Sunday 19 April 2020

ஹிப்பி- அய்யனார் விஸ்வநாத் - எழுத்து பதிப்பகம்

ஹிப்பி
அய்யனார் விஸ்வநாத்
எழுத்து பதிப்பகம், சென்னை 

zerodegreepublishing@gmail.com
9840065000 

தற்போது அரபு நாட்டில் வேலை நிமித்தமாக வாழ்ந்துகொண்டிருக்கும் திருவண்ணாமலையை சார்ந்த அய்யனார் விஸ்வநாத்
தனது பால்ய காலங்களில் நினைவுத்தொகுப்பின் வழியாக தனது இளம் பிராயத்து நினைவையும் விடலைப்பருவத்து அனுபவங்களையும் அடுத்தடுத்த அத்தியாயங்களாக பொருத்தி வைத்து ஒரு நாவல் வடிவத்தை பெற முயற்சித்திருக்கிறார். ஒவ்வொரு அத்தியாயத்தையும் காட்சி ஒன்று காட்சி இரண்டு என்று தலைப்பிடுவதில் நினைவுகள் எல்லாம் காட்சி வடிவங்களில்தான் அலை மீள்கின்றன என்பதாகவும் கதை சொல்லப்பட்டிருக்கிறது. ஊர் என்பது நினைவுகளின் தொகுப்பு என்று இவர் முன்னுரையில் சொல்வது மிகவும் சரி.

பின்தங்கிய வடாற்காடு மாவட்டத்தின் திருவண்ணாமலையில் ரமணர் ஆசிரமத்துக்கு வரும் வெளிநாட்டவர்கள் அதிகம். குடித்து விட்டு வரும் கணவனிடம் அடிவாங்கும் பெண்களையும், சாவகாசமாக சுதந்திரமான உடையில் சிகரெட் புகைக்கும் பெண்களையும் ஒரே இடத்தில் பார்க்க முடியும். இந்த புள்ளியில்தான் இந்த நாவல் எழுகிறது. இந்த பின்னணியில் வேறு நாவல்கள் எழுதப்பட்டிருக்கிறதா என்று தெரியவில்லை. (பருக்கை என்ற வீரபாண்டியன் நாவல் வேறு வகைமை).

நத்தை போன்ற அசுர வேகத்தில் படிக்கும் பழக்கமுள்ள நான் ஒரே மூச்சில் படித்துவிட முடிந்தது. சரளமான எழுத்து. சின்னச்சின்ன வரிகள். சாருவின் வாசகர் குழாம் சார்ந்தவர் என்பதால் இருக்கலாம் - போதை வஸ்துக்கள், காமம், இயலாமை இவற்றை தேர்ந்த விகிதத்தில் கதைக்கு நியாயமாக கலந்திருக்கிறார்.

உயரமான பக்கச்சுவர்கொண்ட ஐந்தடி இடைவெளியுள்ள சிவப்பு தரையில் மிக நீண்ட பாதையில் சுவர்களின் அதிர்வுகளை ஏற்றபடி நடந்துசென்று முட்டுச்சுவரில் மோதி வலப்புற சிறு துவாரத்தின் வழியாக தயங்கி பார்த்து ஏறக்குறைய செங்குத்தான சாய்வுள்ள படிகளில் அமர்ந்து அமர்ந்து இறங்கி, இருள் சூழ, திடீரென ஒரு கதவு திறக்க வெளிச்சத்தில் கண் கூச - எருமைத் தலை கொண்ட பெண்ணும் விலங்கு முகம் கொண்ட அமானுஷ்ய உடலமைப்புகள் கொண்டவர்களை காண மயங்கி விழ தன்னை கையில் எடுத்துப்போகும் உருவத்தின் அடர்ந்த தாடி காலை பார்த்தபடி - என்று போதை மனக்காட்சிகளோடு துவங்கும் நாவல் அதை சந்தித்த இடம் மற்றும் அனுபவம் பற்றி பால்யகால நினைவோடு இணைத்து சொல்லிப்போவதுவே நாவல்.

கால் சூம்பி இருக்கும் அலமேலு ஐந்தாம் வகுப்பில் தேறி நல்ல மதிப்பெண்களோடு ஆறாம் வகுப்புக்கு வேறு பள்ளி செல்வது, குடிகார தந்தை ஏழுமலை , அனைத்தையும் மௌனமாக ஏற்கும் அம்மா, இரண்டு மூத்த சகோதரிகள், பன்றி பேய்க்கும் வேலை, பிறகு இருவரும் யாருடனோ ஓடிப்போவது, சாலை விபத்தில் அம்மா மரணம், குடியை நிறுத்தாத அப்பா என்று ஒரு திரி.

எப்போதும் சந்தேகத்திலேயே இருக்கும் வேற்றுப் பெண் தொடர்புள்ள குடிகார அப்பா , மென்மையான அம்மா, பரிவான ஆயா, பாதியில் நிற்கும் கல்லூரி படிப்பு, தூக்கத்தில் சில்லிட்ட உடலோடு ஆயாவின் மரணம், சமையல் செய்தபடி உட்கார்ந்த நிலையிலேயே மரணிக்கும் அம்மா, வீட்டை துறந்து ஆட்டோவிலேயே வாழும் கதை சொல்லி, அப்பாவின் வெறுப்பில் ஏரியில் தற்கொலைக்கு முயன்று திரும்புவது, சுய பச்சாதாபம், அச்சம், அழுகை இடையே ரமணாஸ்ரம ஆட்டோ ஓட்டுனர்களின் சகவாசம் கொண்டு ஆட்டோ ஒட்டி வருகையில் போதையில் சவாரிக்கு வரும் மெக் என்ற பெயருள்ள வெளிநாட்டவர் ஒருவரை இறக்கி விடுகையில் நட்பு ஏற்பட்டு அவர்களிடம் மாத சம்பளத்துக்கு ஆட்டோ ஒட்டி பிறகு அவர்களுடைய ஹிப்பி குழாமில் இனைந்து திரும்புவது இரண்டாவது திரி.

மெக்கானிக் ஷண்முகம், அப்பாவிடமிருந்து விலக்கம் கொண்டுள்ள மகன், மனைவி இறந்த பிறகு தனித்த அவரிடம், முதல் திரியில் உள்ள ஏழுமலை வீட்டை பூட்டிவிட்டு தனது கடைசீ மகளுடன் வந்து இணைந்து கொள்ள, வீட்டு வேலைக்காரியாக அலமேலு வயதில் மூத்த சண்முகத்தோடு ஒரு சமயத்தில் கலவி கொண்டுவிட மறுநாள் தாலி கட்டிக்கொண்டு மனைவியாகி விடுகிறார். இதைக்கண்ட மகன் வீட்டுக்கு வருவதில்லை. இதற்கிடையே ஏழுமலையான் ஓடிப்போன இரண்டு மகள்கள் ஏமார்ந்து திரும்பகுகிறார்கள். மகன் வெளிநாட்டு காரர்களோடு சேர்ந்துகொண்டு போய்விட்டான் என்று பலரும் சொல்ல அவனை நினைத்து காத்திருக்கும் அப்பா மெக்கானிக் ஒரு நாள் மழை இரவில் அவசர அழைப்பு வந்து ரிப்பர் வேலை செல்லும்போது படி சறுக்கி பேருந்தில் நசுங்குவதும், அந்த வீடு தனித்து விடுகையில் விதவையாகிப்போன தனது வயதையே ஒத்த மாற்றாந்தாய் அலமேலு கதை சொல்லியிடம் வந்து வீட்டுக்கு வரச்சொல்வதும், இருவரும் சேர்ந்து சிரித்தபடி சினிமாவுக்கு போவதும் மூன்றாம் திரி.

இதில் முதல் மற்றும் இரண்டாம் திரியை இணைத்து திரித்து மூன்றாம் திரி உருவாவதை நாவலின் கடைசி பகுதியில் கவனிக்க முடிகிறது. ஒரு நாவலை இப்படி சுருக்கி சொல்வது சரியில்லை என்றாலும் ஒரு கதைக்கோடிடலுக்காக இப்படி.

இதைப் படிக்கையில் , பால்ய நினைவு, நடப்பு என்று ஒன்றை அடுத்து ஒன்றாக மாறி மாறி சொல்லும் அத்தியாய அடுக்கத்தை புள்ளிகளாக்கி இணைத்தபோது ஒரு அலைவடிவம் உண்டானது (படம் காண்க). நாவலின் போக்கு இப்படித்தான் அமைந்துள்ளது.

போதையில் வரும் வெளிநாட்டு வாடிக்கையாளரை எல்லை தாண்டிய தூரப்பகுதிக்கு கொண்டு விட நேர்கிறது. அங்கே அவரை கூட்டிப்போக வந்திருக்கும் இரண்டு வெளிநாட்டு பெண்கள் பிறகு அங்கேயே வேலை. பிறகு நீயும் வா என்ற அழைப்பில் அவர்களோடு சேர்ந்து கொள்ள, வெளிநாட்டவரும் நான்கைந்து இந்தியர்களும் கொண்ட இருபத்தி நான்கு பேர் உள்ள ஹிப்பி குழாமில் இணைத்துக்கொண்டு பதினைந்து கிலோமீட்டர் தூரம் மலைகளில் ஏறி இறங்கி ஒரு காட்டுப்பகுதியில் நடுவில் உள்ள சமவெளியில் கூடாரம் அமைந்து ஒரு வாரம் பகலும் இரவுமாக, இறைச்சி, மது, ஆட்டம், பாட்டு, புல்லாங்குழல் இசை, வயலின், மழை, ஓடை, குளியல், தூக்கம், புகை, கஞ்சா, காமம் என்று பரவும் ஒரு வார அனுபவம் சொல்லப்படுகிறது. இதனிடையே தன்னை அழைத்துவந்த மெக் உடன் வரும் இரு பெண்கள் ரோஸலின், ஜோன். இந்த ஜோன் மீது இவனுக்கு ஈர்ப்பு இருக்கிறது. ஓடையை கண்டதும் துள்ளி குதித்து சென்று நிர்வாணமாக ஒன்றாக குளிக்கும் கூட்டத்தில் இவனது கண்கள் ஜோனை தனியாக கவனிக்கிறது. அவளோடு சேர்ந்து நடந்து மூங்கில் செழித்த ஒரு இடத்துக்கு செல்கிறான். அங்கே அவள் மூக்கின் வழியாக உறிஞ்சும் போதையை அறிமுகம் செய்கிறாள். மயங்கி போகிறான். இப்படி பல முறை போதை அனுபவங்கள் கிடைக்கிறது. ஆரம்பத்தில் தங்கியவன், திணறியவின் பிறகு நன்றாக பழகிப் போய் அவர்களிடமே கேட்க துவங்குகிறான். குடிப்பழக்கம் மட்டும் எனக்கு எப்போதும் வேணாம் என்று அப்பாவின் அராஜகத்தை அனுபவிக்கும் அம்மா சொன்ன வார்த்தைகள் அவனுக்கு குற்ற உணர்வை தருகிறது. ஆனால் போதை வஸ்துவை கண்டவுடன் அவற்றை அவன் எளிதாக தாண்டிப்போகிறான்.

அந்த காட்டில் வந்து இறங்கிய முதல் நாள் கூடாரம் அமைந்த பின் இரவில் முதல்நாள் ஒருத்தி புல்லாங்குழல் வாசிக்கிறாள். காட்டின் நிசப்தம் கிழித்துக்கொண்டு வரும் அந்த பாடலில் உள்ள சோக ரசம் அவனை உசுப்பி அவன் வெடித்து அழுகிறான். பிறகு ஒருவர் வயலினில் வாசிக்க அந்த சோகமும் அவனை வதைக்கிறது. அழுகையாக வெளிப்படுகிறது. அப்போது ஆதரவாக வரும் கரம் அவனுக்கு மதுவை அருந்த சொல்லி தருகிறது. போதைந்து போன சோகம் இசையின் வழியாக மேலெழுவதும் மது அதை மறக்கடிப்பதும்தான் இங்கே விழும் முதல் முடிச்சு.

வாழ்க்கை வாழ்வதற்கே என்ற ஹிப்பித்தன்மை உடைய குழுவில் எந்த விதிகளும் இல்லை. அவரவர் அவரவர் விருப்பத்தில் திரிகிறார்கள். ஆடிப்பாடி கழிக்கிறார்கள். உடைகள் துறக்கிறார்கள். குடிக்கிறார்கள்.
கலவி கொள்கிறார்கள். யாரும் யாரையும் பொருட்படுத்துவதில்லை. ஆனால் பிரேம் (ஓஷோதான் தனக்கு அந்த பெயரிட்டதாக சொல்கிறான்) ஜோனிடம் நெருக்கம் காட்டுகிறான். அதை மெக் விரும்பவில்லை. கதை சொல்லியை அவனோடு சேராதே என்று எச்சரிக்கிறான். மேலும் ஜோனுடன் இவன் அதிகம் சுற்றுவதை கண்டிக்கிறான். அதே சமயம் ரோஸலின் வந்து நான் பிரேமிடம் பேசுவதை மெக்கிடம் சொல்லாதே என்கிறாள். கட்டற்ற சுதந்திரம் என்று பேசும் குழுவிடம் இந்த உடைமையாக்கிக்கொள்ளும் எண்ணம், குறிப்பாக ஒரு பெண்ணின் பொருட்டு உருவாவதை நாம் கவனிக்க வேண்டும். ஆனால் அய்யனார் இதை உரத்து சொல்வதில்லை.

ரோஸலின் ஒருநாள் போகைக்கும்போது ஜோனிடம் இவனைக்காட்டி இவனுக்கு உன் மேல் தீராத ஆசை உண்டு தெரியுமா என்கிறாள். நன்றாகவே தெரியும் என்கிறாள். பின்பு ஒருநாள் மூங்கில் திட்டில் தனித்த இடத்தில் கஞ்சாவில் இருவரும் இருக்கையில் பச்சைப்பாம்பு ஒன்று அவன் மேல் இறங்கி கடந்து போகிறது. ஒன்னொரு பாம்பு ஜோனின் கையில் வர அவள் அதை கையில் சுருட்டிக்கொள்கிறாள். பிறகு விடுவிக்கிறாள்.

யாருக்காக வாழவேண்டும் நான். இறந்து போகிறேன் என்ற அவனிடம் நீ யாருக்காக வாழவேண்டும் ? முட்டாளே நீ உனக்காக வாழவேண்டும் இல்லையா என்கிறாள். ஒரு முறை அவன் அவளிடம் அந்த தனிமையில் இருக்கும்போது உன்னை காதலிக்கிறேன் என்கிறான். அவள் தெரியும்டா முட்டாள் என்கிறாள்.

ஒரு மழைநாளில் குளிரில் கூடாரத்துக்குள் போர்வைக்குள் கிடைக்கும் மீராவிடம் போய் பீடி கேட்க அவளை எழுப்ப அவள் அவனை போர்வைக்குள் இழுத்துக் கொண்டு குளிராக இருக்கிறது என்கிறாள். அவன் அவளை நெருங்கும்போது 'மூட்' வருகிறாதடா. ஆனால் எனக்கு நீ சகோதரன் உணர்வைத்தான் தருகிறாய் என்கிறாள். அவன் பதறுகிறான். சரி பரவாயில்லை வா. உன்னை ஏமாற்ற விருப்பமில்லை என்று சொல்லி நீ விரும்பும் பெண்ணை நினைத்துக்கொள் என்று சொல்லி அவனை தனது ஸ்பரிசங்களின் மூலம் அவனது காமத்தை வெளியேற்றுகிறாள்.

ஒரு இரவில் இவன் போதையில் சென்று ஜோனிடம் என்னோடு வா என்று அழைத்துச்சென்று மறைவில் அவளை கேட்க, முதலில் மறுத்த ஜான் பிறகு இணங்குகிறாள். பாதி உடல் ஓடை நீரிலும் பாதி உடல் பாறையிலுமாக அவர்கள் கலவியில் இருக்கும்போது ஒரு முரட்டுக்கை வந்து அவனது முடியை கொத்தாக பிடித்து தூக்குகிறது. அது மெக். பிறகு தள்ளாடியபடி கூடாரம் நோக்கி போகிறான். பிறகு தாகத்தில் தண்ணீர் குடிக்க வரும்போது காலில் யாரோ படுத்திருப்பது தடுக்குகிறது. குனிந்து பார்த்தால் ஜோன். மூக்கில் ரத்தம் வழிய மூச்சின்றி கிடக்கிறாள்.

மறுநாள் ஜோன் புதைக்கப்படுகிறாள். மெக் கொன்றதாக பிரேம் எண்ணுகிறான். போதை அதிகம் கொண்டதால் இறந்ததாக ரோஸலின் சொல்கிறாள். நான்தான் கொன்றுவிட்டேன் என கதைசொல்லி அழுகிறான். ஆனால் பிணத்தை கண்டபின் இவனது கண்களை தவிர்க்கிறேன் மெக் என்பதில் ஒரு குறிப்பு தெரிகிறது.

நாவலில் சில மங்கலான புள்ளிகள் உண்டு. ஆரம்பத்தில் ஆங்கிலத்தை கேட்கப்படும் சாதாரண கேள்விகளுக்கே தடுமாறும் ஆட்டோ ஒட்டி ஓரிரு வாரத்தில் அவர்கள் சம்பாஷணையை முழுதாக புரிந்து நாவலில் பேசுவது இடறுகிறது. ஹிப்பிகளின் அந்த ஒரு வாரத்தை பகலிரவாக திரும்ப திரும்ப புகை மது கஞ்சா கலவி என்று மேம்போக்காக சொல்லிவிட்டு போகிறது நாவல். அந்த அனுபவத்தை வாசகனுக்கு கிறுக்கு ஏறும்படி இன்னும் கனமாக சொல்லி இருக்கவேண்டும். (அமானுஷ்ய முகங்கள் பற்றிய குறிப்பு, மூங்கில் காடு இடையே பாம்பு மேலே ஏறிப்போதல் போன்ற மிகச்சிலவே உள்ளன. அவற்றை போதையின் புகைமூட்ட காட்சிகளாக உணர முடிகிறது) அதிகம் விளக்குதல் பின் நவீனத்துவ பாணிக்கு உவப்பாக இருக்காது என்று கருதி இருக்கலாம். ஆனால் இப்படியான கதைக்களத்தில் அதை தவிர்க்க முடியாது. (சாருவின் தேகம் நாவலில் இந்தவகை உன்மத்தம் ஒன்று இருக்கும்).

மேலும் ஹிப்பிகளிடம் நாடோடித்தனம் தவிர வேறு சில பண்புகள் இருக்கலாம். உதாரணமாக மலை ஏறும்போது அங்கு சப்தமிடும் பறவைகள் பெயரை எல்லாம் சொல்கிறார் அந்த ஹிப்பி. ஆனால் இவனுக்கு குயில் தவிர வேறு எதுவும் தெரியவில்லை. புல்லாங்குழல் மற்றும் வயலின் இசை ஒரு இடத்தில் வருகிறது. இது கூட தாண்டிச்செல்லும் வரிகளிடையே இருக்கிறது. இவற்றை விரிப்பதன் மூலம் ஹிப்பிகள் பற்றிய மேலதிக பரிணாமத்தை கொண்டு வந்திருக்கலாம். செய்தி தாளகளிலும் கூகிளும் காணக்கிடைக்காத ஒரு அனுபவத்தை நாவல் வாசிப்பை தந்திருக்க வேண்டும். இது ஒரு குறையாக அமையாவிட்டாலும் எதிர்பார்ப்பை உருவாக்கி விடுகிறது என்பதே உண்மை.

இந்த நாவலில் மூன்று இடங்கள் அழகானவை.
ஒரு நாள் இரவில் ஒரு ட்ரைவர் வந்து இவர்களோடு புகை கஞ்சா என்று திரியாமல் ஒழுங்காக வீடு போய் சேர். நீ உதவிக்கு வந்த வேலையாள்தான். இது உனது இடம் இல்லை என்கிறார்.

மது கஞ்சா போதை நிர்வாணம் பாடல்கள் காமம் என்று அனைவரும் இவனை சேர்த்துக்கொண்டு அலைந்தாலும் அவர்கள் இவனைக்கண்டு அடிக்கடி சிரிக்கும் சிரிப்பு, கிண்டல், சீண்டல் என்று இருக்கிறது. சமைப்பதற்கு உதவிக்கு போ என்று அனுப்பும்போது அவனுக்கு தோன்றுகிறது. இவர்கள் நம்மை வேலையாளாக மட்டுமே வைத்திருக்கிறார்கள்.

ஜோனின் மரணத்திற்கு பிறகு அவனை பள்ளிக்கூடம் அருகே சாலையில் நிறுத்தி இறக்கி விட்டு அவர்கள் வாகனம் சென்று விடுகிறது. ரோடில் நிற்கும் அவன் உணர்கிறான். இதுதான் தன்னுடைய நிஜ நிலைமை என்று.

இந்த நாவலில் ஒருவித இமைகளை கவனிக்க முடிகிறது. விதிமுறைகள், கட்டுப்பாடுகள் அற்ற ஹிப்பி குழுவில் ரகசிய பிரிவுகளும், உடைமையாக்க எண்ணங்களும் உள்ளன. கட்டுப்பாடுகள் உள்ள ஏழுமலை குடும்பத்தில் சுதந்திரமாக ஓடிப்போகும் பெண்கள், பிறகு திரும்பி வரும் பெண்கள் இருக்கிறார்கள்.

சகோதரன் போல் உணர்ந்தாலும் காமத்தை அவிக்கும் ஹிப்பி மீரா இருக்கிறாள். தனது மகளை மெக்கானிக்கிடம் விட்டு வைக்கும் ஏழுமலை கட்டுக்கோப்பான சமூகத்தில் இருக்கிறான். இறந்துபோன அப்பாவின் மனைவியை "வா அலமேலு " என் அழைத்து பக்கத்தில் வைத்துக்கொண்டு ஆட்டோவில் சினிமாவுக்கு போகும் கதைசொல்லியும் இருக்கிறான்.

சட்டதிட்டங்கள் அற்ற ஹிப்பி குழுவில் ரகசிய உறவுகளும் ஆசைகளும் அதிகாரப்புள்ளிகளும் நிலவுகின்றன. சட்டதிட்டங்கள் உள்ள விளிம்பு நிலை சமூக அமைப்பில் சுதந்திர பாலுறவு நிலவுகிறது.

"எவங்கூட உனக்கு பேச்சு" என்று எப்போதும் சந்தேகமாக திட்டும் அப்பாவை சகித்துக்கொண்டுவாழ்ந்து ஒரு நாள் சமையலறையில் உயிர் விடும் அம்மா குடும்ப பெண்ணாக இருக்கிறாள். (அப்பா திட்டுவது தங்கள் மேல் உள்ள பரிவு என்கிறாள். மனம் வெதும்பி தூங்கும் கதை சொல்லியிடம் ஒரு பின்னிரவில் அம்மா வந்து படுத்துக்க கொள்கிறாள். அவள் புடவையில் பீடி வாசனை இருக்கிறது போன்ற மெதுமையான வரிகள் சில நாவலில் வருகின்றன)

மாற்றானுடன் உறவு கொண்டதை சகிக்க முடியாத காரணத்தால், சுதந்திர ஹிப்பி குழுவில் இருந்த ஜோன் என்ற பெண்ணின் உடல் தரையில் கிடக்கிறது.

நான் முன்பு சொன்ன அலைவடிவத்தின் முகடுகளை ஒரு பகுதியாக அகடுகளை ஒரு பகுதியாக வைத்து பார்க்கும்போது -
இதில் யார் ஹிப்பி ?
யார் ஹிப்பி இல்லை ?
நாவல் இந்த கேள்வியையே என்னுள் எழுப்பியது.

No comments:

Post a Comment

இயற்பியலின் தாவோ - பிரிட்ஜாஃப் காப்ரா

இயற்பியலின் தாவோ பிரிஜாப் காப்ரா Fritjof Capra மொ பெ போன். சின்னத்தம்பி முருகேசன் சந்தியா பதிப்பகம் #இயற்பியலின்_தாவோ படிக்கத்  துவங்கி இர...