Friday 17 December 2021

மகிழம்பூ மணம் - ஜயந்த் காய் கிணி - காலச்சுவடு

மகிழம்பூ மணம்
ஜயந்த் காய் கிணி
தமிழில் நல்லதம்பி
காலச்சுவடு  

ஜயந்த் காய்கிணி – கன்னட எழுத்தாளர். தமிழில் நல்லதம்பி மொழிபெயர்ப்பு செய்திருக்கிறார். மொழிபெயர்ப்பு மூலம் அயல் தேசத்து படைப்புகள் தவிர இந்தியாவிலேயே இருக்கும் பிற மொழி படைப்புகளை அறிந்து கொள்வதன் மூலம், அவர்கள் வாழ்க்கை முறை, பண்பாடு போன்றவற்றை புரிந்து கொள்ள முடிகிறது.  இந்தியாவையே இன்னும் நாம் படைப்புகள் மூலம் முழுதாக தெரிந்து கொள்ள வேண்டி இருக்கிறது. சாகித்ய அகாதமி அந்த வேலையை செய்வது நலம்கூட்டுவது.

மகிழம்பூ மணம்  என்ற இந்த சிறுகதை தொகுப்பில் இடங்களும், மன நிலைகளும், அவர்களுக்குமேயான வாழ்க்கை முறைகளும்  நமக்கு அறிமுகமாகின்றன. இதில் கர்நாடகமும் மகாராஷ்டிரமும் தொட்டுக்கொள்ளும் பகுதிகள், மக்கள் பேசப்படுகிறார்கள்.

மேலும் இவருடைய எழுத்து புதுக்காற்று போல இருக்கிறது. வழக்கமான ஆனால் புதிய உவமைகள் அல்லது குறிப்புகள் தென்படுகின்றன. பட்டாணி காயை மெல்லப் பிளந்து பட்டாணி விதைகளைப் பார்ப்பது போல, நிதரிசனத்தை பிளந்து காட்டும் எழுத்து. அது மிக இயல்பாகவே நிகழ்கிறது.


மேன்ஷனில் தங்கும் இரண்டு நண்பர்கள் பற்றிய பார்ட்னர் – குஜராத் சென்று வாழ்க்கைப்பட்டு உள்ளூர் பிரமுகராக உயர்ந்து தற்கொலை செய்து கொண்ட அம்மாவை நினைத்துக் கொண்டே அதே கரையில் நிற்கும் பெண்ணைப் பற்றி பாமினி சப்தபதி – சர்கஸில் உலக உருண்டை போன்ற கூண்டில் மோட்டார் சைக்கிள் சாகசம் செய்பவன் பற்றி கிணற்றில் ஒரு கதவு – திருமணம் செய்து கொள்ளும் விளிம்பு நிலை வேலை செய்யும் எளிய ஜோடிகள் திருமண அழைப்பிதழ் வாசகம் எழுதுவது பற்றி நோ பிரசன்ட் ப்ளீஸ் – இப்படியான கதைகள் உள்ள தொகுப்பிலிருந்து ஒரே ஒரு கதை மற்றும் பகிர்கிறேன். உங்களை தொகுப்புக்கு செல்ல வேண்டுகிறேன்.

 ***

சராசரியான குடும்ப சூழல்களில்,, நடுநாற்பதுகளை தொடும் வயதில் திருமணம் ஆகாமல் இருப்பது ஒரு இரண்டும்கெட்டான் மனநிலை. குறிப்பாக அதிகமும் ஆண்களுக்கு இது பெரும் இக்கட்டையும் உளைச்சலையும் தரவல்லது. திருமண விசாரிப்புகள் அவனை கைவிட்டிருந்தாலும் கூட, அவன் எகிறிப் பற்றுவதற்கான அவகாசங்கள் முடிந்துவிடுவதில்லை. அல்லது அவன் அப்படி நம்புவதற்கான அவகாசங்கள் இருக்கும். ஏதோ ஒரு புன்னகை, உரையாடல், பேச்சு போதும் – பாறைவெடிப்பில் பதுங்கி இருக்கும் ஆசைப்பாம்பு பச்சை நாக்குகளை நீட்டும்  வாய்ப்பு அல்லது அபாயம் உண்டு.

 ஒரு குடும்பத்தை சுயமாக சமாளிக்கும் சம்பாத்திய நிலையில் இல்லாதவர்கள் பெண்களின் / பெற்றோர்களின் தேர்வுப்பட்டியலில் இருப்பதில்லை. இதில் பலருக்கும் காதலித்து ஒப்பேற்றிக்கொள்ளும் சாமர்த்தியமும் பெரும்பாலும் இருக்காது. வராத ரயிலுக்காக பிளாட்பார்மில் காத்திருக்கும் பயணியைப் போன்ற நிலையில் இருப்பார்கள்.  ஏனென்றால் எப்படியாவது ஓரளவு நல்ல நிலைக்கு வந்துவிடலாம் என்று தொடர்ந்து போராடிக்கொண்டே இருப்பவர்கள்தான் இவர்கள். முன்னேறும் முனைப்புதான் எப்போதும் மனதில் இருக்கும். அந்த சிறு வெற்றியை வைத்து தங்கள் விருப்பங்களை, துணையைப் சம்பாதித்துக் கொண்டுவிடலாம் என்று நம்புபவர்கள். ஆனால் வண்ணத்துப்பூச்சி தோட்டத்தின் எல்லா மலர்களிலும் அமர்ந்துவிடுவதில்லை.

 சிலர் திருமணத்துக்காக பொருளாதார நிறைவை நோக்கி ஓடி ஓடி திரும்பி பார்க்கும்போது வயது முதிர்ந்து போய், திருமண ஆசை மெலிந்து, பிறகு பொருளாதார தன்னிறைவையே கொண்டாட ஆரம்பித்து விடுவார்கள். ஒரு பெண்ணை தனக்காக வரித்துக் கொள்ள முடியாமல்போன தோல்வியை, தற்போது அடைந்திருக்கும் அவனது மேலோங்கிய பொருளாதார வெற்றி அல்லது குடும்பத்துக்கான அர்ப்பணிப்பு போன்ற புகழ்களால் மூடி நசுங்கும்போது அவனுக்குள் எழும் கசப்பு காலம் முழுதும் வியாபிக்கும்.

 

சிலருக்கு குடும்பத்தின் பொறுப்புகளை சுமந்து, வயது கூடி, இப்போது தனக்காக மீண்டும் புதிய பொறுப்பு ஒன்றை சுமக்கவேண்டும் எனும்போது மனம் ஓய்ந்துவிடும். திருமணம் என்பதை தங்கள் விருப்பப் பட்டியலில் இருந்தே மறந்து விட்டிருப்பார்கள். (சு வேணுகோபாலனின் அதிர்ச்சியூட்டும் சிறுகதை ஒன்று இந்த கதைக்களத்தில் இருப்பது நினைவுக்கு வருகிறது)

 

சற்று ஊன்றி கவனித்தால் இப்படியான ஆண்களின் நிலை, அந்த வயதின் பெண்கள் நிலையைவிட இம்சையான ஒன்று. பெண்கள் திருமணம் கூடிவராமல் போகும்போது அவளது பெற்றோர் அல்லது குடும்பத்தின் மீது குறைகள் சொல்லப்படுவது இயல்பு. ஆனால் ஒரு முதிர்வாலிபனுக்கு அப்படி ஏற்படும்போது முழு சிலுவையையும் அவனேதான் சுமக்கவேண்டும்.  தனிமைக்கு தன்னை தயார்க்கிக் கொள்ளும் பக்குவத்தை உருவாக்கிக் கொள்ளும் நிர்பந்தம் அது. மிகப்பெரிய கண்ணாடி மாளிகையில் ஒரு தனி கண்ணாடியில் தன்னையே பார்த்துக் கொண்டு நிற்பவனைப் போன்ற நிலைமை அது.

அவனுக்கு தன்னுடைய இயலாமை, கைகூடாத சந்தோஷங்கள் எல்லாம் தாண்டி வாழ்வின் நெருக்குதலில் சிக்குண்ட ஒருவரை பார்க்கும்போது அனுதாபமும், அன்பும் தோன்றும் பக்குவ மன நிலை வந்து விடுகிறது. சந்தோஷமாக வாழ்ந்து அனுபவப்பட்ட ஒருவரின் மன நிலை அப்படியான எந்த வாழ்க்கையின் சந்தோஷத்தையும் காணாமலே ஒருவனுக்கு வந்து விடுவது எவ்வளவு துயரமான ஒன்று !

 ***

 ஜயந்த் காய்கிணி-யின் சிறுகதை ‘கண்ணாடி இல்லாத ஊரில்’ - இந்த சிறுகதை, தனியாக மும்பையின் துணை நகரம் ஒன்றில் ஒரு பழைய கட்டிடத்தின் மேல் மாடியில் சிறிய கூண்டு போன்ற அறை ஒன்றில் தங்கி இருக்கும் முதிர்வாலிபன் ஒருவனைப் பற்றியது.. “சத்யஜித்தனுக்கு திருமணம் ஆகவில்லை. வயது கடந்து போகிறது. இதைப் பற்றி அனுசரணையாகப் பேசவோ, வற்புறுத்தவோ, நெருங்கியவர்கள் என்று யாரும் இருப்பதாகத் தெரியவில்லை. கடந்த இருபது ஆண்டுகளுக்கும் மேலாக இந்த மாநகரத்தில் வேலைகளையும், வசிக்கும் அறைகளையும் பூனை போல மாற்றிக் கொண்டே இருக்கிறான்” இப்படி ஆரம்பிக்கும் கதை அவனைப் பற்றி சொல்லி விடுகிறது.

 நேரங்கெட்ட நேரத்தில் தெருவோர வண்டிகளில் சாப்பாடு – பிரம்மச்சாரிகளுடன் குடிசைகளை பகிர்ந்து கொண்டு வாசம் – பகலில் சூரிய வெளிச்சம்தான் வீட்டுக்கு வெளிச்சம். நண்பர்கள் வீட்டு விசேஷத்துக்கு போகும்போது எப்போது திருமணம் என்று இவனைக் கேட்டால், இந்த ஊரோடு எனக்கு திருமணம் எப்போது முடிந்து விட்டது என்று சொல்வான்.  தினமும் திரும்பி வரும்போது அந்த கூண்டு அறை அவனுக்காக காத்திருக்கும்.

ஒருநாள் காலை தாமதமாக எழுந்து அவசரமாக தயாராகி கூண்டைப் பூட்டிக்கொண்டு வெளியே வரும்போது முதியவர் ஒருவர் தடுமாறிக்கொண்டு மேலே வருகிறார். இங்கே வீடு எதுவும் கிடையாது. மொட்டை மாடி என்று சொல்லி தடுக்க பெருமூச்சு வாங்கிக்கொண்டு ‘சத்யஜித்த் விலாசம் இது தானே?” என்று கேட்கிறார். அவர் வயது கருதி அவரை உள்ளே அழைத்து ஒரு இரும்பு நாற்காலியை போட்டு அமர செய்கிறான்.  இந்த இடத்துக்கு வரும் முதல் விருந்தாளி.  என் பெயர் சஞ்சீவ். உனக்கு ஒரு திருமண சம்மந்தம் கொண்டு வந்திருக்கிறேன் என்று ஒரு பேப்பரை தருகிறார். அவருடைய மகள் ஷாலினி.  பிறந்த தேடி. கல்வி. விவரங்கள் இருந்தன.  பகுதி நேர வேலை செய்கிறாள். வயது முப்பத்தொன்பது. உங்கள் விருப்பப்படி திருமணம் செய்து தருகிறோம். நீங்கள் ஒருமுறை அவளிடம் பேசவேண்டும் என்று சொல்கிறார். உங்கள் நம்பர் கொடுங்கள். அவளையே பேச சொல்கிறேன் என்று வாங்கி போகிறார்.

 

இந்த சந்திப்பு, சம்மந்தம் கேட்டு பெண்ணின் அப்பா வந்தது எல்லாம் ஒரு கனவு போல இருக்கிறது. அந்த கனவோடு அலுவலகம் செல்கிறான் சத்யஜித்.

 

இங்கே ஜெயந்த் காய்கிணி ஒரு வரி எழுதுகிறார் – “தன்னைப் பற்றி யோசிக்க நேரமே இல்லாதது போன்ற இருக்கும் தினசரியில், ஒரு வெற்றுப் பக்கத்தைக் கண்டவன் போல, திருப்பி போட்டுக்கொண்ட ஆடையில்  புதிய பை ஒன்று முளைத்ததைப் போல குழப்பமடைந்தான்”.ஷாலினி என்ற பெயர் வசீகரத்தை தருகிறது.  அவளுடைய உருவத்தை கற்பனை செய்து பார்க்கிறான். ஒரு நாள் உற்சாகத்தில் ஷாலினி எண்ணுக்கு  போன் செய்கிறான். அது அவள் போன் அல்ல.. அவளுக்கு சொல்லி அழைக்க அவள் வந்து பேசவேண்டும். யாரது. இப்போது அழைக்க முடியாது என்ற கடுமையான குரல் கேட்டு அமைதியாக வைத்து விடுகிறான்.

 

மாலை தனது கூண்டு அறைக்கு திரும்பும்போது, அங்கே வெளியே வேடிக்கை பார்த்து நின்றுகொண்டிருக்கும் பெண்ணின் அப்பா சஞ்சீவ் காத்திருப்பது கண்டு அதிர்ச்சி அடைகிறான். அவர் நீங்கள் போன் செய்திருந்தீர்களாம். உங்களை சந்தித்து போன பின் வீட்டில் ஒரே ரகளை. உங்களிடம் அவள் மீது மதிப்பு குறைந்து விடக்கூடாது என்றுதான் சொல்லவில்லை. ஆனால் சொல்லாமல் நான் மறைத்தேன் என்று வீட்டில் தகராறு. ஆகவேதான் வந்தேன். ஷாலினுக்கு திருமணம் நடந்து இரண்டே நாளில் முறிந்து போனது.  அது என்ன திருமணம். அதில் என்ன அர்த்தம் இருக்கிறது. அது நடந்து பதினைந்து ஆண்டு மேல் ஆகிறது என்கிறார். சொல்லிவிட்டு போகலாம் என்றுதான் வந்தேன் என்கிறார்.

 

சத்யஜித்துக்கு அந்த முதிய அப்பா மேல் அன்பு கொள்கிறது மனம். அவளை ஒரு முறை சந்தியுங்கள். என்று சொல்லிவிட்டு நாளை சர்ச் கேட் பக்கத்தில் உள்ள சத்கார் ஹோட்டலுக்கு அவளை அழைத்து வருகிறேன் என்று சொல்லி வரச்சொல்கிறார். பிறகு வீட்டில் செய்த சட்னி பொடி பொட்டலத்தை தந்து, சத்யஜித் சுயமாக சமைத்து கொள்வதால் உபயோகித்துக் கொள்ளுங்கள் என்று சொல்லி போகிறார்.

 

மறுநாள் பூங்கா அருகே நின்று கொண்டிருக்க விலை மாது ஒருத்தி நெருங்கி வர இவன் தவிர்த்து போகிறான். அட இருப்பா மணி என்னன்னு கேட்டேன் என்று அவனை பிற பெண்களோடு சேர்ந்து கேலி செய்கிறாள். பிறகு சினிமா போஸ்டரில் உள்ள பெண்ணை காட்டி இவள் உன் பெண்டாட்டியா என்று கேட்டு சிரிக்கிறார்கள்.  ரயில்வே ஸ்டேஷனில் கலைந்து ஓடும் கூட்டம். அதில் இவனுக்கு ஷாலினி பிம்பம் தெரிகிறது.  கனவுகள்.

 

மறுநாள் அவளை சந்திக்க தயாராகி போகிறான் அங்கே ஒரு வரி – குளித்துவிட்டு தலை வாரி புறப்பட அவனுக்கு கண்ணாடியே தேவை இல்லை. கூட்டத்தோடு கூட்டமாக ஓடும் லட்சக்கணக்கான முகங்களுக்கு சொந்த கண்ணாடி இருப்பதாக தெரியவில்லை.

 

அரை மணி நேரம் முன்பாகவே வந்து காத்திருக்கும் அவனுக்கு வரும் பலர் ஷாலினியோ என்று தோன்றுகிறது. வெகு நேரமாகி விட்டது திரும்பி போகலாம் என்று அவன் நினைக்கும்போது அவசரமாக சஞ்சீவ் கூட்டத்தில் புகுந்து ஓடி வருகிறார். சாரி சாரி தாமதமாகி விட்டது என்று மன்னிப்பு கேட்கிறார். ஓட்டலுக்கு சென்று சத்யஜித் இரண்டு ஜூஸ் ஆர்டர் செய்கிறான். வேண்டாம் நான் மட்டும்தான் வந்தேன் என்கிறார் சஞ்சீவ்.  அவள் வரவில்லை என்று உறுதியானபின் அவன் அவரை பார்க்க – உங்களுக்கு கஷ்டம் கொடுத்துவிட்டேன் சத்யஜித். அவள் வரவில்லை. வீட்டுக்கே வரவில்லை. இரவெல்லாம் காத்திருந்தோம். எவ்வளவு திமிர் பார்த்தீர்களா. நான் அவளுக்காக பூனை போல ஒரேல்லாம் சுற்றுகிறேன். உங்களை போல ஒரு நல்லவரை காக்க வைப்பதும் வீட்டை விட்டு காணாமல் போவதும் என்று அவளை திட்டுகிறார்.

 

சத்யஜித் எதுவும் பேசாமல் பேசாமல் ஜூஸ் குடியுங்கள் என்று .சொன்னபின் அமைதியாகிறான். அவன் ஜூசுக்கு  பணம் கொடுக்கும்போது அந்த முதிய அப்பா வேண்டாம் என்று கண்ணால் சைகை செய்கிறார். தோற்றுப்போன அந்த அப்பாவை எப்படி தேற்றுவது என்று தெரியாமல் சத்யஜித் வெளியே பார்க்கிறான்.

 

கவலைப்படாதீர்கள். எல்லாம் சரியாக போகும் என்று பொதுவாக சொல்லி வெளியே வருகிறான். எனக்கு கொஞ்சம் வேலை இருக்கிறது என்று போகும் சஞ்சீவ் திடீரென திரும்பி வந்து கைகளை பற்றிக்கொண்டு நீங்கள் மறுக்க கூடாது. இந்த ஜூசுக்கு நாந்தான் பணம் தருவேன். இல்லையென்றால் எனக்கு பைத்தியம் பிடித்துவிடும் என்று முப்பது ரூபாயை அவன் கைகளில் திணிக்கிறார்.

 

எல்லாம் நன்றாக நடந்தால், அவள் திரும்பி வந்தால் அவளை வேண்டாம் என்று சொல்லி விடாதீர்கள். இதை யாரிடமும் சொல்லிக் கொள்ளவும் வேண்டாம் என்று வேண்டுகோள் வைக்கிறார்.  பிறகு திரும்பி போகிறார் அந்த முதிய அப்பா.  பக்கத்து தியேட்டர் ஒன்றில் பேனர் வைக்க மேலே ஏறுபவர்களை பார்த்துக் கொண்டு சத்யஜித் அங்கே நிற்கிறான்.

 

 

 

 

 

 

 

 


No comments:

Post a Comment

இயற்பியலின் தாவோ - பிரிட்ஜாஃப் காப்ரா

இயற்பியலின் தாவோ பிரிஜாப் காப்ரா Fritjof Capra மொ பெ போன். சின்னத்தம்பி முருகேசன் சந்தியா பதிப்பகம் #இயற்பியலின்_தாவோ படிக்கத்  துவங்கி இர...