உறைந்த மெழுகுச் சொட்டு உணர்த்தும் வெப்பம்
காலாதீதத்தின் சுழல் - ரத்னா வெங்கட்–டின் முதல் கவிதை தொகுப்பு கனமான தலைப்புடன் வெளி வந்திருக்கிறது. அதனாலேயே எதிர்பார்ப்புகளை உருவாக்குகிறது. பொதுவாக கவிதைக்குள் தன்னை அமிழ்த்திக்கொண்டு - நீருக்குள் மூழ்கி நிற்கும் அல்லிகளைப்போல - அங்கிருந்து உருவாகும் கவிதைகளே அதிகம். ஆனால் ரத்னாவின் கவிதைகள் பெரும்பாலும் கரைக்கு வந்து திரும்பி பார்த்து பேசுகின்றன. தள்ளி நின்று பார்க்கும் த்வனி இருக்கின்றனது. அதனால் கவிதைகளில் நிதானமும் ஆழ்ந்து சொல்லும் முனைப்பும் வெளிப்படுகின்றன. வாசகனை உணர்ச்சி சுழலுக்குள் புதைக்க முயலும் முனைப்பெல்லாம் இல்லை. கவிதை உருவாகும் சுயத்தை கரையேறி வந்த சுயம் நினைத்து எழுதிப் பார்க்கிறது.
உதாரணத்திற்கு அவருடைய ஒரு கவிதையை வைத்து புரிந்து கொள்ள முயலலாம்.
வெற்றுப் பார்வையை
எதிர்ப்புறமிட்டு
ஓயாத அலைகளிடம்
உள்ளத்தை விடுத்து
தடங்களற்ற ஈர மணலில்
உலாப் போகிறாள் ஒருத்தி
நூறு அடிகள்
எண்ணி
நூறே அடிகள்தான்
தாண்டியதும்
சுண்டியிழுக்கும்
அரூபக் கயிறொன்றில்
நினைவு நிலைக்கு வர
திரும்புகையில்
எண்ணுதல்
அவசியமற்றதாகிறது
இந்த கவிதையில் ‘உலாப்போகும் ஒருத்தி’ என்று தள்ளி நின்று கவனிக்கிறார். பிறகு அவளுக்குள் புகுந்து கொண்டு கவிதையை சொல்கிறார். ஓயாத அலைகள், தடங்களற்ற ஈர மணல் என்பது இழையும் ஆட்களற்ற தனிமையை சொல்லிவிடுகிறது. எத்தனை பாதச் சுவடுகள் என்று நிதானமாக எண்ணி முன்னே செல்கிறாள். அரூப கயிறொன்று இழுக்கும்போது, திரும்புதல் அவசரமாகி விடுகிறது எண்ணுதல் அவசியமற்றதாகிறது. குறிப்பாக பெண்களின் உலகம் இப்படியாகத்தான் இருக்கிறது. எஸ்.ராமகிருஷ்ணன் ஒருமுறை பேசும்போது பெண்கள் தங்கள் வீட்டை ஒரு ஆமை ஓட்டை சுமந்து செல்வது போல சுமந்துகொண்டு செல்பவர்களாகவே இருக்கிறார்கள் என்கிறார். அரூப கயிறு என்றுதான் சொல்கிறார். அது வீடா, அலுவலகமா, காதலனா, நண்பனா, நண்பியா, எதுவும் சொல்வதில்லை. ஏனென்றால் இது யார் இழுக்கிறார்கள் என்பதை விட, இழுபடும் அவசரத்தை, தவிர்க்கமுடியாத திரும்பி சென்று நிலைக்க வேண்டிய பதைப்பைத்தான் சொல்கிறது. தலைப்பு ‘தேரிழுப்பு’ என்றுள்ளது. ஊர்வலம் வந்தாலும் துவங்கிய இடத்தில் நிலைகொள்ளலே அதன் பத்திரம் என்ற நிலையை சொல்லாமல் சொல்கிறது இந்த கவிதை.
ஷங்கர் ராமசுப்ரமணினின் கவிதை ஒன்றில் கவிஞனும் சிறுவயது மகளும் குளத்தில் அவர்களைப்போல நாரைகள் நிற்பதைப்போல காண்கிறார்கள். பிறகு அல்லிப்பூ என்று உணருகிறார்கள்–
அல்லிக்கும் தாமரைக்கும்
வித்யாசம் தெரிந்தது நாற்பது வயதில் எனக்கும் சிறுவயதில் அவளுக்கும் என்பதாக.
இந்த கவிதையில் உணர்வைக்கண்டு சந்தோஷித்து பிறகு அறிவைக்கொண்டு அதை திரும்பி பார்க்கும் பக்குவம் இந்த கவிதையில் வெளிப்படுகிறது. இதுதான் ரத்னாவின் கவிதைகளில் தென்படுகிறது.
பல கவிதைகளில் மனமுதிர்ச்சி வெளிப்படுகிறது. எழுதும் பார்வையில் ஒரு திண்ணிய உட்பொருளை சொல்லும் அழுத்தம் இருக்கிறது. தத்துவத்தை தேடும் கைகளும் இந்த கவிதையில் உள்ளன.
சுதந்திரம் என்ற கவிதையில் –
நீர் நிரம்பிய குடுவையை
வெட்டவெளியில்
இரவு முழுதும்
திறந்து வைத்திருந்தேன்
இரவின் இருளைப்
பிரதிபலித்ததே தவிர
நிலவின் கதிர்கள் கூட
அதைத் தொடவில்லை
இயலாமையின் கடைசி
நிமிடத்து முடிவாய்
சட்டெனத் தண்ணீரை
குளத்தினில் விடுத்துக்
கரையோரம் ஒதுங்கி அமர்ந்தேன்
விருப்பப்பட்டோ இல்லையோ
மிதந்து கொண்டிருந்தது
வெண்ணிலவு.
இந்த கவிதையை படிக்கும்போது சுகுமாரனின் பிரபலமான கவிதை ஒன்று நினைவுக்கு வருகிறது. தமிழின் தவிர்க்கமுடியாத கவிதை இது.
/ அள்ளி கைப்பள்ளத்தில் / தேக்கிய நீர் / நதிக்கு அன்னியமாச்சு
ஆகாயம் அலை புரளும் அதில்
கைநீரைக் கவிழ்த்தேன் / போகும் நீரில் / எது என் நீர் ?
இது மிகவும் தத்துவார்த்தமான செறிவு கொண்ட கவிதை.
ரத்னாவின் ‘சுதந்திரம்’ கவிதை ஏறத்தாழ இப்படி ஒரு காட்சியை உருவாக்கி காட்டுகிறது. ஆனால் ‘சுதந்திரம்’ என்று தெளிவாக தலைப்பிட்டு வேறொன்றைப் பேசுகிறது. குடுவைக்குள் புக முடியாத நிலவின் சுதந்திரம் குளத்தில் மிதக்கும்போது வெளிப்படுகிறது என்று ஒரு பார்வை உள்ளது. இது மிகவும் நேரடியான ஒன்று. இதற்கு கவிதை தேவையில்லை. ஆனால் குளத்தினில் விடுத்துக் கரையோரம் ஒதுங்கி அமர்ந்தேன் என்ற வரி முக்கியமானதாக ஆகிவிடுகிறது. குடுவை நீரை குளத்தில் விட்டுவிட்டு தள்ளி நின்று பார்க்கும்போது இதுவரை தெரியாத நிலவு தெரிகிறது. நிலவை பார்க்கும் சுதந்திரம் என்பது பார்வையின் வியாபகத்தில் உள்ளது. குடுவைக்குள் நிலவை பார்க்க முயல்வதும், குளத்தினில் பார்க்க முயல்வதும் உன் சுதந்திரம். நமது பார்வையை குடுவைக்குள் குவிக்காமல் விசாலமாக விடும்போது நிலவை காண முடிகிறது. பூப்பூத்தல் அதன் இஷ்டம். போய்ப் பார்த்தல் உன் இஷ்டம் என்பது கல்யாண்ஜியின் வரி. இந்த வகை அம்சத்துக்கான இடம் இந்த கவிதையில் உள்ளது. இல்லாவிட்டால் இது ஒரு நேரடியான சாதாரண கவிதை ஆகிவிடும். ‘விருப்பப்பட்டோ இல்லையோ’ என்ற வரி கூட தேவையில்லை. அது இல்லாமலே இந்த கவிதை மேலும் அழகாகும்.
மற்றொரு கவிதை நமது அன்றாடத்தின் சிறுமையை சொல்கிறது. பெரிய தரிசனங்கள் சராசரிகளுக்கு கிடைப்பதில்லை. நீர்த்தொட்டியை கடலென்று எண்ணி உலவும் ஜெல்லி மீன்களைப் போல இருந்துவிடும் ஒன்றை சொல்லும் கவிதை ஒன்று.
‘என் இறையே’ என்ற நேரடியாக பாடுபொருளைச் சொல்லிவிடும் கவிதையில்
யுகங்களின் மாறுதல்களை
நிச்சலனமாகக்
கடந்து மேலேகும் உன்னிடத்தில்
நொடி விதைத்துப் பலன்
எதிர்பார்க்கின்ற
பேதை எனவே எப்போதும் ஆகிறேன்.
நல்ல கவிதை இது. யுகமே ஆயிரமாயிரம் ஆண்டுகள் கொண்டவை. அவற்றின் மாறுதலை பார்க்கும் ஒருவரை சொன்னால், அவர் யுகங்களை கடந்த ஒருவராக நிற்கிறார். அப்படி இருக்கும் ஒருவரிடம் நொடி விதைத்துப் பலன் எதிர்பார்க்கும் சராசரியான அன்றாடமே உள்ளதை சொல்லி அதை குறையாக சொல்லாமல் பேதை என்று சொல்லி விடுகிறார். அங்கே இறைஞ்சுதலும், எதிர்பார்ப்பும் மட்டுமே மிஞ்சி அப்பாவித்தனம் மேலெழுகிறது. மிகவும் கவனமாக எழுதப்பட்ட கவிதையாக இது இருக்கக் கூடும்.
காற்றின் மொழி என்ற கவிதை இந்த தொகுதியில் வெளிப்படும் ரத்னாவின் முதிர்ச்சிகொண்ட பார்வை பற்றி ஓரளவு ஊகிக்க வைக்கிறது. ஒரு அவதானிப்பு, அதை சார்ந்த எண்ணம், இதற்கிடையே மிக மெதுவாக மேலெழும் உணர்ச்சி. ஆனால் ஒரு சமாதானமான அறிவார்த்தமான முடிவில் வந்து நிற்கும் கனிந்த அபிப்ராயம்.
காற்றின் மொழி
காற்றோடு பயணிக்கையில்/ கவனம் தேவை
அதன் வேகத்துக்கும் / விளையாட்டிற்கும் / ஈடுகொடுக்கும் / மனோபாவமும்
சிதறாத முனைப்புடன் / சுழன்று திரும்பவும் / சுழல வைக்கவும்
வெகுண்டு பெயர்க்கவும்/ வெக்கை தணிக்கவும், / கற்றிட வேண்டும்
என்று செல்லும் கவிதை இறுதியில்
முக்கியமாய்
அது விடுத்துச் செல்கையில்
புன்னகையோடு
விடைகொடுக்கவும்தான்.
என்று மிகவும் தீர்மானமாக முடிகிறது. கவிதை முடிந்து விட்டது. அதற்கு மேல் சொல்ல
எதுவுமில்லை. இதில் ஒரு நிறைவு உருவாகிறது. ஸ்டேஷனை விட்டு நீங்கி சென்றபின் ரயில்தொடரின் கடைசி பெட்டியின் கருப்பு முதுகைப் பார்ப்பது போன்ற ஒரு கனமும் தவிர்க்க இயலாமையும் உணரமுடிகிறது.
* * *
நட்சத்திரங்களற்ற இரவு என்ற ஆசைகள் வறண்ட இரவை சொல்லி, அத்தகு தனிமையில் தோன்றும் ஒன்றை விபரீத வேட்கை என்று அறிந்து பிரயத்தனங்கள் இன்றி வரும் மின்மினிகளையே நட்சத்திரமாக்கி திருப்தி அடைந்து விடுகிறார். இதிலும் நான் சொன்ன உணர்ச்சியை அடக்கி மேலெழும் அறிவு முதிர்ச்சியை காண முடிகிறது.
* * *
கொதிக்கும் உலை மேல் மூடிவைத்த தட்டு மெதுவாக அதிர்வதுபோல தீவிரமான உணர்ச்சிகளை வெளிக்கொணர மிக நிதானமான பாதையையே தேர்ந்தெடுக்கிறார் ரத்னா. குறிப்பாக உள்மன வேட்கை, ஏக்கம், முயக்கம் போன்றவற்றை சொல்லும்போது, சொல்லாமல் சொல்ல முயல்கிறார். உணர்ச்சிவசப்படாத வார்த்தைகளால் உணர்சிவசத்தை – ஒரு சங்கேதம் போல - சொல்ல முயலுகிறார். அழுத்திச் சொல்லுவதில்லை. சொல்ல வருவதை பந்தல்கால் போல நடுவதில்லை. துளசி செடி வைப்பது போல ஊன்றுகிறார்.
கீழ்வரும் கவிதையில் அதை காணலாம் –
‘உம்’ என்ற குழைதலிலும்
‘ஆம்’ என்ற அழுத்தத்திலும்
இடைப்பட்ட மௌனத்திலுமென
இற்றுப்போன இழைகளால்
நெய்யப்படுகிறது உறவுகள்.
புறங்கை போர்த்தும் விரல்களின்
அவஸ்தையான ஸ்பரிசம்
நடுக்கமுற வைக்கையில்
சிதிலத்தின் ஆரம்பம் தொடங்க
தூண்களின் ஆட்டத்தில்
அஸ்திவாரங்கள் பலமிழப்பது
அமளியற்று அரங்கேறுகிறது.
இதில் உம் ஆம் என்ற சங்கேத ஒலிகளைத்தான் சொல்கிறார். அவை சொற்கள் அல்ல. ஏறக்குறைய வெறும் ஒலிகள். ‘இற்றுப்போன இழை’ என்ற சொல் பலமிழந்த மன நிலையை அல்லது உணர்வு நிலையை குறிக்கிறது. அதில் வெறுப்பு தெரியவில்லை. நெய்யப்படுகிறது என்ற வார்த்தை இப்படியான பலவீனங்களைக் கோர்த்துக்கொண்டு வலுப்படுவதுதான் உறவு என்றாகிறது. அதற்கு பிறகான வரிகள் ஒரு உணர்ச்சி நெருக்கத்தை சொல்கின்றன. ‘புறங்கை போர்த்தும் விரல்களின் ஸ்பரிசம்’. உள்ளங்கை பற்றுவதை படித்து பழகிய நமக்கு புறங்கை போர்த்துதல் புதிய ஒன்றாக இருக்கிறது. பொத்துதல் அல்ல. போர்த்துதல். சற்று கவனமாக ஊன்றி வாசிக்கும்போது போர்த்தப்படும் புறங்கையின் நிலையும், போர்த்தும் உள்ளங்கையின் நிலையும் ஒருவாறாக அனுமானிக்கலாம். போர்த்தும் என்ற வார்த்தை மூலம் புறங்கை என்பதை சொல்லி, உள்ளங்கை என்ற வார்த்தையை தவிர்த்திருக்கிறார். ‘நடுக்கம்’ ‘அஸ்திவாரங்கள் பலமிழப்பது’ என்பவை, தவிர்ப்பது போன்ற அந்தரங்கமான பாவனை கூட்டாக வெற்றிகொள்ளப்படும்போது, ஏற்றுக்கொள்ளப்படும் பரஸ்பர சரிவு என்று பொருள் எழுகிறது.
அவஸ்தை என்று இதில் குறிக்கப்படுவது உண்மையில் அவஸ்தையானது அல்ல என்ற உணர்வுநிலையையே இந்த கவிதை சொல்கிறது. ஆனால் இத்தகைய விளக்கத்தை நாம்தான் விரித்துக்கொள்ளவேண்டும். ஓலைச்சுருளைப் போல மூடி வைக்கப்பட்டிருக்கும் கவிதை இது. இங்கு எழுதப்பட்டுள்ள விளக்கமே ஒருவகையில் வாசிக்கும் கவிதை அனுபவத்துக்கு நியாயம் செய்யாததுதான். இந்த ஓலைச்சுருள் அம்சம் பற்றி சொல்லப் புகும்போது இந்த விவரணை தவிர்க்க இயலாமல் இக்கட்டுரையில் எழுந்து விட்டிருக்கிறது.
இது போலவே மற்றொரு கவிதையிலும் மிக சன்னமாக அந்தரங்க உணர்வொன்றை சொல்லிவிட்டு கடக்கிறார்.
ஆதித் தேடல்களை
அகர வரிசைப்படி
ஆரோகண அவரோகணம்
சொல்லி நீ இசைக்கையில்
புதிராகும் உணர்வை
உஷையின் ரகசியம்
முத்தைப் பனித்ததென
பிறர் அறியாது
உன் விரல்களில் அணிவிப்பேன்.
பொதுவாக கவிதை என்பது வாசகனுக்கு சொல்லப்படுவதில்லை. வாசகனால் உணரப்படுவதே.
கவிதையின் காரணி உணர்வுகள்தான். அதன் வெப்பத்தில் மெழுகு சொட்டாய் உருகி, வெப்பத்தை தாண்டியபின் அந்த நிலையிலேயே உறைந்து உருகுதலை நினைவூட்டுவது போல சில கவிதைகள் அமைந்துள்ளன.
* * *
பல கவிதைகளில் உதிரிகளாய் நிற்கும் சொற்களை தவிர்க்கலாம். அவை கவிதையோடு ஒன்றுவதில்லை. மின்மினிக் காதல் கவிதையில் ‘சிதைவைத் தகர்த்து’ என்ற வார்த்தை எதையும் செய்யாமல் உதிரியாக நிற்கிறது. இந்த தொகுப்பில் ஒரு கவிதை – இடக்கரடக்கல் - தொகுப்பின் பொது ஓட்டத்தில் கலக்காமல் தனியாக, வித்தியாசப்பட்டு (odd) நிற்கிறது.
* * *
சில கவிதைகளில் ஆரம்ப வரிகளை மீண்டும் இறுதியில் எழுதி ‘முடிப்பு’ என்ற வகையிலான மேடைப்பேச்சு பாணியில் அமைத்திருக்கிறார். அது தேவையில்லை என்றே தோன்றுகிறது. நவீன கவிதை ஒரு விளிம்பற்ற நீர்த்தேட்டை . அப்படி மீண்டும் வரிகளை எழுதி முடிக்கும்போது கவிதை வளையம் போல முற்றுபெற்று விடுகிறது. ஒன்றை சொல்லி நிறுவமுயலும் பாணி அது. தவிர்க்கலாம்.
உதாரணமாக –
ஒற்றைக் குடையின் விரிப்பு / போதுமானதாக இருக்கிறது கவிதையில்
ஆடிக்கொண்டே இருக்கிறது கிளை/ கவிதையில்
ஆரம்பத்தின் அதே வரிகள் மீண்டும் இறுதியில் சொல்லி முடிகின்றன. அது தவறில்லை என்றாலும் அதில் எந்தவித மேலதிக செறிவும் கிடைப்பதில்லை.
ஓரிரு கவிதைகள் பல உவமிக்கும் விஷயங்களை ஒன்றன் கீழ் ஒன்றாக அடுக்கிச்செல்கிறது. இவை உதிரிகளாக தொங்குகின்றன. அதில் தலைப்பை வைத்து முடிச்சிட்டுக்கொண்டு வாசித்தால் சரியாக வருகிறது. ஆனாலும் சரணங்களுக்கு பின்வரும் பல்லவி வரிகள் போன்ற பாணி உருவாகிவிடுகிறது. அது ஒரு ஒடுக்கத்தை உருவாக்கிவிடுகிறது.
உதாரணமாக –
- குற்றம் சொல்லிப் பயனில்லை என்ற தலைப்பில்
- தொடங்கிய அதே புள்ளியில்/ ஒவ்வொரு முறையும் / விடுத்துச்செல்லும் / காலத்தை
நிதர்சனம் / நோக்கிய பொழுதுகளில்/ கனவுகளை
அள்ளித் தெரிக்கவிடும் / கண்களை
...மாயப் புன்னகையுடன் / முன்றில் தாண்டி ஓடும் / கற்பனைகளை ...
என்று மேலும் பெயரெச்சங்களாக சொல்லிப்போகிறது
சரி.
தனித்தனியாக அமைத்தாலும் திருப்தி இல்லை, வளையம்போல வரிகளை மீண்டும் சொல்லி முடித்தாலும் திருப்தி இல்லை என்றால் எதுதான் திருப்தி தருகிறது என்று கேள்வி நமக்கு எழக்கூடும்.
ஒன்றைத்தொட்டு ஒன்றாகவோ, சிதறலாகவோ - உணர்வோட்டத்தை சொல்லிப்போகும்போது உணர்வில் ஒருமை கூடிவருகையில் அது தானாகவே தனது விளிம்புகளை அமைத்துக்கொள்ளும். இது நாம் அமைப்பது அல்ல. அதுவாகவே அமைவது. இவ்வகை தியானப்பாங்கு எழுகையில் கவிதை தன்னையே அமைத்துக் கொண்டுவிடுகிறது. எழுதுபவர் ஒரு கருவியாக எஞ்சவேண்டும்.
எந்த ஒரு முக்காதிரமுமற்று
இல்லாது போவதென்பதன்
அர்த்தத்தை உணரத்
தலைப்பட்டிருக்கிறேன் - என்று ஆரம்பித்து
காற்றில் மருள்கொண்டு சுழலும் கிளைகளை சொல்லி, பொழியும் மேகத்தை சொல்லி விட்டு
கடந்து சென்ற பின்னர்
நிற்பதும்
முறிந்து கிடப்பதும்
வேறல்ல
ஆனாலும்
அவை இனி ஒன்றல்ல – என செறிவாக எழுதுகிறார்.
நகர்வது மேகத்தின் இயல்பு, முறிவதும் முளைப்பதும் கிளையின் இயல்பு, நகரவிடாதிருத்தல் வேரின் இயல்பு என்று சொல்லி சிறகொலியின் சுதந்திரம் அசைப்பது இயல்பெனில்
எந்த ஒரு முகாதிரமுமற்று
இல்லாது போவதேன்பதன்
அர்த்தத்தை செயலாற்றத்
தலைப்பட்டிருக்கிறேன்
என்று ஆரம்ப வரிகளை அப்படியே – ஆனால் ஒரு வார்த்தையை மாற்றி - மறுபடி எழுதுகிறார். அதாவது முன்பு உணரத் தலைப்பட்டேன் என்கிறார். இறுதியில் செயலாற்றத் தலைப்பட்டிருக்கிறேன் என்கிறார். அது எப்படிஎன்றால்
மிதத்தலும் கடத்தலும் சிறகடித்தலுமாய். – என்கிறார்.
விடுத்துப் போவதையே அப்படி சொல்கிறார். இந்த கவிதையில், இல்லாது போவது; இல்லாதிருப்பது என்ற இரு வார்த்தைகளை கவனித்தால் – விட்டுப் போவதாக ஒரு அர்த்தமும், போய்விட்டதால் அந்த இல்லாமையே ஒருவிதமாய் இருப்பை நினைவூட்டிக்கொண்டே இருப்பதாக ஒரு அர்த்தமும் உண்டாகிறது. இப்போது இல்லாதிருத்தல் என்ற தலைப்பு இல்லாது + இருத்தல் என எப்படி மாறுகிறது என்பதை கவனிக்கலாம். கவிதையில் இப்படி அவர் திட்டமிட்டு அமைத்தாரா, இல்லையா என்று தெரியவில்லை. ஆனால் அப்படி ஒரு இடம் அமைந்துவிட்டிருப்பதே கவிதையின் தியானப்பாங்கு என்கிறேன்.
அரூப இரவு என்பதும் நல்லதொரு கவிதை.
உரசிப்பார்த்த
ஒற்றை மேகம்
பற்றிஎரிக்கிறது நிலவை என்று துவங்கி
மௌனத்தை ஜபிக்கையில் - பொறிபறக்க முத்தம் - நாதமாகிறது காற்று - ஆலாபனையில் திளைக்கிறது மழை - என்று சொல்லிப்போய் இறுதியாக
ஏதும் அறியாது
இருள் போர்த்தி
உறங்குகிறது உன் இரவு என்று முடியும் கவிதையில்
ஏக்கம் ஒருபுறமும் அதுபற்றிய பிரக்ஞையே இல்லாமல் உறங்கும் ஒருவனின் இரவையும் அடுத்தடுத்து சொல்லி நிறுத்துகிறார். மேலதிக விவரணையோ, குற்றச்சாட்டோ இல்லை. அதுவே பெரும் பாரத்தை தந்துவிடுகிறது.
* * *
‘தீர்ப்பு’ என்ற கவிதை விலகலை நிதானத்துடன் எதிர்கொள்ளும் கவிதை.
உனதான நேரத்தை
திருப்பி கேட்டபின்னர்
பெறுவதன் அவசியத்தை
நீ உரைக்கும் முன்னரே
விலகுதலின் துயர்
உரசிச் சென்றது என்ற வரி மிக துல்லியமான உணர்வை சொல்வது. உறவுக்கு
இடையில் நேரம் என்பது கொடுக்கல் வாங்கலாக ஆகும்போது உறவே சட்டென சரிந்து விடுகிறது.
மனுஷி எழுதிய ஒரு கவிதையில்
"எப்போது நிராகரிப்பாய் என்னை ?"
எனக் கேட்டாய்.
சற்றும் யோசிக்காமல் சொன்னேன்,
"நீ என்னை நிராகரிப்பதற்கு ஒரு கணம் முன்பு -. என்ற வரி
நினைவுக்கு வருகிறது. அவமதிப்பை அல்லது கைவிடுதலை ஒரு பெண் உணரும் அந்த கணத்திலேயே விலகலும், துயரும் உருவாகி விடுகிறது. வேறு எதற்காகவும் அது காத்திருப்பதில்லை.
* * *
தொகுப்பில் சில அழகான சொற்றொடர்கள் மிதக்கின்றன.
காலடியில் சுருண்ட நிழல்,
துயரின் கடைசி பீலி
அனுமதி கேட்டா விதி அத்துமீறுகிறது
பரிசுத்தமான இனிப்பான விழிநீரை
பொறிபறக்க முத்தமொன்றை இட்ட வேகத்தில் உதிருகிறது ஒரு நட்சத்திரம்
சமாதானத்தின் இனிமையும் முன்னதன் வலியும் சேர்ந்த நூதன மதுவின் சுவை
* * *
ரத்னாவின் கவிதைகளில் ஒரு நிற்றல், கற்றல் தொடர்ந்து ஒலித்துக்கொண்டே இருக்கிறது. ரணங்களுக்குப் பிறகும் அவற்றை காற்றில் ஆறவிடும் நிதானம்.
எனக்கு தெரிந்த நண்பன் ஒருவன் பள்ளிக் காலத்தில் விளையாட்டு தனம் மிக்கவன். ஒருமுறை இளநீர் சீவும் வியாபாரியிடம் தான் அப்படி சீவி பார்க்கவேண்டும் என்றான். அவரோ இளநீர் கனமானது. வழுக்கும். சீவும் கத்தியும் கனம். வழுக்கும் என்று தடுத்தார். ஆனால் அவன் எச்சரிக்கையாக சீவுவதாக சமாதனம் செய்து இளநீரை அவர் போலவே சீவினான். இரண்டு மூன்று சீவியபின் மற்றொன்றை சீவும்போதுஇளநீர் வழுக்கி ஆட்காட்டி விரல் துள்ளி தரையில் விழுந்தது. உணர்ந்துகொண்டவன் சட்டென குனிந்து விரலை எடுத்து பக்கத்தில் இருந்த சர்பத் கடை கண்ணாடி டம்ப்ளரில் ஐஸ் துண்டுகளை போட்டு அதில் விரலை போட்டுக்கொண்டு சைக்கிளில் ஒருவரோடு ஆஸ்பத்திரிக்கு சென்றான். பிற்காலத்தில் வளைந்த விரலை பார்க்கும்போதெல்லாம் எல்லோருக்கும் அவனது அபாய குறும்பு நினைவுக்கு வரும். எனக்கு அவனது நிதானம் ஆச்சரியமளிக்கும். ரத்னாவிடம் அப்படியான நிதானம் தெரிகிறது.
உதாரணமாக இரண்டை சொல்லலாம் –
நட்பின், அன்பின், காதலின் – எதுவோ ஒன்று. அது விலகிச்சென்றபின் நெருக்கத்தை விரட்டிவிடாமல் இருக்கும் நிதானமான மனம் செயல்படுகிறது. அது எவ்விதமான உறவு என்பதைக்கூட அவர் சொல்வதில்லை. வாசகருக்கு விடுகிறார். (கண்களை இமைக்காமல், புன்னகையை நிறுத்தி, மூடிய வாய்க்குள் நுனி நாவால் உள்கன்னத்தை உந்தியபடி சிரிக்கும் திட்டமிட்டு குறும்பு இது)
ஒதுக்கிய பிறகான / சாம்பல் பொழுதுகளை / மறந்திடாது / அள்ளிச் சேகரித்து/ கவனமுடன் /
உன் தோட்டத்தில் / தூவித் தெளித்திடு /
மலர்கள் பூக்காத
செடிகள் தேடி
ஒரே ஒரு பட்டாம் பூச்சி
வரக்கூடும்
என் சாயலில் .
மற்றொன்று ‘தீர்ப்பு’ கவிதையில் உறவை முறித்துக்கொண்டு ஒடுபவரிடம்
விடுதலை என்பதன் பொருள்
சிறைப்படுதலேன்பதை
ஓடும் அவசரத்தில் இருக்கும்
உன்னிடம் எப்படி விளக்குவேன் ?
* * *
No comments:
Post a Comment