கவிதைகள்
சமீபமாக கவிதைகளை
நெல் கொத்தி பறவை போல ஏதோ எங்கோ ஒன்றாக படித்ததில் நன்றாக இருந்த சிலவற்றை
பகிர்கிறேன். படித்த எனது மன நிலை கூட அதற்கு ஒரு
காரணமாக இருக்கலாம். ஒரு கவிதை எப்படி நம்மை தொடுகிறது என்ற அம்சம்தான் கவிதையின் தொடர்பு அலைவரிசை.
ஐந்து கவிதைகள்.
சிறியவைதான்.
அகச்சேரன்
மனுஷி
கயல்
பா ராஜா
பூவிதழ் உமேஷ் – எழுதியவை
=================================================================================================
ரத்த உறவு – அகச்சேரன் கவிதை
நேற்றைக்கு நாம் சேர்ந்துபோன
பாதையில் முட்களை விளைக்கிறது
காலம்
பொழுதுகளை
சிறுபிராயத்தைவிட மூர்க்கமாக
சண்டையிட்டு நாம் வீணாக்கலாம்
பார்
நாம் தனித்தனியே அழுகின்ற அளவிற்கு
வளர்ந்துவிட்டோம் (தங்கைக்கு )
இந்த கவிதையில் தங்கைக்கு என்ற குறிப்பு மற்றும்
ரத்த உறவு எனும் தலைப்பும் கவிதையின் மையத்தை தெளிவாகவே சொல்லி விடுகின்றன. உத்தேசித்து
உள்செல்ல எதுவும் இல்லை. ஆனால் நல்ல கவிதைகளில் சாதாரண வரிகள் எங்கேயோ கவிதையாகி விடுகின்றன என்பதை கண்டு கொள்கிறது மனம். .
சேர்ந்து போவதற்கான பாதையை தந்ததும் காலம்தான்.
இன்று முட்களை விளைவித்திருப்பதும் காலம்தான். இங்கே இரண்டு விஷயங்களை நாம் கவனிக்கலாம்.
முட்கள் ஏன் முளைத்தன ? என்பதும் காலம் என்பது என்னவாக அவர்களிடம் உள்ளது?
என்பதும். நடக்கப்படாத பாதைகளில்தான் முட்கள் முளைக்கும். “மனிதர்கள் நடப்பதற்கான
பாதைகள் மனிதர்கள் நடந்து நடந்தே உருவானது” என்று ஒரு யுவன் கவிதை உண்டு. காலத்தின்
முன் சேர்ந்து நடந்த இருவர் இப்போது சேர்ந்து நடக்காததால் முட்கள் உண்டாகி
உள்ளன. இதை படித்து முடிக்கும் கணத்தில்
பாதை என்பதும் முட்கள் என்பதும் பூமிப்பரப்பில் உள்ள விஷயம் அல்ல. அக உலக விஷயம்
என்பது தெளிகிறது. காலத்தை காரணமாக சொன்னாலும் காலத்தின் முன்பு பிரிந்தும்
திரிந்தும் நின்றுள்ள அந்த இருவரேதான் காரணம். காலம் எனும் கண்ணாடியில் நாம் நமது
பிம்பங்களை பார்த்துக்கொண்டு கண்ணாடியின் மேல் காரணம் சொல்லும் மனித மனநிலை இது. அதையே
இந்த கவிதை அழகாக சொல்கிறது.
அடுத்து ‘பொழுதுகளை வீணாக்கலாம்’ என்று வரி விழுகிறது.
நடப்பில், இன்றைய மணித்துணிகளை பற்றிய பிரக்ஞை வரும்போது பொழுது என்று
உணரப்படுகிறது. சிந்தும் இந்த மழைத்துளியை வீணடிக்காதே என்றும் பதைப்புதான் அது.
இறுதி வரி “தனித்தனியே அழுகின்ற அளவுக்கு நாம்
வளர்ந்து விட்டோம்” எனும்போது வளர்ச்சி என்பது வெறும் நாட்களின் நகர்வாக, வயதாக குறுகி
நிற்கிறது. சிறுபிராயத்தின் விசாலங்கள் மறைந்தொழிந்து போயின. வளர்ந்தவர்களின்
அழுகை என்பது ஆற்றாமையாலும், தவறவிட்ட தருணங்களாலும், கை
நழுவிப்போனவற்றாலும், வளைந்துகொள்ள
முடியாமல் முதிர்ந்த மூங்கிலின் இறுக்கமாகவும், பரிதவிப்பாகவும் மட்டுமே இருக்க
முடிகிறது. காம்பில் ஒன்றாக துளிர்த்து எதிரெதிர் திசைகளில் நீட்சிகொள்ளும்
இலைகளின் நிலை போல ஆகிவிடுகிறது. இதில் சரி தவறு என்றெல்லாம் பிரித்து பார்க்க ஒரு
காரணத்தை பற்றியும் கவிதை உபதேசிப்பதில்லை . திரும்பி பார்த்து அழுகிறோம் என்பது
மட்டுமே அங்கிருக்கிறது. அது சொல்லும் ஒன்றின் பின்னால் சொல்லாத கண்ணீர் துளிகள்
பலவும் இருக்கலாம்.
வாழ்த்துக்கள்.
==================================================================================================
மனுஷி எழுதிய கவிதை
அந்தப் பாறைகளின் மேல்
இருகைகளை அகல விரித்து
அண்ணாந்து பார்த்தேன்.
ஆர்ப்பரிக்கும் கடலின் நடுவில்
இரு சிறகுகளை விரித்துப்
பறந்து கொண்டிருந்தது
அப்பறவை.
இருகைகளை அகல விரித்து
அண்ணாந்து பார்த்தேன்.
ஆர்ப்பரிக்கும் கடலின் நடுவில்
இரு சிறகுகளை விரித்துப்
பறந்து கொண்டிருந்தது
அப்பறவை.
அதன் பெயர் எனக்கு முக்கியமில்லை.
அந்தப் பறவைக்கும் என் பெயர் முக்கியமில்லை.
நீலமும் பச்சையும் ஒன்றரக் கலந்து
சொல்லில் அடங்கா ஓர் வண்ணம் கொண்டு
ஒய்யாரமாய் அசைந்து
கரை சேர்ந்து திரும்பும் அலைகளுக்கும்
எங்கள் பெயர் முக்கியமில்லை.
அந்தப் பறவைக்கும் என் பெயர் முக்கியமில்லை.
நீலமும் பச்சையும் ஒன்றரக் கலந்து
சொல்லில் அடங்கா ஓர் வண்ணம் கொண்டு
ஒய்யாரமாய் அசைந்து
கரை சேர்ந்து திரும்பும் அலைகளுக்கும்
எங்கள் பெயர் முக்கியமில்லை.
வானத்தின் அடியில்
கடலின் அருகில்
பறவையின் நிழலில்
அலைகளின் இசையில்
அந்திவானத்தின் ஓர் புள்ளியில்
பெயர் ஏதுமற்று
யாரோவாகி
நெடுநேரம் அமர்ந்திருந்தேன்.
கடலின் அருகில்
பறவையின் நிழலில்
அலைகளின் இசையில்
அந்திவானத்தின் ஓர் புள்ளியில்
பெயர் ஏதுமற்று
யாரோவாகி
நெடுநேரம் அமர்ந்திருந்தேன்.
இந்த கவிதையில்
மூன்று பகுதிகள் இயங்குகின்றன. நான், இயற்கை, பறவை. இதில் பிறரைப்பற்றி எதையும் கருதாமல் தன்னைப்பற்றியும் எந்த சுய நியதிகளோ இல்லாமல் அந்த
சமயத்துக்கு அதுவாக இருப்பது இயற்கையும் பறவையும்.
இந்த மூன்று
பகுதிகளின் பரஸ்பர தொடர்பில் மிக சுவாரசியமாக ஒரு அசைவின்மையும் அசைவும்
வைக்கப்படுகிறது.
அசையாத பாறை.
அசையும் கடல்.
நிற்கும் நான்.
பறக்கும் பறவை.
அசைவற்ற வானம்.
அதன் கீழ் கடல்.
அதனால் இந்த கவிதை காட்சி பூர்வமாக ஒரு
சித்திரத்தையும், அதிலிருந்து உணர்வு பூர்வமாக ஒரு மன காட்சியையும், அதிலிருந்து ஒரு அந்தரங்க அர்த்தத்தையும் தருகிறது. 'நான்' என்று எழுதுபவர் அந்த கணத்தை எழுத்தில்
பதிக்கும் ஒரு நோக்கம் தவிர பிரகடனப்படுத்தும் குரல்
அதில் எழவில்லை என்பதே முக்கிய அம்சம். இதனால் அவர் தனக்கே சொல்லிக்கொள்ளும் ஒரு குரலை வாசகன் தனது குரலில் சொல்லிப் பார்க்கையில் கவிதை இடம் மாறுகிறது. இந்த இடப்பெயர்ச்சி வாசகனின் மன அலைவரிசையை அல்லது ரசனையை சார்ந்து மேல்
தளத்துக்கு உயருகிறது.
பறவை பெயர் எனக்கு
முக்கியமில்லை. எனது பெயர் பறவைக்கு முக்கியமில்லை. அலைகளுக்கு இவர்கள் பெயர் முக்கியமில்லை. இதில் இரண்டு அலைகளுக்கும் பறவைக்கும்
கற்பனைகள் இல்லை. தம்மை இயற்கையின் அங்கமாக இருப்பதை தவிர வேறு எதுவுமே அங்கு இல்லை. அப்படி அங்கமாக இருக்கிறோம் எனும் பிரக்ஞை கூட அவற்றுக்கு
இல்லை.ஆனால் மனிதனுக்கு உண்டு. அப்படி இருக்கையில் அவற்றைப் போலவே மனித மனமும்
இயல்பாக இருக்க முனைகையில் தன்னை இகக்கட்டுகளில் இருந்து விலகி நிற்க முயல்கிறது.
இறுதி வரிகளில் வானத்தின் அடியில், கடலுக்கு அருகில், பறவையின் நிழலில், அலைகளின் இசையில், அந்தி வானத்தில் ஒரு புள்ளியில் பெயர்
ஏதுமற்று யாரோவாகி நெடுநேரம் அமர்ந்திருந்தேன். முன்பு
சொன்ன இயற்கையில் இருவித இருப்புகளுக்கு
இடையே - அசைவு மற்றும் அசைவின்மைகளுக்கு இடையே - ஒரு மனம் அவை அனைத்தின் பிரசன்னங்களுக்கு நடுவே தனிப்புள்ளியாக 'யாரோவாகி' அமர்ந்திருக்கிறார்.
இந்த கூடுபாய்தலே கவிதை. தான் எப்படியானவன்/ள் என்பதை ஒருவர் உணரும்போதே தான் பிரிதோருவராக மாறுவதை அவதானிக்க
முடியும். இந்த சுய அறிதலை அதன் விளிம்பில் நின்று கொஞ்சம்
மேலே பறக்கும் முயற்சிதான் இந்த கவிதை.
ஒரு மனிதன் எத்தனை
முயன்றாலும் அவன் பறவையாகி, கடலாகி மீண்டும் இந்த பூமியில் கால் பதிக்கவே விதிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் சொற்ப கணமேனும் அந்த
யாரோவாதல் என்பது முக முக்கியம்.
அடிமனத்துக்கு முக்கியம். அது ஒரு பேரனுபவம். யோகங்கள் சொல்ல வருபவை இதையேதான். நீ இந்த பிரபஞ்சத்தின் சிறு துளி. ஆனால் அந்த துளியே ஒரு பிரபஞ்சம் எனும் ரூமியின் வாக்கு போல. இத்தகு நிலைகள்
மதம் அல்லது பக்தி சார்ந்த ஒன்றாக குறுகி புரிந்து
கொள்ளப்படும் சாத்தியங்களே அதிகம். ஆனால், அதிஷ்டவசமாக ஒரு கவிதை அந்த நிறங்களை
உடைத்து இயல்பான கவிதையாக அமர்கிறது. கவிதையின் இந்த வரிகள் நீண்ட தூரம் பறந்து பயணம் செய்து ஒரு சிறு
கிளையில் அமர்ந்து தனது சிறகுகளை மடித்து ஒடுங்கிக்கொள்ளும் ஒரு கணம் போல அவ்வளவு கச்சிதமானது.
அலைகளுக்கு இணையான
ஓய்ச்சலற்ற ஒன்று உண்டென்றால் அது மனம்தான். நடுக்கடலும்
ஆழ்கடலும் அலைகலற்றவை அமைதியானவை. நீ கேட்பது அலைகளின் ஒலியைத்தான். கடல் ஒலியற்றது என்ற ஜெயமோகனின்
அழகான வரி ஒன்று உண்டு. அப்படியான ஒரு ஒலியற்ற கடலை தனக்குள் உணர முயலும் சிறு
புள்ளிதான் இந்த கவிதை.
வாழ்த்துக்கள்.
==================================================================================================
கட்டங்கள் - பா ராஜா கவிதை
எப்போது
செஸ் விளையாட சொல்லித்தருவாய்
சிணுங்குகிறாள் சிறுமி
வாசலில் நிற்கும்
காலொடிந்த குதிரையை
தூக்கிக்கொண்டு ஓடுகிறான்
அப்பாவிற்கு
அனைத்தும் தெரியும் என்கின்ற
ஆட்டத்தின் முன்
நிற்பதென்பது இயலாத காரியம்
இந்த கவிதையில் ஒரு அப்பாவின் சுகமான பொறுப்பு
கனத்தை அழகிய கவிதை செய்திருக்கிறார்.
சிறுமி கேட்பது என்னவோ செஸ் விளையாட்டு. ஆனால் அப்பாவாக இவன் என்னவோ கால் ஒடிந்த
குதிரை பொம்மையை தூக்கிக்கொண்டு ஓடுகிறான். அவனுக்கு செஸ் தெரியாது என்பது
சொல்லப்படாத குறிப்பு. குழந்தைகளின் விழைவுகளுக்கும் அவற்றை நிறைவேற்றுதலுக்கும்
உள்ள இடைவெளியில் எல்லா அப்பாக்களுமே ஏதோ ஒரு நொண்டிக் குதிரைகளை வைத்து பவனி வருகிறார்கள்.
பிள்ளைகளை பவனி வரவைக்கிறார்கள். ஆசைப்படும் குழந்தைக்கு ஆசை என்பதை தவிர வேறு
நோக்கங்கள் இல்லை. அப்பாவுக்கு ஆசையை எதிர்கொள்ளும் சவால் தவிர வேறு நோக்கங்கள்
இல்லை.
இங்கே அப்பா செஸ் விளையாட்டை தவிர்ப்பதற்கான சமாதான
முயற்சிகளை எதுவும் செய்வதில்லை. அப்பாவுக்கு புரிகிறது குழந்தையின் அந்த
வேண்டுதலில் இருப்பது செஸ் என்ற விளையாட்டு அல்ல. விளையாட்டு மனம்தான். மனத்தை
விளையாட வைக்க அவனுக்கு ஒரு குதிரை – அதுவும் ஒரு கால் ஒடிந்த குதிரை போதுமானதாக
இருக்கிறது. ஒரு அப்பாவாக அவன் சிறுமியின் வார்த்தைகளில் இருந்து சொல்லப்படாத ஒரு
துளியை உணர்ந்து கொள்கிறான். அவள் கேட்பதற்கும் இவன் செய்வதற்கும் சம்மந்தமே
இல்லை. ஆனால் அங்கே நிச்சயம் ஒரு விளையாட்டு நிறைவேறிவிடும் எல்லா சாத்தியமும்
இருக்கிறது. ஏனென்றால் அப்பாவும் ஒரு குழந்தையாக
மாறும் சிறிய தருணம் அது. சிறுமிக்கு இன்று செஸ். நாளை வேறொன்றாக இருக்கலாம்.
மறுநாள் வேறொன்றாக இருக்கலாம். குழந்தைகள் வளர வளர பெற்றோர்களுக்கு அவர்கள் வளரும்
குழந்தைகள்தான். ஆனால் அப்பா, குழந்தை ஏதாவது ஒன்றை கேட்கும்போது அவளை
அனுசரிப்பதற்கு எதையோ ஒன்றை தூக்கிக்கொண்டு ஓடுவதற்கு சித்தமாகவே இருக்கிறான்.
முழு ஈடுபாட்டுடன் அதை செய்கிறான்.
அப்பாவுக்கு எல்லாம் தெரியும் எனும் குழந்தையின்
மனத்திற்கு ஈடு கொடுப்பது சாதாரணமான காரியம் இல்லை. தனக்கு தெரிந்ததை வைத்து தான்
அறிந்திருப்பதாக கருதும் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய முடியாவிட்டாலும், அதை
நோக்கிய தனது அதிக பட்ச காலடியை எடுத்து வைப்பவன்தான் அப்பா. அது செய்து முடிக்கும்
இலக்கை நோக்கியது அல்ல. அன்பு மகளை நோக்கியது
மட்டுமே – காந்தத்தின் முள் எப்போதும் வடக்கை நோக்கி இருப்பது போல.
வாழ்த்துக்கள்.
=============================================================================================
கயல் எழுதிய ஒரு கவிதை
இருள் ருசியின் பரிபூரணத்தில்
செம்மாந்து படுத்து கிடக்கின்ற மலையை
தொந்தரவு செய்த படி இருக்கிறது நிலா
எரிச்சலுடன் அண்ணாந்து பார்க்கின்ற பாறை
தலையில் அகலோன்று ஏற்றுகிறாள்
தலைச்சன் பிள்ளையை
மருத்துவமனை அறுவை மேசையில்
விட்டு வந்த தாய்க்கிழவி
சற்றே புரண்டு காற்றுக்கு முதுகுகாட்டி
சுடரழியாது காக்கும் மலைக்கரங்களுக்கு
கருப்பையின் நிறம்
இந்த கவிதையை வரிகளை பிரித்து தொடர்ந்து பொருள் அறியும் முன்பாக
ஏதோ ஒரு வாசிப்பு திருப்தி வந்து அமர்ந்து கொள்கிறது. இருளில் மலை படுத்திருக்கும்
விஷயம் நிலவின் ஒளியால் மட்டுமே தெரியக்கூடும். இருளை ருசிக்கும் மலையின் மேல்,
வெளிச்சம் பொழிந்து தொந்தரவு செய்கிறது நிலவு. இதனிடையே அறுவை சிகிச்சை மேசையில்
பிள்ளையை விட்டுவிட்டு பிரார்த்தனையுடன் அகல் விளக்கேற்றும் முதிய தாய்
கவிதைக்குள் பிரவேசிக்கிறாள். அவளது நம்பிக்கை எல்லாம் அகலின் ஒளி. அவளது
நம்பிக்கை மலை.
அகலின் சுடரை அணையாமல் காப்பாற்றும் பொறுப்பு இப்போது மலைக்கு
வந்துவிடுகிறது. முதிய தாயின் வேண்டுதலுக்கு நெகிழ்ந்து காற்று வீசி அடிக்காமல்
இருப்பதாக எழுதி இருந்தால் இது கவிதையாகாமல் போயிருக்கும். ஆனால் காற்றுக்கு
முதுகு காட்டி மலை புரண்டு படுப்பதாக வரும் வரி கவிதையை சட்டென்று மேலே கொண்டு
போகிறது. அசையாத மலை புரண்டு படுக்கிறது என்பதை படிக்க மனம் ஏற்கிறது. அறிவை
தூக்கி தூர வைக்கிறது. இப்படி ஒரு மன அவசத்தை நமக்குள் ஏற்டுத்தும் இந்த கவிதை, மலைக்கு கருப்பையின் நிறம் என்று அடுத்த துள்ளலை
வைக்கிறது. குழந்தையின் வாழ்வுக்கு போராடும் முதிய அன்னைக்கு புரிந்துணர்வோடு
புரண்டு படுக்கும் மலை மற்றொரு ஆதி அன்னை.
மனிதனின் அன்றாட கவலை வலியுறும் இடத்தில் அதை இயற்கையின்
பிரம்மாண்டமான மடியில் வைத்து அதையும் கனிந்து இறங்கிவர – புரண்டு படுக்க - வைக்கின்றது
இந்த கவிதை.
வாழ்த்துக்கள்.
==================================================================================================
மகிழ்ச்சியான காகம் – பூவிதழ் உமேஷ்
‘ந’ என்று எழுதி
காகம் வரைந்த குழந்தை
காகத்திற்கு
கொஞ்சம் தானியங்களை வைக்கிறது
கீழே
தன் பெயரில் உள்ள புள்ளிகளில்
ஒரு மழலையின் ஸ்படிக மனத்தை மிகச்சிறிய வரிகளில் திறந்து
விட்டிருக்கும் அழகான கவிதை. கவிதையில் ஒரு காட்சி வடிவம் உருவாகிறது. இது - மொழிபெயர்ப்பு
செய்ய முடியாத தமிழுக்கே உரித்தான கவிதை. குழந்தைகளுக்கு காட்சி வடிவமும்
விளையாட்டுமே முதல் திறப்புகள். கதைகளாலும் காட்சிகளாலும் நிரம்பவேண்டிய குழந்தைகள்
உலகம் கைபேசிகளில் சீரழிகிறது.
என் அனுபவத்தில் - சில ஆண்டுகளுக்கு முன் ஒரு விளையாட்டு மழலைச்சிறுவன்
ஆங்கில எழுத்துகளை எழுதி பழக அறிமுகம் ஆக
சாக்பீஸ் கொடுத்து தரையில் எழுத வைத்தபோது (கவனித்து பாருங்கள், தானே ஒரு
ஆசிரியரைப்போல கம்பீரம் குழந்தைகளுக்கு வரும் சாக்பீஸில் எழுதும்போது) – பெரிதாக H
என்று எழுதியவன் அதை மேலும் பெரிய H ஆக மாற்றி பிறகு H மேல் H ஆக எழுதிக்கொண்டே
போனான். இது என்னடா என்றால் அதன் மேல்
அப்படியே குனிந்து தனது பிஞ்சு கை கால்களால் தவழ்ந்து கொண்டே போனான். கேட்டால் ஏணி
என்றான்.
குழந்தைகள் மனம் வியப்பூட்டும் வகையில் சுதந்திரமானதும் கலாபூர்வமானதும்
ஆகும்.
இந்த ‘ந’ கவிதையை படிக்கும்போது எழுதியவர் தான் குழந்தையாக
மாறுகிறார். பிறகு படிப்பவரை குழந்தையாக மாற்றுகிறது கவிதை. எழுத்துருக்களில்
படங்கள் வரைந்து விளையாட்டாக கற்பிப்பது மரபான முறை. நன்னன் (நெட்ப்ளிக்ஸ் தலைமுறைக்கு தெரியாது) சொல்வார்
தமிழ் எழுத்துக்களை குழந்தைகளுக்கு அ ஆ விலிருந்து சொல்லி தராதீர்கள். ட ப ம என்று ஆரம்பியுங்கள் என்பார். குழந்தை
கற்றலில் இருந்து விளையாட்டுக்கு விளையாட்டில் இருந்து கற்றலுக்கு தாவும் அழகே
தனி. இந்த கவிதையில் ந வில் காகம் எழுவது
ஒரு பகுதி. அதற்கு தானியம் வரைவது என்பதை தனது பெயரின் புள்ளிகளில் இருந்து
தெளிப்பது எனும் வரியில் இது குழந்தை உலகை அறிந்த ஒருவரின் அழகான கவிதையாகிறது.
அருமையான கற்பனை. (பெரியசாமியின் குட்டி
மீன்கள் கவிதைகள் சிலவற்றை நினைவூட்டுகிறது இந்த மழலையுலக கவிதை. அவரது பெயரின் தலைப்பெழுத்து கூட ந என்பது
சுவாரசியமான ஒன்று )
வாழ்த்துக்கள் !
No comments:
Post a Comment