Friday, 22 October 2021

வாதையின் கதை - மனுஷ்யபுத்திரன் - உயிர்மை

 


நிவாரணங்களை அடையாளமிடும் வாதையின் முடிச்சுகள்

வாதையின் கதை
மனுஷ்யபுத்திரன்
உயிர்மை பதிப்பகம்
uyirmai@gmail.com

 நீண்ட நாட்களுக்குப் பிறகு மனுஷ்யபுத்திரனின் கவிதை தொகுப்பு ‘வாதையின் கதை’. படிக்க முடிந்தது. வாதை எனும் சொல்லே வலி என்பதை தாண்டிய அவஸ்தையை சொல்வது.  இதை எழுதுவேன் என்று நினைத்திருக்கவே இல்லை. இது நிகழ்ந்திருக்கிறது என்று முன்னுரையில் சொல்வது இதில் கவிதை இருப்பதற்கு கட்டியம் ஆகும்.

சமீபமாக அவர் மருத்துவமனை அறுவை சிகிச்சை நோயுற்றிருந்த காலம் இவற்றின் அனுபவங்களை தொகுத்திருக்கிறார். இரத்த நிற அட்டைப்படம், ஓர் காப்சூல் வடிவே ஜன்னல் போல இருக்கும் கோடுகள், உள்ளே கருப்பை சிசுவின் உருவம் கொண்ட அட்டைப்படம் தொகுப்புக்கு பொருத்தம். தீப்பெட்டிக்குள் இருக்கும் பொன்வண்டைப் போல முடங்கி இருந்த நாட்கள் என்கிறார். “ஒரு எழுத்தாளனுக்கு நடப்பது என்பதை அவன் அதை எழுதவேண்டும் என்பதற்காக நடக்கின்றன என நம்புகிறேன்” என்ற வரி ஆழமான உணர்சிகளை ஏற்படுத்துகிறது.

நோயுறும்போது முதலில் தாக்கப்படுவது உடல்தான். ஆனால் நோய்மை மனதையும் இழுத்துக் கட்டிகொண்டுவிடுகிறது. அங்கேதான் வலி வாதையாகிறது. ஆனால் எதுவுமே தவிர்க்கமுடியாத ஒன்றாகிறது.

இந்த உடல் ஏன் எப்போதும்

அநீதி இழைக்கப்பட்ட உடலாகவே இருக்கிறது ?

விதியோடு ஆடும் சூதாட்டத்தில்

இந்த உடலை தவிர 

பணயம் வைக்க என்னிடம் ஏதுமில்லை .

 இந்த உடல் ஏன் எப்போதும் | இவ்வளவு கனமாக இருக்கிறது “

கனத்த இதயமொன்ரைறை

அது எப்போதும் தாங்கிக் கொண்டிருக்கிறது

நோயுற்றவனுக்கு வலி இரவில் அதிகம் என்பார்கள். ஏனென்றால் உலகம் தூங்கும் நேரத்தில் அவன் விழித்தே இருக்கவேண்டி இருக்கிறது. அனைத்துமே அதிகமாக துருத்தி நிற்கும் இரவுகள் அவை. அதை சொல்கிறது –

மருத்துவமனை வாசல் கூரையில்

அதிகாலை மழையின் பேரிரைச்சல்

அமைதியிழக்க வைக்கிறது

உண்மையில் எவ்வளவு மழையோ

அதைவிடவும் அதிகமாக பெய்கிறது. – என்ற கவிதை அதீதத்தை எளிமையாக சொல்லிவிடுகிறது.

ஒப்புக் கொடுத்தல் கவிதையில் கடவுளிடம் கூட முழுமையாக தன்னை ஒப்புக்கொடுக்காத ஒருவர்

மருத்துவரின் பளபளக்கும்

கத்தி முனையில் விடியும்

இந்த அதிகாலையில்

முழுமையாக தருகிறேன் என்னை

கூண்டிலிட்ட ஒரு பறவை போல் – என்கிறார் அம்மா, காதலி

கடவுள் எல்லோரிடமும் ஒப்புக்கொடுக்காத . ஒருவர் மருத்துவர்

முன் ஒப்புக் கொடுக்க வேண்டி இருக்கிறது. பிறவெல்லாம் மனம். இது உடல். இந்த கூர்மையான நிதர்சனம்தான் கவிதை எங்கும் பரவுகிறது.

மனங்களின் கடல் கவிதை மிகவும் நெருக்கமான ஒன்று. உடல்கள் இம்சித்துக் கொண்டே இருக்கும்போது வாழ்க்கை தடுமாறுகிறது.  சுயமாக உருவாக்கிக் கொண்ட எல்லாமே தடுமாறுகின்றன. ஆனால் இந்த வாழ்க்கைக்குள் உடலை வைத்துக்கொண்டும் மனதை வைத்துக்கொண்டும் எப்படி சமாளிப்பது ?



உடலாக இந்த வாழ்க்கைக்குள் வந்தவர்கள்
உடலாகவே வெளியேற வேண்டும் எனில்
நம் மனங்களின் கடல்களை
நாம் எப்படிக் குடிப்பது ?
அவ்வளவு உப்பாக இருக்கிறது
அவ்வளவு தேனாக இருக்கிறது
அவ்வளவு முடிவற்று இருக்கிறது

‘அன்பின் ரகசிய வழிகள்’ கவிதை மிகவும் சத்தியமானது. நோயுறும்போது உடலை விட மனம் சோர்வாகி விடும்.  மனத்தைக் கொண்டுதான் உடலை மீட்க அல்லது சமாளிக்க முடியும் நிலை ஏற்பட்டு விடுகிறது. நோயுற்றவனின் மனம் உடலை ஒரு விட்டில் பூச்சி போல எப்போதும் சுற்றிக்கொண்டே இருக்கும். அத்தகைய மன வலுவிழந்த நிலையில் அன்பான விசாரிப்புகளே பெரிய தெம்பாகி விடும்.  இந்த கவிதையை படிக்கும்போது உடல் நலம் குன்றிய ஒருவர் “அவன் என்னைப்பார்ர்க வரவே இல்லை “ என்று குறைப்பட்டுக்கொள்ளும் காரணம் என்பது என்ன என்று புரிகிறது. ‘நிலைமை அப்படி, சூழல் அப்படி, நேரம் அப்படி, ஐசியு வில் உள்ளே விடமாட்டங்க என்ற பல நூறு காரணங்களை கேடயங்களாக்கிக் கொண்டு திரியும் நம் மனதை கேள்வி கேட்கிறது இக்கவிதை.

சிகிச்சை பிரிவில் இரவு பகல் கிழமை எதுவுமற்ற காலம் ஒரு சுவரோவியம் போல இருக்கிறது என்கிறார். இந்த நிலையில் கவிதையின் வரிகள் நெகிழ வைக்கின்றன. செவிலி ....

வாழ்க்கையில் எங்கெங்கோ கிடைத்த ரணங்களுக்காக
இங்கே வந்து அழுது கொண்டிருப்பவனை
எப்படி தேற்றுவது எனத் திகைத்தவள்
சட்டென என் தலைமுடியைக் கோதினாள்
எவ்வளவு மிருதுவான முடி உங்களுக்கு
இது போன்ற கேசம் எனக்கிருந்தால்
எவ்வளவு நன்றாக இருக்கும்
நான் இதில் ஒரு சிறிய குடுமி போட்டுக் கொள்ளட்டுமா ?
என்றவள்
உச்சந்தலையில் ஒரு பிடி கேசத்தில்
ஒரு ரப்பர் பேண்டை இறுகக் கட்டினாள்
இதுதான் நன்றாக இருக்கிறது
வெளியே போனதும் இதை மாற்றக்கூடாது என்றாள்.
அன்பின் ரகசிய வழிகள் ஆயிரம்
சிகிச்சையின் மாற்று வழிகள் ஆயிரம்
                           ***

கடவுளோடு இல்லாதவன் மனதுக்கு – குறிப்பாக நோயுடன் கைகுலுக்கி இருப்பவருக்கு – மிகவும் பரிச்சயமானது.

அபாயகரமான புள்ளியில் தன்னை நிறுத்திக் கொண்டிருப்பவனை மருத்துவர் பரிசோதித்து சிக்கலை விளக்குகிறார். இதயத்துக்கு செல்லும் பாதைகள் அடைபட்டு கிடக்கின்றன. | உங்களுக்கு நீங்களே வழங்கிக் கொண்ட தண்டைனைகளா இவை ? | என்கிறார். ஒரு எழுத்தாளனின் வாசகனான அந்த மருத்துவர் என்பது புலப்படும்போது அவர் சொல்வது

 ஆனால் ஒன்று

நீங்கள் ஒருபோதும் கடவுளோடு இருந்ததில்லை

ஆயினும் கடவுள் எப்போதும்

உங்களோடு பிடிவாதமாக

இருந்துகொண்டிருக்கிறார்

 ***

 ஒருவிதத்தில் பார்த்தால் வலிகளினூடே இருப்பை தக்க வைத்துக்கொண்டு வலியை தாங்க முடியாதவன் மரணத்தை எதிர்கொள்ளவும் முடியாமல் தவிக்கும்போது ‘இருக்கிறோம்’ என்ற நிதரிசனமே பெரிய வரமாகிறது. உள்ளம் லேசாகி மேலெழுகிறது. கருணைக்குப் பிந்தைய வருத்தங்கள் என்ற நீண்ட கவிதையில் நேரம் போவது தெரியாமல் கிடக்கும் பிணியாளி தன்னை யார் பார்க்க வந்தார்கள் யார் பார்க்க வரவில்லை என்று பட்டியலிடுகிறான். தராசின் ஒரு தட்டில் வந்தவர்களையும் ஒரு தட்டில் புறக்கணித்தவர்களையும் வைக்கிறான்.

| எப்போதும் போலவே |  இப்போதும்  |  அன்பின் தட்டு கனமற்று மேலேயும் |

புறக்கணிப்பின் தட்டு கனத்து கீழேயும் இருந்தது |

ஒரு பக்கமாய் சரியும்

தராசின் முள்

நெஞ்சில் முள்ளாகக் கீறியது .

 பிறகு அவர்கள் வராமல் போனதற்கான நியாயமான பல காரணங்களை தானே அடுக்கிக் கொள்கிறான். பிறகு

பார்ப்பதாலோ கேட்பதாலோ

இந்த வலி நீங்கி விடவா போகிறது

என்று நினைத்தான்.

 ஆனாலும் மனது சமாதானம் ஆவதில்லை. ஒரு முறையேனும் வெயிலில் நான் உங்களுக்கு குடை பிடிக்கவில்லையா ? உங்கள் கோப்பையை நிரப்பி தரவில்லையா? என்று ஆதங்கப் படுகிறான்.

 இதையெல்லாம்

நினைக்கவும் வருந்தவும்

இன்னும் உயிரோடு இருக்கிறோம் என்பது

சட்டென அவன் நினைவுக்கு வந்துவிட்டது

அவனது தராசு

பிடி நழுவி கீழே விழுகிறது

எவ்வளவு பெரிய கருணை

எவ்வளவு பெரிய அன்பு என

கண்ணீருடன் தேம்பினான்.

இப்போது ஒரு வருத்தம் இல்லை

ஒரு புகார் இல்லை.

***

 நோயின் பிடி மெல்ல நழுவி நிவாரனங்களின் கை அதை ஏந்திப் பிடிக்கையில், புதிய தைரியங்கள் மழைக்குப் பிந்திய துளிர்கள் போல முளைவிடும். கட்டுப்பாடுகள் மீது ஒரு செல்லமான, தற்காலிக ஏளனம் உருவாகும். இதை ஒரு மழலைத்தனத்தொடு எழுதி இருக்கிறார் இந்த கவிதையில்.

 இனிப்பின் முகம் கண்டு மூன்று வாரங்களாகி விட்டன என்று துவங்கும் கவிதையில் அவன் கனவில் கூட இனிப்புகள்தான் வருகின்றன. வாசலில் கோவில் மணி அடிக்க வெளியே வரும்போது ஒரு சிறுமியின் பிறந்த நாளுக்கு அர்ச்சனை நடக்கிறது. உடனிருப்பவர்கள் தீபத்தை தொட்டு வணங்குகின்றனர். | சிறுமியின் அம்மா தயங்கி தயங்கி | சார் பிரசாதம் சாப்பிடுவீர்களா  என்றாள். | புன்னகையுடன் ஆமோதித்தேன் | காகிதத்தட்டு நிறைய பஞ்சாமிர்தமும் | ஆவி பறக்கும் கேசரியும் தந்தாள் | ஒரு துளியை நாவிலிட்டேன் | ஆர்ப்பரித்து எழுந்தது என் சர்க்கரைக்கடல் |

 என்று தொடரும் கவிதை சிறுமி தரும் அன்பளிப்பு சாக்லேட்டை வாங்கி ரகசியப் பைக்குள் மறைத்துக்கொண்டு வாழ்த்துகிறான்.

 யாரென்று தெரியாத

அந்த சிறுமியின் இப் பிறந்தநாளில்

அவளை வாழ்த்தவும்

அவளது முதல் பிரசாதத்தையும்

முதல் சாக்லேட்டையும் பெறவுமே

பிழைத்து வந்தேன் .

 நீங்கள் எனக்கு . | அரை ஸ்பூன் சர்க்கரையை | நிர்தாட்சண்யமாய் மறுத்தீர்கள்

கடவுள் ஒரு மனிதனின் | உண்மையான பிரார்த்தனைகளுக்கு | செவி சாய்க்கிறார்

காலையில் அமிர்தத்துடன் வந்து கதவு தட்டுகிறார்.

 டாக்டர் நம்புங்கள்

சர்க்கரை அளவு

கட்டுக்குள்தான் இருக்கிறது – என்று முடியும் கவிதையில் மனிதனும் அவன் வாழ்வுக்குள் அவனும், கடவுளும், எல்லாமும் இருக்கின்றன. அதில் ஒரு குழந்தைத்தனம் இருக்கிறது.

***

 தொகுப்பில் மேலும் சில வரிகளை அசைபோட்டுக்கொண்டே இருக்கலாம்

 இதயத்திற்கு செல்ல

கவிஞனின் பாதைபோல குழப்பமானதல்ல

மருத்துவரின் பாதைகள்

***

எச்சில் கிண்ணம்

ஏந்தும் தேவதைகளுக்கு

அவை எச்சில் என்பது நினைவிருப்பதில்லை

தாங்கள் தேவதைகள் என்பதும் நினைவிருப்பதில்லை

*** 

சிகிச்சையின் முதல் நிபந்தனை

நம் அந்தரங்கத்தை

முற்றாக கைவிடவேண்டும் என்பதே

நம் உடல்கள்

உடல்களல்ல

ஒரு மரச்சிற்பமாகி விடுகிறது

***

நமக்கு தேவைப்படும் உதவிகள்

திடீரென எல்லையற்றதாக மாறிவிடுகின்றன

சார்ந்திருக்கிறேன்

சற்றுமுன் பிறந்த குழந்தையை விடவும் அதிகமாக

*** 

இந்த உலகில்

ஒருவர் இன்னொருவருக்கு தரமுடியாததும்

ஒருவர் இன்னொருவரிடமிருந்து

எடுத்துக்கொள்ள இயலாததும்

இந்த வயது மட்டும்தானே

அதற்கு பதிலாகத்தானே

இந்தப் பூங்கொத்துகள்

***

 பல்வேறு விதமான வலிகள், பொறுத்தல், பொறுக்க முடியாமை, ஆறுதல்கள், எதிர்பார்ப்புகள், ஏமாற்றங்கள், எதிர்பாராமைகள், மழை, குளிர், அன்பின் சாரல்கள் என பலவிதமாய் பலவித அனுபவத்தின் சாரத்தைக் கொண்டு தீட்டப்பெற்ற ஓவியங்களாகின்றன கவிதைகள். 61 கவிதைகளை படித்துவிட்டு மனத்தின் சௌகரியப்படி மீண்டும் மீண்டும் வாசித்துக் கொள்கையில், அது தனக்கான ஒரு வரிசையை உருவாக்கிக் கொள்கிறது. அது வலிகளில் துவங்கி,  வாதைகளை பார்த்து கடந்து, நம்பிக்கைகளை ஆறுதல்களை கண்டு நெகிழ்ந்து மனிதனை அவனது சக இருப்பை காம்பில் முளைக்கும் இரு இலைகளைப் போன்ற இயல்போடு இயைந்து கொள்கிறது. எதிரெதிர் பக்கங்களில் மோதிக்கொள்ளும் மணியின் நா, ஒரேவித ஒலியைத்தான் எழுப்புகிறது என்ற நாத நிஜத்தை அறிந்து கொள்கிறான். வாசித்து முடிக்கையில் வாதையின் கதை வாழ்வதன் கதையில் ஒரு அங்கமே என்றாகிறது.

 வாதை கடைசி நிறுத்தம் அல்ல என்று புரிந்துவிடும்போது, மீளுதல் உவகை கொண்டுவிடுகிறது. மிச்சமிருக்கும் வாழ்வின் ருசிகள் புது அர்த்தம் காட்டுகின்றன. அவற்றில் புகார்கள் இல்லை. ‘ஆர்பரித்து எழும் சர்க்கரைக் கடலுடன்’ வீடு திரும்புதல் நிகழ்கிறது. அதையே மனுஷ்யபுத்திரனின் இந்த வரிகள் சொல்கின்றன. சொல்லிக் கொள்கின்றன.

வாழ்வுக்கு திரும்புதல் என்றால்

எனக்கு கடைசியாக விட்டுவந்த இடங்களுக்கு

திரும்ப வேண்டும்

பாதியில் விட்டுவந்த வேலைகளுக்கு

திரும்பவேண்டும்

இன்னும் முழுமையியாடையாத

அன்பிற்குத் திரும்பவேண்டும்

 ***

ரமேஷ் கல்யாண்
9148495665

No comments:

Post a Comment

கொடை மடம் - சிந்தாந்தப் பின்னணியி (யா)ல் கை நழுவும் காதலைப் போலொன்று

    கொடை மடம் - நாவல் சாம்ராஜ் பிசகு வெளியீடு, சென்னை   சிந்தாந்தப் பின்னணியி (யா)ல் கை நழுவும்   காதலைப் போலொன்று ஒரு நாவல் எ...