறது. ஏனென்றால் கவிதையின் இயல்பு அது.
தான் படிக்கும்போது தனக்கு உவகை தராதவற்றை ஒரு ஏமாற்றமாகவே சொல்கிறார். குச்சி எடுத்துக்கொண்டு விரட்டுவதில்லை. உதாரணமாக தமிழவன் கதை ஒன்று பற்றி – ‘மொழி கதையில் கண்களுக்கு பட்டாம்பூச்சியை உவமையாக்கி இருப்பதை பார்த்து சலிப்பு ஏற்பட்டது. தமிழவனிடம் நான் பட்டாம் பூச்சிகளை எதிர்பார்க்கவில்லை’. இன்னொரு கட்டுரையில் ‘முகநூல் அபத்தங்களை முக நூல் பதிவுகளிலேயே கடந்து போயிருக்கலாம். அவற்றை கவிதைகளாக்கி தொகுப்பில் இணைத்திருப்பது தொகுப்பில் ஒட்டாது எடுக்க வேண்டிய களைகளாகவே எனக்கு படுகிறது’. இப்படி தான் சொல்ல வேண்டியதை பழுதின்றி சொல்லி விடுகிறார்.
ஜெயப்ரகாஷின் சா நாவல் குறித்த நிலம் மூழ்கும் சாமந்திகள், பிரளயனின் யானை காணாமலாகிறது நாடகம் குறித்த நாமும் காணாமல் ஆகிறோம், நக்கீரனின் நாடோடி நாவல் பற்றி மூதாய் மரமே மன்னிப்பாயாக, சீனிவாசன் நடராஜனின் விடம்பனம் நாவல் பற்றிய உள்ளொன்று வைத்து புறமொன்று பேசும் - போன்ற கட்டுரைகள் முழுமை கூடி வெளிப்பட்டிருக்கின்றன. இவற்றை படித்தபிறகு அந்த புத்தகத்தை தேடுவது நிச்சயம். இருப்பினும், தொகுப்பில் ஓரிரு கட்டுரைகள் சம்பிரதாயமாக இருக்கின்றன.
காடோடி நாவலில் மரத்தை வெட்டுவதை தடுக்க மரத்தில் ஆணிகளை அடித்து விடுவார்கள். ஆகவே இயந்திரம் அறுக்கும்போது அது பழுதுபட்டு நின்றுவிடும், லயாங் பறவைகள் கூட்டில் பகலில் வௌவால்கள் தங்கிக் கொள்ளும், வடிவமற்ற வடிமுடைய விடம்பனம் நாவலை கொலாஜ் தன்மையோடு சொல்லி ரயில் பயணம் போல எங்கு வேண்டுமானாலும் ஏறி எங்கு வேண்டுமானாலும் இறங்கி போகலாம். என்று அறிமுகம் செய்வது, பரமேஸ்வரியின் தனியள் தொகுப்பை வெள்ளி வீதியாரின் பாடலை சொல்லி அவர் ஏற்படுத்த நினைத்த உடைப்பை இந்த கவிதைகள் ஏற்படுத்துகின்றன என்ற ஒரு ஒப்புமை மூலம் அறிமுகம் செய்வது, போன்ற அழகிய அறிமுகங்கள் ருசியூட்டுகின்றன. இந்த தொகுப்பின் சிறந்த கவிதைகளில் ஒன்றை - செல்போன்கள் ஒரு பெண்ணின் அந்தரங்கத்தை கூறு போடும் அவலம் குறித்த அந்த கவிதையின் ஒரு வரி ‘உறங்கச் செல்கிறாள் தானே உணவானது அறியாமல்’ என்ற வரியை சொல்லி இருப்பது நிறைவளிக்கிறது.
ஷங்கர் ராம சுப்ரமணியனின் ஞாபக சீதா, பா வெங்கடேசனின் நீளா போன்றவை பற்றி இன்னும் கொஞ்சம் எழுதி இருக்கலாம். ஏனென்றால் அந்த கவிதைகள் தம்மளவில் அவ்வளவு எளிதாக படித்து கரையேறி விட முடியாத அமைப்பு கொண்டவை. இந்த படைப்புகளை ஏற்கெனவே படித்திருப்பவர்கள் இந்த கட்டுரைகளோடு எளிதாக சேர்ந்து கொள்ள முடியும். ஆனால் புது வாசகனுக்கு இந்த கட்டுரைகள் மேலும் சற்று வெளிச்ச உதவி செய்யவேண்டும் என்றே விழைகிறேன். கட்டுரைகளின் அடியில் அவை வெளியான ஆண்டு குறிப்பிட்டிருக்கலாம். மேலும் எந்த படைப்பை பற்றி இது எழுதப்பட்டுள்ளது என்பதை தேடி அறிய வேண்டி இருக்கிறது.
பல கட்டுரைகளில் தொகுப்பில் உள்ள கவிதை வரிகளை சொல்லி அது பற்றி பேசுகிறார். இது மிக ஆரோக்யமான வழி. படைப்புக்கு வாசகர்கள் செல்வதற்கு மிக முக்கியமான சாவித்திறப்பு.
தொகுப்பை படியுங்கள். அதன்மூலம் மேற்சென்று அந்த
படைப்புகளையும் படியுங்கள்.