Friday 10 December 2021

சகர்வானின் உருமாறும் யானைகள் - பணிக்கர் பேத்தி - ஸர்மிளா ஸெயித்


  சகர்வானின் உருமாறும் யானைகள்


பணிக்கர் பேத்தி
ஸர்மிளா ஸெயித்
காலச்சுவடு – 04652-278525

ஸர்மிளா ஸெயித்-ன்  பணிக்கர் பேத்தி”  - நூறுபக்க நாவல் - இலங்கை மண்ணின் வாழ்வின் ஒரு கீற்றை சொல்லிச்செல்கிறது. விரிவான நாவல் அமைப்புக்குள் போகாமல் ஒரு ஓடையைப் போல ஒருமைகூட்டி ஓடிச்சேர்கிறது இந்த நாவல்.

பணிக்கர் என்ற பெயர் இலங்கையில் யானைகளை வளர்த்து பழக்குபவர்களை குறிக்கும் சொல். சகர்வான் என்ற முதிய பாட்டி அயனா எனும் இன்றைய தலைமுறை பேத்திக்கு உரையாடலாக, தனது முன்னோர்களைப் பற்றிய கதைகளை - நிஜக் கதைகளை -  சொல்லும்படியான கதையோட்டத்தில் - சகர்வானின் வாழ்வும் சொல்லப்படுகிறது.  தலைமுறைகள்  மாறும்போது முன்னோர் நிகழ்வுகள் கதைகளாகின்றன. பிறகு சரித்திரங்களாகின்றன.  அந்த சரித்திரங்கள் பின்வரும் சந்ததிகளுக்கானது. பொது சமூகத்துக்கானதல்ல.

மாறிவரும் நாகரிக சூழல்களில், வசதிகளுக்கேற்ப உடனே வளைந்து கொடுத்து போய்விடும் சுயநலமிக்க வாழ்வில், சுருங்கிப்போன மனங்களுடன் கூட்டுப்புழு வாழ்க்கை உசிதமானது என்று நினைக்கப்படும் இன்றைய சூழலில் இந்த நாவலின் இடம் மிக சுவாரசியமானது. அத்தனை இடர்களுக்கு இடையிலும் தனது அடையாளத்தை இழந்துவிடாத,  குடும்பம் கற்றுக்கொடுத்த நேசங்களை அடுத்த தலைமுறைக்கு கைமாற்றித்தரும் தலைவியாக இருக்கிறாள் சகர்வான்.  அதே சமயம் நடைபாதையில் வியாபாரம் செய்த முதல் பெண்மணியாக இருந்து, வறுமையிலிருந்து உயர்ந்து, பொருளாதார ரீதியாக மகள்கள், பேரப்பிள்ளைகள் என எல்லோருக்கும் கொடுக்கும் நிலையில் இருப்பவள் சகர்வான் என்ற உரத்து சொல்லப்படாத நிதர்சனம் ஒரு பூனையைப்போல பதுங்கி உட்கார்ந்திருக்கிறது இந்த நாவலில்.

நாடே பிரபலமான அலி முகம்மது பணிக்கர் கொம்பன் யானையை அடக்கி பழக்கியவர். அவர் அதை அரசாங்கத்துக்கு அனுப்பி வைத்து, புத்தமடத்தில் சேவை செய்து இறந்தது. அவரது நினைவாக இலங்கையின் ஆயிரம் ரூபாய் நோட்டில் யானையோடு நிற்கும் அவரது படம் பொறிக்கப்பட்டிருக்கிறது. பணிக்கரின் பேத்தி என்று பெருமை கொண்டாடாடும்  அவரது வம்சாவழி மகள் சகர்வானுக்கு யானை என்பது வாழ்க்கை, கணவன், சகோதரர்கள், சவால்கள். சமயத்தில் யானை என்பது அவளது மனமே கூட.

கதை சொல்லுங்கள் என்று கேட்ட பேத்தி அயனாவிடம் தனது  அலி முகம்மது பணிக்கர் கதையை சொல்கிறாள் சகர்வான் பாட்டி. அவரை பற்றி கதை சொல்லும் சகர்வான் - சகர்வானைப் பற்றி நாவல் தரும் குறிப்புகள் - இவற்றுடன் தனது முதிய வயதில் பெருமை கூடிய பாட்டியாக, முதிய பெண்மணியாக, ஊர் மக்கள் திரண்டு வந்து அஞ்சலி செய்யத் தகுந்த ஒருத்தியாக அவளது மரணத்தில் முடியும் நாவலில் இலங்கை மண்ணில் ஒரு முஸ்லீம் பெண்ணின் வாழ்க்கைப் போராட்டங்களை சொல்கிறது. மனிதர்களில் சிறுமைகளை, கசடுகளை, கீழ்மைகளை, குரூரங்களை, வெட்கமின்மையை - எல்லாவற்றையும் ஒரு பயணியைப் போல பார்த்துக்கொண்டே தனது பாதையை செலுத்திக் கொண்டு செல்லும் பெண்ணாகி நிற்கிறாள் சகர்வான்.  எந்த புகார்களும் இல்லை. ஆனால் சுயமரியாதையும், இலட்சியங்களும் உண்டு. அவை ஒரு சாதாரண பெண்ணின் சின்ன சின்ன இலட்சியங்கள். நல்ல உணவு, ஓரளவு நல்ல வீடு, பிள்ளைகளுக்கு கல்வி, பெண்களுக்கு திருமணம் - அவ்வளவுதான். வேறெதுவும் இல்லை.

இவையெல்லாம் இலட்சியங்களா ? கடமைதானே என்று நாம் கேட்க இடமுண்டு. ஆனால் கடமையே இலட்சியம் என்று ஆகும் அளவுக்கு கணவனும், வாழ்க்கையும் அவளை கைவிட்டன என்பதும், எப்படி அதை எதிர்கொண்டு ஒரு முழு மனுஷியானாள் என்பதுதான் நாவல். இந்த நெடிய தலைமுறையில் பெண்கள் எப்படி மெல்ல மாறி வருகிறார்கள் என்பதை நாம் கோர்த்து புரிந்து கொள்ளும்போது அது ஒரு யானையின் கோட்டோவியமாக அமையக்கூடும்.

அலி முகம்மது யானைகளைப் பிடித்து பழக்கும் வழக்கமுள்ளவர். ஆனை விழுந்தான் காட்டுக்குள் அவர் வேலையே அதுதான். அவரை பற்றி பாட்டி கட்டுக்கதை விடுகிறார் என்று நினைக்கும் அயனாவிடம் ஆயிரம் ரூபாய் நோட்டைக் காட்டி அதில் நிற்பவர் அலி முகம்மது என்று சொல்லும்போதுதான் பேத்திக்கு பாட்டியின் கதைகள் மேல் நம்பிக்கை பிறக்கிறது. பணிக்கர் ஒரு அழகான பெண்ணை காட்டில் கண்டு  திருமணம் பலவந்த திருமணம் செய்து கொள்கிறார். அந்த பெண் இந்த தேசத்து பெண் இல்லை. கப்பல் கவிழ்ந்ததில் தப்பி வந்தவள். அவளை கட்டிப்போட்டு தூக்கி வந்து திருமணம் செய்து கொண்டு பிள்ளைகளைப் பெற்ற அவள், கணவனிடம் காலமெல்லாம் ஒரு வார்த்தை கூட பேசியதில்லை என்பது அதிர்ச்சியூட்டும் ஒன்று. பணிக்கருக்கு அதில் ஒன்றும் வருத்தமும் இல்லை.

அதன் பின் சகர்வானின் அம்மா அப்பாவை பற்றி சொல்லும்போது அவளும் சொல்லப்படுகிறாள். மிகவும் அழகாக இருப்பாள் பிரிசா அம்மா. இரண்டாம் தரமாக வாழ்க்கைப்பட்டவள். அவள் தூங்கிக் கொண்டே இருக்கும்போது மார்பில் பசியாரிக்கொண்டிருந்த குழந்தையைப் பார்த்தபடி, வெகுநேரமாக அசைவே இல்லாமலேயே இருக்கிறாளே என்று பார்க்கும்போதுதான் அவள் எப்போதோ இறந்திருக்கிறாள் என்று தெரியவருகிறது.  இறந்த அன்று காலை கூட அப்பாவிடம் அடி உதை வாங்கி இருந்தாள் அவள்.

அந்த சமயம் அப்பா மற்றொரு மனைவி வீட்டில் இருக்கிறார். மூத்த அண்ணன் பேயடித்து விட்டது என்று உடல் நலம் குன்றி அம்மாவின் இறப்பு பற்றி கூட தெரியாமல் சுருண்டு கிடக்கிறான். இஸ்மாயில் காக்கா இன்னொரு அண்ணன். கதை சொல்லும் சகர்வான் பாட்டிக்கு அப்போது மூன்று வயது. அபூபக்கர் கைக்குழந்தை. அடுத்த வாரமே பேயடித்து விட்டதாக கிடந்த சகோதரனும் பலவீனத்தில் சரிந்து விழுந்து சாகிறான். அவனது உடலை எடுக்க கூட முதல் மனைவி வீட்டில் இருக்கும் அப்பாவை சென்று கூப்பிடும் நிலைமை. அவரை வெறுக்கும் மகன் இஸ்மாயில் போக மறுத்தாலும் அண்டைவீட்டார் சமாதானம் செய்து வரும் அப்பா மறு நாளே வீட்டின் சொத்து பத்திரங்கள் பத்திரமாக இருக்க வேண்டும் என்று சொல்லி எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டு - பெற்ற பிள்ளைகளின் பாதுகாப்பு பற்றிய கருணை அற்றவராக - அந்த மனைவி வீட்டுக்கு போய் விடுகிறார். சகோதரர்கள் இன்னும் சிறு பிள்ளைகள். அவர்களை இஸ்மாயில் காக்க பேணி வளர்க்கிறான். இப்படிp வளர்ந்த பெண்தான் சகர்வான்.

எங்கோ போலீசிடமிருந்து லாரி ஒன்றில் தப்பி வந்த சிங்கள சக்கரியாவுக்கு மனிதாபிமானத்தொடு உதவி செய்த இஸ்மாயில் காக்காவின் தங்கையை திருமணம் செய்து கொண்டவன் தொடர்ந்து பெண் குழந்தை பிறக்கிறது என்பதால் சலிப்புருகிறான்., அழகான நான்காம் பெண் குழந்தைக்கு இறந்து போகும்போது ஐந்தாம் கருவை சுமந்திருக்கிறாள் சகர்வான். அதுவும் பெண் குழந்தை என்பதால் அவளை விட்டுவிட்டு போய்விடுகிறான். பிஞ்சு குழந்தைகளை வளர்க்கிறாள் சகர்வான். மழையிலும், புயலிலும் சிதிலமாகும் வீட்டோடு, அண்ணனின் உதவியோடு ஆனால் சுயமாக தனது வாழ்வை நிமிர்த்திக் கொள்கிறாள்.  முஸ்லீம் பெண்கள் வெளியே போகவே அனுமதிக்கப் படாத சூழலில், பாதையோரத்தில் முந்திரி விற்கிறாள். பிறகு மிகவும் போராடி லைசன்ஸ் வாங்கி எல்லை கடந்து சென்று நெல் வாங்கி வந்து குத்தி அரிசியாக்கி விற்கிறாள். உடலுழைப்பின் கடுமை குறைவதே இல்லை. படிக்க போகாத மகள் உதவிக்கு வருகிறாள் எப்போதும். நல்ல நிலைமைக்கு உயர்ந்து பெண்களை நல்ல இடத்தி திருமணம் முடிக்கிறாள். தனக்கு வந்த கதி அவர்களுக்கு வரக்கூடாது என்று எச்சரிக்கையாக இருக்கிறாள். 

இருபது முப்பது பேர் உள்ள பெரிய குடும்பம் சகர்வான் என்ற முதியவளை சுற்றி ஆலமரமென வளர்கிறது. இந்த நிலையில் 25 வருடம் கழிந்து, நோயுடன் திரும்பி வரும் முதிர்ந்த கணவனை இவள் கண்கொண்டும் பார்ப்பதில்லை. அலட்சியம் செய்வதும் இல்லை. மூன்றாவது மகள் வீட்டுக்கு வருபவனை அவள் வைத்து பாதுகாக்க அனுமதிக்கிறாள். அவன் உடல் நலம் தேறி ஒரு பத்தாண்டுகள் வாழ்ந்து பின் இறந்து போகிறான். இந்த நீண்ட வாழ்வில் சகர்வான் என்னவாக இருந்தாள் என்பதில்தான் நாவல் உருவாகிறது.

முந்திரி வியாபாரத்தில் வரும் கேலிகளை சமாளிக்கிறாள் - ஆண்களோடு பேசி பழகி வியாபாரம் செய்யும் சங்கடங்களை சமாளிக்கிறாள் - கூவி அழைக்கும்போது கேலி செய்யப்படுவதை சமாளிக்கிறாள் -  பூங்காவில் நடைபாதை முந்திரி வியாபாரத்தில் அதிகாரிகள் சுகாதார கேடு என்று கடைகளை காலி செய்யும்போது வேறு இடம் சென்று சமாளிக்கிறாள் - மீண்டும் போராடி வருகிறாள் - அங்கிருக்கும் பெண்களுக்கு தலைமை ஏற்கிறாள் - பிளாஸ்டிக் பையில் மத்தியில் கண்ணுக்கு தெரியும் படியான இடத்தில் நல்ல பருப்புகளை வைத்து ஓரங்களில் துகள்களை வைத்து செய்யும் வியாபார தந்திரத்தை மறுத்து நியாயமாக வியாபாரம் செய்கிறாள் - வாடிக்கையாளர்கள் தேடி வரும்படி செய்கிறாள். ஒரு சமயத்தில் கூவி அழைக்கும் நிலைமையே அவருக்கு இருப்பதில்லை.  கடன் வாங்கி திருப்பி தராமல் ஏமாற்றும் தம்பியை தனது உடலைக் கூட பார்க்க கூடாது என்று கட்டளை இடுகிறாள். அப்படியே நடத்தியும் கொடுக்கிறார்கள் பிள்ளைகள்.

 கைக்குழந்தையோடு இருந்த மனைவியை விட்டுவிட்டு சென்ற கணவனை ஏன் அழைக்க கூடாது என்று உறவினர் கேட்கும்போது அவள் சொல்லும் பதில் "அவர் வெளியேறுவதற்கு நான் ஏதேனும் வகையில் காரணமாக இருந்திருந்தால் அவரை அழைத்துக் கொண்டு செல்வதில் எனக்கொரு மரியாதைக் குறைச்சலும் இல்லை. விட்டுச் சென்றவருக்கு ஏன் திரும்பி வரத் தெரியவில்லை ? என்று கேட்கிறாள். இவள்தான் சகர்வான்.

 இருபத்தைந்து ஆண்டுகள் கழித்து ஒருநாள் இளைய மகள் வீட்டுக்கு வருகிறான் சக்கரியா. இப்படியும் குற்ற உணர்ச்சி இன்றி ஒருவனால் இருக்க முடியுமா என்று நினைக்கிறாள். “வாப்பா வந்திருக்காங்க.. என்ன செய்ற” என்று மகள் சொல்லும்போது, அழிந்துபோன சக்கரியாவின் ஞாபகங்களை புதுப்பிக்க முயன்றவளைப் போல கண்களை இருக்க மூடிக் கசக்கி திறந்தபடி “எண்ட தலைமுடிகள் நரைத்திட்டு . மகள்” என்று பதில் சொல்கிறாள். இவள்தான் சகர்வான்.

 வாப்பா  இன்று முதியவனாக உடல் நலம் கேட்டு திரும்பி வரும்போது - அம்மா ஏற்றுக் கொல்வதற்கு கோபிப்பாள் என்று அனைவரும் தங்கும்போது  "யார் திருப்பி அனுப்பச் சொன்னது ?  ஏன் அனுப்பனும் ? அவர் உங்களுக்கு வாப்பா. உங்களை தேடி வந்திருக்கார். மனசாட்சியோட நடங்க மகள் " என்கிறாள். இவள்தான் சகர்வான்.

 வயதான காலத்தில் மலமள்ளும் வேலைக்கு பயந்து கொண்டுதான் அவரது குடும்பம் அவரை இங்கே துரத்தி இருக்கிறது என்பதை மகள்களுக்கு நினைவூட்டியும் செலவுக்கான உதவிகளை தான் தருவதாயும் நிற்கிறாள் - இவள்தான் சகர்வான்.

 கணவன் உடல் மோசமாகி விடும்போது அவர் இறந்து போவார் என்ற அச்சத்துடன் இருக்கும் மகள்கள் அவரை பார்க்க அழைக்கும்போது ஸர்மிளா எழுதும் சிறிய வரி மிக செறிவானது. "வாப்பாவை மரணம் நெருங்கி விட்டதோ என்று சந்தேகித்துக் கொண்டே இருட்டில் சென்று கொண்டிருந்த அவர்களைப் பார்த்துக் கொண்டிருந்து விட்டு கதவுகளை மூடினாள். சக்கரியா திரும்பி வந்து பத்தாண்டுகள் ஆயிற்று. மனிதர்கள் தரும் பெருந்தன்மையானவள் என்ற அற்பமான போலியான ஈர்ப்புக்கு கடந்த கால நினைவேக்கங்களை பலியிட தேவையில்லை என்பதிலேயே அத்தனை காலமும் சகர்வான் உறுதியாக இருந்தால். நெஞ்சரையின் அடுக்குகளிலிருந்து மங்கலாகிப் போன நினைவுகளை சுத்திகரிக்க அவள் விரும்பவில்லை.  சாதாரண மனிதர்களுக்குப் போன்ற சட்டென்று உண்டான மன எழுச்சிகளில் அவள் தன்னை வீழ்த்திக் கொள்ளவுமில்லை. " இவள்தான் சகர்வான்.

 சக்கரியாவின் மறைவுக்குப் பின் இத்தா கடமைகளை சகர்வான் அனுஷ்டிப்பாளா என்று மகள்களுக்கு சந்தேகம் இருந்தது. "அவரோட பொஞ்சாதியா என் கடமைகளேச் செஞ்சிருக்கேன். இத்தாவும் இருப்பேன்" என அனுஷ்டிக்கிறாள். இவள்தான் சகர்வான்.

 அவளது மகள், தன் கணவன் வீட்டுக்கு உள்ளேயே முறை தவறி ஒரு பெண்ணுடன் கூடி இருப்பதை பார்த்துவிடுகிறாள். பலரைப்போல மன்னித்து ஏற்காமல் அவனுக்கு மணவிலக்கு தந்து விட்டு சுயமாக நிற்கிறாள். இப்படி ஒரு மகளை வளர்த்தவள்தான் சகர்வான்.

 இத்தனை சகர்வான்களும் அத்தனை யானைகளை அடக்கி பழக்கி பணிய வைத்து சவாரி செய்திருக்கிறார்கள். அலி முகம்மது பணிக்கரின் யானைக்கு உருவமுண்டு. சகர்வானின் யானைக்கு உருவம் மாறிக்கொண்டே இருந்தது. யானையின் வாலுக்கு இடையே தேட்டையாக அப்பிக்கிடக்கும் நீல ஓவிய அட்டைப்படம் நல்ல தேர்வு.

முதியவளாகி சகர்வான் இறந்த பிறகு எல்லோரும் பணிக்கர் பேத்தி வந்து அஞ்சலி செய்கிறார்கள். சகர்வான் கற்றுக் கொடுத்தது போல ஒரு துளிக் கண்ணீர் சிந்தாமல் ஜனாஸாவுக்கு வந்திருவர்களுக்கு வழியனுப்பு விருந்தளித்து உபசரிக்கத் தொடங்கினார்கள் அவளது மக்களும் பேரப்பிள்ளைகளும். இந்த சாம்ராஜ்ஜியத்தைத்தான் சகர்வான் உருவாக்கி இருந்தார்.

***

நாவல் பற்றிய எனது ஒரு நினைவுத்திருப்பலில் ஒரு விஷயம் மின்னிப் போனது. நான்கு தலைமுறைகள் கொண்ட இந்த நாவலில் வரும் மனைவிகள் ஒவ்வொரு தலைமுறையிலும் ஒரு சிறு படியாக மேலேழுகின்றனர். ஆனால் அதில் வரும் பெரும்பாலும் எல்லா கணவன்களும் ஒரே மாதிரிதான் இருக்கின்றனர். பெண்கள் மேலெழுவதற்கு ஒருவேளை அதுவே காரணமுமாக இருக்கலாம் !

 
***

 பேத்தி அயனா தனது பள்ளிக்கூடத்தில் நாலாயிரத்து ஐநூறு பணம் கட்டி சுற்றுலாவுக்கு பதிவு செய்திருக்கிறாள். ஆனால் அது ஒரு பௌர்ணமி நாளில் வருவதால், பணம் போனாலும் பரவாயில், அன்று உம்மம்மா வீட்டுக்கு செல்லவேண்டும் என்று பாட்டி வீட்டுக்கு வருகிறாள். பௌர்ணமி அன்று எல்லா பெண்கள், மருமகன்கள், பத்தொன்பது பேரப்பிள்ளைகள் அனைவரும் ஒன்று கூடி, நிலவு வெளிச்சத்தில் ஒன்றாக சேர்ந்து, பேசி, அரட்டை அடித்து, சாப்பிட்டு இரவைக் கழிப்பது வழக்கம். 

 அதை ஏன் பௌர்ணமி அன்று நடத்துகிறீர்கள் என்று அயனா 'உம்மம்மா சகர்வானைனை' கேட்கும்போது சொல்கிறாள்.

 "உங்களுக்கு ஏன் உம்மம்மாவை பிடிக்கிறது? "

 "உம்மம்மா.. நீங்க ரொம்ப அன்பானவங்க. எல்லோரும் எப்போதும் நல்ல இரிக்கனும்னு மட்டும்தான் நினைப்பீங்க. உங்க ரத்தம் சதை எல்லாம் அன்பு நிரம்பி இருக்கு"

 "உங்களுக்கு உம்மம்மாவை பிடிக்க இருக்கிற காரணங்களை போலத்தான் எனக்கும் இந்த நிலவை பிடிக்க காரணங்கள் இரிக்கி. இந்த நிலவுதான் அன்பாக இருக்கவும், பொறுமையாக இருக்கவும், முறைப்பாடுகள் இல்லாமல் வாழவும் சொல்லி தந்திச்சி.  நிலவு நாட்களில் உறங்காமல் இரவுகளில் நெல் குத்தும்போதேல்லாம் இந்த நிலவுதான் எனக்கு துணையாக இருப்பதா நினைப்பேன்.  நிலவுக்கு இந்த உம்மம்மாவோட எல்லா ரகசியங்களும் தெரியும் "

 அந்த நிலவின் கிரணங்களைத்தான் ஸர்மிளா  ஸெயித் நூறு பக்கங்களில் தர முயன்றிருக்கிறார். 


 

 

 

 

 

No comments:

Post a Comment

இயற்பியலின் தாவோ - பிரிட்ஜாஃப் காப்ரா

இயற்பியலின் தாவோ பிரிஜாப் காப்ரா Fritjof Capra மொ பெ போன். சின்னத்தம்பி முருகேசன் சந்தியா பதிப்பகம் #இயற்பியலின்_தாவோ படிக்கத்  துவங்கி இர...