Monday 20 April 2020

நீலகண்டம் - சுனீல் கிருஷ்ணன் - யாவரும் பதிப்பகம்

நீலகண்டம்

 சுனீல் கிருஷ்ணன்
யாவரும் பதிப்பகம் 
 editor@yaavarum.com
9042461472

 ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
நீலகண்டம் - தொண்டையில் சிக்கிய அன்பெனும் நீல முள்
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

இதுவரை பல சிறுகதைகளை கச்சிதமாக எழுதியவரும், மேலை இலக்கியங்கள் உட்பட்ட படைப்புகளின் ஆழ்ந்த வாசகரும், படைப்புகளை விமர்சகத்தன்மையோடு எழுதியும் பேசியும், யுவ புரஸ்கார் பெற்றவருமான எழுத்தாளர் சுனீல் கிருஷ்ணனின் முதல் நாவல் நீலகண்டம்.

ஆட்டிசம் குறைபாடுள்ள ஒரு குழந்தையின் வளர்ப்பு பற்றிய நாவல் என்று ஒரு வரியில் சுருக்க முடியாமல் அப்படியான குழந்தையின் பெற்றோரியம், குழந்தையின்மை பற்றிய மனச்சிக்கல்கள், அதை எதிர்கொள்ளும்போது அவை மேலும் சிக்கலாதல், அதனால் உருவாகும் இடைவெளி, அவற்றை நிரப்ப குடும்பம் எனும் அமைப்புக்கு உட்பட்ட தம்பதிகள் செய்துகொள்ளும் சமரசங்கள், விட்டுக்கொடுத்தல், அல்லது வெடித்தல், அப்படியான குழந்தைகளின் உலகம் மற்றும் நிலைமை, தத்து எடுப்பதற்கான மன நிலை, தத்து எடுக்க செல்லும்போது அங்கு நிலவும் வணிக, சட்ட, மருத்துவமனை சூழல்கள் , அப்போது உருவாகும் நிலைகொள்ளாமை, காதல் திருமணத்தால் விலகிப்போன குடும்ப உறவுகள் நெருங்க முயலும் நிர்பந்தங்கள், அவற்றை ஏற்கும்போது உணரப்படும் மனநிலைகள், என பல்வேறு சிடுக்குகள் உள்ளே நுழைந்து பயணிக்கிறது இந்த நாவல். ஆட்டிசம் குழந்தை வளர்ப்பு பற்றிய முதல்வகை நாவல் என்பதாலும், அந்த குறைபாடு பற்றிய நாவலாக கருணை நரம்புகளை சீண்டும் நாவலாக விரியாமல், அதை எதிர்கொள்ளும் பெற்றோரியம் பற்றி பேசுவதாலும் கூர்ந்து கவனிக்கப்பட வேண்டிய நாவலாகிறது. சுவாரசியமான நாவலாக அல்ல.

நாவலில் பல இடங்களில் சமூக நிதர்சனம் என்பதை தயக்கமில்லாமல் தொட்டுக்காட்டியபடியே நாவல் நகர்கிறது. உதாரணமாக - ஆட்டிசம் உள்ள தனது குழந்தையை செந்தில் ரம்யா தம்பதிகள் பள்ளிக்கூடத்தில் சேர்ப்பது என்பது பெரிய சோதனைக்காலம். சாதாரண பள்ளிகளில் சேர்த்தால், உணர்ச்சி கொந்தளிப்பும், பேசி புரியவைக்க முடியாத அல்லது நமது மொழியை புரிந்துகொள்ள முடியாத அந்த சிறு குழந்தை முரண்டு செய்தோ அல்லது மயக்கமுற்றோ விழுந்தால் அது அங்கிருக்கும் பிற சாதாரண குழந்தைகளை பாதிக்கும் என்கிறது பள்ளி நிர்வாகம். ஆனால் அந்த குழதையை புரிந்துகொண்டு அனுசரிக்க வேண்டும் என்று பெற்றவர்கள் எதிர்பார்க்கிறார்கள். அதே சமயம் அந்த குழந்தையை ஸ்பெஷல் குழந்தைகள் படிக்கும் வேறு பள்ளியில் சேர்க்கலாம் என்றால் அங்கே மனநலம் பாதிக்கப்பட்ட குழந்தைகள் இருப்பார்கள் என்பதால் அது தனது குழந்தையை பாதிக்கும் என்று இந்த பெற்றோர் அஞ்சுகிறார்கள். இந்த இரண்டு அச்சத்தில் எதை சரி என்று நியாயப்படுத்த முடியும் ? இந்த குரலை செந்திலின் நண்பனின் குரல் மூலம் நாவல் ஒலிக்கிறது. இப்படியாக சில முக்கியமான இடங்கள் நாவலில் உள்ளது.

மேலும் நாவலில் நாட்டார் கதை, புராண உபகதை, வேதாளம் விக்ரமாதித்தன் கேள்வி பதில் வகை, மேஜிக்கல் ரியலிச வடிவம், நாடக வடிவம் போன்றவை ஆங்காங்கே விரவி வருகிறது என்பது புதியதாக இருக்கிறது. இதில் சில சரியாக பொருந்தியும், சில உதிரியாகவும் நிற்கின்றன. இவற்றில் வரும் கிளைக்கதைகள் அனைத்துமே குழந்தை இன்மை அல்லது குழந்தை பெற்றோர் உறவு குறித்த அடையாளம் கொண்டதாகவே உள்ளன என்பதால் அவை நாவலோடு இணைந்து ஓடுகின்றன. சிறுத்தொடர் கதை, சுடலைமாடன் கதை, கிரேக்க துன்பியல் நாடக பாத்திரம் மெடியா, நாகம்மை கதை போன்றவை.

நாவலில் சொல்லப்பட்ட உபகதையின் பாத்திரம் வந்து நாவல் பாத்திரத்தை சந்திப்பது போன்ற உத்தியும் நன்றாக வந்திருக்கிறது. (திலீப் குமார் தனது ரமாவும் உமாவும் நாவலில் இப்படி ஒரு உத்தியை பயன்படுத்தி இருப்பார் என்று நினைவு). சிறுத்தொண்டர் கதையில் சொல்லப்பட்ட சீராளன், நாவல் பாத்திரம் செந்திலிடம் வந்து வரலாற்றில் நீங்காத இடம் பிடித்த தன் பெயர் குறித்த அதிருப்தியை சொல்வதும், மரணம் இல்லாத தனது வாழ்வு பெரும் துன்பம் என்பதும், "எனக்கு காலமின்மையும் வேண்டாம்; மரணமின்மையும் வேண்டாம்' என்ற இடம் நமக்குள் கேள்விகளை எழுப்புகிறது.

தகவல் தொழில்நுட்ப துறை மனிதர்களை ஒரு பெரிய மண்புழு போல தின்று தள்ளுகிறது. ரம்யா தனது பணியில் இருக்கும் இறுக்கம் காரணமாக இடையிடையே எதையாவது தின்பண்டம் கொறிக்கிறாள். ஒரு சமயத்தில் அவள் உடல் பருமன் அதிகரிக்கிறது. பிற்பாடு குழந்தை பேறின்மைக்கு அதுவும் ஒரு உப காரணமாக அமைகிறது. குழந்தைப்பேற்றுக்கான மருத்துவம், இந்தந்த நாட்களில் உறவு கொள்ளவேண்டும் என்று சொல்லி உணர்ச்சியை இயந்திர தன்மை கொள்ள வைக்கிறது. (திட்டமிட்ட கால அட்டவணை கலவையிலிருந்து காமத்தை வெளியே தள்ளியது என்று ஒரு அழகான வரி வருகிறது.) அதுவே பிறகு ஒரு ஆயாசமாக மாறுகிறது.

எவ்வளவு படித்த சமூகமாக மாறினாலும், பெண்ணுக்கு குறை எனும்போது இல்லாத அழுத்தம், சீற்றம், ஆணுக்கு குறை எனும்போது அவனுக்குள் உருவாவதையும், விந்தணுவை கொடையாக பெற்று குழந்தை பெறுவதை ஏற்றுக்கொள்வது தம்பதிகளுக்கு பெரிய சவாலாகவே இருப்பதையம் சூட்சுமமாக சொல்லி போகிறது நாவல்.

காதல் திருமணம் செய்துகொண்டதால் பெண்ணோடு உறவை முறித்துக்கொண்டு விட்ட பெண்ணின் பெற்றோர்கள் பின்னொரு சமயம் அவர்கள் மகளோடு இணையும்போது, கணவன் தான் விலக்கப்படுவதாக உணரும் இடம் நிதர்சனமான ஒன்று.

ஆட்டிச குழந்தை வரு வின் உலகம் மற்றும் சிக்கல்கள் பற்றி அமைந்த சிறு அத்தியாயம் யானை பொம்மையின் மூலமாக அவற்றைப் பேசவைத்த இந்த உத்தியில் சுநீல் நல்ல நாவலாசிரியராகிறார்.

நாவலில் நம்மைத் தைக்கின்ற இடங்களில் ஒரு இடம் - ஆட்டிச தத்து எடுத்து வளரும் குழந்தை வரு பற்றி தந்தை செந்தில் தனது அலுவலக சகா முரளியிடம் "வேற எல்லாத்தையும் விட்டு விடலாம் ..இப்ப வரைக்கும் அவ நன்றி விசுவாசத்தோடயே இருக்கா ..அதை என்னால தாங்கிக்கவே முடியலைடை டா " என்கிறான்.

பிள்ளைக் கூட்டல் எனும் தத்தெடுப்பு முறை சமூக வழக்கம் பற்றி சொல்லப்படுகிறது. குழந்தைகள் உற்பத்தி முனையம் எனும் அத்தியாயம் குழந்தைகளை நமது தேவைக்கு தகுந்தபடி உருவாக்கிக் கொள்ள முடியும் எனும் அறிவியல் வாணிகத்தைப் பற்றி கிழித்து தொங்கவிடுகிறது.

இறுதியாக வரு வை அழைத்துக்கொண்டு செந்திலும் ரம்யாவும் குடும்ப சுற்றுலாவுக்கு மகாபலிபுரம் செல்வதும், வண்டியில் இருந்த குழந்தை வரு காணாமல் போவதும் ஒரு திருப்பத்தை உருவாக்குகிறது. தேடிக்கொண்டே இருக்கிறார்கள். வேறொரு தளத்தில் வரு காகம், மீன், அரசமரம், சூரியன், ரயில் என்று ஒவொருவரோடும் போய்க்கொண்டே இருக்கிறாள். செந்தில் ரம்யாவுடன் வேதாளமும் விக்ரமனும் கூட சேர்ந்து குழந்தை வரு வை பலகாலமாக தேடுகிறார்கள். எப்போதுமே கிளிப்பச்சை நிறைத்து கவுனோடுதான் வெளியே வரவேண்டும் என்று அடம் பிடிக்கும் வரு எப்போதும் அதையே அணிகிறாள். தொலைந்து போன அவளை அந்த நிறம் கொண்டே நமது மனமும் தேட ஆரம்பிக்கிறது.

வேதாளம் விக்ரமனிடம் நீலகண்டன் கதையை சொல்கிறது. தேவரும் அசுரரும் மந்தர மலையை மத்தாகவும் வாசுகி பாம்பை கயிறாகவும் கொண்டு கடைகிறார்கள். தலை வால் என இடம் மாறி நின்றும் கடைகிறார்கள். தாம் அசுரர் தேவர் என்பதை மறந்து கடைகிறார்கள். கடையும் பகுதியை மிக வித்யாசமாக எழுதுகிறார் சுனீல். நாவலின் இந்த பகுதி நிதானமாக நாவலை தலைப்புக்கு கொண்டு சேர்க்கிறது. ஈசன் தன் பிரியர்களின் பொருட்டாக நீளத்தை விழுங்க உமையவள் தொண்டையில் நிறுத்த அதையே ஆசீர்வதிக்கிறார். அமுது நஞ்சாக மாறும் தருணம் ஒவ்வொருவருக்கும் நிகழ்கிறது. அதை அன்பின் முள்ளாக தொண்டையில் தேக்கியவர்களாலேயே நிகழ்கிறது இவ்வுலகு என்கிறது வேதாளம்.

அமுதும் நஞ்சும் ஒருங்கே பிறக்கும் பாற்கடல்தான் குடும்பம் எனும் லாசராவை தவிர்க்க முடியாமல் நாம் இங்கே நினைவு கூறுகிறோம். ஆனால் இங்கு அமுதே நஞ்சாக மாறுவது என்பது புதிய பரிணாமம் கொள்கிறது. தொண்டையில் நீலமாக நிற்பது நஞ்சு அல்ல. நஞ்சாக மாறிப்போன அமுது என்கிறது நாவல். இப்படியான இக்கட்டான இறுதி புள்ளிகளை நோக்கி நெருக்கும் சமயத்தில் ஏதோ ஒன்றை செய்வதன் மூலம் வாழ்க்கையில் ஒவ்வொருவரும் நீலகண்டர் ஆகிறார்கள்.

இறுதி அத்தியாயம் இந்த நாவல் முனைவர் பட்டம் பெற்று பேராசிரியராக இருக்கும் வர்ஷினி செந்தில் (ஆட்டிச குழந்தை வரு தான்) என்பவள் எழுதியது என்கிறது. சகோதரன் சாகர் விஞ்ஞானியாகி ஆட்டிச குழந்தைகள் பிறரோடு தொடர்பு கொள்ளும்படி ஒரு மின்னணு சாதனத்தை வடிவமைக்கிறான். இந்த நாவலே அப்படியான வர்ஷி ஆட்டிபேட் என்ற சாதனத்தால் எழுதப்பட்டதே என்கிறது இறுதி அத்தியாயம்.

வரு வை அனைவரும் ஒரு புறம் தேடிக்கொண்டிருக்க அவள் மற்றொரு புறம் விளையாட்டாகவே நகர்ந்து கொண்டிருப்பதும், வேதாளம் முதல் மனிதன் வரை அவளை தேடிக்கொண்டிருப்பதாக இருக்கும் இடத்தில் நாவல் தனது முகட்டினை தொடுகிறது. ஆட்டிச குழந்தைகள் நிலை அவர்கள் பெற்றோர் நிலை தவிப்பும், மேன்மையும் கீழ்மையும் கூடியதாகவே இருப்பதாக சொல்கிறது. அதன் பிறகு வரும் அத்தியாயம் சட்டென ஒரு சம்பிரதாயமான நேர்மறையான முடிவை நோக்கி நாவலை தள்ளிக் கொண்டு நிறுத்துகிறது. நாவலாசிரியரின் சிறுகதை ஆசிரியர் முகம் ஆங்காங்கே தென்படுகிறது.

நடப்புலகில் நன்றாக இருக்கிறது என்று எண்ணி தத்து எடுத்து பிறகு ஆட்டிசம் இருப்பதை வளர்ப்புப் பெற்றோர்கள் அறிவதும், அதற்கு பிறகு தங்களுக்காக தம் ரத்தத்தில் ஒரு குழந்தை பிறப்பதும் அப்போது அவர்கள் தங்களுக்குள்ளும், குடும்பத்துக்குள்ளும் உருவான உறவுகளில் ஏற்படும் அதிர்வுகளும், அதன் கடைசல்களில் தவிப்பதுமான பின்னணியில் - விலகி நின்று சொல்லப்பட்டிருக்கும் நாவல் அதனளவில் முக்கியமான ஒன்று. உணர்ச்சிகரமான நாடகீயமான இடங்கள் உருவாகிவிடுவதை திட்டமிட்டு தவிர்த்து நாவலை சொல்ல முயலும்போது நாம் அதற்கான இடத்தில் வைத்து இந்த நாவலை வாசிக்கவேண்டும்தான்.

No comments:

Post a Comment

இயற்பியலின் தாவோ - பிரிட்ஜாஃப் காப்ரா

இயற்பியலின் தாவோ பிரிஜாப் காப்ரா Fritjof Capra மொ பெ போன். சின்னத்தம்பி முருகேசன் சந்தியா பதிப்பகம் #இயற்பியலின்_தாவோ படிக்கத்  துவங்கி இர...