Tuesday, 21 April 2020

எனக்குப்பிடித்த கதைகள்-பாவண்ணன்

 எனக்குப்பிடித்த கதைகள்
 பாவண்ணன் 
 காலச்சுவடு

பாவண்ணன்  தனது எனக்குப்பிடித்த கதைகள் தொகுப்பில் (காலச்சுவடு) தனது அன்றாட வாழ்க்கையில் காண நேர்ந்த மனிதர்கள் மற்றும் சம்பவங்களை சொல்லி அதனூடாக எழுத்தாளர்களின் சிறுகதை ஒன்றை அறிமுகம் செய்வார்.ஆரம்ப வாசகன் மட்டுமின்றி எல்லோருக்குமே ஒரு 'பார்வை' பரிமாற்றத்தை அலட்டல் இல்லாமல் தருவதாக இருக்கும். பிறமொழி கதைகள் உட்பட 50 கட்டுரைகள் 50 சம்பவங்கள் 50 சிறுகதை அறிமுகங்கள்.
அதில் சந்தேகம் என்ற விஷயத்தை வைத்து லாசரா வின் சர்ப்பம் கதையை அளித்திருப்பார். இதில் சந்தேகம் என்பது பற்றி பாவண்ணனின் பார்வை அருமையாக யிருக்கும். சந்தேகத்துக்கு மருந்தில்லை என்ற தலைப்பில்.
பெண் நண்பர் ஒருவர் வாக்கிங் போகும்போது பேசுகையில் சந்தேகம் என்றால் என்ன என்று கேட்கையில் சொன்னதை உரையாடலாக தருகிறேன்.

சந்தேகம் என்றால் என்ன ?

நமக்கு எதுவெல்லாம் தெரியாமல் இருக்கிறதோ அதெல்லாம் சந்தேகமானவைதான். இதோ இந்த வானம் இருக்கிறது. இதைப்பற்றி நிறைய தகவல்கள் நமக்கு தெரியும். தெரியாத எல்லாமே சந்தேகத்த்துக்கு உரியவையாக இருக்கின்றன

அந்த பெண் 'அப்படியென்றால் வானத்தை முழுக்க' தெரிந்து கொள்ள முடியாதா

'முழுக்க என்ற சொல் தீர்மானமானதல்ல. வளர்ந்து கொண்டே இருக்கும் ஒன்று அல்லவா ?"

முழுக்க தெரிந்து கொள்ள எவ்வளவு காலம் பிடிக்கும் ?

அது காலத்துக்கு அப்பாற்பட்டது. கூடுமானவரை ஒருவரை பற்றி தெரிந்த சித்திரத்தை மனதில் வரைந்து வைத்துக்கொள்கிறோம். அது ஒரு பிடிமானம். நம்பிக்கை. இருவர் சேர்ந்து வாழ்வது இந்தவித நம்பிக்கையில்தான்.


அப்படியென்றால் ஒருவரை பற்றிய சந்தேகத்துக்கு தெளிவே இல்லையா ?
அவரை பற்றி தெரிந்த தகவலை வைத்து தெளிவை தேடலாம். ஆனால் இது தெளிவு என்று தீர்மானமாக ஒருபோதும் சொல்ல முடியாது.

ஏன் அப்படி குழப்புகிறீர்கள் சார் ?

மனம்தான் காரணம். விலங்கை பழக்குவது போல மனதை பழக்கலாம். ஆனால் அது ஒரு கட்டம் வரைதான். ஏதோ ஒரு சமயத்தில் அதன் சுதந்திரம் வெளிப்பட்டே தீரும். ஆணோ பெண்ணோ. அவரவர் மனங்களும் பழகிய செயல்களை விட்டு உதறி செல்லும்போது அந்த திசை புலப்படாமல் போகிறது.

பிறகு அந்த பெண் மெதுவாக சொல்கிறார். என் கணவர் அப்படி ஒரு சுதந்திரத்தை நாடுகிறார் போல தெரிகிறது. தனது அலுவலகத்தில் வேலை செய்யும் ஒரு பெண்ணிடம் நெருக்கமாக இருக்கிறார் என்று மனம் தளர்ந்து சொல்கிறார்.

'ஊகத்தின் அடிப்படையில் எதையும் முடிவு செய்யக்கூடாது' என்று இவர் எச்சரிக்கிறார்.
"ஊரெல்லாம் சொல்லியாகி விட்டது. நாந்தான் கடைசியாக சொல்கிறேன்" என்கிறார் அந்த பெண். அவராவது சந்தோஷமாக இருக்கட்டும் என்று அந்த பெண் சொல்லிவிட, விரைவில் அவர்கள் விவாகரத்து பெற்று விடுகிறார்கள்.

இரண்டாண்டுகள் கழித்து பார்க்க நேரும்போது அந்த கணவர் தனியாகவே வாழ்ந்தார். மெதுவாக கேட்டபோது 'அந்த பெண்ணோடு உண்மையிலேயே எந்தவிதமான உறவும் இல்லை. வியாதிக்கு மருந்து உண்டு. சந்தேகத்துக்கு எந்த மருந்தை அளிப்பது' என்று வறட்சியாக சிரிக்கிறார்.

இதை சொல்லிவிட்டு சர்ப்பம் கதையை சொல்கிறார். அக்கா. தங்கை. அக்கா திருமணம் செய்துகொண்டு எங்கேயோ தூரத்தில் இருக்கிறார். தங்கை சுட்டியான பெண். திருமணத்தன்று சகஜமாக எல்லோரோடும் உரையாடி, மாப்பிள்ளையோடு கூட தமாஷாக நடந்து கொள்கிறாள். மாப்பிள்ளைக்கு எடுத்துப்போன காபி சிந்திவிட விளையாட்டாக நக்கி குடித்திவிடுகிறாள். முதலிரவுக்கு வைத்த இனிப்புகளை கொஞ்சம் சாப்பிட்டு விடுகிறாள். கட்டிலில் படுத்து தூங்கிவிடுகிறாள். அதன் பிறகு வெகுகாலம் கழித்து அக்கா வீட்டுக்கு செல்கிறாள். மல்லிகை பூவில் தங்கை விருப்பம் கொள்கிறாள். இவள் அலர்ஜி என்று ஒதுக்குகிறாள். மனைவியின் தங்கைக்காக பூ கட்டிக்கொண்டு இருக்கிறார் கணவன். சமையலறையில் பாம்பு என்று கத்தி சூழலை கலைக்கிறாள். பிறகு அது கயிறு என்று தெரிகிறது. ஒரு நாள் 'அம்மாவுக்கு சீரியஸ் என்று தந்தி வந்ததாக சொல்லி' அழுது ஆர்ப்பாட்டம் செய்து அம்மாவை கவனிக்க தங்கையை அனுப்பி வைக்கிறாள். வீட்டுக்கு வரும் தங்கை அம்மா நலமுடன் இருப்பதை காண்கிறாள்.
சந்தேகம் என்ற முள் கீறியவுடன் எதையும் செய்ய ஒருவர் தயாராகி விடுகிறார். அது கயிற்றை பாம்பு என்று நம்ப தயங்குவதில்லை.
எந்த சந்தேகத்தையும் ஒதுக்க முடியாது. அதே சமயம் எந்த சந்தேகத்தையும் நிரூபித்து நிறுவி அழித்துவிடவும் முடியாது. மன அமைப்பு அப்படி என்கிறார் பாவண்ணன்.

No comments:

Post a Comment

கொடை மடம் - சிந்தாந்தப் பின்னணியி (யா)ல் கை நழுவும் காதலைப் போலொன்று

    கொடை மடம் - நாவல் சாம்ராஜ் பிசகு வெளியீடு, சென்னை   சிந்தாந்தப் பின்னணியி (யா)ல் கை நழுவும்   காதலைப் போலொன்று ஒரு நாவல் எ...