அ வெண்ணிலா - வின் எட்டு சிறுகதைகள் உள்ள இந்திர நீலம் சிறுகதைத் தொகுப்பு படித்தேன். பெண்களின் விடுபட்ட, நிறைவேறாத, தோற்றுப்போன காதலையும் காமத்தையும் பேசுகின்றன இக்கதைகள் என்ற முன்னுரையுடனேயே சொல்லப்பட்டிருக்கிறது. அதுவே தொகுப்பின் பொதுவான சாரம் கூட. ஒரு அம்சத்தை முன்னிறுத்தி கதைகள் எழுதுவது ஒரு வகையில் நல்லது. ஒரு வகையில் சிக்கல். பல்வேறு எழுத்தாளர்களின் கதைகளை அப்படி ஒரு அம்சத்தின் தொகுப்பாக பார்ப்பது வேறுவகை. (எஸ். சங்கரநாராயணன் அப்படி செய்கிறார். சமீபத்தில் அவர் தொகுத்தது இசை பற்றி).
மேலும் பெண் எழுத்தாளர் காமம் பற்றி எழுதுவது என்பதில் முன்பொரு காலத்தில் இருந்த ஆத்திரங்கள், குற்றச்சாட்டுகள், அரசியல், உள்ளடங்கிய கிளர்ச்சி என்பவை வெகு காலமாக நீர்த்துப் போய் இப்போது சகஜமாகவும் ஆரோக்யமாகவும் – குறைந்த பட்சம் இலக்கிய வெளியில் – வாசிக்கவும் பேசவும் படுகின்றன என்பது நல்ல விஷயம். இதில் எழும் தேவையற்ற அதீதங்கள் பற்றி இங்கு பேசுவதில் அர்த்தமில்லை. அவற்றுக்கு இலக்கிய மதிப்பீடுகள் நிலைக்குமா என்பதும் சந்தேகமே. மேலும் பெண்களில் கவிஞர்கள் அதிகமாக இருப்பதும், புதின எழுத்தாளர்கள் குறைவாக இருப்பதாகவும்தான் தோன்றுகிறது. வெண்ணிலா இரண்டையும் எழுதுபவர். இந்த தொகுப்பில் நான் நிறையாக காண்பது இவர், பெண்ணின் காமத்தை அல்ல, பெண்மையின் காமத்தை எழுதுகிறார். அது இயல்பாக கைகூடுவது என்று தோன்றுகிறது. மேலும் பழி சுமத்தல்களோ, புகார்களோ இல்லாமல் ஞாயங்களை கேட்கிறார். இது முக்கியமான அம்சம். ஏனென்றால் புராணிகக் கதையின் நளின விளிம்பு அம்சங்களை நடப்புலகின் தட்டையான உரைகல்லில் தேய்த்து மட்டுமே எழுதுவது இலக்கிய கேளிக்கை. ஆனால் இந்த கதைகள் அதை செய்வதில்லை என்பதை நாம் கவனிக்கத் தவறக்கூடாது. எம் வி வெங்கட்ராம், புதுமைப்பித்தன், போன்றவர்கள் நட்ட நாற்றங்கால்கள் இந்த வெளி. இந்த பார்வையினாலேயே இந்த கதைகள் விகாரங்களாக இல்லாமல் விசாரங்களாக வெளிப்பட்டுள்ளன.
மிகவும் இயல்பான தொனியில் இதை எடுத்துக்கொண்டு முன்னுரையில் அதற்கான கோணம் பற்றி குறிப்பிட்டு இருக்கிறார். இந்த தொகுப்பில், இந்திர நீலம் என்ற கதை தவிர பிற ஏழு கதைகளிலும்,, புராணங்களிலிருந்து ஒரு இழையை எடுத்து விரித்திருப்பதுதான் தொகுப்பை வாசிக்க வைக்கிறது.
தர்மத்தின் ஆகுதி - திரௌபதியை வைத்தும், சிலம்பின் ரகசியம் - கண்ணகியை வைத்தும், கண்ணனிடமிருந்து வெளியேறாத கோபியர்கள் - கோபியரை வைத்தும், அட்சயபாத்திரத்தின் பசி - மணிமேகலையை வைத்தும், என்புதோல் உயிர் -புனிதவதியை வைத்தும், நித்ய சுமங்கலி - கோவில் தாசியை வைத்தும், விலக்கப்பட்ட கனி - இயேசுவிடம் இறைஞ்சும் விபச்சாரியை வைத்தும் எழுதப்பட்டுள்ளன.
தொகுப்பின் சிறந்த கதைகளாக விலக்கப்பட்ட கனி, நித்திய சுமங்கலி இரண்டையும் சொல்வேன். ‘விலக்கப்பட்ட கனி’ - கதையில் கானகத்தில் இருக்கும் மரத்தில் ஒன்றாக இருக்கும் விபச்சாரி, இயேசுவிடம் பேசுவதாக அமைந்திருக்கும் கதை. அன்பையும் வித்தியாசமில்லாத அரவணைப்பையும் கொண்டிருப்பது இறைத் தன்மை என்றால் அது தனக்கும் இருக்கிறதுதானே என்று கேட்கிறாள். உடலையே மூலதனமாக்கி அன்பு செய்தவர்கள் நாமிருவருமே என்கிறாள். அழுகிய சதையுடன் தொழுநோயால் உள்ள ஒருவனுக்கு தன்னுடைய உடலால் அவன் பசி தீர்த்ததை நினைவு கூறுகிறாள். ஓரு பெண் தனது உடலை உணர்ச்சியின் ஊடகமாக மாற்றி சுகிக்க வேண்டிய நிலையில், இவளுக்கு அத்தகைய இயக்கம் இருக்கிறது ஆனால் அனுபவம் கிடைப்பதே இல்லை என்பதை மிக அழகாக, நியாயமாக கேள்விகளின் மூலம் சொல்லி இருக்கிறார்.
“உடலை விற்கவேண்டும் என்பது என் நோக்கமில்லையே . பாவத்தின் கனிகளை உண்டவர்கள் போல்தான் என் வாழ்க்கை. இச்சமூகத்தால் கைவிடப்பட்டவள் நான். ரொட்டியும் பாலும் தேடிச் சென்ற இடங்களில் எல்லாம் ஒரு துண்டு ரொட்டிக்காக என் உடலையே ரொட்டியாக கேட்டார்கள். பலவீனமான பெண்கள் பாபிகளா ? எங்களைப் போன்ற வேசிகள் வெறும் கருவிகளே. எங்களின் உடல்கள் எங்களின் உடல்கள் அல்ல. ஓர் உண்மையையும் சொல்கிறேன் ஆண்டவரே. எத்தனையோ முறை என் உடம்பை விற்றிருக்கிறேன். உடலின்பம் என்பது இந்த உடம்புக்கு இருந்ததில்லை. வலியும் துயரமுமே மிஞ்சி இருக்கின்றன. எங்களை ஒரு போதும் பாவப்பட்டவர்கள் என்று உங்களின் வாயால் சொல்லாதீர்கள் புனிதரே !” என்று கேட்கிறாள். இந்த கேள்விகளுக்கு இயேசுவிடமே பதில் இல்லை. ஆனால் நமக்கான கேள்விகளும் அவையே.
தர்மத்தின் ஆகுதி -- கதையில் திரௌபதியின் காமம் எவ்வளவு நிர்பந்தப் பட்டிருக்கிறது என்பதை எழுதுகிறார். உணர்வின் மொழிக்கு உடல் கருவியாக செயல்படுகிறது. அர்ஜுனன் வில் போட்டியில் வென்று தன்னை அடைந்திருக்கிறான் என்பது அவளுக்கு பெருமகிழ்ச்சியை தருகிறது. ஆனால் அவளது தோழி அவன் போட்டியில் வென்றிருக்கிறான். இன்னும் மணக்கவில்லை என்பதை நினைவுறுத்துகிறாள். பிறகு குந்தியின் அவசரமான வார்த்தையால் அவள் ஐவருக்கும் மனைவி ஆகிறாள். தருமனின் நியாயப்படுத்தலால் இது உறுதிப் படுகிறது. இது குந்தியின் அலட்சியம்தானே என்று கேட்கிறாள். அவள் அக்னியில் பிறந்தவள் என்பதால் அவளுக்கு இளம்பருவ பிராயம் இல்லை. ஒரு தர்ம நோக்கத்திற்காக பிறந்தவள் சாதாரண பெண்ணின் இயல்பில் இருப்பதற்கில்லை போன்ற நியாயங்களுக்கு, வடிவிலும் உணர்விலும் ஒரு சாதாரண பெண்ணாக தானே இருக்கிறேன் என்று கேள்வி கேட்கிறாள். நுட்பமான கேள்வி இது.
நெருப்பின் தூய்மை கொண்ட இவள் ஒரு கணவனிடம் இருக்கும்போது பிற கணவர்கள் பற்றிய நினைவு எழாது என்பதற்கு அவளிடம் உள்ளே கேள்வி மிக துல்லியமானது. இந்த கோணத்தை நித்யகன்னி நாவலில் எம்விவி கையாண்டிருப்பது நினைவுக்கு வருகிறது.
இந்த சிறுகதையில் கதையில் திரௌபதியின் குரல் ஒலிக்கிறது. அர்ஜுனன் தவிர வேறு யாருக்குமே தான் ஒரு முழுமையான மனைவியாக இல்லை. உடல் பசிக்கு பதில் சொல்லும் கணவனாக தனக்கு யாருமில்லை. தருமனுக்கு தான் தத்துவ விசாரத்துக்கு தோதான ஒரு உயர்ந்த தர்ம ஸ்வரூபி மனைவி, பீமனுக்கு ஒரு விளையாட்டு சிநேகிதி, நகுல சகாதேவர்கள் குழந்தைத்தனமானவர்கள். குதிரையிடம் நகுலனுக்கு உள்ள ஈடுபாடு கூட தன்னிடம் இல்லை என்கிறாள். அர்ஜுனனுக்கு அவள் மேல் பிரியம் இருந்தும், பிற நால்வருடன் பகிர்ந்து கொள்வதில் அப்படி ஒன்றும் சம்மதமில்லை. அதனால் அதிருப்தியில் தன்னை அணுகுவதில்லை. ஆக மொத்தத்தில் எல்லோராலும் காம விஷயத்தில் கைவிடப்பட்டவளாக தான் இருக்கிறேன் என்கிறாள். காம வசீகரங்களில் பிரியம் உள்ளவனும், பெண்களால் விரும்பப் படுபவனுமான அர்ஜுனன் தனது கணவனாக இருந்தாலும் அவன் மூலம் கூட தனது காமம் கையாளப்படுவதில்லை என்ற அவளது தாபத்தை நாம் விரித்து பொருள்கொள்ளவேண்டும்.
சிலப்பதிகாரத்தின் கண்ணகி பற்றிய ‘சிலம்பின் ரகசியம்’ - கதை சரியாக அமையவே இல்லை. கண்ணகி கோவலனுக்காக காத்திருந்ததும், புகார் நீங்கி மதுரைக்கு சென்றதும், கோவலன் வந்துவிட்டான் என்று சந்தோஷமாக வரும்போது, உடனே கிளம்பு என்று அவன் சொல்ல நகரை நீங்குவதும் செய்யுளின் உரையாகவே நீள்கிறது. கோவலனுக்காக சூடி காத்திருந்த மலர்கள் கசங்காமல் குவிந்துள்ளன என்ற ஒரு வரி தவிர கண்ணகியின் காமத்தின் ஏக்கம் கதையில் எந்த விதத்திலும் வெளிப்படவே இல்லை. சிலம்பை படித்திருப்பவருக்கு இதில் புதிதாக எந்த பார்வைக்கோணமும் இல்லை.
இதே போலவே ‘அட்சயப்பாத்திரத்தின் பசி’ என்ற கவித்துவமான தலைப்புக்கு கதையோட்டம் நியாயம் செய்யவில்லை. உதயகுமாரன் மேல் கொண்ட ஆசையின் போதான காமத்தை பற்றி பேச இடமிருந்தும், அப்படியெல்லாம் இப்போது எதுவும் இல்லை, அருகன் மேலான அன்பே என் வாழ்க்கை என்று அவசரமாக மறுத்துக்கொண்டு மேலே செல்ல வைக்கிறார். இளமுலைகள் மேல் செஞ்சாந்து போன்ற காப்பிய வரிகள் தவிர தாபத்தை சொல்லும் இடங்கள் எதுவும் கதையில் இல்லை. கணிகையான மாதவி இப்போது புத்தத்தை தழுவி இருந்தாலும், இதற்கு முன் கோவலன் மூலம் இளமையை, காமத்தை தழுவி திளைத்தவள். அவளது மகளாகிய நான் அவளது தோல்விக்கு எப்படி ஒரு தீர்வாக முடியும். மணிமேகலை என்னும் தானே மாதவியின் காமத்தின் சின்னம்தானே. எதற்காக தான் அதை துறக்கவேண்டும் போன்ற கேள்விக்கான இடங்கள் பல இருந்தும், கதையில் மணிமேகலை அவற்றை கேட்க முனைவதே இல்லை என்பது ஆச்சரியம் அளிக்கிறது. நவீனத்தின் இத்தகைய கேள்விகளுக்கு காப்பிய அனுமதிகள் எதுவும் தேவைப்படாது என்றே கருதுகிறேன்.
கண்ணனிடமிருந்து வெளியேறாத கோபியர்கள் கதை கண்ணனின் ஒவ்வொரு அம்சத்தையும் ராசலீலையின் கண்ணியாக கொண்டு ஆய்ச்சியர்கள் அலைவுறுவுதை எழுதுகிறார். கண்ணன்மேல் எல்லாப் பெண்களுக்கும் தாபம். கணவர்களை கூட கணக்கில் கொள்ளாமல் பொழுது சாய்ந்தால் கண்ணனின் கீதம் கேட்டு சாரிசாரியாக மருதமர அடர்த்திகளில் கண்ணன் மீது மையல் கொண்டு நடமிடுகிரார்கள். காமத்தை தூண்டிவிடும் குழலின் ஓசை காமத்தை நுகர்வதில்லை. சிறு பிள்ளை விளையாட்டு என்று நதியில் குளிக்கும்போது உடைகளை மறைத்து வைப்பது பிள்ளத்தனத்தில் சேர்த்தியா? பருவமடைந்த பெண்களின் நிர்வாணத்தை கணவனோ காதலனோதானே பார்க்கவேண்டும். இது சரியா ? என்று வினவுகிறார்கள். நானேதானே எல்லாமுமாக இருக்கிறேன். உங்கள் உடலும் நான்தானே. என் உடலை நான் பார்ப்பதில் என்ன தவறு என்கிறாய். உடல் உங்களது அல்ல. உடலை மறந்து ஆன்மாவை உணரச் சொன்னாய். அதை உணர்ந்து நாங்கள் தயக்கம் விலகி நீரிலிருந்து வெளிப்பட்டபோது எங்கள் கைகளில் ஆடைகளை தருவித்து மாயம் செய்தாய். என்று பலவாறாக காமத்தை அறிவித்துவிட்டு அதற்கு தீர்வு சொல்லாமல் மாயம் செய்யும் கண்ணனிடம் அதன் அல்லல் பற்றி பேசுகிறார்கள் கோபியர்கள். உடலை மறக்க சொல்கிறாய். உணர்வை எப்படி மறப்பது என்று கேட்கிறார்கள். உனது குழலோசையில் அஃறிணைப் பொருட்களும் உணர்வு பெற்று ஆடும்போது, மனிதர்கள் நாங்கள் எப்படி உடலை கட்டை போல ஆக்குவது என்று கேட்கிறார்கள். இந்த கதையில் அடக்கப்பட்ட காமமோ, வெளிப்படத் தவிக்கும் காமமோ சரியாக வெளிப்படவில்லை. குழலோசையில் காமம் துளிர்க்கிறது. கோபியர்கள் அடையும் ராசலீலையை தான் அடைய முடியாமல் யமுனை நதி வெப்பமாகிறது என்று ஒன்றை வரிகளில் போய்விடுகிறது. தனிக் குரலாக இல்லாமல் எல்லா கோபியர்களின் ஒட்டு மொத்த குரலாக கதை முழுவதும் இருப்பதால் அந்த ஒருமை கூடிவரவில்லையோ என்னவோ. கதை முழுதும் கண்ணன் – கோபியர்கள் – குழலோசையும் ராசலீலையும் சரியாகவே சொல்லப் பட்டுள்ளன. ஆனால் அவை அழுத்தமான கதையாக உருவேறவில்லை.
என்புதோல் உயிர் அதிகமும் பேசப்படாத ஒரு களம். புனிதவதியார். கணவன் பரமதத்தன் வெளியே சென்றிருந்தபோது, பிச்சை கேட்டு வந்த சிவனடியார் பசிக்கு உணவு கேட்க வீட்டில் இருந்த இரண்டு மாங்கனியில் தன் பங்கான ஒரு கனியை தர, சாப்பிடும்போது கணவன் மற்றொரு கனியை கேட்க இறை வலிமையால் கனியை வரவழைத்து கொடுக்க, அவளது தெய்வாம்சத்தால் அவளை விட்டு விலகி வெளியேறி விடுகிறான். தேடிப்போகும் போது வசதியாக மாளிகையில் மனைவி குழந்தை என வாழும் அவன் புனிதவதியின் காலில் விழுந்து வணங்குகிறான். அன்னை என்கிறான். கணவனிடம் காமத்தை பெற முடியாத நிலைக்கு தள்ளப்பட்ட புனிதவதி பேயுருக் கொள்கிறாள். இந்த கதை சிறுகதையில் இருக்கிறது. ஆனால் சிறுகதையாக மாறவில்லை. கைநழுவிப்போன காமத்தின் அம்சமோ, பெறமுடியாத ஏக்கமோ இதில் வெளிப்படவில்லை. ஆனால் ஏறக்குறைய இதே நிலையில் உள்ள பெண்மனத்தின் அவலத்தை நித்ய சுமங்கலி கதையில் அபாரமாக எழுதி விட்டிருக்கிறார்.
இந்திர நீலம் ‘கனலி’யில் வந்து பேசப்பட்ட சிறுகதை. நல்ல கதைக்களன். இந்த தொகுப்பில், நடப்புலகின் மனிதர்களை பற்றி பேசும் ஒரே கதை. இன்னும் நன்றாக வந்திருக்க வேண்டிய ஒன்று என்பது என் அபிப்ராயம். அறுபது பக்கங்களில் அதன் செறிவு நீர்த்துப் போனதாக தோன்றுகிறது. ஒரு சிற்றூரின் இளம் பெண் திருமணமாகி கண்ணனின் மனைவியாகி தனது நாற்பதுகளில் காமம் பற்றி யோசிக்கிறாள். பேசுகிறாள். செயல்படுகிறாள். சிறுவயதில் பாவாடையை நெஞ்சுவரை ஏற்றி கட்டிக்கொண்டு முற்றத்தில் குளிப்பது, பல கண்கள் அவளை தொட்டுப்போவது, மாமி அம்மா இவர்களின் நடவடிக்கைகள் பேச்சுகள் என்று ஆரம்பித்து பிரசவத்தின் போதும் அதற்கு பிறகுமான வலிகளில் அதுவரை இருந்த நாணங்கள் கரைந்து போவதை சொல்கிறார். காமம் என்பது கணவனிடம் வெறும் இயக்கமாக நலிந்து விடுவதை, தனது நிர்வாணத்தை ரசிக்க முடியாத தினப்படி நியதியாக மாறிப் போவதும், மெனோபாஸ் காலத்தின் அவஸ்தைகளுக்கு இடையில் இந்த உணர்வுகளும் ஊடாடுவதை பல விதமாக சொல்கிறார். இளம் பருவ வயதில் கண்ணனோடு கொண்டாட்டமாக இருந்த முத்தங்கள் இன்று அவனே கணவனாக வாய்த்து, மத்திம வயதில் வறண்டு போயிருப்பதை ஒப்பிட்டு காட்டுகிறார். இப்படியாக் பல தொடர் சிந்தனைகளுக்கும் உணர்வுகளுக்கும் பிறகு, நம் கணவன்தானே நமக்கு இல்லாத உரிமையா இதில் வெட்கப்பட என்ன இருக்கிறது என்று ஒரு நாள் தயக்கத்தை விலக்கிவைத்து, வீட்டுக்குள் நுழையும்போதே கண்ணனை கட்டி அணைத்து ஆச்சரியப் படுத்துகிறாள். அவன் ஆச்சரியம் அடைந்தாலும் அவள் எதிர்பார்த்த ரசனை அவனிடம் வெளிப்படுவதில்லை. அவள் அவனை கொண்டாடி முத்தமிட்டு தீர்க்கிறாள். உடலை உணர்வின் கருவியாக மாற்றி சுழன்று சுகிக்கிறாள். ஆனால் அவனால் “மூச்சு முட்டுது விடுடீ” என்றுதான் விலக்க முடிகிறது. உடம்பு உதட்டில் மையம் கொண்டிருந்தது என்று எழுதுகிறார். அவனோ “லூஸு.. என்னாச்சு விடுடீ” என விலகுகிறான். “பாலருந்தும் குழந்தையிடம் இருந்து மார்க்காம்புகளை விலக்கியது போல அழுகை பீறிட்டு வந்தது” என்று அந்த ஏமாற்றத்தை துக்கத்தை சொல்கிறார்.. “பூவில் தங்கியுள்ள பனித்துளியை ருசிப்பது போல, நீருக்குள் மெல்ல மெல்ல ஆழமாக சென்று சுவை நீரை பருகுவது போல அவனை மெதுவாக ரசித்து கடக்க வேண்டும்” என்று அவள் நினைத்துக் கொண்டே இருக்கும் சமயத்தில் தன் மேல் கனம் படிவதை உணர்கிறாள். “கண்ணா இரு இரு என்றேன். அதற்குள் பாதி கடந்திருந்தான்”. புடவையைக் கூட களையவில்லை” என்று அவன் வெறும் இயந்திரமாவதை எழுதிப் போகிறார். ஒரு பெண் காமம் என்று கருதுவது இதை மட்டுமே அல்ல என்றே இந்த கதை சொல்ல முயல்கிறது. அம்மனுக்கு திருநீராட்டு செய்ய அபிஷேகப் பொருட்களை எல்லாம் தயார் செய்து வைத்திருந்துவிட்டு, எதுவும் இல்லாமல் கற்பூர ஆரத்தி மட்டும் காட்டியது போல ஒரு வெறுமை என்று எழுதுகிறார்.
பெண்மனதின் அபிலாஷைகளை ஒரு அந்தரங்கமான பெண் சிநேகிதியிடம் சொல்லிவிடுவதைப் போல எல்லாமே சொல்லிப் போகிறார். வாசகரிடம் அவர் காட்டும் இந்த நம்பிக்கை, நெருக்கம் இந்த கதையின் முக்கிய பங்கு. அப்படி ஒரு பாவிப்பு வாசகரிடம் இல்லாவிட்டால் இந்த கதை கலையுருப் பெறாமல் தோற்று போகவே செய்யும். இவ்வளவு இருந்தும் இந்த கதையில் தேவைக்கு மீறிய சம்பவங்களும், விவரிப்புகளும், வெளிப்படைகளும் சிறுகதை கொண்டிருக்கும் நுட்பமான மையத்தை சேதப்படுத்துகிறது. இந்திர நீலம் என்ற கவித்வமான தலைப்பு கொண்ட இந்த சிறுகதை மேலும் நன்றாக கூடி வந்திருக்க வேண்டிய ஒன்று என்பது என் எண்ணம். (இது கனலியில் வந்திருந்தது )
தொகுப்பின் சிறந்த கதை - நித்ய சுமங்கலி என்று சொல்லலாம். நக்கன் என்ற கோவில் தேவதாசியின் மனதுக்குள் புகுந்து கொண்டு இதை எழுதி இருக்கிறார். அருமையானதொரு கதை. இந்த கதையின் சிறப்பம்சம் என்னவென்றால், பிற கதைகளில் ஏக்கம் கொண்டு பேச ஒரு மனித உரு ஆண் இருக்கிறான். ஆனால் இதில் சிலை உருவில் உள்ள கடவுள்தான் ஆண். சிலையை ஒரு உயிருள்ள ஆணாக நினைத்து பாவிக்க வேண்டிய நிலைமையும், அதில் எந்த திருப்தியும் கிடைக்காமல் இருப்பதும் மிக வித்யாசமான களம். மிகுந்த கலைத்தன்மையுடன் இதை சொல்லிக் கடந்திருக்கிறார் வெண்ணிலா.
முதல் நாள் இரவு கடவுளை சிலை உருவில் தூங்க வைத்துவிட்டு ஏக்கத்துடன் வெளியே வந்த நக்கன் என்ற தேவதாசி, அதி விடியற்காலையில் காலையின் இருளில் ஈர உடையுடன் சென்று எழுப்புகிறாள். அவள் மனம் லயிக்கிறது. யாருமற்ற கோவிலில் தனிமையில் கதவை திறந்து கடவுளை தனிமையில் சந்திக்கும் பேறு அவளுக்கு மட்டுமே வாய்க்கிறது. அதை கொண்டாடுகிறாள். அழகில் திளைக்கிறது. உமையவள் உனது பாதி என்றாலும் இந்த கோவிலில் நடமாடும் உனது மனைவி நான்தான். உனது உணர்வுகளுக்கு சேவை செய்ய நான்தான் நியமிக்கப் பட்டு இருக்கிறேன். அதனால்தான் அரசனின் நெற்றியில் பொட்டுவைக்கும் சுதந்திரமும் உரிமையும் எனக்கு உள்ளது. ஒரு உண்மை ஆணாக பாவித்து நடனமும், இசையுமாக அவனுக்கு சிருங்கார சேவை செய்ய ஒரு பெண் என்ற உணர்ச்சி தேவையாக இருக்கிறது. ஆனால் அந்த உணர்ச்சிக்கு பதிலே கிடைப்பதில்லை.
“பன்னிரண்டு வயதில் நீயே எல்லாம், நான் உன் தாசி என்று உன் காலடியில் வைக்கப்படிருந்த நானை கோயில் பூசாரி என் கழுத்தில் கட்டிவிட்ட போது, மடபோபல்லியில் இருந்து மூன்று வேளையும் நல்ல சாப்பாடு கிடைக்கும் என்பதே மகிழ்ச்சியாக இருந்தது. கோயிலில் யாருடைய கட்டுப்பாடும் இல்லாமல் விளையாடலாம். மாலை கோர்க்கலாம், நிருத்தியம் கற்கலாம், பாடலாம் என்று விளையாட்டுத்தனமே இருந்தது. ருதுவான பிறகு எனது வயதை ஒத்த பிறர் ஆடவருடன் மணம் முடித்து பிள்ளைகள் பெற்று இருக்க, கல்லால் ஆன உனக்கு நான் மனைவியானவுடன் என் உடலும் கல்லாகி இருக்கலாம்”
இப்படி இறைஞ்சும் அவள் கருவறையில் இருக்க, அப்போதே நாதசுரமும் தவிலும் ஒலிக்கின்றன. கோயில் யானை பிளிறிக்கொண்டு வருகிறது. பல்லக்கு தூக்கிகள் வருகிறார்கள். ஓதுவாரும் வந்து விட உன்னோடு தனித்திருக்கும் நேரம் முடிந்தது பெருமானே என்று சோகம் கவிழ வெளியேபோகிறாள். விரிவாக மனதின் ஓசையை சொல்லிக்கொண்டே சென்று ஒரு சிறிய வரியில் கனமேற்றுகிறார். இறுதியாக “உன் திருநாணைக் கட்டிக்கொண்டதால் நான் நித்ய சுமங்கலி. நித்ய சுமங்கலி என்ற வரத்திற்குள் நித்ய கன்னி என்ற சாபத்தை ஏன் மறைத்து வைத்தாய் பெருமானே? என்று முடியும் இந்த கதை மிக அருமையான ஒன்று.
ஒரு இடத்தில் கூட வார்த்தைகள் சறுக்கிவிடாமல், பிறண்டு விடாமல், சொல்ல வந்த உணர்வுக்கு சரியான, முறையான வார்த்தைகளில் சவாரி செய்திருக்கிறார் வெண்ணிலா. மொழியை முழுமையாக கையாண்டிருக்கிறார். ஜனனி சிறுகதையில் லாசரா பராசக்தி மனித உருவம் கொண்டு மனித வாழ்க்கையை அனுபவிப்பதை எழுதும்போது எவ்வளவு பக்குவமும், நேர்த்தியும் அதே சமயம் மனித உணர்வை கடத்தியும் விடுகிறாரோ, அந்த நேர்த்தியுடன் இந்த கதை எழுந்திருக்கிறது.
ஒட்டு மொத்தமாக பார்க்கும்போது பெண்களின் பேசத்தயங்கும் காமத்தை, புராண மாந்தர்களின் பின்னணியில் மனித மனத்தின் கூறுகளை குவித்து ஞாயமான கேள்விகளை எழுப்பும் வகையான சிறுகதைகளை, சங்க இலக்கியம் முதல் உளவியல் வரை கற்றிருபவரான அ.வெண்ணிலா எழுதி இருக்கிறார். . இந்த முயற்சியே முக்கியமான ஒன்று. இவை பல விதமாய் பலராலும் பேசப் பட்டிருந்தாலும் சிறுகதைகளின் தொகுப்பாக செய்யும்போது மேலதிக குவி கவனம் பெறுகிறது. பெறவேண்டிய ஒன்றும் கூட அதன் சரியயான காரணங்களுக்காக.
No comments:
Post a Comment