கடைசி பெஞ்ச் - கவிதைகள்
ந. பெரியசாமி
ஓங்கில் கூட்டம் வெளியீடு
நண்பர் பெரியசாமியின் கவிதைத் தொகுப்பு கடைசி பெஞ்ச் படித்தேன். அவரைப்போலவே அவரது கவிதைகள் ஆரவாரமற்றவை. மென்மையானவை. பாசாங்கற்றவை.
இந்த தொகுப்பு இளைஞர்களுக்கானது 14+ என்ற அறிவிப்போடு வெளிவந்துள்ளது. சிறுவர்களை மையமாக வைத்து எழுதிவிடலாம். அவர்களுக்காக எழுதுவது எளிதல்ல. அதேபோலத்தான் இளைஞர்கள். இந்த பருவம் பின்மாலை நேரத்து தூக்கம் போன்ற குழப்பம் கொண்டது. சிறுவர்களாக இல்லை என்பதும் பெரியவர்களாக இன்னும் ஆகவில்லை என்றும் தம்மை அடையாளம் கண்டுகொள்ளும் பருவம். இன்றிருக்கும் சிக்கல் என்னவென்றால் இளைஞர்கள் இணையத்தில் புழங்குவதால், நிறைய கேள்விப்பட்ட விஷயங்களை உதிர்ப்பதால், அறிவுக்கொழுந்துகள் என்று பெரியவர்கள் நினைத்து விடுகிறார்கள். பெரியவர்களுக்கு இணையப் புழக்கம் குறைவாக இருப்பதால் அவர்களுக்கு எதுவும் தெரியாது என்று இளைஞர்கள் நினைத்து விடுகிறார்கள். இரண்டுமே முழுமையான நிஜம் அல்ல என்பதை அனுபவம் மட்டுமே உணர்த்தும்.
ஆனால் எல்லா காலத்திலும் இந்த பருவம் என்பது மிகவும் குழப்பமான ஒன்று. இன்று அது மேலும் குழப்பமான ஒன்று. பாதிக் கிணற்றில் தொங்கி நிற்கும் நீர்வாளியைப் போன்றது. இந்த சமயத்தில் தாம் ஏதோ ஒன்றாக அடையாளம் காணப்படவேண்டும் என்ற தவிப்பும் தயக்கமும் கூடிய மனநிலை நிலவும். உடல் சார்ந்த மாற்றங்கள் மனத்திலும் இம்சிக்கும். இதுவரை ஒரு மனித உருவமாகவே தன்னை பாவித்து வந்தவர்கள் தாம் ஆண் அல்லது பெண் என்ற அந்தஸ்தை பெறத்துவங்குவார்கள். நிறைய சில்மிஷங்கள் நடப்பதன் காரணம் இந்த உந்துதல்தான். நான் இனியும் சின்னப்பிள்ளை இல்லை என்று வெளிப்படுத்தும் குழந்தைத்தனம்.
இந்த கட்டத்தை தனது கவிதைகளில் படம் பிடித்திருக்கிறார் பெரியசாமி. இதன் வாசகர்கள் இளைஞர்கள். இது அவர்களுக்கானது என்பதால் முதிர்ச்சியான கருத்தியல் இடங்களை தொடாமல், நீ இப்படி என்று சொல்லும்போது தாம் அப்படி என்று உள்ளுக்குள் திரும்பி பார்த்துக்கொள்ளும் சந்தர்ப்பத்தை அளிக்கிறார். சரியா, தவறா என்பதெல்லாம் இல்லை. இது இப்படி இருக்கிறது என்பதைதான் வரிப்படுத்துகிறார். இந்த நிதானம் கவிதைக்கு முக்கியம்.
25 கவிதைகளில் சுமார் எட்டு கவிதைகள் பெண் பிள்ளைகளையும் நான்கு கவிதைகள் ஆண் பிள்ளைகளையும் மையப்படுத்தி கவிக்கிறது. கொரோனா காலத்து அடைபடுதலில் இருந்து விடுபடத் தவிக்கும் இளைஞர்கள் பற்றிய கவிதைகளும் உள்ளன.
பொய்க்கூடு கவிதையில் செல்போன் பயன்படுத்த அனுமதி கேட்கவேண்டிய காலம் போய் பெற்றோரே கையில் கைபேசியை திணித்து விடும் நிலைமாற்றத்தை சொல்கிறது. ஆனால் ‘அடையப் போகும் விடுதலைக்காக கொக்கென காத்திருக்கிறேன்’ என்கிறது இந்த கவிதை.
பள்ளி திறக்கும் நாளில் முதல் நாள் கோவிலுக்கு செல்லும் சிறுமி
இலந்தைப் பழம்/ சப்பாத்திக் கள்ளி பழம் / மணத்தக்காளிப் பழங்களை வைத்திருக்கும் ஈஸ்வரி பாட்டியை கட்டியணைத்து முத்தமிட ஆசை.
தேங்காய் உடைத்து அபிசேகம் செய்கிறேன்
கொரோனாவிற்கு
பாட்டிகள் யாரும்
பலியாகி இருக்கக் கூடாது
என்று முருகனை வேண்டும் வள்ளி இன்றைய சிறுமி.
குழந்தைப் பருவத்தில் அவர்கள் செய்வது எல்லாமே - சிரிப்பதும், அழுவதும் - பிறர் கவனத்தை பெறுவதற்கான மழலை முயற்சியே. அதன் நீட்சிதான் இளம்பருவத்திலும். கண்ணில் படும் பறவை உட்பட எல்லாவற்றையும் தன் கற்பனை சேர்த்து இணையத்தில் பதிவிட்டு லைக்குகள் பார்த்து ஆனந்த கூத்திட்டான் என்கிறது ஒரு கவிதை.
தலைமுறை ஒரு நல்ல கவிதை
அப்பா / எங்க கிளாசில் / கிஷோர்னு ஒருத்தன் இருக்கான்பா / அவன் இந்நீக்கு / என்ன செய்தான் தெரியுமா
டீச்சர் எதைச் சொன்னாலும் இவனும் அதையே திரும்பச் சொன்னன் / டீச்சர் கடுப்பாயி / கிலாசைவிட்டே போயிட்டார் / என்ற மகளின் / மகிழ்வை ரசித்தபடி இருக்கையில்
எப்ப பாத்தாலும்
பசங்கள பத்தியே பேசுறா
அவள கொஞ்சம்
அடக்க ஒடுக்கமா இருக்கச் சொல்லுங்க என்ற அம்மாவின் குரல் அழகிய கவிதை.
டீச்சரை அவமதிக்கும் பையன், பெண்ணை கட்டுப்படுத்தும் அம்மா என்று புகார்களாக பார்ப்பவர்கள், கவிதையிலிருந்து வெளியேறி விடுவார்கள். இது இளம் பையனின் விளையாட்டுத்தனம், அதை ரசிக்கும் அதே பிராயத்து மற்றுமொரு இளம் மனம், அதை கவனிக்கும் ஆண் அப்பா, அது தெரிந்திருந்தாலும் வாஞ்சை கொள்ளும் பெண் அம்மா ! இவர்கள் நீரின் சுழிப்பை போல ஒன்றுபடும் இடம்தான் கவிதை.
ரகசிய பொய் கவிதையில் ‘ கொஞ்சி கொஞ்சி அழைக்கும் மகளிடம் என்ன எதற்கு இந்த கொஞ்சல் என்று கேட்கும் அம்மாவிடம் பிரவினுக்கு பிறந்தநாள் இன்று / அல்லோரியும் வீட்டிற்கு கூப்பிட்டு இருக்கான் / மாலை வர லேட்டாகும்
சரி சரி
மறக்காம அப்பாகிட்ட
பொண்ணுங்க வீட்டுக்கு
போய்வந்ததா சொல்லிடு என்கிறது மற்றொரு கவிதை.
இதில் வரும் அம்மா அப்பா முன்பு சொன்ன கவிதையின் அம்மா அப்பாவிலிருந்து வேறுபட்டவர்கள்.
எதையுமே சொல்லாமல் ஒரு புகைப்படம் போல உள்ள கவிதை, எல்லாவற்றையும் பேசுகிறது. இதுவே பெரியசாமியின் கவிதையில் கவனிக்கப் படவேண்டியது.
டியர் வாகினி கவிதையில் முறையற்ற தொடல்கள் துவங்குவதை பற்றிய குழப்பத்தி, தனது சிநேகிதியிடம் ‘எட்டுக்கால் பூச்சியொன்று / மனதுள் வலை பின்னிக் கொண்டிருக்க / தீர்மானம் கொண்டேன் / .. என்று சொல்லி
வலிய வரும் அன்பை
இனி அடையாளம் காணவேண்டுமென - என்கின்ற கவிதை ஜாக்கிரதை உணர்வு உருவாவதை சொல்ல்லிவிடுகிறது.
வகுப்பறை விளக்கு கவிதை
கன்றேனத்துள்ளி / கடுகேனப் பொரிந்து / கலகலப்பாக வகுப்பில் இருப்பவள் /
கண் சொர்ந்வுற்று / அசதியாக அமர்ந்து / தவிப்போடு இருப்பவளைக் கண்ட / ஆசிரியை அருகில் சென்று
ரகசிய உரையாடலில்
கொண்டு வராததை அறிந்து
தன் கைப்பையை
தாய்மையோடு கொடுத்தனுப்பினார்
நாப்கின் மலர்ச்சியைத் தந்தது.
என்பது நல்ல கவிதை. ஆனால் ‘நாப்கின் மலர்ச்சியைத் தந்தது’ என்ற வரி கவிதையின் தேவைக்கு அதிகமான ஒன்று. அந்த மலர்ச்சியை வாசகர் புரிந்து கொள்ளவேண்டும். ரகசிய உரையாடலின் என்று முன்னே சொல்லப்படும் வரியின் அம்சம், இந்த வரியில் வெளிப்படாமல் இருப்பதே கவித்துவத்தின் செறிவு. கடைசி வரி இல்லாமல் படித்தால் இந்த கவிதை மேலும் உயர்கிறது.
அரசு கல்லூரி வேண்டும், அரசு வேலை வேண்டும். அரசு பள்ளி வேண்டாம் என மாம்பழக் கொட்டையினுள் இருக்கும் வண்டாக மனதுள் கேள்விப் புழு என்ற கவிதை நிதர்சனமானது. ஆனால் அது சமூக விமர்சனமாக, பள்ளிப்பருவ மனதில் இருந்து தள்ளி நிற்கிறது. பொறாமை, தோத்தான் கோழி, குறுஞ்செய்தி, கடிதம்,வேடிக்கை ருசி போன்றவை பொதுவான கவிதைகளாக அமைந்திருக்கின்றன.
இளைஞர் பற்றி அவர்களுக்காக கவிதை எழுதவேண்டும் என்ற எண்ணமே பாராட்டப் படவேண்டிய ஒன்று. அவர்களை வைத்து தன் குரலை உயர்த்திக் கொள்ளும் ஆவேசம் இல்லாமல், அவர்களை வைத்து அவர்களுக்காகவே எழுதுவது என்பது படைப்பு நேர்மை. அது இதிலுள்ளது.
நீங்களும் வாசித்துப் பாருங்கள். உங்களுக்கு மேலும் பல முகப்புகள் பிரதிபலிக்கக் கூடும்.
அமேசானில்
No comments:
Post a Comment