ஒன்பது குன்று
பாவண்ணன்
சிறுவாணி வாசகர் மையம் -
8778924880
பாவண்ணன் தமிழின் மிக முக்கியமான எழுத்தாளர்
என்பதில் வாசகனுக்கு எப்போதுமே சந்தேகம் இருப்பதில்லை. வாழ்க்கைக்கும்
எழுத்துக்குமான உறவு, ஒன்றை இன்னொன்று மேம்படுத்துவதும், ஆதாரப்பட்டு நிற்பதும்
வெளிச்சத்தில் வைத்து பார்ப்பதும்தான் என்பதை நம்பும் மனிதர். தவிரவும் அவரது
வாழ்க்கைக்கும் எழுத்துக்கும் இடைவெளியை காண்பது இயலாது. அதே சமயம் அது
கோஷங்களாலும், உயர்வு நவிற்சிகளாலும், போதனைகளாலும் திணற அடிக்காமல்
எழுதக்கூடியவர். பாசாங்கு இல்லாமல் எழுதக்
கூடியவர். ஆரவாரம் இல்லாமல் தொடர்ந்து இயங்கக் கூடியவர்.
என்னுடைய ஆசிரியரும், எழுத்தாளருமான சபாநாயகம் பல வருடங்கள் முன்பு இவருடைய துங்கபத்திரை கட்டுரை தொகுப்பு பற்றி விரிவாக என்னிடம் பேசிக்கொண்டிருந்தபோது பாவண்ணனின் பங்களிப்பு குறித்து சிலாகித்தார். அதுபற்றி அவர் விமர்சன கட்டுரை எழுதி இருந்தார் என்றே நினைக்கிறேன்.
பாவண்ணனின் புதிய தொகுப்பு ‘ஒன்பது குன்று’ – சிறுவாணி வெளியீடு. இது அனுபவக் கதைகளின் தொகுப்பு.இதில் கர்நாடகத்தில் பணியாற்றிய பகுதிகளின் பின்புலத்தில் உள்ள கதைகள் என்பதால் கர்நாடகத்தின் மலைப்பரப்பை, நிலப்பரப்பை நமக்கு தமிழ் மனத்தோடு அறிமுகப் படுத்தும் சில கதைகள். எல்லாமே நிஜவாழ்வின் அனுபவ வாசனைகளைக் கொண்டவை. ஆகவே வாழ்வின் அனுபவங்களை – அது இனிதோ கசப்போ – வாழ்வின் கூறாக பார்க்கும் மனநிலையை நமக்கு நினைவூட்டுகின்றன இந்த கதைகள். ஒரு வெறும் செய்தி, சம்பவம் எப்படி கலையாகிறது என்று பார்ப்பதற்கு ஒருவருக்கு தெரிய ஆரம்பிக்கும்போது வாழ்க்கையின் சாரம் பிடிபடுகிறது. அதனாலேயே பாவண்ணன் முக்கியமானவராகிறார்.
உதாரணமாக, ஒரு மலைப்பகுதிக்கு சர்வே செய்வதற்காக உதவியாளர் ஒருவருடன் செல்கிறார். அலுவலகங்களில் – குறிப்பாக அரசாங்க அலுவலகங்களில் இலக்கியம் அல்லது வாசிப்பு குறித்த விஷயங்கள் பேசப்படாது. ஒருவருடைய எந்த மேலதிக திறமையும் அங்கீகாரம் பெறாது. அடையாளம் கூட பெறாது. (கவிஞர் பிரும்மராஜனை பார்க்கவேண்டும் என்று கல்லூரி ஆசிரியர்கள் பலரிடம் கேட்டேன். ஒருவருக்கு கூட தெரியவில்லை. நிலைமை அதுதான்.) அதுபோல் உடன் வரும் உதவியாளரோடு இவர் செல்லும்போது வாகனத்தை நெருங்கும்போது அவர் சட்டென இவரை குறுக்கே கைநீட்டி நிறுத்தி சப்தம் போடாம இருக்குமார் சொல்லி வாகனத்துக்கும் மேலிருக்கும் பறவையை காட்டுகிறார். அது மீன்கொத்தி என்று கேட்கும்போது ஆமாம் என்று சொல்கிறார். பறவைகள் பற்றிய ரசனை அவருக்கு தெரிந்திருக்கிறது. இவர் அவரிடம் தொடர்ந்து பேசும்போது பறவைகள் குறித்த புத்தகத்தை இருவரும் படித்திருப்பதை பரஸ்பரம் உணர்கிறார்கள். காட்டை பற்றிய ரசனையாக அவர்கள் நட்பு விரிகிறது. ஒரு மீன்கொத்தி இது வரை பழகிய உதவியாளர் ஒருவரின் வேறொரு கதவை திறந்து விடுகிறது.(ஒன்பது குன்று) நமது நடப்பு வாழ்க்கையில் கூட இப்படித்தானே இருக்கிறது !
பூங்காவில் நடை பயிற்சி முடித்துவிட்டு உட்கார்ந்திருக்கும்போது பூங்காவின் பராமரிப்பு, நேர்த்தியான தரைப் பலகைகள் போன்றவற்றை கவனிக்கிறார். ஒரு சிறு குழந்தை கீழே விழுந்த நாவல் பழத்தை எடுத்து வாயில் போட்டுக்கொள்கிறது. அதன் அம்மா வாயிலிருந்து பிடுங்கி வெளியே போட்டுவிட்டு சுத்தமின்மை பற்றி சொல்லி திட்டுகிறார். சிறு குழந்தை ஏக்கத்துடன் செல்கிறது. இதை பார்த்த இவர் ரொம்பதான் சுத்தம் பாக்கிறாங்க ..குழந்தை பாவம் என்கிறார். பக்கத்திலிருந்த ஒரு நடுவயது பெண்மணி ஆமாம் என்று தன்னிச்சையாக ஆமோதிக்கிறார். நேரில் போய் இதில் என்ன சுத்தம் கேட்டுவிட்டது. ஊதி சாப்பிடவேண்டிய பழம்தானே அது என்று சொல்ல நினைத்து பிறகு சும்மா இருந்துவிட்டதை சொல்கிறார். ஒரு எதேச்சையான இந்த பேச்சில் அந்த பெண்மணியின் அப்பாதான் இந்த பூங்காவை பரமாரித்து உண்டாக்கியவர் என்றும் எங்கிருக்கும் சில மரங்கள் தான் நட்டவை தன்சகோதரர்கள் நட்டவை என்று சொல்கிறார். அவர் தனது வாழ்க்கையில் தனிமரமாகி விட்டதையும், இந்த மரங்கள் மீது நினைவோட்டமாக தன்னுடைய அப்பாவின் குரல் தினமும் கேட்பதாகவும் சொல்கிறார். கடைசி காலத்தில் தன்னை ஒரு முறை பெயர் சொல்லி அழைப்பதற்குள் நூறு முறை இருமும் இருமல் சத்தமும் சேர்ந்து கேட்கிறது என்று முடியும் இந்த கதையில் சக மனிதரோடு பேசும் ஒரு வார்த்தை எப்படி நேயமிக்க ஒருவராக மாறுகிறது என்பதை பார்க்க முடிகிறது. (அப்பாவின் குரல் )
தொகுப்பின் மிகச்சிறந்த கதைகள் – மலர்ந்த முகம், திருநீறு பூசிய முகம் என்று சொல்லலாம்.இரண்டு முக்கியமான அம்சங்களை மட்டும் சொல்லி பாவண்ணனின் இதயம் எங்கே இருக்கிறது என்பதை கோடிடுகிறேன்.
BSNL தொலைபேசி துறையில் கேபிள்களை பூமியில் பதிப்பது (இன்று அந்த துறையையே புதைத்துக் கொண்டிருக்கிறார்கள்) என்பது ராட்சச வேலை. பல நூறு கிலோமீட்டர்கள் தூரம் அமைக்கப்படவேண்டும். அதற்கு இரண்டு லட்சம் செங்கல்கள் வேண்டும். பொதுவாக ஊரில் முக்கியமான ஆளை கூப்பிட்டால் அவர் ஏற்பாடு செய்வார். உற்பத்தியாளருக்கு 50% தான் போய்சேரும். அரசு தரும் பணம் நேரடியாக அவர்களுக்கு போனால் கஷ்டப்படும் அவர்கள் எவ்வளவு சந்தோஷம் அடைவார்கள் என்று உயர் அதகாரியிடம் கேட்கிறார். நாம் என்ன சமூக சேவையா செய்யப்போறோம் ? இந்த இடத்தில் வேலை முடிஞ்சா கிளம்பி வேற இடம் போகபோறோம். செங்கல் வியாபாரியை யார் தேடி பிடிக்கறது ? சப்ளை ஒழுங்கா இல்லாம போனா என்ன செய்வது. மேலும் அரசு வேலை என்பதால் பணம் பின்னால்தான் வரும் .இதெல்லாம் யார் ஒத்துப்பா ? என்று சொல்ல்விட்டு – வேலை நடக்கணும் பிறகு உங்களிஷ்டம் என்று சொல்கிறார். இவர் உற்சாகமாக உதவிக்கு ஒரு ஆளை படித்துக்கொண்டு சுற்றி அலைந்து, பலர் மறுக்க, ஒரு பெண்ணை ‘ரவுடி பொம்பளை ஒருத்தி இருக்கா’ என்று சொல்கின்றனர். ஊரு அவளை அப்படித்தான் அழைக்கிறது. இவர் சூளைக்கு செல்லும்போது சற்று கறாராக இருக்கும் அவரிடம் இவர் விவரிக்கிறார். அவருக்கு வங்கி கணக்கு கூட இல்லை. இவர் எல்லாம் ஏற்பாடு செய்கிறார். செங்கல் சப்ளை ஆகிறது. இதற்கிடையே அந்த பெண்ணின் கணவன் குடிகாரன். பொறுப்பற்றவன். அவன் சரியாக கூடி வாழ்வது கூட இல்லை. ஆகவே இந்த பெண்தான் சூளையில் கூலி வேலை செய்த பெண், மெதுவாக சுயமாக தொழில் ஆரம்பிக்கிறார். ஒரு பெண் சுயமாக சம்பாதிப்பதை பொறுத்துக் கொள்ளாத பலரும் அவளை ரவுடி என்று முத்திரை குத்துகிறார்கள். எங்க ஊருக்கு கேபிள் வேலை செய்வதாக இதற்கு ஒத்துக் கொள்கிறேன் என்கிறாள் அவள். அது சரி கேபிள் புதைக்க செங்கல் எதற்கு ? என்று கேட்கிறாள்? செங்கல்லையும் சேர்த்து அடுக்கி புதைக்கும்போதுதான் அது சேதம் ஆகாமல் இருக்கும் என்று சொல்கிறார் “பொம்பளைக்கி ஆம்பளை துணையா போறானே அந்த மாதிரின்னு சொல்லுங்க” என்று தான் புரிந்து கொண்ட விதத்தில் சொல்கிறாள். “சேதாரமாயிட்ட அப்பிடியே விட்டுட்டு போயிடுவிங்களா?” என்று வறண்ட புன்னகையுடன் கேட்கிறாள். “அதெப்படி உட முடியும்? ரிப்பேர் பண்ணி சேத்து வைச்சிருவோமில்லே” என்று சொல்கிறார். எல்லோரும் சிரிக்கிறார்கள். இதில் அந்த பெண்ணின் மன அமைப்பை எளிமையாக சொல்லிவிட்டு போகிறார் பாவண்ணன. இறுதியாக அவள் ஒரு கவரை எடுத்துக்கொண்டு வருகிறாள். ஏதோ பிரச்சனை என்று இவர் நினைக்கும்போது அது காசோலை வந்த உறை. அது உங்களுக்கு வந்த கடிதம்தான். உங்களுக்கு பணம் வந்திருக்கு என்று சொல்கிறார். அது . மொதமொதல்ல வந்திருக்கு. நீங்களே பிரிங்க என்று சொல்லி தருகிறாள். அதில் இருக்கும் பணம் அவளுக்கு மகிழ்ச்சி தருகிறது. இடை தரகர் மூலம் செய்திருந்தால் இந்த அளவு பண அவளுக்கு வந்திருக்காது. ஆனால் அந்த வரியை இவர் எழுதுவதில்லை. அவள் கண்ணில் ஒரு மின்னல் தோன்றி மறைந்தது. கள்ளிச்செடியில் பூவில் எழுந்து மறைந்த மின்னலை நினைவுபடுத்தியது என்று முடிக்கிறார். தரகர் இல்லாமல் நேரடி கொள்முதல் செய்து வேலையை முடிக்கும் கதையை அவர் சொல்கிறார். கதை முடிந்த பிறகு, அதில் வரும் பெண்ணின் மனத்திட்பம், ஊராரின் பொறாமையும் ஏச்சும், அவளது குடும்ப வாழ்வின் இடைவெளி, அதை அவளது தொழில் இட்டு நிரப்பும் முறை, தரகர்களை தவிர்த்தால் உழைப்பவன் பெறக்கூடிய முழு வெகுமதியின் சாத்தியம் இவை மேலே மிதந்து வருவதைப் பார்க்கலாம்.
மற்றொன்றில் பள்ளம் தோண்டும் வேலைக்கு பாதியில் படிப்பை விட்டுவிட்டு சோம்பி திரியும் இளைஞர்களை தேடிப்பிடித்து அவர்களுக்கு இந்த பணியை தர முயற்சித்து செய்து காட்டுகிறார். பள்ளம் தோண்டும் வேலை என்று அதை குறையாக பார்க்காமல் வேலை செய்யவேண்டும். குறிப்பிட்ட அளவு நாட்கள் ஒரு வருடத்தில் தினக்கூலியாக வேலை செய்திருந்தால் துறைக்குள் வேலைக்கு நுழையும் சாத்தியமும் சட்டமும் இருப்பதை சொல்கிறார். அப்படி பலர் பயன் பெறுகிறார்கள். எத்தனை நேர்த்தியான அணுகுமுறை. இதெல்லாம் அவர் நிஜ வாழ்வில் செய்தவை.
புத்தக தலைப்பு கதை மிக நல்ல கதை. ஒன்பது குன்றுகள் என்று பன்மையில் இல்லாமல் ஒன்பது குன்று என்று ஏன் இருக்கிறது? கதையை வாசிக்கும்போது அது இலக்கணத்தை தாண்டிய அனுபவம் என்பதை நாம் உணரமுடியும்.
இதற்கு மேல் கதைகளை சொல்வதைவிட, தொகுப்பை வாங்கி வாசிக்கும்போது மட்டுமே முழு வாசிப்பு திருப்தியை நாம் அடையமுடியும்.
No comments:
Post a Comment