Thursday 21 May 2020

காதுகள் - எம் வி வெங்கட்ராம்

காதுகள்
எம் வி வெங்கட்ராம்
(சொல்வனம் இணைய இதழில்  30மே 2014ல்வெளியானது )

(மணிக்கொடி எழுத்தாளர் எம்.வி.வெங்கட்ராம் அவர்களின் – சாகித்திய அகாதமி பரிசு பெற்ற நாவல் “காதுகள். அவருடையா சமகால பிரபல எழுத்தாளர்களை ஒப்பிட்டால் அதிகம் பேசப்படாத எழுத்தாளர் அவர். இந்த நாவலும் அப்படியே. இந்த நாவலை நான் தேடாத இடம் இல்லை. கடைசியில் மதுரையில் எம்.வி.வி ரசிக வாசகர் திரு.துளசிராம் ஒளிநகல் எடுத்து அனுப்பினார். அவருக்கு நன்றி.)


 மாலி எனப்படும் மகாலிங்கம் என்ற எழுத்தாளனின் வறுமை – காதுகளில் சதா ஒலிகளும் குரல்களும் எப்போதும் கேட்டுக்கொண்டே இருக்கும் அவஸ்தை – தீய சக்தியாக ஒருவித நாசகாளி – நல்ல சக்தியாக குருவாக முருகன் இவர்களுக்கு இடையே மாலி படும் அக அவஸ்தை – இவற்றின் பின்னலாக அமைந்த இந்த நாவல் – உளவியல் ரீதியான நாவல் எனவும் – ஆன்மீக சம்பந்தம் எனவும் சிலாகிக்கப் பட்டதுண்டு. ஆனால் அறிவியல் பூர்வமாக – லாஜிக் பார்ப்பவர்கள் இதில் எதுவும் உளவியல் சிக்கலாக அணுகப் படாததால் சற்று ஒதுங்கியே போய்விட்டிருக்கிறார்கள் என்று தோன்றுகிறது (நான் அறிந்தவரை). மேலும் தனக்கு எந்த “இஸங்“களும் தெரியாது என்று சொல்லியிருக்கிறார் எம்விவி.
இந்த நாவல் தன்னுடைய வாழ்வில் தான் அனுபவித்ததன் ஒரு பகுதியே என்று எம்விவி சொல்லி இருக்கிறார். கதை நாயகன் மாலியும் எழுத்தாளன் – வியாபாரி – முருக பக்தன் – வசதியைக் கண்டவன் – வறுமையிலும் வாடுபவன். தாம்பூல வாயுடன் குறைவாய்ப் பேசுபவன்.–மாலி-எம்விவி க்கு நிறைய ஒற்றுமைகள் உண்டு. இது வெறும் கட்டுக்கதை அன்று.  அதனால் இதை சற்று மரியாதையோடும் தீவிரமாகவும் அணுக வேண்டியது நியாயம்.
கூச்ச சுபாவம் உள்ளவன் மாலி. அக்கம் பக்கத்தில் பண நோட்டுக்குச் சில்லறை வாங்கிவரச் சொன்னால் கேட்க கூச்சப்பட்டு இல்லை என்று வந்துவிடுபவன். படிப்பாளியாக்க வேண்டும் என்று அவன் தந்தை விரும்பிட மாலி சுமாராகப் படிக்கிறான் – கதைகள் பலவும் படிக்கிறான். பெண்களின் கண் கலந்தாலே கூச்சமடையும் அவன் அப்பாவின் சொற்படி கேட்டு கல்யாணம் செய்துகொண்டு – பகுதி நேரத்தில் கதைகள் எழுதிக்கொண்டே வியாபாரமும் செய்கிறான். புத்தகப் பிரியன். யாரிடமும் கடன் கேட்பதற்கு அச்சம்.  ஆனால் கடன் கேட்பவருக்கு கொடுத்துவிடும் மனிதாபிமானி. நேர்மையாளன். கடவுள் பக்தன். ஏமாற்று வித்தைகள் தெரியாது. நியாயவான். இது போதாதா ஒருவன் வசதியான வாழ்வை இழந்து வறுமையில் விழுவதற்கு! அதுவே மாலிக்கு நடக்கிறது. பொருளாதார இழப்பு – தந்தை நோய்ப்படுக்கையில் –இந்நிலையில் மனைவி காமாட்சியை அவள் அம்மா தனிக்குடித்தனம் வைத்தால்தான்அனுப்புவேன் என்று வீட்டுக்கு அழைத்துப்போய்விடுகிறாள். பிறகு புனே சென்று சம்பாதித்துத் திரும்பி வந்து நிறைய எழுத ஆரம்பிக்கிறான். காமாட்சி திரும்ப வருகிறாள். “மனைவியை உலுக்கியதில் குழந்தைகள் உதிர்ந்தன.“ என்று எழுதுகிறார்.
கடவுளை நம்பாமல் இருந்த மாலி ஒருநாள், கும்பேஸ்வர்ரர் கோவிலில் தண்டாயுதபாணி சிலையருகே ஒரு சாமியார் நின்று இவன் தோளை தழுவ நிறைய குழந்தைகள் இவர்களைச் சுற்றி ஆடுவதாக ஒரு கனவு காண்கிறான். மறுநாள் முதல் ஆன்மீகவாதி முருக பக்தனாக மாறிவிடுகிறான்.  கடவுள் நாட்டம் அதிகமாகி மனிதர்களைக் குருவாக கொள்வதில்லை. முருகன் மட்டுமே எனக் கந்தர் அநுபுதி சொல்லி வழிபடுகிறான். நாட்பட வியாபாரம் நொடிக்கிறது. அப்போது அவன் காதுகளில் ஒலிகளும் குரல்களும் ஒலிக்க ஆரம்பித்து அவனை அலைக்கழிக்கின்றன. இதனிடையே காம சிந்தனைகள் அவனை துரத்தி துரத்தி பிடுங்குகின்றன. அவன் அதை – அல்லது அது அவனை – விடுவதே இல்லை. போதாக் குறைக்கு அவன் கனவுகள் பலவும் பலித்து விடுகின்றன. இந்த அவஸ்தையை தன் குருநாதன் முருகன்தான் தீர்த்து வைப்பான் என்று கதையின் கடைசி நொடிவரை நம்பி – தீய சக்திகளின் அச்சுறுத்தலில் அலைக்கழிவதுதான் கதை.
“வேதநாரயணப் பெருமாள் கோயில் வாயிலின் மூன்று படிகள் ஏறி நாலாவது படிமீது கால்வைத்தபோது மகாலிங்கத்துக்கு ஒரு பெரிய சந்தேகம் வந்துவிட்டது. “எனக்கே சகிக்க முடியாத ஆபாசம் எனக்குள் சேர்ந்திருக்கிறது. இதை சுமந்துகொண்டு  உள்ளே போனால் கோயில் தோஷப்பட்டுவிடுமோ?“ என்று தயங்கியபடி அவன் வலது காலை மூன்றாவது படிக்கே மீட்டுக்கொண்டான். நிமிர்ந்தபோது வெகுதொலைவில் விளக்குச் சுடருக்கு அப்பால் ஒளிக்கலங்களில் மறைந்து நின்று பெருமாள் கவலை மிகக் கொண்டவராய்த் தன்னைப் பார்த்துக்கொண்டு இருப்பதைக் கண்டான“. நான் உள்ளே வந்துவிடுவேனோ என்று பெருமாள் பயப்படுகிறார் போலும்” – என்ற பாராவுடன் ஆரம்பிக்கிறது நாவல்.
இந்த நாவலை படிப்பாளி எழுத்தாளன் மாலி1 – காதில் ஒலிகளால் அலைக்கழியும் மாலி 2 – இவர்களைக் கவனித்து நம்மிடம் கதை சொல்லும் மாலி 3 என்று பிரித்துக்கொண்டால்  கதைக்குள் நீந்துவது எளிதாக இருக்கலாம்.  இதில்  ஒரு மாலி இன்னொரு மாலியாக எப்போது மாறுகிறான் என சொல்ல முடிவதில்லை என்பதே பரிதாபம். (ஷங்கரின் ‘அந்நியன்’ மாதிரி இல்லை). இந்த மாற்றம் அவனுக்கு மட்டுமே தெரியும். பிறருக்கு, எதிரில் இருப்பவருக்கு, – மனைவிக்கே கூட தெரியாது என்பதுதான் கொடுமை.
அந்த சப்தங்கள் சப்த ஜாலங்கள் என்கிறார். பம் பம் பம் என சங்கு ஊதுவது போல – ஜ்ஜோஹ்.. ஜ்ஜோஹ்..என அலைகளின் ஓலம் – டாங் டாங் என் கோவில மணி முழக்கம் – ஞிணிங் ஞிணிங் என் பூஜைமணி முழக்கம் – டம் டம் என தமுக்கு – எனப் பலப்பலவாய்.
ட்ரல ட்ரல ட்ரல லலல…  ட்ரல ட்ரல ட்ரல லலல…
ட்ரல ட்ரல ட்ரல லலல…  ட்ரல ட்ரல ட்ரல லலல…-
என பலவிதமாய் இம்சிக்கின்றன. நாவலின் பல இடங்களில் ‘சப்தங்களை’ அப்படியே ‘சொற்களில்’ – – தான்(மாலி) உணர்ந்தவாறே – எம்விவி எழுதிப் போகிறார். நாம் படிக்கும்போது அவற்றை ‘அதே’ சப்தத்துடன்-சற்று வாய்விட்டு ஒலியுடன் படித்தால் – அவர் என்ன விதமான அவஸ்தை பட்டிருக்கிறார் என்று அறிய முடியும். படிக்கையில் சிலசமயம் பயமாய் இருக்கிறது.
24 மணி நேரமும் அவனை தூங்க விடாமல் யோசிக்க விடாமல் தியானத்தில் உட்கார முடியாமல் – நடக்கும்போதும் உட்காரும்போதும் படுக்கும்போதும் ஒலிகளும் – குரல்களும் – உரையாடல்களும் ஒலித்துக்கொண்டே ..ஒலித்துக்கொண்டே ..ஒலித்துக்கொண்டே இருக்கின்றன.  மிக மிகப் பரிதாபமாக இருக்கிறது.  ஒருவருடன் பேசினால் உள்ளே இருந்து இரண்டு குரல்கள் – இவனது உரையாடல் சம்மந்தமாக – ஒன்றுக்கொன்று சண்டைபோட்டுக்கொண்டு – சப்தமாக ஒலிக்கின்றன , தன்  குரலே இவனுக்கு மறந்துபோகும் அளவுக்கு.
இன்னொரு பெரிய அவஸ்தை – காதுகளில் ஒலிப்பது ஒலிகள் மட்டும் இல்லை. குரல்கள். உரையாடல்கள். அவற்றை கண்கள் காட்சியாக – கனவாக  காணுகின்றன. மூக்கு துர்நாற்றங்களை  உணர்கிறது. வாய் கசந்து சமயத்தில் வாந்தி வந்து விடுகிறது. காதில் ரேடியோ ஒலிச்சித்திரம் போல ஆபாச நாடகங்கள் உரையாடல்கள் நிகழ்நது கொண்டே இருக்கின்றன. தூக்கம் என்பதே அரிதாகிவிடுகிறது. மேலும் பலவித குரல்கள். இந்த காதொலிகளை “அகச்சந்தை“ என்கிறார்.
சாயா என்ற பிரமைப் பெண் தானத்தன தானத்தன தானத்தனதா எனப் பாடிக்கொண்டு வந்து பாலுறவு பற்றி அப்பட்டமாய் பேசுகிறாள். பிச்சமூர்த்தி குபரா பற்றிகூட பேசுகிறது. பொண்ணு வேணும்  பொண்ணு வேணும் பொண்ணு வேணும்டோய்“ எனப் பாடுகிறாள். உனக்கு காமசுகப் பரவசத்தால் ஆத்மஞானம் தரப்போகிறேன் என்கிறாள். தான் என்ற உணர்வு ஆழத்தில் அமிழ ஆடு மாடு சிங்கம் புலி என பலவித உருவங்கள் கிளம்புகின்றன.  அவள் பாடப்பாட சொற்கள் விழுந்து குவிந்துகொண்டு போய் பாறையாக மலையாக உருப்பெற்று – அந்தச் சொல்பாறையை யாரோ படீர் படீர் என அடித்து உடைக்க சிறுசிறு சொல்லாகச் சிதைந்து அணுவாக மாறி உடலின் ஒவ்வொரு ரோமக்காலிலும் நுழைவதாக அந்த அவஸ்தையைப் பற்றி எழுதுகிறார்.
டாக்டர் ஜெகிலும் மிஸ்டர் ஹைடும் எனும் ஆங்கில நாவல் நினைவுக்கு வர தன்நிலையை ஒப்பிட்டுப் பார்த்துக்கொள்கிறார்.
வீட்டில் அவனுக்கென்றே ஒரு மூலை – அதில் கார்டினர், அகதா க்ரிஸ்டி, செயிண்ட. பெர்ரி மேசன், விவேகானந்தர் என பலரின் நூல்களைப் படிக்கிறான். கால்சியம ஊசி போல தனக்கு காமவெறி ஊசி போடப்படுவதாய் உணருகிறான்.  கண்களை இறுக்கி மூடிக்கொள்கிறான். ஆனால் கண்கள் திறந்துகொள்கின்றன. நீ என்னை லவ் பண்ணாவிட்டாலும் நான் உன்னை லவ் பண்ணுகிறேன் என்று அணிகலன்கள் முதல் ஒவ்வொன்றாய் களைந்துவிட்டு அவனை அணுகுகிறது. அவன் அகமுகமாய் முருகனை ஜபித்தாலும் அவள் பாய அவன் தரையில் சாய்கிறான். அவள ஒதுங்கிப்போன பின்பு தன் நாற்றம் தனக்கே சகிக்காமல் குமட்டிக்கொண்டு வருகிறது.
உடல் வலிகளையும் – வேண்டாம் என்று தவிர்த்தாலும் பின்னிருந்து நெட்டித் தள்ளும் காமத்திலும் அவன் ஆளுமை விழுந்து புரள்கிறது. அடுத்த கணம் அசூயை கொண்டு உடலே வெறுப்பு ஆகிறது. இப்படி ஐம்புலன்களும் அவனை விடாமல் துரத்தித் துரத்தி இம்சிக்கின்றன. இதைப் புலன்களின் சுயாட்சி (autonomy of sense organs)  என்கிறார். சில சமயங்களில் உடலுக்குள் புகுந்து கொண்டு விடுகிறது – ஒரு முறை கருப்பன் எனும் உருவம் சிறிதாகி வாய்க்குள் புகுந்து கொள்ள – முருகன் உதட்டின் மேல் நின்று அவனுக்கு கட்டளை பிறப்பிக்கிறார். கறுப்பனின் மனைவி மாலி மேல் காதல் கொண்டு அவனுக்குள் எங்கோ மறைந்து இருக்கிறாள் என்று அவனை தேடுகிறது. தொண்டைக்குழி வரை இறங்கி தேடுகிறது. டொக் டொக் டொக் என்று பற்களை தட்டி தட்டி பார்க்கிறது. அங்கிருந்து மூக்குக்குள் போகிறது. மாலிக்கு தும்மல் வந்துவிடுவதாய் அவஸ்தை வருகிறது. ஆனால் தும்மக் கூடாது என முருகன் கட்டளை இடுகிறான். அவன் படும் அவஸ்தை சொல்லில் அடங்காது.
உள்ளிருந்து ஒரு குரல் “என்னை நினைவில்லையா? நான் நாசகாளி. பல பிறவிகளாய் என்னைக் கும்பிட்டு என்னோடு சுடுகாட்டில் அலைந்து கொணடிருந்த நீ என்னை விட்டு….முருகனை எப்படி கும்பிடலாம். உன்னை விடமாட்டேன்” எனப் பயமுறுத்துகையில் “ எந்த பிறவி எந்த தெய்வம் எனக்கெப்படி தெரியும்? கடவுளை எப்படி அழைத்து கும்பிட்டால் என்ன? யாரை எப்படி கும்பிடுவது என்பது பக்தன் உரிமைதானே?“ என்றெல்லாம் கேட்கிறான்.
தீர்வுக்கான வழி முருகன் துணை மட்டுமே என்று எந்த சிகிச்சைக்கும் போகாமல் இருக்கிறான். அதுதான் மிகச் சரி என்று அவன் தீவிரமாக நம்புகிறான். குடும்பம் நலிந்து நலிந்து வீட்டில் உள்ள புத்தகங்களை விற்று சாப்பாட்டுக்கு பொருட்கள் வாங்கும் நிலை வந்து விடுகிறது.
ஆக அவன் சித்தப் பிரமை கொண்ட பைத்தியம் அல்ல. தன்னை ஒவ்வொரு கணமும் அவதானித்தபடியே இருக்கிறான். தனது செயல்கள் மேல் விமர்சனங்களை வைத்தபடியே இருக்கிறான். அவன் தன்னை ஒரு போதும் பிரக்ஞை அற்றவனாக உணர்ந்ததே இல்லை. புத்தகங்களைப் படித்துக் கொண்டே இருக்கிறான்.
ஒருநாள் இரவு வீட்டுக்குள் கறுப்பன் வருதாக  பிரமை வந்து பயந்துபோகிறான். விளக்கைப் போட்டுக்கொண்டு இருக்க மனைவி சலித்துக்கொள்ளுகிறாள். அப்போது கறுப்பன் “வெளிச்சத்தில் மறைந்து கொள்கிறான்“ என்று எழுதுகிறார். விவரம் சொல்ல மனைவி ஆசுவாசப்படுத்தி ஒரு சாமியாரிடம் அனுப்புகிறாள்.  அவர் தியானத்தில் இருக்கையில் நடுவில் கலைந்து மறுபடி தியானித்து உன்னைச் சுற்றிவரும்  துஷ்ட தேவதைகள் என்னையே குறுக்கிட்டு கலைக்கிறது. ஆனால் குருநாதர் உன் கையைப் பிடித்தபடி ராஜவீதியில் நடந்து போகிறார். அவர் என் துணை என்கிறார்.
இதை உளவியல மருத்துவரிடம் போவதற்கு முகாந்திரமில்லை. இது தெய்வ வினை. இதைத் தெய்வ ஈடுபாட்டின் மூலமே தீர்க்கமுடியும் என திடமாக நம்புகிறான். ஒருபோதும் அதை விடாமல் சிக்கெனப் பற்றுகிறான்.
நண்பர்களில் வற்புறுத்தலில் ஒரு சாமியாரைப் பார்க்க போகிறான். அவர் நீ செய்வதுதான் சரி. குருநாதன் மட்டுமே உன் துணை. அவர் உன் பிரச்சனை தீர்ப்பார் என்கிறார். எனக்கு என்னென்னவோ பிரமை வருகிறது. கனவு வருகிறது. ஒரு முறை கூட அவர் வருவதில்லை. அவரை எப்படி நம்புவது என்கிறான். இத்தனை பிரச்சனையாலும் நீ பைத்தியம் ஆகவில்லை. சித்தப்ரமை கொண்டு சாகவில்லை. உன் ஒவ்வொரு செயலும் சொல்லும் எண்ணமும் உனக்கு நன்றாகத் தெரிகிறது. அதனால்தான் நீ பைத்தியம் ஆகாமல் இருக்கிறாய்.  இந்த அருள் சாதரணமா ? என்கிறார். இந்த அவஸ்தை எவ்வளவு வருடம் படுவது. இந்த ஜென்மம் முழுதும் இப்படித்தானா ? எத்தனை காலம் ஆகும் என்று கேட்கையில் – கால வரம்பு சொல்ல முடியாது – இந்த ஜென்மம் முழுதும் இருந்தாலும் இருந்து விட்டு போகட்டும் – அடுத்த ஜென்மம் இருக்கிறதே என்கிறார் !
இவன் காமத்தால் அலைக்கழிவது இன்னொரு பிரச்சனை – அது அவன் கூடவே வருகிறது. ஆனால் ஒருபோதும் அவன் முறை தவறி நடப்பதில்லை. இந்த காமம் இயல்பானது அல்ல. திடீரென் இரு குரல்களுடன் உரையாடல் – பாலியல் தூண்டும்படி பேசி – காட்சியாகி அவனை நெட்டித் தள்ளுகிறது. அவன் மனைவியோடு கூடுவதையும் தள்ளி நின்று அவை பார்க்கின்றன. திரும்பிப் பார்க்கும் இடங்கள் எல்லாம் பாலியல் காட்சிகளும்-சப்தங்களும்- உறுப்புகள் புணரும் காட்சிகளும் விரவிக் கிடக்கின்றன. இதைப் பலவிதக் கோணங்களிலும் – கோணல்களிலும் என்கிறார் எம்விவி. ஒரு முறை ஒரு நாசகாளி உருவம் வந்து இவனை புணர்ந்துவிட்டு கெக்கரித்துவிட்டுப் போகிறது. கடவுள் என்மேல் காமம் கொள்வதா எனத் தன்னையே நொந்துகொள்கிறான். ஒரு முறை அந்த தெருவைச் சார்ந்த கறுப்புப் பெண் வந்து அவரிடம் குழைகிறாள்.  மோகத்தில் ஒரு கணம் நிலை தடுமாறி அவளை அணுகியபோது  செருப்பால் அடிப்பது போல ஒரு துர்நாற்றம அவளிடம் வர, குமட்டிக்கொண்டு வருகிறது. உடம்பே வற்றுகிறது. இப்படி காம்ம் பலவிதமாய அவனை ஆட்டுவிக்கிறது.
வறுமை தாண்டவம் ஆடுகிறது. சாப்பிட வழி இல்லை. இந்நிலையில் ஆறாவது குழந்தை நிறைமாத கர்பிணியாக இருக்கும் மனைவியை ஆவேசமாக கூடுகிறார். அவள் பாவம் பாவம் என்று மனது சொல்கிறது. உடல் கேட்பதில்லை. இது அவருக்கு சுய வெறுப்பு என்றால் – அவளைக் கூடும்போது அவள் எவ்வளவு இன்பம் பெற்றாள் கண்டாயா என்று ஒரு காளி உருவம் கேட்கும்போது – மாலி குறுகிப் போகிறான். அது மட்டுமின்றி பிரசவத்தில் குழந்தை இறந்து பிறக்கையில் – இவனுடைய காம வெறிதான் காரணம் என்று வேறு இரு குரல்கள் அவனுள் சண்டை இடுகையில் அவன் மனம் படாத பாடுபடுகிறது.  அவனுடைய காமத்தைப் பற்றி காதுக்குள் உரையாடல் குரல்கள் “மேட்னி ஷோவெல்லாம் நடக்குதே“ என்று கேலி பேசுகின்றன. அவனுடைய செய்கைகள் எதுவும் அவன் இஷ்டத்தில் இல்லை. ஆனால் அதன் விளைவுகள் அனைத்திற்கும் அவனே பொறுப்பாகிறான்.
அவனுக்கு சம்பாத்தியம என்பதே நின்று போன காலத்தில் கையில காசே இல்லாத ஒரு இரவில் மனைவிக்கு பேறுவலி வருகிறது. மூக்குத்தியை கழற்றித தந்து ஆஸ்பத்திரிக்கு ஏற்பாடு செய்யவும் டப்பாவில உள்ள ஒரு ரூபாயை வண்டிக்கு ஏற்பாடு செய்யவும சொல்கிறாள். “வண்டி எதுக்கு. நடந்தே போய்விடலாமே” என்கிறான். வறுமையின் கோரத்தில் வந்த வார்த்தைகள் அவை. அவள் தாங்காது என்கிறாள். பிறகு பெரிய ஆஸ்பத்திரிக்கு போக வண்டிக்காரனிடம் கடன்சொல்லிப் போகிறார்கள். பிரசவத்தில குழந்தை இறக்கிறது. இவன் வீடுவந்துவிடுகிறான். மறுநாள் போனால் குழந்தையை அடக்கம் செய்ய பணம் கேட்கிறார்கள். அவர்களே அடக்கம் செய்திருப்பார்கள் செலவில்லாமல் போகும் என்று எண்ணிப் போனவனுக்கு அதிர்ச்சி. சண்டையில் அவர்கள் இறந்த குழந்தையை துணியில் கட்டி தந்துவிட, அதை சைக்கிள் ஹேண்டில்பாரில் பை மாதிரி மாட்டிக்கொண்டு வந்து வீட்டு கொல்லைப்புறத்தில் அப்படியே வைத்து – கரண்டி ஒன்றால் குழி நோண்டி புதைக்கிறான். “என்ன?“ என்று கேட்ட மகள் சாவித்திரியிடம் “சொல்லவதானல் சொல்லுவேன். இது என்ன கேள்வி“ என எரிகிறான். பக்கத்துவீட்டு கிழவி சத்தம்போடுகிறாள். பிறகு விஷயம  அறிந்து ஆழப்புதைக்கவேண்டும் என்றும இல்லாவிட்டால் நாய்கள் நரிகள் வந்து எடுத்துவிடும் என்று எச்சரித்துப் போகிறாள். மனதைப்பிழியும் வறுமைநிலை இது.
இதைத்தாண்டியும் மறுபடியும் ஒரு பிரசவம் கலைந்து மனைவி மோசமான நோயாளியாகிறாள். நடக்க முடியாமல் தவழ்ந்தே போகிறாள். பிறகொரு நாள் கனவில் கோவணாண்டியாக ஒருவன் தலையருகே நின்று பேச பிறகு அது கடவுளாக இருக்குமோ என்று   எண்ணி விழித்துக்கொள்கிறான்.
ஒரு நாள் மகள் சாவித்திரியின் உடல்நிலை காய்ச்சலால் மோசமாகிறது. டாக்டரை அழைக்க  கிளம்பிப் போகிறான். ஏதேதோ யோசனையால் கோவிலுக்குப் போகிறான். பிறகு மனவிழிப்பு வந்து டாக்டரிடம்தானே போகணும் என்று திரும்பி டாக்டரிடம் போக – மறுபடி நினைவின் தடுமாற்றங்களில் உள்ளே ஏதேதோ குரல் கேட்க வேறொரு கோவிலுக்கு போகிறான். மகள் செத்து கிடக்கக் கோவிலில் இந்த பைத்தியத்துக்கு என்ன வேலை என அனைவரும் பழிக்கின்றனர். மறுபடி டாக்டரிடம் போக ஏதோ தெருவுக்கு போய் நண்பன் அவனை ஏதோ கேட்க  நினைவு வந்து டாக்டரிடம் போய் – மகள் நிலை பற்றி சொல்கிறான். சாவித்திரி நல்லாதான் இருக்கா. சாதாரண காய்ச்சல்தான் என்கிறார். நான் இப்போதானே வந்து உங்களிடம் சொல்கிறேன் என்றபோது – அரை மணி முன்னால் நான் தெருப்பக்கம் போகும்போது அவளைப் பார்த்துவிட்டு வரலாம் என்று போனேன். மருந்து தந்திருக்கிறேன். சரியாகிவிடும் என்கிறார். என் குருநாதர் என்னை முந்திக்கொண்டு காப்பாற்றிவிட்டார். இந்த வாழ்க்கை ஊசிமுனைத்தவம் என்று எண்ணுகிறான்.
அப்போது மண்டையுள் இருந்து இரு குரல்கள் தாங்கள் பார்த்தபோது மகள் இறந்து கிடந்த்தாகவும் இந்த டாக்டர் மந்திரவாதியோ என்றும் பேசிக்கொள்கிறார்கள்.  சொற்களின் அட்டகாசத்தைப் பொருட்படுத்தாமல் அகமுகக் குரலில் அநுபூதியை பாடியபடி மகாலிங்கம் மெதுவாகவே நடந்தான் என்று நாவல் முடிகிறது.
சிறுவயதில் கூச்சமாக இருந்தவனின் மனதில் இருந்த காமுக எண்ணங்களின் இரட்டைப் பிம்பம்தான் இந்த இரு சக்திகளா? தன்னையே இரு பாகமாகப் பிளந்து உள்நோக்கும் வகையில் இந்த இரு விசைகளா? கடவுளை விரும்பாதவன் ஆன்மீகத்துக்கு மாறுகையில் வந்த நம்பிக்கைச் சிதைவின் விளைவுகளா? காரண அறிவும், பொருள்விளங்காப் பேருணர்வும் மோதிக்கொள்ளும் சிதறலா? வறுமையை எதிர்கொள்ள முடியாத பேதைமையில் ஏற்பட்ட சறுக்கலா? மருத்துவ உதவிகளை நாடாமல் அத்துமீறிப்போன அவஸ்தையா என்றால் – அவன்  சுயபிரக்ஞையில் எப்போதும இருக்கிறான். அவனது நடவடிக்கைகளில் எந்த மாற்றமும் பிறருக்கு தெரிவதில்லை.
தீய எண்ணச் சக்திகளிடம் சிக்கும்  மாலி, கடவுள் நம்பிக்கையுடன் விடாப்பிடியாக தெய்வபலத்தை நம்பும் மாலி – இவர்களுக்கிடையில் அப்பாவி எழுத்தாளன் மாலி மட்டுமல்ல – அவன் குடும்பம் – குழந்தைகள் எல்லாம் வறுமையிலும் நோயிலும் பசியிலும் வாடித்தவிப்பது மனதை நோகடிக்கிறது.
குருநாதர் வந்து காப்பாற்ற இனி பிரச்சினை முடிந்ததா என்றால் நாவல் அப்படி முடியவில்லை. அது எதையும் சொல்லாமல் முடிகிறது.  இப்போதைக்கு பிரச்சினை முடிந்திருக்கிறது. ஆனால் மறுபடி பிரச்சினைகள் சோதனைகள் வந்து அலைக்கழிக்கலாம். மறுபடி கடவுளருள் வந்து தீர்த்துவைக்கலாம். ஆனால் பிரச்சினைகள் நிற்கப்போவதில்லை. மறுபடி குரல்கள் பேச ஆரம்பிக்கலாம் என்று நினைக்கையில் – மாலியின் அவதியும்– அவன் குழந்தைகளின் நிராதரவான நிலையும் நினைக்க மிகப் பரிதாபமாக இருக்கிறது. தீயவற்றுக்கும் சரி நல்லவற்றுக்கும சரி முடிவு இல்லை. அவற்றிக்கான போராட்டம நடந்துகொண்டேதான் இருக்கும். பிரபஞ்சம் உள்ளவரை.
இதை நாவலை என்னவென்று கொள்வது? லாஜிக் எதிலும் அடங்கமறுக்கிறதே என்றால் – இதைப் பற்றி எம்.வி.வி ஒரு நேர்காணலில் சொன்னதைதான் சொல்ல வேண்டும்.
இந்த நாவல் என் வாழ்க்கையின் ஒரு சிறிய பகுதி. என் வாழ்க்கை உங்கள் வாழ்க்கை போன்றது அல்ல என்பதே இதன் தனித்தன்மை. பகுத்தறிவையும் அறிவியலையும் நம்புகிறவர்களுக்கு அது திகைப்புத் தருகிறது. அதற்கு நான் என்ன செய்ய?”

No comments:

Post a Comment

இயற்பியலின் தாவோ - பிரிட்ஜாஃப் காப்ரா

இயற்பியலின் தாவோ பிரிஜாப் காப்ரா Fritjof Capra மொ பெ போன். சின்னத்தம்பி முருகேசன் சந்தியா பதிப்பகம் #இயற்பியலின்_தாவோ படிக்கத்  துவங்கி இர...