Sunday, 19 April 2020

நிலவு தேயாத தேசம்-சாரு நிவேதிதா - ஜீரோ டிகிரி

**
நிலவு தேயாத தேசம்**
*சாரு நிவேதிதா *

*ஜீரோ டிகிரி*

*சிறுவாணி மூலம் வந்தது *

zerodegreepublishing@gmail.com
9840065000

எனக்கு பயணக்கட்டுரைகள் ஏனோ சுவாரசியமான வாசிப்புகளை தந்ததில்லை. மணியன், சாவி முதல் ஞாநி வரை. ஆப்பிள் தேசம் என்ற ஞாநியின் கட்டுரை அநியாயத்துக்கு சராசரியான கட்டுரை தொடராக உணர்ந்தேன். தொடர்ந்து வாசிக்கவில்லை என்பதையும் சொல்லிவிடுகிறேன். சாருவின் இந்த துருக்கி பயணக்கட்டுரைகள் தொகுப்பு நன்றாக இருக்கிறது.

பயணம் என்பதும் சுற்றுலா என்பதும் ஒன்றல்ல என்பதை நம்பும் சாரு அதை இதில் சுட்டிக்காட்டுகிறார். ஒரு தேசத்தை காண்பது என்றால் அந்த தேசத்தின் கலாச்சாரத்தையும் பண்பாட்டையும் வரலாற்றையும் நிலத்தையும் அரசியலையும் அறிய முயல்வதே ஆகும் என்று 13 ஆம் அத்தியாயத்தில் முதல் வரி. அதற்கு நியாயம் செய்கிறது தொகுப்பு. தான் வளர்ந்த இஸ்லாமிய சூழல் பின்னணி அரபு இலக்கியத்தையும் முஸ்லீம் நாட்டையும் புரிந்து கொள்ள உதவுகிறது என்பதையும், கடந்த பன்னிரண்டு ஆண்டுகளாக அரேபிய இலக்கிய உலகு பற்றி பனிபால் இதழ்மூலம் வாசித்து வருவதன் சாதகத்தையும் குறிப்பிட்டிருக்கிறார்.

தான் இடங்களின் விவரங்கள், வரலாற்றின் அவற்றின் இடம், இன்றைக்கு உள்ள தொடர்பு, காலத்தின் எச்சமாகி நிற்கும் அவற்றின் இருப்பு, அரசியல், அங்குள்ள மனிதர்கள், வாழ்க்கை, கலாச்சாரம், எழுத்தாளர்கள், கலைகள் எல்லாம் பற்றி பேசுகிறார்.

சின்ன சின்னதாக நிறைய விஷயங்களை தகுந்த இடங்களில் தொடுகிறார்.பல வரைபடங்களை சுட்டுகிறார். பல இடங்களில் யூட்யூபில் இருப்பவற்றை அதன் இணைப்புகளோடு தந்திருப்பது சமயோஜிதம். வாசிக்கும்போது யூட்யூபில் அவற்றுக்கு சென்று பார்த்துவிட்டு தொடரும்போது வாசிப்பு ஒரு டாக்குமென்டரியாக மாறிவிடுகிறது.

விமான நிலையங்களில் எதிர்கொண்ட சிக்கல்கள், அமைந்த நட்புகள் என சில குறிப்புகளும் உண்டு. இஸ்தாம்பூலில் உள்ள நீல மசூதியை பார்ப்பது தனது கனவு என்று சென்று பார்க்கிறார். துருக்கி பற்றி நிறைய விஷயங்கள். நாம் பொதுவாக கருதுவது போல துருக்கிய இஸ்லாம் பெண்கள் அப்படி அடிமைகள் அல்ல. அவர்கள் பெரும் சுதந்திரங்களை பெற்றுள்ளார்கள் என்கிறார். ஒரு ஆண் தன்னுடைய மனைவிக்கு எல்லா வசதிகளையும் தரவேண்டும். செலவுக்கு கணக்கு கேட்க கூடாது. என்று பல உண்டு. நான்கு மனைவிகளை கொண்டிருக்கலாம் என்றாலும் செலவு செய்து கட்டுப்படி ஆகாது என்கிறார். மிக சாதாரணமாக அவர்கள் புகை பிடிக்கிறார்கள். அரபு சமூகம் பெண்களுக்கு உயரிய இடத்தை தருகிறது. பெண் வெளியே போயிருந்தால் குழந்தைகளை கணவன் பராமரிப்பது சகஜம். ஆண்கள் பணம் தந்து பெண்களை திருமணம் செய்து கொள்ளவேண்டும்.

முக்கால் பங்கு ஆசியாவிலும், கால் பங்கு ஐரோப்பாவிலும் உள்ள இஸ்தாம்பூல் பற்றி 'நகர் வாழ்வின் நெருக்கடிகள் மனிதர்கள் தங்கள் கிராமங்களில் இருந்து கொண்டு வந்த வெகுளித்தன்மையை ஆவேசமாக பறித்துக்கொண்டு விடும். ஆனால் இஸ்தாம்பூல் அப்படி இல்லை" என்று அதைப் பற்றி ஒரு பிம்பத்தை தருகிறார். தள்ளு வண்டிகாரர் சில்லறை தரும்போது பெண்களின் மீது விரல் படாமல் மேலிருந்து போடுகிறார்கள். மரியாதை குறைவாக பார்ப்பது இல்லை.

தெருப் பூனைகள் என்றாலும் ஒவ்வொரு விடும் ஒரு பூனையை பராமரிக்கிறது. சாமானியர்களுக்கு பணம் சிக்கல்தான். தொலைவில் இருந்துகொண்டு நகருக்கு வந்து வேலை செய்யவேண்டும். வாடகை அதிகம்.

மர்மரா கடலின் பகுதியாக உள்ள தங்க கொம்பு என்ற நீர் வழி போர்க்கப்பல் வர முடியாது. இயற்கை அரண். ஆனால் இரண்டாம் மெஹ்மூத் தட்டையிலான கப்பல்கள் மூலம் வந்து நகரை நிர்மூலம் செய்கிறான். அங்கிருந்த தேவாலயத்தை மசூதியாக மாற்றுகிறான். அங்கிருக்கும் விவிலிய ஓவியங்கள் இன்று அப்படியே உள்ளன.

பழங்காலத்தில் துருக்கியில் பெண்களுக்கு நல்ல மரியாதை உண்டு. ஆனால் பெண் அடிமைகள் விற்கப்பட்டார்கள். அவர்கள் மரியாதையோடு நடத்தப்பட வேண்டும். தேவைப்பட்டால் வேறு ஒருவரிடம் விற்கலாம்..

துருக்கியில் 4+4+4 வகை படிப்பு. நிறைய பெரு எட்டாம் வகுப்போடு படிப்பை நிறுத்தி விடுகிறார்கள். அவர்கள்தான் டிரைவர் மற்றும் உதவியாள் வேலைகள் செய்கிறார்கள்.

லேடி மேரி மாண்டேகு என்பவரை பற்றி சாரு எழுதுகிறார். சீமாட்டி. அழகி. லண்டனில் இருந்து இஸ்தாம்பூலுக்கு தூதரின் மனைவியாக வந்தவர். அவர் எழுதி இருக்கும் கடிதங்கள் துருக்கி பற்றி விவரங்களை சொல்கிறது. துருக்கி பெண்களை போல சுதந்திரமானவர்களை உலகில் எங்கேயும் பார்க்க முடியாது என்று எழுதுகிறார். அம்மை நோயால் பாதிக்கப்பட்டு தப்பிக்கிறார். அப்போது துருகியில் அம்மை நோய் தடுப்பாக உடம்பில் உள்ள ரத்த குழாயில் ஊசி மூலம் துளை செய்து அம்மை கிருமியின் ஒரு பகுதியை ரத்தத்தில் செலுத்தி துளையை மூடுகிறார்கள். இதை ஐரோப்பியர்கள் மூட நம்பிக்கை என்று கேலி பேசுகிறார்கள். (இங்கே வேப்பிலைக்கு மஞ்சளுக்கும் நமது மேதாவிகள் தரும் மரியாதை போலதான் போலிருக்கிறது ) . ஆனால் மேரி லண்டன் சென்ற பிறகு இதை அங்கே அறிமுகம் செய்கிறார். அவர் சொன்னதை வைத்து எட்வார்ட் ஜென்னர் அம்மை தடுப்பூசியை கண்டுபிடிக்கிறார். ஆகவே துருக்கிய பாரம்பரிய மருத்துவம் எப்படி இருந்திருக்கிறது என்பது அறிய முடிகிறது. மற்றொரு விசேஷம் இப்படியான வைத்தியத்தை செய்வது துருக்கிய இஸ்லாம் பெண்கள்தான்.

குர்து இன மக்கள் ஒடுக்கப்பட்டு வருவதை விலாவரியாக பல இடங்களில் சொல்கிறார். இன்றளவும் அங்கே சண்டைகள் மரணங்கள் நின்றபாடில்லை என்பதையும் சொல்கிறார். குர்து இன மக்கள் சித்ரவதை செய்யப்படுவது, அரசியல் ரீதியாக பழிவாங்கப்படுவது என்று செறிவாக பல விஷயங்கள் உள்ளன.

1842 ல் ஜெரார் தெர நெர்வால் எழுதுகிறார். முஸ்லீம்கள் சட்டத்தில் பெண்கள் அடிமைகள் அல்ல. அவர்களுக்கு சொத்துரிமை உண்டு. கணவன் தலையீடு இல்லாமலே சொத்து வைத்துக்கொள்ளலாம். விரும்பினால் கணவனை விவாக ரத்து செய்யலாம். பெண்கள் மட்டுமே இருக்கக்கூடிய ஹேரம் என்ற இடத்துக்கு மாற்று ஆடவர் செல்லவே முடியாது.

துருக்கியின் கலை கலைக்காகவே என்று எழுதிய கவிஞர் இப்ராஹீம் - பாடலை ஆயுதமாக உபயோகித்த ஹெல்லி லீவ் என்ற இளம் பாடகி என்ற இருவரையும் பற்றி விவரிக்கிறார்.

இளவயது திருமணம், விவாகரத்து காரணங்களால் பாலியல் தொழிலுக்கு தள்ளப்போப்படும் ஈரானிய பெண்கள் பற்றியும், லெபனானில் நிலவும் சூழல்கள் பற்றியும் ஒரு அத்தியாயத்தில் பேசப்படுகிறது.

துருக்கியர்களிடம் குர்துகள் படும் சித்ரவதை அநியாயம். குர்து மொழி பேசினாலே தண்டனை. சிறையில் உள்ள மகனை காண வரும் தாய் குர்து மொழி பேச கூடாது என்பதால் பேசமுடியாமல் பார்த்துவிட்டு திரும்புகிறாள். கைகளை பின்னால் கட்டி தொங்கவிடுவது, நாளை ஏவிவிட்டு பிறப்புறுப்பை கடிக்க வைப்பது, ஒரே அறையில் மீன் கூடை போல அகதிகளை அடைப்பது, கழுத்துவரை மலம் நிரம்பிய கூடையில் நிற்கவைப்பது போன்றவை. பலாக்கா அடி என்பது பாதத்தில் பிரம்பால் அடிப்பது. லாடம் கட்டுவது என்று நாம் சொல்வது. (ஆனால் விசாரணை படத்தில் காட்டுவது போல திருட்டு குற்றத்துக்கு எல்லாம் லாடம் கட்ட மாட்டார்கள் என்று போகிற போக்கில் தமிழ் சினிமாவுக்கு ஒரு கொட்டு வைக்கிறார் ).

ஆர்மீனியர்கள் கொல்லப்பட்டதை தைரியமாக பேசிய ஓரான் பாமுக் பற்றியும் உலக அறிவுஜீவிகள் அவரை ஆதரித்ததையும் துருக்கி அரசு ஏதும் செய்ய முடியாமல் போனதையும் குறிப்பிடுகிறார்.

தொகுப்பில் எனக்கு மிகவும் பிடித்த பகுதி Ephesus என்ற இடத்தை பற்றிய குறிப்புகள். சுமார் ஆறாயிரம் வருடங்களுக்கு முன்பு இருந்த பகுதி. அங்கே ரோமானிய வீதி, பெரிய நூலகம், நாடக அரங்கம் பற்றிய விவரங்கள் அருமையாக உள்ளன. நம்மை ஆயிரம் வருடங்களுக்கு பின்னே நகர்த்துகிறது. அங்குதான் இயேசுவின் தாய் மேரி தனது இறுதிக்காலத்தில் வாழ்ந்தார், இயேசுவின் உயிர்தெழலுக்கு பிறகு ஜெருசலேமில் பழிவாங்கும் கலக்கம் நடந்தது. அப்போது அங்கிருந்து எபேஸஸுக்கு தப்பி வந்தார்கள், கன்னி மேரியும் அப்படிதான் வந்திருக்கவேண்டும் போன்ற விவரங்கள் அருமையாக இருக்கின்றன. அங்கிருக்கும் சுவரில் ஆயிரக்கணக்கான மக்கள் தமது பிரார்த்தனைகளை சீட்டுகள் கட்டி தொங்க விடுகிறார்கள்.

லிஸ்பன் , பார்கோஸ் புவனோஸ் குர்ஸி டுரின் பராக் போன்ற நகரங்கள் துரங்களின் நகரம் நமது டெல்லி போல. துருக்கியும் அப்படி ஒன்றுதான் என்று சொல்கிறார்.

இப்படி நிறைய செய்திகளை வரலாற்றின் பின்னணியோடும், தற்போதைய நிலைமையையும் தொட்டடுத்து வைத்து எழுதி இருக்கிறார். எடுத்ததை வைக்காமல் படித்து முடித்தேன்.

சந்திரமுகி படத்தில் வரும் கொஞ்ச நேரம் பாடலில் எபஸ்ஸ் நகரம் வருகிறது.

சாருவின் கட்டுரைக்கு மரியாதை தரவேண்டியதற்கு ஒரு உதாரணம் ஒரு அத்தியாயத்தில் தெரிகிறது. சாரு எட்டு மணி நேரம் ஓமான் தலைகள் மஸ்கட்டில் விமானத்துக்கு காத்திருக்க வேண்டும். உடன் வந்த நண்பியிடம் ஓமன் சுற்றி பார்க்கலாமா என்று கேட்க அவர் தனது உறவினரை அழைத்து கேட்க "ஐயோ இங்கே பார்க்க என்ன இருக்கிறது. வெறும் பாலை' என்கிறார்.

ஜோக்கா அல் கார்த்தி என்ற ஓமன் தேச எழுத்தாளர் மூன்று தலைமுறை பெண்களை பற்றிய நாவலை குறிப்பிட்டு பாரம்பரிய பெண் மய்யா பற்றி சொல்கிறார். அவளுக்கு காதல். ஆனால் அம்மா வேறு ஒருவருடன் திருமணம் செய்து வைக்க கணவனுக்காக மட்டுமே நமது சுக துக்கம் என்றால் நமது துக்கத்துக்கு யார் இருக்கிறார்கள் என்று கேட்கிறாள். பிரசவத்துக்கு நின்று கொண்டே இருப்பதுதான் பெருமை. படுத்துக்கொண்டு பிரசவிப்பது அவமானம். அதை முறித்து வீட்டில் இல்லாமல் மருத்துவ மனையில் சென்று குழந்தை பெறுகிறாள். லண்டன் என்று பெயர் வைக்கிறாள். இப்படி போகும் நாவலில் அவள் தாய் வீடு செல்லும் ஊர் அல் அவாபி. அது ஓமனில் உள்ள மாவட்ட தலைநகர். என்று பாலைவனம் என்று சலிப்பாக சொல்லப்பட்ட இடத்தில் ஒரு சுவாரஸ்யமான தகவல் புள்ளியை சொல்லி அந்த இடத்துக்கு முக்கியத்துவம் கூட்டுகிறார். இங்கே அந்த இடம் ஒரு பயண சுவாரசியத்தை பெறுகிறது. Gunday என்ற படத்தில் ஜியா என்ற பாடல் காட்சியில் ரன்வீர் சிங் பிரியங்கா நடனமாடும் இடம் ஓமனில் உள்ள இப்ரா நகரம் அங்கிருக்கும் அழிவு சின்னங்களில் படமாக்கப்பட்டது என்ற உபரி செய்தியை தருகிறார்.

அடுத்த பதிப்புக்கு, ஒரு திருத்தம் சொல்லலாம். பாமுக்கின் என் பெயர் சிவப்பு நாவலின் பிரதான கதாபாத்திரமே கார்ஸ் நகரம்தான் என்று இருக்கிறது. அது பனி நாவலின் கதைக்களம் என்று ஜி கே என் பேஸ்புக் பதிவில் கமெண்டில் சொல்லி இருந்தார்.

ஆலோசனை ஒன்று சொல்லலாம் என்றால் - யூட்யூப் லிங்க் தந்திருப்பது அருமை. அதே சமயம் லிங்க் உள்ள யூட்யூப் தலைப்பை தந்தால் படிப்பவர்கள் அதை தேடுவது எளிது.


                                                                    - 0 - 

No comments:

Post a Comment

கொடை மடம் - சிந்தாந்தப் பின்னணியி (யா)ல் கை நழுவும் காதலைப் போலொன்று

    கொடை மடம் - நாவல் சாம்ராஜ் பிசகு வெளியீடு, சென்னை   சிந்தாந்தப் பின்னணியி (யா)ல் கை நழுவும்   காதலைப் போலொன்று ஒரு நாவல் எ...