அந்திம காலத்தின் இறுதி நேசம்
தக்ஷிலா ஸ்வர்ணமாலி – சிங்கள மூலம்
எம் ரிஷான் ஷெரிப் – தமிழில்
இலங்கையின் சிங்கள, தமிழ் சமூக சூழலின் கச்சிதமான பத்து கதைகள் அடங்கிய தொகுப்பு . வாழ்க்கையையும் சமூகத்தையும் அரசியல் பிளந்து போட்டுக்கொண்டே இருக்கும்போதும் சாமானிய மனிதர்களின் வாழ்க்கை எங்கும் ஒன்று போலவேதான் இருக்கிறது என்பதை மென்மையாக சொல்லும் கதைகள் அடங்கிய தொகுப்பு இது. இந்த நேசக்கதைகளை தக்ஷிலா நேரடியாக தமிழில் எழுதி இருந்தால் பெரும் சர்ச்சை வெடித்து தக்ஷிலாவை மௌனிக்க செய்திருக்கும் என்ற ரிஷானின் வரியின் பின்னால் இருக்கும் அரசியல் நிலவர ஆழத்தை என்னால் பிடிக்க முடியவில்லை என்றாலும், அத்தகையதொரு சூழலை புரிந்து கொள்ள முடிகிறது அதன் அர்த்தமின்மையோடு.
மண்ணிலிருந்து கொண்டு மண்ணைப் பற்றி எழுதுகிறேன் என்ற தக்ஷிலாவை ஏற்று கதைகளுக்குள் புகும்போது அவை எங்கேயும் சற்றும் அன்னியப்படவில்லை – இலங்கை வழக்கு மொழி பயன்பாடுகளே இவற்றை சிங்கள கதை என நினைவூட்டுகின்றன. சற்றும் உறுத்தாத ரிஷான் மொழி பெயர்ப்பின் அம்சம் கூட இதற்கு காரணமாக இருக்கலாம்.
இன்றைய இலக்கிய சூழலில் – இணையமும் சமூக ஊடகமும் வியாபித்திருக்கும் நிலையில் - சிறுகதைகள் எழுதுவது அப்படி ஒன்றும் எளிதாக இருக்கவில்லை. இத்தொகுப்பில்,
சுமாரான கதைகள் சிலவும், வித்யாசமான சிறுகதைகள் சிலவும், சமீபத்தில் நான் படித்தவற்றுள் மிகச்சிறந்த கதைகளுள் ஒன்றாக ஒன்றும் அமைந்திருக்கின்றன.
இனி சிறுகதைகள் –
அந்திம காலத்தின் இறுதி நேசம் என்ற கதை முதுமை துயரின் கனத்தை சொல்லிப்போகும் சராசரியான கதையாகவே விரிகிறது. வயதான முதியவர் சக்கர நாற்காலியில் வீட்டுக்கு வெளிலே எப்போதும் உட்கார்ந்திருக்கிறார். ஒரு டீச்சர் அந்த வழியாக போகும்போது அவள் மேல் ஒரு பிரியம் ஏற்படுகிறது. மகளாக பாவிக்கிறார். அவளுக்கும் அன்பு எழுகிறது. முதியவரின் மனைவி வீட்டில் இருக்கிறார்., வீட்டுக்கு வராமல் வெளி நாட்டிலேயே இருக்கும் மகனை எதிர்பார்த்து ஏங்கி இருக்கும் முதியவர், டீச்சரை வீட்டுக்கு அழைத்து பேசி தேநீர் தந்து உருவாகும் நட்புறவு தொடரும்போது, அந்த மகன் வருகிறார். முதியவரின் உடல் நலம் சீர்கெடுகிறது. அந்த அம்மாளும் எங்கோ போய்விடுகிறார். (சித்தி ..திரும்ப வரமாட்டாங்க என்கிறான் ). உடல்நலம் மோசமான முதியவரிடம் இந்த இளம் பெண்ணை அதிகம் அனுமதிக்க விரும்பவில்லை அந்த மகன். வரவேண்டாம் என்று சொன்னாலும் அவள் மறுநாள் வரும்போது முதியவர் அங்கே இல்லை. அனுதாப குரல்கள் ஒலிக்கின்றன. அவளிடம் சொல்வதற்கு நிறைய இருக்கிறது என்று ஒரு பெண் கூட்டத்தில் இவளை தேடிக்கொண்டிருக்கிறாள். மறுநாள் அந்த இளம்பெண் அதே தெரு வழியாக போகிறாள். முதியவர் அங்கே இருப்பதில்லை. அதன் பிறகு அந்த தெரு வழியாக அவள் செல்வதே இல்லை. நிஜமான உறவு என்பது உற்பத்தி ஆவது அல்ல. உருவாகி எழுவது என்பதை மென்மையாக உணரவைக்கும் கதை. உயிர் போகும் தருவாயில் வழியில் விழுந்த தன்னை, யாரோ ஒரு பெண் மடியில் ஏந்திக்கொண்டு இருக்கும் நிகழ்வை, மனவோட்டத்தை லாசரா ஒரு கதையில் எழுதி இருப்பார்.
பொட்டு - கதையில் ஒரு இளம் விதவை மழைக்கு ஒழுகும் தன் வீட்டின் ஒரு பகுதியை வாடகைக்கு விட்டு சமாளிக்கிறார். ஒரு மழைநாளில் அங்கு வரும் ரகு என்ற இளைஞன் வீட்டு வாடகைக்கு குடியேறுகிறான். ஒரு நாள் மோட்டார் பைக் ரிப்பேர் செய்து கொண்டே இருந்தவன் அவளை பார்த்துக்கொண்டே இருக்கிறான். பொட்டு வைத்தால் நீங்கள் அழகாக இருப்பீர்கள் என்று சொல்கிறான். சிங்களத்தி என்று சொல்வதற்கு தன்னிடம் இருப்பது பெயரும் மொழியும்தான் என்கிறாள். கண்ணீரை மறைக்க முயலும் அவளை கவனித்த ரகு விளையாட்டாக வந்து என்னை பிசுக்கால் அவள் நெற்றியில் ஒரு போட்டு வைக்கிறான். அதில் உண்மை இருந்தது என்று அவள் உணருகிறாள். பிறகு அவன் புடவை வளையல் வாங்கி தருகிறான். பொட்டு என்று கேட்கும்போது இப்போதே நீங்கள் அழகைதான் இருக்கிறீர்கள் என்கிறான். தனது ஜன்னல் இடைவெளி வழியாக ரகுவை அவன் அறையில் இவள் அடிக்கடி பார்த்து ரசிக்கிறாள். ஒரு நாள் அவனை போலீஸ் பிடித்து போகிறது. விடச்சொல்லு கதறும் இவளை எந்தவித சலனமும் இல்லாமல், இப்படியான கைதை எதிர்பார்த்தவன் போல, பார்த்துக்கொண்டே ரகு போலீஸ் வேனில் போகிறான். அவளுக்கு ஒட்டுதலும் நேசமும் உருவாகும் ஒரு பிரிவு வருகிறது. ஆனால் ரகு அவளை ஒரு மனுஷியாக பார்ப்பதாகவே கதை முழுதும் தென்படுகிறது. வெளிப்படையாக சொல்லப்படாத இந்த அம்சமே கதையை அழகாக்குகிறது. இதில் பொட்டு என்ற சொல் வழமையான ஒன்றாக இல்லாமல் வேறொரு தளத்தை கொண்டிருக்கிறது. தமிழ் சிங்கள வித்தியாசத்துக்கு குறிப்பாக இது நின்றாலும், இணைப்பின் குறிப்பாக எண்ணெய் பிசுக்கு விரலால் பொட்டு வைத்த அவன், பிறகு அது இல்லாமலே அவள் அழகாக இருப்பதாக சொல்வது மேலதிக அர்த்தங்களை கொண்டதாக விரிகிறது.
எல்லா கதைகளையும் பற்றி விரிவாக சொல்வதாக இல்லாவிடினும்,. மூன்று கதைகளை மட்டும் குறிப்பிடவேண்டும் என்று எண்ணுகிறேன்.
“அன்றைக்கு பிறகு அவன் அவளருகே வரவேயில்லை” - மென்மையான ஒரு கதை. தனது நண்பியின் வீட்டுக்கு தேடிக்கொண்டு செல்லும் அவன் அவளைப்பற்றிய நினைவுகளோடு ஆட்டோவில் பயணித்து மோசமான பாதையை தாண்டி இருக்கும் அவளது வீட்டை ஒரு வழியாக அடைகிறான். அம்மா மற்றும் தங்கை இடையே மிகவும் சாதரணமான உடையுடன் அவள் இருக்கிறாள். முன்பே சொல்லிவிட்டு போனால் அவள் தயார் செய்துகொண்டு கஷ்டப்படுவாள் என்று திடீர்னு செல்கிறான். அங்கே அவளால்தான் அந்த குடும்பமே நடக்கிறது என்பதை மிக குறைந்த வரிகளில் தெரியப்படுத்துகிறார் தக்ஷிலா. பிறகு ஒரு பையில் நிறைய தின்பண்டங்கள் வாங்கி வருகிறான். அதில் என்ன இருக்கிறதுஎன்று கேட்கும் சிறுமியிடம் நான் சென்ற பிறகு திறந்து பார் என்று சொல்லிவிட்டு கிளம்புகிறான். பிஸ்கட், சாக்லேட், ஆப்பிள் ஆரஞ்சு, திராட்சை என்று நிறைய இருக்கிறது. சும்மா வந்துட்டு போன மாதிரி தெரியலையே என்கின்ற அம்மாவிடம் ‘அவர் இனிமேல் வரமாட்டார் அம்மா “என்கிறாள் அந்த பெண். சட்டென்று கதை புதிய தளத்துக்கு உயர்ந்து நிற்கிறது. கதை தலைப்பில் ‘அவளருகே’ என்ற வார்த்தை எதற்கு என்று பிடிபடவில்லை. ஒருவேளை மொழிபெயர்ப்பின் காரணமாக இருக்க கூடும்.
'ஒரே திடல் – வித்தியாசமானதொரு கதை. சிறுமியின் குரலில் சொல்லப்படும் இந்த கதையில் “அம்மா கல்யாணம் செய்து கொள்ள போவதாக சொன்னபோது திருமண வைபவத்தை எதிர்பார்த்தால், குறைந்த பட்சம் அம்மாவுக்கு திருமண அலங்காரம் கூட இல்லை என்று துவங்குகிறது கதை. அப்பா வேறோருத்தியோடு சென்றுவிடுவதால் அம்மா தன்னை சித்தப்பா வீட்டுக்கு அழைத்து செல்கிறார். சித்தப்பா என்று சொல்ல பணிக்கப்பட்டாலும் அவர் அப்பாவின் தம்பி அல்ல. இப்போது சித்தாப்பாதான் அம்மாவின் கணவர். அன்பாக அவளை கவனித்து கொள்கிறார். அப்பா அப்படி போய்விட்டாலும் அடிக்கடி குளக்கரையில் சிறுமியான மகளை சந்திக்கிறார். அம்மா இருக்கும் சித்தப்பா வீட்டுக்கு அவர் வந்தாலும் வாசல் தாண்டி உள்ளே வரமாட்டார். அப்பா மேல் அம்மாவுக்கு எந்த மனத்தாங்கலும் இல்லை. வேறோருத்தியோடு போய்விட்டாலும், அப்பாவுக்கு அம்மா மேல் எந்த குறையும் இல்லை. அம்மாவை திருமணம் செய்து கொண்டு வீட்டுக்கு அழைத்து போக சித்தப்பாவுக்கு எந்த சிக்கலும் இல்லை. இப்படி ஒரு சமயத்தில் ‘உனக்கு தங்கச்சி வரப்போறா” என்று சித்தப்பா சொல்கிறார். தின்மன்டங்கள் செய்து அம்மா அந்த சித்திக்கு அனுப்பி தருகிறாள். ஒருநாள் பதட்டமாக அப்பா ஓடிவருகிறார். முதன் முதலாக வீட்டுக்கு உள்ளே செல்கிறார். பிரசவத்தில் அந்த பெண் இறந்து போனதை சொல்லி அழுகையில்,, அம்மா அப்பாவை மடியில் சாய்த்து ஆறுதல் சொல்கிறார். சித்தப்பா வந்து அப்பாவின் கண்ணீரை துடைத்து ஆறுதல் சொல்கிறார். பிறகு தனியாக தவிக்கும் அப்பாவிடம் அம்மாவை அவர் வீட்டில் விட்டுவிட்டு வருகிறார். அதன் பிறகும் சித்தப்பா தினமும் வந்து தன்னை பள்ளிக் கூடத்துக்கு அழைத்து போக வாசல் வேலிக்கு அருகே வந்து நிற்பார். அம்மா தன்னை அழைத்து வந்து விடுவார். மாலை மறுபடி கொண்டு விட சித்தப்பா வேலி வரை வருவார். அம்மா வந்து தன்னை அழைத்து போவார். அப்பா தவறாமல் வருவதும் போவதும் தன்னை கருதி அல்ல. சித்தப்பாவை பார்க்கத்தான். அப்பா தனது தவற்றை திருத்திக் கொள்ள வாய்ப்பு கிடைத்திருப்பதாக கருதினார். ஆனால் சித்தப்பா ஒருபோதும் வேலி தாண்டியதில்லை என்று கதை முடிகிறது. கதையில் நாம் காணும் எல்லா மீறல்களுமே, மனிதாபிமான பரிவை கோரும் இடத்தில், வழமைகளை உதறிவிட்டு மேற்செல்கின்றன.
'நந்தியாவட்டை' கதை கூட சிறுமியின் குரலில் சொல்லப்படுகிறது. மிக அனுசரணையான பொறுமையான பெரியம்மாவுக்கு, அம்மா கட்டாயப்படுத்தி ஒரு திருமணம் செய்து வைக்கிறாள். அப்பா பெரியம்மாவிடம் நெருங்குவதை தவிர்க்கவே இந்த உத்தி. பெரியம்மா சம்மதிக்கிறாள். அப்பா பெரியம்மாவின் கண்ணீரை துடைத்து விட்டு போகிறார். புது பெரியப்பா வருகிறார். எப்போதும் நந்தியாவட்டை பூக்கள் உதிர்ந்தால் அதை பெருக்காமல் அப்படியே விட்டு சூழலையே அழகாகும் பெரியம்மா, இப்போது திருமணம் ஆன பிறகு முற்றத்தை சுத்தமாக பெருக்கி பூக்களை குப்பையாக குவித்து வைக்கிறாள். இந்த கதையும் சிறுமியின் குரலில் சொல்லப்பட்டாலும், இதில் கதையை தமக்கு தெரிவிக்க, கதையாசிரியர் குழந்தையை பேச வைப்பதால், பிராயத்தை மீறிய முதிர்ந்த பேச்சு உருவாகி விடுகிறது. அதனால் ஒரு செயற்கைத்தனம் உருவாகிவிடுகிறது.
இறுதியாக தொகுப்பின் மிக சிறந்த கதையாக நான் உணர்வது ‘மாங்காய் பருவத்தில் அருண் தனித்திருந்த மேலுமொரு நாள் துவங்கியது’ என்ற நீண்ட தலைப்புள்ள இது, சமீபத்தில் நான் வாசித்த மிகச்சிறந்த கதைகளுள் ஒன்று. எளிமையான உரையாடல்களால் நகரும் கதை, முடியும்போது அருமையாக இனம் புரியாத ஒரு உணர்வை நம்மிடம் தொற்றவைத்துவிட்டு போய்விடுகிறது. அதில் ஒரு செய்தியும் இருக்கிறது. மிக நேர்த்தியாக கூடிவந்திருக்கும் கதை. ஏனோ அசோகமித்தரன் நினைவில் வந்து போனார்.
நிலுகா நண்பன் அருணுடன் உரையாடுவது கதை தொடக்கம். மஞ்சு நிலுகாவின் கணவன். “சுருண்ட கூந்தல் பிடிக்கவில்லை. நேராக்கி கொள்ள சொல்கிறான் மஞ்சு” என்கின்ற புகாருடன் பேசும் நிலுகாவிடம், உனக்கு பிடிச்சதை நீ வச்சுக்கோ. அவனுக்கு பிடிக்கல்லைனா சுருண்ட கூந்தலை விரும்பும் ஒருவனை நீ தேடிக்கோ. நேரான கூந்தலை உள்ளவளை தேடி அவன் போகட்டும் என்கின்றான் அருண். உனக்கு பைத்தியமாடா அருண் .. கல் மனசு உனக்கு என்று பேசும் நிலுக்கா, இப்போது நண்பன் அருணை தேடி அவன் வீட்டுக்கு வந்திருக்கிறாள். வேலை, பிறகு சமையல், துணி துவைத்தல், வீடு கூட்டுதல், என்று திருமண வாழ்வில் இயந்திர தனமும், சலிப்பும் கொண்டவளாக இருக்கும் நிலுகா ஒரு வகையில் திருமணம் இல்லாமல் உள்ள அருண் சந்தோஷமாக இருப்பதாகவே நினைக்கிறாள். வாசலை கூட கூட்டாமல் இலையும் சருகும் மாம்பிஞ்சுகளும் உதிர்ந்து கிடக்கும் இந்த முற்றத்தை அடிக்கடி வந்து பெருக்கி சுத்தப்படுத்திவிட்டு போவாள் நிலுகா. வேலைக்கு செல்வதும் வந்து புத்தகம் படிப்பதுமாக இருக்கும் அருண் நிலுகாவின் மேல் அதிக பிரியம் வைத்திருக்கிறான். பேச்சின் இடையே சரோஜா உன்னையே நினைத்துக் கொண்டிருக்கிறாள் என்று அருணுக்கு நினைவூட்டுகிறாள். ஆனால் அருணுக்கு அதெல்லாம் சுவார்சியபடுவதில்லை. அவள் தமிழச்சி. அதனால் தயங்குகிறாள். அதனால் என்ன அந்த அடையாளத்தை அழிச்சிட்டு வரச்சொல்லு என்கிறான் சிங்களன் அருண். அது முடியுமா என்று கேட்கும் நிலுகாவிடம் பொட்டை அழித்துவிட்டு, புடவையை மாற்றிவிட்டு வரச்சொல் என்கிறான். அதுதான் தமிழச்சி அடையாளமா? என்கிறாள் நிலுகா. காதலுக்கு மொழி பிரச்சனை இல்லை எனும் அவன் . ஒரே மொழி பேசும் நீயும் மஞ்சுவும் சத்தமா சண்டை போட்டுக்கறது என்ன என்று சொல்லி காட்டுகிறான். இப்படி எதிரும் புதிருமாக, ஒருவரோடு ஒருவர் ஒவ்வாமை கொண்ட உரையாடலாகவே கதை முழுதும் நகருகிறது. உண்மையில் ஒருவர் மேல் மற்றவர் உள்ளூர பிரியம் கொண்டிருப்பவர்கள். மஞ்சுவுக்குக் தெரியாம திருட்டு தனமா எதுக்கு என்னை பாக்க வரணும் நீ ? என்னை பாக்கத்தானே என்கின்ற அருணிடம் ‘நான் எனக்காக வரேன் அருண்” என்கிறாள். இப்படி ஒரு அருமையான வரியை ஒரு பெண் எழுத்தாளரே எழுத முடியும் என்று தோன்றுகிறது.
அன்பான அருணை அவள் பார்க்க வருவதும், அவனது முற்றத்தை கூட்டி பெருக்கி சுத்தமாக வைத்துவிட்டு போவதும் அவளது அன்பின் வெளிப்பாடு. தனிமையை தவிர்த்து திருமணம் செய்துகொண்டால் என்ன. என்று கேட்கும் அவளிடம் “தனிமைக்கு துணையார் ஒருத்தரை தேடிக்கரதுதான் கல்யாணம் கட்டறதா? கல்யாணம் கட்டாமலே ஒருத்தரோடு சேர்ந்து இருக்க முடியாதா ? நீ கல்யாணம் கட்டிட்டாய்தானே ? உன்னோட தனிமைக்கு துணையா உன் புருஷன் இருக்கானா ? என்று அவன் கேட்கும் கேள்விகள் ஆழமானவை. அவளால் சொல்ல முடியாத பதில்களால் அவளை மௌனிக்க வைப்பவை. ஒருவேளை பதில் சொன்னால் அது அவனை நோக்கி அவளை நகர்த்தும் வல்லமை கொண்டது.
இங்கேயும் வந்து நீ துப்புரவு வேலையை செய்யாமல் பேசாமல் உள்ளே போய் சில மணி நேரம் நிம்மதியாக தூங்கு. வார நாட்களில் உன்னால் ஓய்வெடுக்க முடியாது. லீவு நாளிலும் இங்கே வந்து எதற்காக வேலை செய்து கொண்டு இருக்கிறாய். சென்று ஓய்வேடு என்கிறான். இங்குதான் நாம் நிலுகா எதற்காக அருண் மீது பிரியமும் பரிவும் கொண்டவளாக இருக்கிறாள் என்பதை - அல்லது எது அருணை பிரியத்துக்கு பாத்திரமானவனாக்குகிறது என்பதை உணர முடிகிறது. அப்போதும் அவள் சொல்கிறாள் “நான் உனக்காக வரவில்லை. எனக்காகத்தான்”
தனியாக உழலும் உன் அம்மாவை ஏன் நீ பார்க்க போகவில்லை. நாம் இருவரும் சென்று பார்த்துவிட்டு வரலாம் என்ற நிலுகாவிடம், “உன்னை என்ன என்று சொல்லி அறிமுகம் செய்வது?” ஒழுக்கம் இல்லாத உறவு என்பதாக அது பார்க்கப்படும் என்கிறான் அருண். அதற்கு அவள் “இது ஒழுக்கம் கேட்டது என்றால், எது ஒழுக்கம் உள்ள தொடர்பு? கலியாண காகிதமா ? என்னை பொறுத்தவரை அதுதான் ஒழுக்கம் கெட்டது என்கிறாள். “இதை நீ வேறு யாரிடமும் சொல்ல முடியாது என்று தெளிவாக்குகிறான் அவன்.
சரோஜாவை நான் திருமணம் செய்துகொண்டால் உனக்கு கவலைதானே என்று அருண் கேட்கும்போது ஆமாம் என்கிறாள். ஏன் என்று கேட்கும்போது அவள் சொல்லும் பதில் பெண்ணை பற்றி பொதுவாக ஒரு ஆண் நினைக்கும் அத்தனை ஊகங்களையும் நொறுக்கி தள்ளும் அப்பவித்தனமான நிஜம். அவள் சொல்கிறாள் “பிறகு எனக்கு இப்படி உன்னோட வந்து நிம்மதியா இருந்துட்டு போக முடியாதே !”
கதையின் இறுதியில் நிலுகா அருணிடம் அவனைப்போல இஷ்டம்போல இருந்து கொண்டு, பெருக்காமல் பாழாகும் முற்றத்தை பார்த்துக்கொண்டு, மாங்காய் பறித்து தின்னும் குரங்குகளை விசிலடித்து துரத்திக்கொண்டு நிம்மதியாக இருக்கவேண்டும் என்று அங்கலாய்த்துக் கொள்கிறாள். அவன் “அது உன்னால் முடியாது நிலுகா . ஏனென்றால் நீ இங்கே வந்தால் கூட செய்வதெல்லாம் முற்றத்தை பெருக்குவதும், மாங்காய் ஊறுகாயை ஞாபகப் படுத்துவதும், மாங்காய் பறித்து விற்பதை பற்றியும்தான் என்கிறான். நிலுகா விளக்குமாறை ஒருபுறம் வைத்துவிட்டு வந்து அருண் அருகில் படிக்கட்டு தரையில் உட்கார்ந்து கொண்டாள் என்று முடியும் இதில், கதையின் உயிர்த்துடிப்பை வாலில் வைத்துக்கொண்டு உயரப்பறக்கும் பட்டம் இந்த சிறுகதை.
திருமண வாழ்வின் இறுக்கங்கள், சிங்கள தமிழ்
உறவாடல்களின் நிதர்சனங்கள், நட்பின் நெருக்கங்கள், எதிர்பார்ப்புகள், நழுவல்கள்,
கேட்க தகுந்த கேள்விகளுக்கு சொல்ல முடியாத பதில்கள், ஒளித்துச்சொல்லும்படியான
உண்மைகள் என்று பலவும் இருக்கும் இந்த கதை முழுதுமே உரையாடல்கலாலேயே நகர்கிறது. தீர்வுகளுக்கான
அங்கலாய்ப்புகள் உள்ளபோதும், கைகூடாமை நசுக்கும்போதும், அதற்கு தன்னை தகவமைத்துக் கொள்ளாத தன்மையை - அதாவது அதை நோக்கிய முதல் அடியை கூட வைக்க முடியாத நிலையில் இருந்துகொண்டிருப்பதை, மண வாழ்க்கைப்பட்ட பெண்ணாக அவள் உணர்வதே இல்லை. அதை பற்றி நிஜமாகவே யோசிக்கப் புகுந்தால், நிலுகாவைப் போல நாமும்
படிக்கட்டு தரையில்தான் சற்று ஆசுவாசப்பட உட்கார்ந்து கொள்ள வேண்டும். பெண்களின்
அவஸ்தைகள், மன வாழ்வின் இயந்திரத்தனம், இறுக்கங்கள், நெகிழும் மனம் போன்றவற்றை
பேசும் இந்த கதையில், மென்மையாக ஆனால் கூர்மையான ஒரு பார்வையையும் வைத்திருக்கும்
தக்ஷிலா இந்த கதையை அழகாக வெற்றி பெற வைத்துவிட்டார் என்றே சொல்ல வேண்டும். நன்றி ரிஷான் ஷெரீப்.
No comments:
Post a Comment