(சொல்வனம் இணையவெளியீட்டில் )
தீர்த்த யாத்திரை – தீராத யாத்திரையின் சுயமி
இன்றைக்கு மிகவும் அருகிப்போன ஒரு வார்த்தையை நாவலுக்குத் தலைப்பாக வைத்து எழுதியதே துணிச்சலான முயற்சி. நாவலின் மைய அடுக்கை சுற்றிப் புனையப்பட்டிருக்கும் அனைத்துமே ஒரு சாமானிய மனிதன் குற்றவுணர்ச்சியிலிருந்து விடுபடுவதற்கு மேற்கொள்ளும் மரபான ஒரு செயலைச் செய்ய முயல்வதும், இறுதியில் அவன் அடையும் அல்லது அடையமுடியாத ஒரு சிற்றிடம் என்பனவே நாவலைக் கட்டமைக்கின்றன.
எதுவும் குற்றமே இல்லை என்று எண்ணுபவர்களுக்குக் குற்றவுணர்ச்சி எழும் சாத்தியங்கள் இல்லை. இருப்பின் சமகாலச் சிக்கல் என்று இருண்மைகளை ஒரு கரிய இறகென சூடிக்கொண்டு விடுதல் எளிய இலக்கியத் தந்திரம். அந்த பாசாங்கைக் கீறி ஓர் ஒற்றையடிப்பாதையை தேடிக்கொண்டு உள்மனக்குரலுக்கு பதில் சொல்ல முடியுமா என்று தேடுபவன், அர்த்தமுள்ள மனிதனாக முயல்கிறான். இதை அவன் யாருக்கும் நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை. தன்விருப்பப்படி ஒருவர் எப்படிவேண்டுமானாலும் நடக்கிறேன் என்று பயணிப்பது அவரவர் சுதந்திரம். அவரவர் தேர்வு. ஆனால் யாரோ எப்போதோ நடந்த ஏதோ ஒரு பாதையின் வழியாகவே அவர்கள் செல்லநேர வேண்டி இருப்பதில், தெரிவுகள் குறைவு.
மனிதர்கள் நடப்பதற்கான
யுவன் கவிதை
பாதையும்
மனிதர்கள் நடந்தே உருவானது
அப்படிக் குற்ற உணர்ச்சிகளை, பாவம் போக்கிக்கொள்ளும் உபாயங்களாகச் சொல்லப்பட்ட பாதையின் மூலம் அடைந்துவிட முடியுமா என்று கிளம்பும் பயணம் இந்த நாவலில் உள்ளது. தீர்த்த யாத்திரை துறவறம் அல்ல. உலகியலில் உள்ளிருந்துகொண்டே அதன் பள்ளங்களை தாண்டும் முயற்சி.
நோய்மையில் மெலிந்து போன ஒருவருக்கு மெத்தையே அவஸ்தையாகும். படுக்கையில் தன் எலும்பின் கனம் தனக்கே நோகும்.ஒரு அதுபோல பெரும் சிக்கலுக்குட்பட்ட ஒருவனுக்கு ஒருநிலையில் அவனது அறிவே நோகும் சுமையாகும். அதைத்தாண்டி மனம் சென்றடைய ஒரு பொந்தை தேடும். தீப்பிடித்த ஒருவன் அனைத்தையும் உதறிவிட்டு ஓடும் அநிச்சை உருவாகும். அப்போது ஆதரவாக, ஆறுதலாக அவன் வேண்டுவது மரபின் கை ஸ்பரிசம். கன்றை நக்கிக்கொடுக்கும் பசுவைப்போல.
ஒருவனுக்கு, மரணத்துக்கு முந்தைய கட்டம் என்பது என்பது தன்னைத் தானே கைவிடும் நிலை. கைவிடப்படுவதன் வலி மரணத்துக்கு அருகிலிருப்பது போலாகிறது. ஆகவே அதை கையாள்வதற்கு ஏதோ ஒரு மரபான கற்பனை அல்லது கற்பிதம் தேவையாக இருக்கிறது. அது வாய்பிளந்து இருக்கும் முதலை வாயில் மாமிசத்துண்டுகளை கொத்தி தின்னும் குருவியைப்போல வந்தமர்கிறது. முதலைவாய் பற்றிய பதற்றம் குருவிக்கு இருப்பதில்லை. முதலையும் அந்த அச்சத்தை உருவாகுவதில்லை. மரபின் முதலை வாய்.
மரபு என்ற சொல் இன்று துஷ்பிரயோகம் ஆகும் இடங்களே அதிகம். அது வாழ்வுரீதியாக இதமளிப்பது. அது நெகிழ்வின்றி, இறுக்கமான ஒன்றாக ஆக்கப்படும்போது மனிதரிடமிருந்து விலக்கம் கொள்கிறது. இந்த நாவலில் முரளிதரராவ் கையிலெடுக்கும் கருவி, மரபுகள் சிபாரிசு செய்த விலகல் பயணம். தீர்த்த யாத்திரை.
பொதுவாக மூன்று புண்ணிய நதிகளை நாடிச் செல்வதே தீர்த்த யாத்திரை என்று கருதப்பட்டாலும், முரளி அங்கேயெல்லாம் செல்வதில்லை. யாருக்கும் சொல்லிக்கொள்ளாமல்தான் வீட்டை விட்டு வெளியேறுகிறான். ஆனால் செல்வதன் பின்னால் இருக்கும் அவா, பிராயச்சித்தம் தேடித்தான்.
*****
ஒருநாள் விடியலில் யாருக்கும் சொல்லிக்கொள்ளாமல் தனது பைக்கை எடுத்துக்கொண்டு வீட்டை விட்டு கிளம்பி போய்க்கொண்டே இருக்கிறான். மொபைல் கூட கையில்தான் இருக்கிறது. துறக்கும் மனநிலையை பெற்றுவிட முடியும் என்ற நப்பாசையில் கிளம்புபவனுக்கு, அது எளிதில்லை என்பது போகப்போக புரிய ஆரம்பிக்கிறது. “எதையும் தொலைத்துவிட முடியும் என்ற நம்பிக்கை இல்லை” என்று ஒரு வரி வருகிறது. அவனது குற்றவுணர்ச்சி எப்போதும் அவனோடு பயணிக்கிறது. சொல்லப்போனால் குடும்பத்தில் இருந்துகொண்டே அவனது அப்பா ரமணாராவிடம் இருந்த தீர்மானமான மனம், யாத்திரை மேற்கொள்ளும் இவனுக்கு அமைவதே இல்லை என்பது மெல்ல தெளிந்து எழுகிறது நாவலில். மிகவும் குறைந்த அளவே வந்தாலும் அப்பா ரமணாராவ் பாத்திரம் மிக அழுத்தமாக விழுந்திருக்கிறது.
பொதுவாக, அப்பாக்கள்/ பெற்றோர்கள் தாங்கள் அனுபவ வாழ்வில் கண்டடைந்த கசப்பான உண்மைகளை, விஷங்களை – ஒரு சொட்டுக் கசப்பை எடுத்து நூறு சொட்டு நீரில் கலக்கும் ஹோமியோ மருந்து தயாரிப்பு போல – தம்மளவில் நீர்க்கவைத்து ஏற்கக்கூடிய ஒன்றாக்கித் தர முயல்கிறார்கள். ஆனால் அதன் மூலம் கசப்பு என்பதை மட்டுமே காரணார்த்தமாக நினைக்கும் தலைமுறை அதை நிராகரிக்கிறது. இழுபறிகள் நிலவுகின்றன. ஆனால் மிகப்பெரும்பாலும் நோய்க்குப்பின் மருந்தை நினைத்துக் கொள்கிறார்கள். ஆனால் இது பொதுவிதி அல்ல. முரளிராவ் இந்த இடத்தில்தான் தீர்த்தயாத்திரையைத் தொடங்குகிறான்.
ஒரு தவற்றை சமாளிக்க மற்றொரு உப தவறு ஒன்றைச் செய்வது தவறு செய்பவர்களின் பதட்டச்செய்கை. சொல்லப்போனால் இந்த உபரிச் செய்கைகளே அவர்களது தவற்றை உணர்த்திக்காட்டும் குறிப்பாக அமையும். ஆனால் அவற்றைக் கவனிக்கும் மனம்தான் மனிதனுக்கு இருப்பதில்லை. நாவலில் முரளியின் எந்த தவறுகளுமே திட்டமிட்டுச் செய்யப்பட்டவை அல்ல. அவை உள்நோக்கங்கள் அற்றவை. ஆனால் தவிர்க்க முடியாதவை அல்ல. இந்த நிலைமையை வாசகன் உணரும்போது நாவலின் போக்கைப் புரிந்து கொள்ள முடியும். இந்த நாவல் லட்சிய மனிதனைப் பேசவில்லை. அப்படி முடியாமல் போகிறவனைப்பற்றியது.
இன்னும் ஆறு வருடங்களில் ஓய்வு பெறப்போகும் நிலையில், வீட்டை விட்டு விலகியோடும் முரளி ஒவ்வோர் ஊரிலும் கோவில், மடம் என்று இரவுக்கு தங்குகிறான். அங்கே இருப்பவர்களோடு பேசக்கிடைக்கிறது. காலையில் அவர்களை விட்டுப்போய்விடுகிறான். ஒவ்வொருவர் பேச்சிலும் அவனது மன லயத்துக்கு ஏற்ப ஏதோ ஒரு செய்தி கிடைக்கிறது. ஒப்பீட்டுப் பார்வை கிடைக்கிறது. அப்போதெல்லாம் அவனது பழைய நினைவுகள் கூடவே வருகின்றன. ஒருபோதும் அவனால் கடந்தகாலத்தை உதற முடிவதில்லை. தான் எந்த ஊருக்குப் போகிறான் என்பதை எவரிடமும் சொல்வதில்லை. இறுதியில் திருவையாறு நோக்கிச் செல்லும்போதுதான் நமக்கே அவன் அங்கே செல்லப்போவது தெரிகிறது.
நாவலில் நான் கவனித்த ஒன்று – முரளி செல்லுமிடமெல்லாம் கிடைக்கும் சந்தர்ப்பத்தில் எல்லாம் குளிக்கிறான். அது ஆறோ, ஓடையோ, பம்புசெட்டோ, கிணறோ, மழையோ. நீருக்கும் அவனுக்கும் ஒரு நெருங்கிய ஸ்பரிசம் நாவல் முழுதும் இருந்துகொண்டே இருக்கிறது. அனுமந்தராவ் வீடு வரும் இடத்தில் கூட இரவு நேரத்தில் குளித்தால் பரவாயில்லை என்று அவனுக்குத் தோன்றுகிறது. தனது மனத்தின் கனங்களை நீரில் கரைந்துவிட முடியுமா என்ற ஏக்கம் இருந்துகொண்டே இருக்கிறது. நாவல் இறுதியில் கூட, வெள்ளம் அத்தியாயத்தின் பின்னணியில் அமைகிறது. செல்லிடமெல்லாம் கசடுகளை அள்ளிக்கொண்டுவரும் இது புனித நதியா என்று ஒரு கேள்வி அவனிடம் இருக்கிறது.
நாவல் பாத்திரங்கள் அனைத்துமே எவ்வகையில் அவனோடு தொடர்பு கொண்டவர்கள் என்பது அவன் நினைவோட்டமாக சொல்லிக்கொள்கையில்தான் நமக்கு தெரிகிறது. முரளி வீட்டைவிட்டுக் கிளம்புவது முதல், கடைசி வரி வரை நாவல் ஒரு காமிரா போல அவனோடேயே பயணிக்கிறது. ஒரு அலைபேசியுடன் சுயமியை (செல்பி) திரையில் பார்த்துக்கொண்டே முன்செல்லும்போது, நிகழ்வின் முகமும், கடந்தகாலத்தின் பின்னணியும் தெரிந்துகொண்டே போவது போல.
நாவலில் பாத்திரங்களுக்குரிய பார்வை, முரளி கருதிக்கொள்ளும் அவர்களது பார்வை மற்றும் நடத்தைகள்தான். அவர்களது அசல் நிலைப்பாடு என்னவென்பது நமக்கு நாவலில் தெரிவதே இல்லை. இது சற்று குறையாகவே தெரிகிறது. ஏனென்றால் முரளி பற்றி நாம் முடிவுக்கு வர முடிவதெல்லாம் முரளி மூலம் நாம் அறியக்கூடுபவைகளை வைத்து மட்டுமே. தொலைபேசியில் ஒருபக்கத்து உரையாடலைப்போல.
ஆனால் நாவல் கொள்ளும் அமைப்பே, முழுக்கவும் அவரது நினைவோட்டத்தில் எழுபவை என்பதால் – பிற பாத்திரங்களின் தனிப்பேச்சுகளை நாம் கேட்கும் சாத்தியமும் இல்லை. அவன் கிளம்பியபின் வீட்டில் என்ன நடக்கும் என்பதெல்லாம் ஊகங்களாக இவன் கருதுபவற்றைத்தான் நாமும் அறிகிறோம்.
உதாரணமாக – எதிர்பாராத ஒரு சமயத்தில் ஈரப்புடவையோடு நிற்கும் அர்ச்சனாவை தம்பியின் மனைவி) அணைத்துக் கொள்கிறான். அப்படி என்ன ஒரு கட்டுப்பாடின்மை என்று தன்னையே நொந்துகொள்ளும் அதே சமயம் ‘அவள் ஏன் அதை பெரிதுபடுத்தவில்லை’ என்று கேட்டுக்கொள்கிறான். தேவையற்ற சிக்கல் என்றோ, எல்லாவற்றையும் விழுங்கிப் போகும் பெண்குணம் என்றெல்லாம் ஒவ்வொன்றாக நினைக்கிறான். அவர்களிடையே நடந்த அசம்பாவிதம் பற்றி எந்த மேலதிகத் தகவலும் நாவலில் இல்லை. ஆகவே, நாவல் மூலம் முரளிராவ் பற்றிய நம் முடிவான அபிப்பிராயத்தைவிட, அவனது தள்ளாட்டமும் குற்றவுணர்ச்சியுமேதான் நாவல் பரப்பு என்று கொள்கிறோம்.
ஒரு காம உந்துதலால் தம்பி மனைவி அர்ச்சனாவிடம் உண்டான அத்துமீறலால், அவள் புகார் எதுவும் சொல்லாவிடினும், அவன் தானாக வீட்டை விட்டு வெளியேறும் அளவுக்கு ஒரு சம்பவம் நடந்திருக்கிறது. ஆனால் அதன் விவரணைகள் எதுவுமே நாவலில் இல்லை என்பது நவீனத்துவத்தின் ஒரு கூறு. அத்துமீறிய நடத்தையை வாசகனுக்கு தீனியாக்கும் எண்ணம் எழுத்தில் இல்லை. கட்டிடத்தின் அடிக்கல்லைப்போல உள்ளடங்கியிருப்பது அது.
சூரி பொறுப்பற்ற தம்பி. ஆன்லைன் கிரிக்கெட் ஆட்டம். மற்றும் அலுவலகப் பணம் கையாடல் உள்ளிட்ட சிக்கல் கொண்டவன். முரளிதான் பத்துலட்சம் தந்து அவமானமின்றி அவனை மீட்கிறான். மீண்டும் ஐந்துலட்சம் கேட்கிறான். பங்கு பிரித்துக் கொடு என்கிறான். கணவனுக்கு உதவவேண்டும் என்று அர்ச்சனா மைத்துனன் முரளியிடம் உரிமையோடு கேட்கிறாள். ‘நீ வந்து கேட்டாதான் இவன் பணம் குடுப்பானா?” என்று சூரி கீழ்மையோடும் பேசிவிடுகிறான். அந்த அசம்பாவித நிகழ்வைத் தொடர்ந்து, அர்ச்சனா புகாரில்லாமல் நடந்துகொண்டது ஒருவேளை தனது பணத்துக்காக இருக்குமோ? என்று முரளிக்கு இப்போது தோன்றும்போது, தான் தவறாக நினைக்கிறோம் என்று தலையை உதறிக்கொள்கிறான். ஆனா அர்ச்சனாவின் மனம் உண்மையில் என்னதான் நினைத்தது என்று வாசகனுக்கு இறுதிவரை தெரிவதே இல்லை.
ஆனால் அவள் புகார் சொல்கிறாளா, இல்லையா என்பதல்ல விஷயம். அது அவனது மனசாட்சிக்கு என்னவாக இருக்கிறது என்பதுதான் அவனைத் துரத்துகிறது. அதுதான் நாவல் ஓடும் சக்கரங்களில் ஒன்று. அப்படித்தான் இதனைக் கொள்ளவேண்டி இருக்கிறது.
*****
புதையுண்ட நகரத்தைத் தோண்டும்போது பழைய அடையாளங்கள் வெளிப்படுவது போல, நாவலில் ஒவ்வொரு பாத்திரமாக அவற்றோடு அவனது தொடர்பும், உறவும், அனுபவமும் வெவ்வேறு சமயங்களில் நாவலில் வெளிப்படுகிறது. இவனது பெயர் முரளி என்பதே ஐம்பது பக்கம் கழித்துதான் நாம் அறிகிறோம்.
முரளியின் மனதில் இறுதிவரை வேர்பிடித்து இருப்பது சங்கரிதான். அவளது தற்கொலையால் கூட அப்படி இருக்கலாம். மனைவி மனோகரி. வாயில்லாப்பூச்சி. அப்படி ஒரு மனைவி பாத்திரம் பழமை தட்டி இருக்கிறதோ என்று தோன்றுகிறது. அவளோடு மனம் ஒத்து அவனால் ஒரு நாள் கூட இருக்க முடிந்ததில்லை. இளமையின் காமத்தின் மூலம் ஒருவரை ஒருவர் கண்டுகொள்வதைத் தவிர, தவிர்க்கவியலா உடல் அம்சம் தவிர, அவர்களுக்கிடையே எந்த பிணைப்பும் இல்லை. ஆனால் அவளது பொறுமை அவனை குற்றவுணர்ச்சி கொள்ள வைக்கிறது. தாக்கும் நோக்கங்கள் இல்லாமல் மிக எளிதாக அவனை வதைக்கிறது.
பொய்க் காரணங்கள் சொல்லி வீட்டுக்கு வருவதையே தவிர்க்கும் அவன் ஒரு நாள் வந்து அவளை மலைக்கோவிலுக்கு அழைத்து போகிறான். அதுவே அவளுக்கு பேரின்பம் என்று தோன்றிவிடுகிறது. நடக்கும்போது கூட அவர்களிடையே இடைவெளி. (இதைவைத்து சுயம்புலிங்கத்தின் அழகான கவிதை ஒன்றுண்டு.) பிறகு அவன் முன்பாகவே வெளியே வந்துவிட ஒரு பெண் இனிமையாக பாடிக்கொண்டிருப்பதை பார்க்கிறான். மனோகரியும் அப்போது அவனருகே அமர்ந்து கேட்கிறாள். அப்போதுதான் அவனுக்கு நினைவு வருகிறது, இவளும் நன்றாக பாடுவாளே. முறையாக சங்கீதம் கற்று ரேடியோவுக்கு பாடும் தேர்ச்சி பெற்ற பாடகிதானே. அப்போது மனைவியிடம் அவள் கேட்கிறான். “நீ ஏன் பாடறதில்லை ?’ அவளுடைய இயல்பான பதில் புன்னகைத்தபடியே “யாராவது கேட்டால்தானே”. அவன் அதிர்ந்து போகிறான். ஆனால் அவன் அதிரவேண்டும் என அவள் சொல்வதில்லை.
மனோகரி புற்றுநோயில் தன் இறுதியை எட்டிக்கொண்டிருக்கும்போது இவனது கரிசனம் அர்த்தமற்ற ஒன்றாகிப் போகிறது. அப்போதும் அவள் இவனை இரண்டாம் கல்யாணம் செய்து கொள்ளச் சொல்வது என்பதெல்லாம் சற்று பழைய சமூகக் கூறாக இருக்கிறது.
மற்றொரு பெண் பாத்திரம் ஜெயந்தி. இவள் சிவராமன் எனும் சக ஊழியனின் மனைவி. அவன் ஒரு அலுவலகச் சிக்கலில் மாட்டிகொள்கிறான். அவனைக் காப்பாற்றிவிடும் உத்தியோக ரீதியான சந்தர்ப்பம் அவனுக்கு இருந்தாலும், அவ்வளவு அழகான ஜெயந்தி அவனது மனைவியா என்ற வயிற்றெரிச்சலால் அவனுக்கு உதவாமல், அவன் வேலை பறிபோகிறது. சட்டப்படி தான் எதுவும் செய்யவதற்கில்லை என்று அழுது கொண்டிருக்கும் அவளிடம் அவன்விளக்கினாலும், அவன் மனமே சொல்கிறது அவன் ஏமாற்றிவிட்டான் என்பதை. இங்கேயும் அவள் அதை விளங்கிக் கொண்டாளா என்று நாவலில் சரியாக தெரியவில்லை. “நீ நல்லா இருப்பே” என்று அவள் சாபம் கொடுத்துச் சென்றதை மீண்டும் மீண்டும் நினைத்துக் கொண்டு மருகுகிறான்.
முரளியின் அக்காவுக்கு சிநேகிதி, கணவனைப் பறிகொடுத்த சங்கரி. கணக்கு பாடம் கற்றுக்கொள்ள வந்தவளுக்கு அக்காவே “நீ கொஞ்சம் சொல்லிக் கொடேண்டா” என்று சிபாரிசு செய்ய, , அவள் வீட்டுக்கு சென்று இவன் சொல்லிக்கொடுக்கப் போய், அவர்களுக்குள் நெருக்கம் உண்டாகி, அதிகமாகி, இருவரும் ஊரைவிட்டு ஓடிப்போய் திருமணம் செய்து கொள்ளலாம் என்று முடிவு செய்து, பஸ்ஸில் கிளம்பலாம் என்று சொல்லி அவளை வரச்சொல்லிவிட்டு ஆனால் கடைசி நேரத்தில் மனம் மாறி அவளைப் பார்க்காமல் நேராகச் சென்றுவிட, கண்ணீருடன் அவள் அலுவலகத்துக்கு வந்து அழுதுவிட்டு, அவனைச் சபித்துவிட்டு போகிறாள். சமாதானம் செய்ய கொஞ்சவரும் அவனிடம் ‘செருப்பு பிஞ்சிடும்” என்கிறாள். தப்புதான். ஒத்துக்கறேன். நீ இப்போ வீட்டுக்குப் போ. அப்புறமாப் பேசிக்கலாம் என்பவனிடம் கிண்டலாக “எப்ப ? இன்னொரு தடவை படுத்து எந்திரிச்சதுக்கு அப்பறமா?” என்று கேக்கிறாள். மறுநாள் மைசூருக்குச் சென்று நான்கு நாளில் திரும்பிவரும்போது சங்கரி தூக்கு மாட்டிக்கொண்டு செத்துப் போயிருக்கிறாள். இவர்களுக்கிடையே உறவு இருந்தது என்பது அக்காவுக்கு ஓரளவு புரிந்திருக்கிறது. ஆனால் எந்த அளவுக்கு என்பது தெரிவதில்லை. இறக்கும்போது அவள் கருவுற்றிருந்தாள் என்பது நாவல் கடைசியில்தான் தெரியவருகிறது.
சங்கரி – மனோகரி – அர்ச்சனா – ஜெயந்தி. நான்கு பெண்களின் சாபம் அல்லது அவர்கள் குறித்த இவனது குற்றவுணர்ச்சி இவனை அலைக்கழிக்கிறது. திருப்பத்தூர் பக்கமிருந்து திருவையாறு நோக்கி பைக்கிலேயே செல்கிறான். துறையூர், மணச்சநல்லூர், திருப்பைஞ்சீலி, உமையாள்புரம், கும்பகோணம், எழில்மங்கலம் என செல்லும் வழியில் எல்லாம் – கோவில் – ஆறு – எதிர்ப்படும் சிலர் உதவியால் தங்கிக் கொள்ளுதல் – என்று அவனுடைய தந்தை ரமணராவ் சொந்த ஊரை அடைந்து அனுமந்தராவ் மூலம் கோவிலை அடைவதே அவன் தற்போதைய கனவு. இடையே முரளிதரராவ் சந்திக்கும் ஒவ்வொரு மனிதர் பின்னாலும் அவரவர் கதை இருக்கின்றன. முரளிராவ் கோவில்களை மட்டுமல்ல, மனிதர்களை மட்டுமல்ல அவரது கதைகளையும் கடந்துதான் பயணிக்கிறான்.
*****
திருமணமாகாத அண்ணன், திருமணமான தம்பி பாத்திரங்களில் தம்பி மனைவியின் மேல் மனம் சாய்ந்துவிடும் எனும் சுய சந்தேகத்தினால் வீட்டுக்குளே போகாமல் பெரும்பாலும் வெளியேவே உட்காரும் அண்ணனை – சூரியின் மனைவி மேல் ஆசையுறும் முரளியால் புரிந்துகொள்ள முடிகிறது. உந்திப் பசிக்கு உணவு. உடற்பசிக்கு உடம்பே உணவு என்ற ஒரு வரி எல்லாம் சொல்லிவிடுகிறது.
ராமலிங்கமும் டாக்டர் மனைவியும் தம்பதிகள் என்றாலும் வெளியே தெரியாத ஒரு கோடு பிரிப்பதை, மனோகரியோடு ஒன்ற முடியாத, குழந்தைச்செல்வம் இல்லாத முரளியால் புரிந்துகொள்ள முடிகிறது.
காவி வேட்டி, துண்டுடன் கிளம்பி தங்கிப் போகும் வழியில் எல்லாம் கைபேசி, பைக், என்று ஒவ்வொன்றாக விட்டுவிட்டு தனியனாக நகர்கிறான். இப்போது அவன் வெறும் ஆள். அவனது உடையை வைத்து அவனுக்கு கிடைக்கும் மரியாதைகளை அவன் மனம் ஏற்க மறுத்து குடைகிறது. அப்போதெல்லாம் அவன் தத்தளிப்பு நிலை கொண்டு, இடத்தை விட்டு விலகி மேற்கொண்டு பயணிக்கிறான்.
*****
அப்பா ரமணராவ் நியமமானவர். பிரசித்தமான ஆன்மீக குரு வியாசராவ் சிறுவன் ரமணராவின் ஸ்லோகங்கள் சொல்லும் அறிவை வியந்து, ‘நீ செய்ய நிறைய இருக்கிறது’ என ஆசீர்வதித்து அவன் உள்ளங்கைகள் நிறைய அட்சதையும் மலருமாக தருகிறார். அப்படியே பொத்திக்கொண்டு வீட்டுக்கு சென்று கைவிரித்துப் பார்த்தால் அதில் ஒரு யோகாஞ்சநேயர் விக்ரஹம் இருக்கிறது.
திருமண பந்தத்தில் இறங்கிவிடும் அவர் மேற்கொண்டு எதுவும் செய்ய முடியாத நிலை. இதனிடையே மகன் முரளியைக் குரங்கு கடித்ததாக அறியும்போது அந்த விக்ரஹத்தை எழில்மங்கலம் கோவிலில் வைக்கிறார். உன் காலத்தில் நீ அதைப் பார்த்துக்கொள் என்கிறார். அதை நோக்கித்தான் இப்போது முரளிராவ் கிளம்பி இருக்கிறார்.
ஆனால் இது நாவலின் கடைசிப் பகுதியில்தான் வெளிப்படுகிறது.
இறுதி அத்தியாயங்கள் கும்பகோணம் தாண்டி எழில்மங்கலம் சேர்கின்றன. ராகவராவ் இவருடைய உருவம் கண்டு, அப்பாவின் ஜாடை தெரிந்து, இவருடைய பூர்வீகம் உணர்ந்து, வெள்ள மழை நாள் ஒன்றில் நனைந்தபடி அனுமந்தராவ் வீட்டுக்கு அழைத்துச் செல்ல, அங்கே இவர் யாரென்பதை அவர் உணர்ந்து, எத்தனை வருட காத்திருப்பு என்று, மழைவெள்ளத்தினூடே தவிப்பான இரவு காத்திருப்புக்குப் பிறகு காலை அரையிருட்டில் தீபாராதனையில் ஆஞ்சநேயரின் துலங்கும் உரு கண்டு மனமுருகுகிறார்.
முரளியின் அப்பா சொன்ன ஒரே வார்த்தைக்காக பலவருடங்களாக எல்லா கஷ்டங்களையும் எதிர்கொண்டு கோவிலை அனுமந்தராவ நிர்வகிக்கிறார். அரசாங்க அதிகாரிகளிடம் இருந்து கோவிலைக் காப்பாற்றுவதே பெரிய போராக இருக்கிறது எனும் சமகால நிலவரத்தை அனுமந்தராவ் மூலம் அறியமுடிகிறது. பிறகு அவர், இவருக்கு ஒரு இரும்புப் பெட்டியிலிருந்து எடுத்து காட்டும் விக்ரஹம் அப்பா ரமணராவ் கொண்டுவந்து வைத்த விக்ரஹம். இதையெல்லாம் தான் செய்ய அருகதை அற்றவன் என்பதை முன்கூட்டியே உணர்ந்துதானோ அவர் இங்கு கொண்டுவந்து வைத்துவிட்டார் என்றெல்லாம் நினைக்கும் முரளி – இனி எழில்மங்கலம்தான் என் ஊர். யாருக்கும் என் நினைவு கூட வராது. என்னுடைய நடத்தை அப்படி இருந்தது என்று சொல்லிக்கொள்கிறான். இந்த கோவில் கைங்கர்யம் அவனது கசடுகளை மெல்ல மெல்லக் கரைக்க உபாயமாகும் என்று ஆசுவாசம் தோன்றுகிறது. . இனி பூஜ்ஜியத்திலிருந்து துவங்கவேண்டிய புது இரண்டாம் வாழ்க்கை என்று கணித்துக் கொள்கிறான்..
ஆனால் இறுதி அத்தியாயம் காண்பிப்பது வேறு. பழைய கணக்கு பாக்கிகள் அவனை விடுவதில்லை இரண்டுநாள் பசியோடு முரளி எழில்மங்கலம் நோக்கி பயணப்பட்டு, தள்ளாடி கீழே விழுந்து கிடக்கிறான். ஒரு சிறுமி அவன்மேல் பரிதாபம் கொள்கிறது. முகத்தில் தெளிக்கப்பட்ட நீரால் கண் திறக்கிறான். அவள் அம்மா சிறுமியை அழைத்து தந்தனுப்பிய இருபது ரூபாயை, அந்தச் சிறுமி அவன் பையில் திணித்துவிட்டு திரும்புகிறாள். அந்த பெண் குரலாலும் உருவாலும் சங்கரியைப் போலவே இவனுக்குத் தெரிகிறாள். எழுந்து உட்கார்கிறான். நாவல் முடிகிறது.
அவன் எழில்மங்கலத்தொடு ஒன்றிப்போவதும், அனுமார் சிலை கண்டு நெகிழ்ந்ததும், எல்லாமே அவன் விழையும் நனவு. மனக்காட்சிகள். அப்படியெல்லாம் இருந்துவிட்டால் இவனுடைய மனம் நிர்மலமாகிவிடும். ஆனால் இந்தத் தீர்த்த யாத்திரை அவனுக்கு அதைக் கையளிப்பதில்லை. மனதறிந்து துரோகங்களைச் செய்துவரும் ஒருவனுக்கு தீர்த்த யாத்திரை பௌதீக அளவில் கைகூடினாலும், ஆன்ம அளவில் கைகூடுவதில்லை. புனித நீருக்கான யாத்திரை அவனுக்கு ஒரு பலகீனமான தப்பித்தலாகவே இருக்கிறது. பயணவழியில் மயங்கிக் கிடப்பவனுக்கு, முகத்தில் தெளிக்கப்படும்போது உதட்டில் சிதறிய நீரை நாவால் நக்கிக்கொள்ள மட்டுமே முடிகிறது.
மனிதனை நல்லவன் கெட்டவன் என்று எளிதில் கறாராகப் பிரிக்க முடிவதில்லை. தான் செய்த துரோகத்தை உணர்ந்தவன் உணராதவன் என்றே பகுக்க முடிகிறது.
பாவங்களைத் தீர்த்தயாத்திரையின் நீரால் சுத்தம் செய்துகொண்டுவிட முடியும் என்று நம்பிய முரளிராவுக்கு, அது கிடைப்பதில்லை. குற்ற உணர்ச்சியில் பெருகும் கண்ணீர் ஒருவேளை சுத்தம்செய்துவிடக்கூடும். அப்போது அதுவே தீர்த்தமாகும். அதுவரையான அவன் தீர்த்த யாத்திரை, தீராத யாத்திரையாகவே நகர்கிறது.
No comments:
Post a Comment