Friday 7 January 2022

அழகியல் நாணயத்தின் அடுத்த பக்கம் - டிப் டிப் டிப் - ஆனந்த் குமார் -தன்னறம் நூல்வெளி வெளியீடு


                                   அழகியல் நாணயத்தின் அடுத்த பக்கம்
                                                                    டிப் டிப் டிப்
                                                              ஆனந்த் குமார்
                                           தன்னறம் நூல்வெளி வெளியீடு
                                                                   9843870059

டிப் டிப் டிப் – கவிதைத் தொகுப்பு. போலித்தனம் இல்லாமல் சொல்லவேண்டுமெனில், டிப் டிப் டிப் என்ற தலைப்பு கேட்டவுடன் வித்யாசப்படுவதற்கான முனைப்பு என்பதாக ஒரு சோர்வையும் அதே சமயம் ஒரு ஆவலையும் தந்தது. ஏனென்றால் இதில் ‘டி’ என்பது உச்சரிப்பில் வல்லினமா குற்றியலுகரமா? ஏனிப்படி ஒரு தலைப்பு. தவிரவும் தன்னறம் வெளியீடு என்பதால் யோசிக்காமல் வாங்கிவிட்டேன்.

கவிதைகள்  எண்ணற்ற வகையினவாக எழுதப்படுகின்றன. அதிலும் கவிதை என்பது அக உள்ளத்தின் துணுக்கில் மின்னி எழுவது எனும்போது எத்தனை வகை மனங்களோ அத்தனை வகை கவிதைகள் உருவாகின்றன. எண்ணத்தில் எழுவது ஒருவகை கவிதை என்றால் அது எழுத்தில் இறங்கும்போது வேறொரு பரிமாணத்துடன் கவிதையாகிறது. உண்மையில் கவிதை என்பதை வரையறுக்க முயன்றால் குழப்பமே மிஞ்சும். அது இலக்கிய அமீபா. என்னைக் கேட்டால், கருத்துகளை, கொள்கைகளை முதன்மைப் படுத்துவதற்கு/ முழங்குவதற்கு ஊடகமாக கவிதை செய்வதை கொஞ்சம் விட்டுவிடலாம். கருத்தின் செறிவு இருக்க கூடாது என்பதில்லை. பட்டாம் பூச்சியை மெல்லப் பிடிக்க முயலும் சிறுவன் கையில் ஒட்டிக்கொள்ளும் வண்ண மகரந்த தூள் போல இருக்கட்டும் அது !

இவருடைய கவிதைகளில் வார்த்தைகள் பாரங்களை சுமந்து அலையாமல் பறந்து விளையாடுகின்றன. உயரமான மரத்திலிருந்து பறந்திறங்கும் இலைகளைப் போல இயல்பாக. அவற்றில் சில சுழன்று சுழன்று இறங்குகின்றன. அத்தனையும் சென்று படிவது என்னவோ அனுபவங்கங்களின் காலடியில்.  

கையடக்க வடிவில் உள்ள இந்த தொகுப்பில் மூடிய கைக்குள் ஒளிந்து விளையாடும் உணர்வுகளை விரித்துப் பார்த்து, புருவம் உயர்த்துவது போல இருக்கின்றன பல கவிதைகள்.  வித்யாசமாக உருவகிப்பது ஒரு கலை என்றால், அது நிஜமாக இருக்கும் சாத்தியமும் உண்டு என்பதான கற்பனையை உருவாக்கிவிடுவதும் வசீகரமுள்ளதாக இருக்கிறது.  உதாரணத்துக்கு, குளத்து நீரின் சலனத்தை சொல்லும்போது, ஊர் குளத்தை கையிலேந்தி நடக்கும்போது உண்டாகும் அசைவு என்பதாக சொல்வது அருமையாக இருக்கிறது.

இவரது கவிதைகளில் பூடகச் செறிவோ, திறக்க முடியாத கதவுகளோ இல்லை. பாதி மூடி அல்லது பாதி திறந்திருக்கும் கதவின் பின் இருந்து கொண்டு மெதுவாக பார்க்கும் சிறுவன்/சிறுமியைப் போல அல்லது குமரியைப் போல தோன்றுகின்றன. கண்டுபிடித்தால் ஒரு மகிழ்ச்சி. கண்டுபிடிக்காவிட்டால் ஒரு குறுகுறுப்பு.

பெரும்பாலுமான கவிதைகள் அழகியல் சார்ந்த கவிதைகள்தான். அதே சமயம் ஒரு நாணயத்தை திருப்பி பார்ப்பது போல அழகியலின் இன்னொரு பக்கத்தையும் பார்க்க முயல்கிறது. அதுவும் அழகியலாகவே இருப்பதை உணர்கிறது – உணர்த்துகிறது  இந்த முயற்சி.

பரிசு எனும் ஒரு கவிதையே இந்த கவிதை தொகுப்பின் முகவரியாக காண முடியும்.

கைக்குள் மூடி வைத்து

எடுத்து வருகிறான்

எனக்கொரு பரிசை

கைகளை உடலாலே

ஏந்தி வருபவன் போல்

மிக மிக கவனமாக

நடக்கிறான் அவன்

 

மர்மம் தாளாமல்

வழியில் நின்றவன்

ஒரு முறை

லேசாய் திறந்து

பார்த்துக் கொள்கிறான்

தானே மறைத்து வைத்த

ஆச்சரியத்தை.

 

மற்றொரு கவிதையில், ஊரை ஒரு நபராகவும், குளத்தை அந்த உருவம் தாங்கும் நீர்ப்பாத்திரமாகவும் உருவகிப்பது அழகு. நீர்ப்பூச்சி மூலம் ஒரு அசைவை கொண்டுவருவது புதியபார்வை.

 

ஊர்

மெதுவாக நடக்கிறது

அது குளத்தை

கையிலேந்தியிருக்கிறது

தளும்பும் குளத்தின்மேல்

ஒரு நீர்பூச்சி

ஒரு கால் வைத்ததும்

குளமாட

பயந்து

மறுகால் தூக்கியபடி

நின்றுவிட்டது.

 

 சில எளிமையான சொற்கள் மூலம் உருவாக்கப்படும் கவிதை, தெரிந்த விஷயத்தை சொல்லி எதிர்பாராத ஒரு கசிவை உருவாக்கிவிடுவது நல்ல கவிதையின் அம்சம். அப்படி ஒரு கவிதை இங்கே -

 குழந்தை / எப்போது / என் குழந்தை ?

ஒரு குழந்தையை / கையிலெடுக்கையில் / அது என் குழந்தை

வளர்ந்த குழந்தையை / அணைக்கும் போதெல்லாம் / என் குழந்தை

விலகும் குழந்தையை

நினைக்க நினைக்க

என் குழந்தை

என் குழந்தை .

 நினைக்க நினைக்க என்ற அடுக்குத்தொடரும் அதை ஒட்டி எதிரொலிக்கும் என் குழந்தை என் குழந்தை என்பதும் எவ்வளவு உணர்வை சொல்லி விடுகிறது ! ‘பால் நினைந்தூட்டும்’ என்ற வரிக்கு மிக அருகில் இருக்கிறது. அந்த குழந்தை விலகும்போது அப்படி தோன்றுவதில்லை. விலகுவதை நினைக்க நினைக்க அப்படி தோன்றுகிறது. இதனுடைய அடுத்த அடுக்காக யோசிக்கும்போது விலகும் குழந்தைக்கு என்ன வயது என்று கேட்டுக்கொள்ளும்போது கவிதை இன்னும் எங்கோ உயர்கிறது. பள்ளிப் படிப்புக்காக வேற்றூர் செல்லும் பிள்ளையும் குழந்தைதான்,  மேலே படிக்க ஹாஸ்டலுக்கு போகும் பிள்ளையும் குழந்தைதான், பணி நிமித்தமாகவோ வேறெதற்கோ தூரமாக செல்லும் பிள்ளையும் குழந்தைதான். வெவ்வேறு வயதில் உள்ள குழந்தை. பெற்ற மனதிற்கு அந்த குழந்தை ஒரு குழந்தையைப் பெறும்வரை குழந்தையாகவேதான் இருக்கும்.  இந்த கவிதையில் அம்மா என்றோ, பெண் விகுதியுடனோ ஒரு வார்த்தை கூட இல்லை. ஆனால் இந்த கவிதை ஒரு அம்மாவுக்குரியதாகவே இருக்கிறது.

 ஒரு காட்சியை மட்டும் சொல்லிவிட்டு, அதன் மேலதிக அர்த்தத்தை காட்சித்திரைக்குப் பின் பதவிசாக வைத்திருக்கிறது சில கவிதைகள்..

 வலது கையில்

அவளந்த மலரை 

மலர்த்தியபோது

இடது காலை

அங்கு கொண்டு

சரியாக வைத்து விட்டது

நடனம்.

 இந்த கவிதையில் வலது கையில் மலர் இல்லை. கையை மலர்த்தியபோது என்ற அபிநய வரி முக்கியமானது. அது நிகழும்போதே இடது கால் ஒரு ஜதியின் மீட்டலாக அமைகிறது. அவளை அப்படி அமைப்பது அவளது நடனம். கை விரிந்து கால் அதற்கு இசையும்போது வந்து இறங்குகிறது ஒரு இயல் நடனம்.  கவிதை முடிந்தபின் ஒரு உருவம் உறைந்து நிற்கிறது. கவிதை அசைகிறது. தெய்வம் என்ற தலைப்பிலான இந்த கவிதை தலைப்பின்றி இருந்திருக்கலாம். தலைப்பு கவிதை எழுப்பும் உணர்வை வேறெங்கோ பிடித்து இழுக்கிறது.

 பால்கனிச் செடிகளின் கீழ் / ஊறித்தேங்கும் தண்ணீரைப் / பருக வரும் / காலைப் புறாக்கள்

இன்று வெயிலேற வந்தது / ஒற்றைக் காலில்லாத / பொன் கண் புறா

துளசியின் கீழ் / தேங்கிய நீரை / முகர்ந்து பார்த்தபின் / தத்தித்தத்தி நகர்கிறது / ரோஜாவின் பக்கம்

பருகிப் பருகி ஒரு பக்கம்

மயங்கிச் சாயும் உடலை

மறுபக்கம்

காற்றில் ஊன்றித் தாங்குகிறது

ஒற்றைச் சிறகு

 இந்த காட்சியூடான கவிதையில் ஒரு கால் இல்லாத புறாவின் ஒரு சிறகு சாயும்போது சட்டென காலாக மாறும் தருணத்தில் கவிதை எழுந்துவிடுகிறது. பறப்பதற்கான ஒன்று நிற்பதற்கான ஒன்றாக இறங்கி வரும் இடம். என்னென்னவோ சொல்லி விடுகிறது இந்த கவிதை.

 ***

நகர் நடுவே / அந்த ஏரியை / வேலியிட்டு வைத்திருந்தார்கள்

தொட்டிலுக்குள் எழுந்துவிட்ட குழந்தைபோல் / கவிழ்ந்து கிடந்து உருள்கிறதது / அழவில்லை சமத்து

***

 வெண்மை கொட்டிக்கிடந்த / புதிய வீட்டின் / சுவரோரங்களை / அருந்த வந்தது / ஒரு குட்டி நாய்

முகர்ந்து பார்த்துவிட்டு / இல்லாத பாலை நக்கவும் செய்தது /

பின்னர் அது / வாலாட்டியதே / அதை யார் வாங்கிக் கொண்டது ?

 ***

 நேர்கோடிட்டு வானை / மிகச்சரியாய் பிரித்தது ஒரு ஜெட்

அந்தப் பக்கம் உனக்கு / இந்தப் பக்கம் எனக்கு

உனது பக்கத்திலிருந்து / ஒரு மேகம் / மெதுவாய் நகர்ந்து / கோட்டை கடந்தது

எனது பக்கத்திலிருந்து / ஒரு பறவை / நேரே சென்று / கோட்டை மிதித்தது

கொடு தன்னைத்தானே / அழித்துக் கொள்ளத் துவங்குகிறது

 ***

இயல்பான ஒன்றை ஊன்றி கவனித்து அதற்குள் தரவுகளை பிரிக்கும்போது எண்ணங்கள் அதன் மேல் கவிந்து, கவிதையை கருத்தியல் செறிவுக்கு தள்ளும். அப்படியான மிகச்சில கவிதைகள் இதில் உள்ளன.

 எல்லா இலையும்

உதிர்ந்த பின்னும்

மரம் எதை

உதறுகிறது ?

அது

நினைத்து நினைத்து

சிலிர்க்கும் இடத்தில்தான்

மீண்டும் சரியாகத்

துளிர்க்கிறது.

 

இதில் இலையை உதிர்க்கும் மரமாக நாம் எதைக் கொள்கிறோமோ அங்கே, அதைச் சுற்றி  நிகழ்கின்றன சிலிர்ப்புகளும், துளிர்ப்புகளும்.

***

 சுவடுகளில் மிஞ்சுவது / எவற்றின் எடை / அது ஒரு அவசரமில்லாத பாரம்

***

 

எத்திசையைத் தேர்வது / தீர்ந்த நதி / எப்போதும் / இரண்டு வழிகளை / காண்பிக்கிறது

 

***

ஓடும் நீர் /  துள்ளிப் பார்த்தது / ஒரு துளி காட்டை / சேர்ந்து பின் / செல்லுமிடமெல்லாம் / சலசலவென பேச்சு

***

 

மன நெகிழ்வையும், அழகியல் சுவையையும் தரவல்ல மதாரின் கவிதை தொகுப்பை - அவ்வப்போது கல்யாண்ஜியின் கவிதைகளை வண்ணதாசன் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் எழுதியவற்றை -  ஆங்காங்கே படித்துக் கொண்டே வந்திருந்த எனக்கு இந்தத் தொகுப்பைப் படித்தவுடன் நினைவில் மீண்டது எதேச்சை அல்ல.

 

அழகியல் கவிதைகள் தமிழில் ஏராளமாக எழுதப்பட்டு விட்டன. சொல்லப்போனால் ஏராளம் என்பது குறைந்த சொல்.  இந்த விரிந்த தடத்தில் தனிச்சுவடுகளை பதிக்க முயல்வது எளிதொன்றும் இல்லை. ஆனந்த் குமார் திருப்திகரமாகவே முயன்றிருக்கிறார் என்றே சொல்லத் தோன்றுகிறது.  இவற்றை படித்து விட்டு கொஞ்சம் நாட்களின் வாசிப்புகளின் நெருக்குதல்களில்  நாம் இவற்றை மறந்து விடலாம். ஆனால் பின்னாளில் எப்போதோ ஏதோ ஒன்றை பார்க்கையில் அல்லது நினைக்கையில் முன்பு படித்த வரிகள் நினைவை இடறினால், அது நல்ல கவிதையாகிவிடும் – நினைப்பவரைப் பொறுத்தவரை. அப்படி சிலவற்றை இந்த தொகுப்பில் காண்கிறேன். குறிப்பாக குளத்தை ஏந்தி வரும் ஊர், சாயும் ஒற்றைக் கால் புறாவை தாங்கி நிறுத்தும் ஒற்றை சிறகு போன்றவை.

 ஒன்றைக் குறிப்பிடவேண்டும். அர்த்த அழுத்தங்களுக்காக பல இடங்களில் அடுக்குத்தொடர்களை பயன்படுத்துகிறார். இப்படி அடுக்குத்தொடர்களை வாசித்து நீண்ட காலமாயிற்று. ஆனந்த் குமார் தான் கண்டவற்றை, மனக்காட்சிகளாக மீள் செய்து அவை தனக்குள் தாரைகளாகி தேங்க, அதில் கைநனைத்து ஈர விரல்களால் சுண்டியிருக்கிறார் இந்த தொகுப்பில்.   அட்டைப்படத்தில் ஓவியத்தை விட டிப் என்ற சொல்லில் ‘ப்’ எழுத்துகளின் புள்ளி, சற்றுமுன் உடைந்த பிளாஸ்டிக் குமிழ் போன்ற இருப்பது அந்த தலைப்பிட்ட கவிதைக்கு மிக நெருக்கமானது.

 இத்தொகுப்பின் கவிதைகளின் வாசிப்பனுபவத்தை சொல்ல முயலும்போது, சில கவிதைகளை விளக்க முயன்றிருப்பது தவிர்க்க இயலாதது. அது, ஒரு குழந்தையை, விரல்களால் கன்னம் கவ்வாமல் கொஞ்ச முடியாததைப் போலத்தான்.

 

No comments:

Post a Comment

இயற்பியலின் தாவோ - பிரிட்ஜாஃப் காப்ரா

இயற்பியலின் தாவோ பிரிஜாப் காப்ரா Fritjof Capra மொ பெ போன். சின்னத்தம்பி முருகேசன் சந்தியா பதிப்பகம் #இயற்பியலின்_தாவோ படிக்கத்  துவங்கி இர...