Monday 20 April 2020

சுபிட்ச முருகன் - சரவணன் சந்திரன் - டிஸ்கவரி புக் பேலஸ்

சுபிட்ச முருகன் **(எதுவாக ? எதுவாகவோ ? அதுவாக ?)
சரவணன் சந்திரன்
டிஸ்கவரி புக் பேலஸ். கேகே நகர் சென்னை
discoverbookpalace@gmail.com
8754507070


சமீபத்தில் மிகவும் பேசப்பட்ட நாவல் இது. ரோலக்ஸ் வாச் போன்ற முந்தைய நாவல்கள் வரவேற்கப்பட்டு. இந்த நாவல் அனைத்திலும் சிறந்தது என்று ஜெயமோகன் சொல்கிறார். சராசரியான தட்டையான வாசிப்பு தளமும் ரசனையும் உள்ளவர்களால் இதன் சிறப்பை புரிந்துகொள்ள முடியாது என்று சில பதிவுகளும் வந்திருக்கின்றன. திரிபு நிலையை அனுமானிக்க முடிந்த போதுதான் மெய்யறிதல் பற்றிய இதன் இலக்கிய தரத்தை அறிந்து கொள்ள முடியும் என்று முன்னுரை கோடிட்டு காட்டுகிறது. ஆனால் நாம் வாசிக்கும்போது இத்தகைய முன் அனுமானங்களை ஒதுக்கி வைத்துவிட்டு வாசிப்பதுவே நியாயம்.

சற்று நீண்ட பதிவுக்கு மன்னிக்கவும்

இந்திய/இந்து மரபு சார்ந்த நம்பிக்கைகளைப்பற்றிய புரிதல் அல்லது அதற்கான இடத்தை தந்து வாசிக்க தயாராக இல்லாதவர்களுக்கு இந்த நாவல் பெரும் ஏமாற்றத்தையே தரக்கூடும். காரணங்களை கிள்ளிப்பிடிக்க முடியாத இடத்தில் உண்டாகும் மீறல்களை எதிர்பாராமைகளை உள்ளடக்கியது இந்த நாவல். சிறந்த நாவல் என்றால் ஒரு விளிம்பு வழியும் நிறைவோ அல்லது பெரும் தொந்தரவோ நமக்குள் உண்டாகும். எனது வாசிப்பில் இந்த இரண்டுமே ஏற்படவில்லை.

மரபின் ஆழத்தில் இருந்து ஒரு துளியை எடுத்து படைப்பு செய்யும்போது நம்மை அந்த ஆழத்திற்கு இழுத்துச் சென்று மூழ்கடிக்கவேண்டும். நமது காரண அறிவு தற்காலிகமாக நழுவி அல்லது நகர்ந்து இடம் கொடுத்து அதை வாசிக்க நம்மை உந்த வேண்டும். அப்படி அமைய இரண்டு காரணிகள் தேவை. ஒன்று அந்த இடம் மற்றும் காலம் சார்ந்த நுட்பமான மற்றும் விரிவான எழுத்து. மற்றொன்று காலத்தின் வாசனையை நமக்கு காட்டும் மொழி லயம். இந்த இரண்டும் இதில் இருப்பதாக உணர முடியவில்லை என்பது கூட இந்த நாவலை நான் கிரகிப்பதற்கு தடையாக இருக்கலாம்.

கதையின் விதை முரட்டுத்தனமான குணம் கொண்ட தாத்தா. கதை சொல்லியின் தாத்தா. நாவல் முழுதும் தன்மை இடத்திலிருந்து சொல்லப்படுகிறது. சிறுவனாக இருந்தது முதல் வாலிபனாக வளர்ந்த அனுபவத்திலிருந்தும் செவி வழியாக குடும்பத்திலிருந்து சொல்லப்பட்டதில் இருந்தும் தாத்தா பற்றிய பிம்பம் அமைகிறது.

ஒரு நாவலில் கதை என்பது மட்டுமே நாவல் அல்ல என்பதால் இந்த பாத்திரம் நாவலில் எப்படி உள்ளிழுக்கப்பட்டிருக்கிறது, அதிலிருந்து கொண்டே எப்படி அந்த குரல் நம்மிடம் பேசுகிறது என்பதே நாவலின் முக்கிய அம்சம். இந்த நாவலே இழுபட்டு அலைக்கழிக்கப்பட்ட அந்த குரல்தான் என்று சொல்லலாம்.

கதை சொல்லியின் தாத்தாவுக்கு இரண்டு ஆண் இரண்டு பெண் குழந்தைகள். அவர் தனது தங்கையின் மகளை மட்டும் ஏனோ தன் குடும்பத்தில் அந்நியமாக பார்க்கிறார். அவள்தான் இளங்கா அத்தை. சுண்டி இழுக்கும் அழகுடையவள். மஞ்சளை அரைத்து உடலெங்கும் பூசி, முகத்திலும் அப்பி பூசி மஞ்சள் முகம் கொண்டவளாக இருக்கிறாள் அத்தை.

கனவா நனவா என்று அறிய முடியாத நிலையில் படுத்திருந்த நிலையில் தனக்கு முன் பெரிதாக மஞ்சள் நிறம் தெரிய எழுந்து நிற்கும் ராஜநாகத்தை, கண்ணுருவதும் அதிலிருந்து இளங்கா அத்தையின் மரணமும் அவள் நினைவும் சுழல் சுழலாக பிரிய அவளளது குரலைக்கேட்டு தொடர்ந்து துரத்திக்கொண்டு போக ஒரு எல்லையில் கண்ணாடி விரியன் நடுவே கிடையாய் கிடைக்க - பாம்புக்கும் அத்தைக்கும் ஒரு தொடர்பை ஏதோ விதமாக புரிந்து கொள்ள முயல்கிறோம்.

மாமாவுக்கு இளங்கா அத்தை மேல் விருப்பம். ஆனால் வேறு ஒரு பெண்ணை கட்டாயமாக தனது மகனுக்கு கட்டி வைக்கிறார் தாத்தா. வெளியூரில் ஆசிரியையாக வேலை செய்யும் அத்தையை அடிக்கடி சென்று பார்க்கிறார் மாமா. ஊரே அதை பற்றி ரகசியமாக பேசிக்கொள்கிறது . தீக்குளித்து விடுகிறாள் அத்தை. அத்தையின் உடலை கொண்டு செல்லும் இடத்தில் நன்றாக எழுதி இருக்கிறார் சரவணன். அந்த காட்சியும் அது கதை சொல்லியை ஏதோ ஒரு ஆழத்தில் தொடுவதும் நாவல் பிறக்க முக்கியமான ஒரு புள்ளி.

அத்தையின் இறப்புக்கு தாத்தா ஒரு கலகக்காரணியாக இருக்கிறார். மாமாவிடம், 'வேணாம்டா. அவளை பார்த்தா யாருக்குமே அவளோட படுக்கணும்னு தோணும்டா ? தூக்கி வளத்த நான் மட்டும் மிச்சமா என்ன? என்பதாக சொல்கிறார். மாமாவிடம் சந்தேகம் வலுக்கிறது. ஒரு நாள் பேச்சு முற்றுகையில் அவளிடம் 'எங்கப்பன் கூட படுத்திருக்கலாம் ..இப்படி எத்தனை பேர்கிட்ட படுத்தியோ ' என்று வார்த்தைகளை கொட்டிவிடுகிறார். இதில் ‘மிச்சமா என்ன?’ என்ற வார்த்தை மிக அழுத்தமான ஊகங்களை உண்டாக்கும் ஒன்று

பாடையில் தூக்கிக்கொண்டு போனபோது தலையைக்குலுக்கி ஆட்டினாள் அத்தை. 'மிச்சம் வைச்சுட்டு போறாளே ? காடு சேர மாட்டேங்குறா " என் தலையை கயிற்றை வைத்துக்கட்டினார்கள். மனதிற்கு பிடித்ததை காடு போகையில் தூக்கிக்கொண்டு போய் விடுவாளோ என்று குடும்பம் அஞ்சியது. வீட்டுக்கு வந்த மாமாவின் சட்டையை பிடித்து ஆச்சி அறைந்தாள். இந்த சிறு வாக்கியங்கள் கதையின் முக்கிய பகுதியை சொல்வது.

தனது உடலில் வெப்பம் வருவது, அத்தை வந்து கட்டிலில் படுத்து கொண்டாள், கொதிக்கும் எரிமலை வாய்க்குள் கட்டிப்பிடித்து படுத்திருந்தோம், முழங்காலில் என்னைப் படுக்கவைத்தது நெஞ்சுக்கூட்டின் கொதிக்கும் எண்ணையை ஊற்றினாள், கட்டில் இறங்கி போனபோது அத்தை முதுகின் கருப்பு உடையில் வெள்ளை நிறம் வரி வரியாய் இருந்தது. குடிலுக்கு வெளியே வந்து சோளக்கொள்ளைக்கு ஓடினேன். அத்தை ஏதோ சொல்வது காதில் விழவில்லை. வழியில் கண்ணாடி விரியன் படுத்து கிடந்தது. பால்யம் நினைவுக்கு வந்தது என்று சொல்லி சாவுகள் பற்றி நினைவு தொடர்கிறது.

வீட்டில் சாவுகள் விழுகின்றன. மாமா தூக்கில் தூங்குகிறார். பிறகு சின்னா மாமாவும் தூக்கு போட்டு கொள்கிறார். வியாபார புலியான தாத்தாவே ஒரு நாள் தொங்கி விடுகிறார். இறப்புகளும் அதற்கான காட்சிகளும் காரணமுமாக நாவல் நகர்கிறது. ஆனால் தொடர்ச்சியான கதை சொல்லாக இல்லாமல் நினைவில் முன் பின்னாக தவ்விச்செல்கிறது. பாத்திரங்களின் தொடர்பை இப்படி நான் எழுதுவதே ஒரு விதமாய் நாவலுக்கு விரோதமானதுதான்.

' உன் தாத்தன் கூட அவளை விரட்டுவது நிஜம்தான். ஆனா அவள் யாருக்கும் பிடி கொடுக்கலை. உங்க தாத்தா மொத்தமா கருவறுத்துட்டாரு. அவ பழி வாங்காம விடமாட்டா என்று ஆச்சி சொல்கிறாள். பயம் ஒரு பாம்பைப்போல பின் தொடர்ந்துகொண்டே வந்தது என்று எழுதுகிறார். நாவலை நாம் சற்று உணர்lந்து கொள்ள வாய்ப்புள்ள இடங்கள் இவை.

தாத்தா இவனுக்கு செல்லம். அவனோடு வெளியே செல்வார். நான் சொல்லாமல் அந்த இடத்துக்கு போகாதே என்று தாத்தா ஒரு இடத்தை காட்டி எச்சரிக்கிறார்.

இதற்கு பிறகு நாவலின் பெரும்பாலான பகுதி கதை சொல்லியின் வித்யாசமான காம வெளி பற்றியே தன்னிலையை பேசுகிறது. கீர்த்தனா என்ற செய்தி வாசிப்பாளர் காதலியாக இருக்கிறாள். இவனையே மீறும்படியான காமக் களியாட்டங்கள் கொண்டவளாக கீர்த்தனா இருக்கிறாள். பெண்களைக்கண்டால் அல்லது அவர்களின் நினைவில் தனது குறியை தடவி உணர்ச்சியேற்றிக்கொள்ளும் பயக்கும் இவனை முழுக்க ஆக்கிரமிக்கிறது.

ஏறக்குறைய நாவலில் காமம் பற்றி வரும் இடங்கள் முழுதும். இதற்காக, பெண்களை ஸ்பிரசிக்கும் நோக்கத்துக்காக கோவிலுக்கு செல்வதை வழக்கமாக கொள்கிறான். தன்னைப்போல் பழக்கமுள்ள பலரின் நட்பும் கிடைத்து ஒரு நட்பு வட்டமே உருவாகிறது. மயிலாப்பூர் கோவில் முதல் பல கோவில்களுக்கு செல்கிறான். எல்லா இடத்திலும் பிடிபட்டு அடிபட்டு நைய புடைக்கப்படுகிறான். செல்லுமிடத்தில் இப்படிப்பட்ட பழக்கமுள்ளவர்கள் ஒருவரை ஒருவர் எப்படியோ கண்டு கொள்கிறார்கள் என்பது ஆச்சரியமாக இருக்கின்றது.

அர்ச்சனாவுடன் காமத்தில் ஈடுபட்டாலும் உச்சங்களை தொடுவதில் ஒருவித அச்சம் அவனுக்கு இருக்கிறது. அதை அவளும் உணர்கிறாள். ஆண்மையற்ற ஒருவனின் கதை அல்ல இது. பணி புரியும் இடத்தில் எதிரே உள்ள பெண்ணைப் பார்த்துக்கொண்டு ரசித்துக்கொண்டே இப்படியான 'கர' லீலைகளில் அவன் ஈடுபடுவது வெளியே தெரிந்துபோய் பெரும் சிக்கலை உண்டாக்குகிறது. ஒரு பெண்ணே அவனுக்கு அறிவுரை சொல்லும் அளவுக்கு. கூட்டத்தில் பெண்களை முறையின்றி தொடுவது, அடி படுவது, தனியாக வரும் பெண்களை விட கணவன்களோடு வரும் பெண்களை பற்றி அதீதமாக கற்பனை செய்வது என்று உறுவித காம பிறழ்ச்சி எண்ணம் கொண்டவனாக இருக்கிறான். தர்காவுக்கு செல்கிறான். பொத்தி வைத்திருப்பதை பார்த்துவிடவேண்டும் என்று துடிப்பு உணர்வதாக சொல்கிறான். தேவாலயங்கள்தான் அவனுக்கு பிடிப்பதில்லை. ஒரு திருமண வரவேற்புக்கு சென்றிருந்த கீர்த்தனாவை காண செல்லும்போது அவளோடு பேசிக்கொண்டிருந்தவனோடு இவளை இணைத்து வைத்து கற்பனை செய்து பேசி பெரும் சிக்கலுக்கு உள்ளாகிறான். உன்னைப் பார்த்தா யாருக்கும் உன்னோட படுக்கணும்னு தோணிடும் இல்லையா என்று அவளையே கேட்கிறான். 'இது நீயில்லை. நீயா திரும்பிவிடு. உன் கண்களில் மஞ்சள் நிறம் தெரிகிறது' என்று சொல்லி விட்டு போய்விடுகிறாள். அவனை மீறி அவன் வாயிலிருந்து தெறிக்கும் இந்த வார்த்தை அவனது மாமா அத்தையிடம் கேட்ட அதே வார்த்தை. இப்படிப்பட்ட கனமான இடங்கள் எல்லாம் மிகவும் தட்டையாக அமைந்திருக்கின்றன. மரமான கனவுத்தன்மை கொண்ட புனைவு மொழியை தவிர்க்கும் உபாயம் இப்படிப்பட்ட இடங்களில் தோற்று போகிறது.

ஒருநாள் கற்பகாம்பாள் கோவிலுக்கு சென்று ஒரு பெண்ணை தொடர்ந்து கொண்டு போய் அவள் கூட்டத்தில் கரைத்துவிட அம்மன் சிலையை பார்க்கிறான். கால் கட்டை விரலில் இருந்து பார்த்துக்கொண்டு போகிறான். மார்பை பார்க்க முயலும்போது மஞ்சள் ஒளி பட்டு துலங்க இனி இங்கே வரவே கூடாது என்று ஓடி வந்து விடுகிறான்.

மதுரை கோவிலுக்கு செல்கிறான். இப்படி நீளும் நாவல் பழனிக்கு செல்வதில் திருப்பம் கொள்கிறது. இடுப்புக்கு கீழே அடிபட்ட நாயொன்று இவனது கண்ணில் படுகிறது. அது ஒரு எச்சில் சாமியாருக்கு அருகில் எப்போதும் கிடக்கிறது. முன் இரண்டு காலை மட்டும் ஊன்றி பின்பாகத்தை இழுத்துக்கொண்டு நகர்கிறது. இவனும் அங்கே அப்படித்தான் நகர்கிறான். கோவில் இடங்களில் படுத்துக் கொள்கிறான்.

அந்த சாமி பேசாதவர். குடிசையில் எப்போதும் இருப்பார். வேப்பங்குச்சியால் பல் துலக்கி எச்சில் துப்பியபடியே இருப்பார். யாரையாவது திட்டுவார். துப்புவார். அவர்களுக்கு நல்லது நடக்கும். இந்த சாமியார் பாத்திர படைப்பு சேஷாத்ரி சுவாமிகள் மற்றும் திருவண்ணாமலையில் இருந்த ஒரு சாமியாரை நினைவுக்கு கொண்டுவருகிறது. சாமியாருக்கு இவனுக்கும் ஒரு உள்ளார்ந்த தொடர்பு நிலவுகிறது. அவர் இவனை தனது சீடன் என்று சொல்லும் அளவுக்கு. சரியான உடை இல்லாமல் தவழ்ந்து கொண்டு நகரும் இவனை சின்ன சாமி என்றே மக்கள் அழைக்க ஆரம்பித்து விடுகிறார்கள். சாமியாரால் மழை பெய்யும் என்று ஊர் எதிர்பார்க்கிறது. ஆனால் கடைசி வரை பெய்வதே இல்லை. வெப்பம் ஊரை பொசுக்க்குகிறது. மரணங்கள் நிகழ்கின்றன.

நாவலின் பிற்பகுதி முழுதும் இப்படி பழனியில் (ஊரின் பெயர் அப்படி நேரிடையாக சொல்லப்படவில்லை) அனாதைத்தனமான கதை சொல்லி பற்றி, சாமி பற்றி பலதும் பேசுகிறது. ஆனால் கீர்த்தனா முகம் கொஞ்சம் கொஞ்சமாக மறந்து போய்விடுகிறது. அங்கு வரும் மலையாள பெண்களை பார்க்கிறான். அவனுக்கு உடலெல்லாம் புண்கள் வருகின்றன. தனது அடி வயிற்றின் ரோமங்களை பிய்த்து பிய்த்து புண்களாகின்றன. ஆனால் அவை ஆறிப்போகின்றன. காயங்களின் தடங்கல் இல்லாமல்.

இவனுக்குள் ஒரு கோவணம் மட்டுமே இறுதியில் கிடைக்கிறது.

கோவில் வரும் கூட்டத்தில் நடுவே இவன் கைகளை முன்னாள் கூப்பியபடி முதலை நகருவது போல செல்கிறான். 'ஒரு வேல் போல கூட்டத்தை கிழித்துக்கொண்டு போனேன்' என்று ஒரு வரி வருகிறது. இதுவரை பெண்களுக்காக கோவில் கூட்டத்துக்கு சென்றவன் இப்போது அவனை சுற்றி அவனை சாமி என்று சொல்லி பெண்கள் கூட்டம் இருக்கிறது. இந்த மாற்றத்தை மெதுவாக நாவல் சொல்லிப்போகிறது.

நாவலில் பின்பகுதியில் பல இடங்களில் அவனது எண்ணத்துக்கு பதில் சொல்லும்படி அல்லது கட்டளையாக பல முறை குரல் ஒன்று கேட்கிறது. இளைஞர் குரலாய் முதிய குரலாய் முகமற்ற குரலாய். நாவலில் இப்படி அடிக்கடி குரல் கேட்பதும் அதை அவன் தொடர்வதும் கொஞ்சம் செயற்கை தனமாக இருக்கிறது. இப்படியான இடங்கள் செறிவான மொழியின் மீது சவாரி செய்யும்போது இப்படி தட்டையாக தோன்றாது. ஆனால் இங்கே அப்படி நிகழவில்லை.

இப்படி குரலால் உந்தப்பட்டு மலை மேல் செல்கிறான். அங்கே யாரை பார்க்கவேண்டும் என்று குரல் சொல்கிறது. முருகனுக்கு கணக்கு சமர்ப்பிக்கப்படும் அந்த நேரத்துக்கு கருவறைக்குப் போ என்கிறது. உன்னை அழைத்துப் போக ஒருவன் வருவான் என்கிறது. போனால் ஒரு குரல் அழைக்கிறது. வழி சொல்கிறது. மலையை ஏறக்குறைய அடைந்தபின் இனி நீ செல் என்று படிகளில் தங்கிவிட இருளான இடம். மேலும் செல்லும்போது முருகன் தெரிகிறார். பிறகு குரலின் ஆணையில் மலை இறங்கி வருகிறான். அப்போது ஒரு குரல் கிழக்கில் உள்ள வெள்ளியை தவற விடாமல் பார் என்கிறது. காலை இளகும் ஒரு பொழுதில் அது உதிர்கிறது. கீழே இறங்கி வந்து பார்த்தால் சாமியார் சமாதி ஆகி இருக்கிறார். அவருக்கு அந்த குடிசையிலேயே சமாதி அமைக்கப்படுகிறது. இவனை இன்னும் ஒரு நாள் மட்டுமே இங்கு தங்கி இருக்க அனுமதித்து கூட்டம் கலைகிறது. சாமியினரிடம் கதற ஒரு சமயம் அந்த நாய் சமாதி மேல் இருக்கிறது. அதை இவன் தொட அது நகர்ந்து கொண்டே போகிறது. பனை தோப்பு தாண்டி ஒரு இடத்தில் கொண்டு சென்று விடுகிறது. அது இவனுடைய தாத்தா சொன்ன இடம். அங்கே ஒரு பெரிய பள்ளம். அங்கே பெரிய பாம்பு ஒன்று வாயை பிளந்து நிற்க இந்த நாய் அதன் வாய்க்குள் செல்கிறது.

வா என்று சொல்லி உட்காருகிறாள் அத்தை. என்னை தோண்டு நீர் கிடைக்கும் என்கிறாள். அந்த மண் தரையை தோண்டும்போது குங்கும பூசிய பாதம் கிடைக்கிறது. அப்படி கேட்டது தப்புதான் கீர்த்தனா என்று இவன் வாய் முணுமுணுக்கிறது. ஒரு சிலை கிடைக்கிறது. அது சுபிட்ச முருகன். பச்சை ஒளி எங்கும் பரவ அதை அனைக்குமோபிடு நெஞ்சில் கரைந்து போகிறது. கீர்த்தனாவை நினைத்தபடி மண்ணில் வீழ்ந்தேன். என் உடலே குறியாய் மாறி விடைத்துக்கொண்டது என் முதுகில் நீர்த்திவலைகள் பரவின. மழையாக இருந்தேன் என்று முடிகிறது நாவல்.

செறிவான கனமான மொழிப் பிரயோகத்தை தவிர்த்து எழுதி இருக்கிறார். இருப்போனும் சில நல்ல வரிகள் உண்டு.

கிளம்பிப் போனேனா? விரட்டப்பட்டேனா ?

அவளிடம் பிச்சிப்பூ நறுமணம் உடலெங்கும் படரும்

மண்டைக்குள் சிவப்பு பூரான் வழக்கத்தை மீறி வேகமாக ஊர்ந்தது (மாமாவின் சந்தேகம் பற்றி எழுதும்போது )

அவளுக்கு ஒரு மூர்க்கமான அணைப்பு எப்போதும் தேவையாக இருந்தது. அதை கொடுக்கும் கரங்கள் எப்போதும் என்னுடையதாக இருந்தது.

எதுவாக சிந்திக்கிறேனோ அதுவாக நான் இருக்கிறேன் (புத்தத்தில் பொதுவாக சொல்லப்படுவது. நெப்போலியன் சொன்னதாகவும் சொல்லப்படுகிறது )

எதுவாக இருப்பாயா அதுவாகவே இருப்பாய்.

நாவலிடையே பூடகமாக தத்துவார்த்தமாக கேள்வி பதிலாக சில இடங்கள் வருகின்றன. தனது பாலியல், வளர்ந்து வரும்போது அறியும் தாத்தா பற்றிய செய்திகள், அத்தையின் நினைவுகள், அச்சம், காமம், பிறழ்வு, பிரமைகள், தவிர்க்கமுடியாமை என பலவும் நாவலில் நூலறுந்த மணிகளாக தனித்து கிடக்கின்றன. அவற்றை நாம் இனம் கண்டு கோர்த்துக் கொண்டு படிக்க முயலும்போது ஒரு உணர்வுருவம் கிடைக்க கூடும். அப்படி முயலும்போது கூட அது காத்திரமான ஒன்றாக எழவில்லை.

இரவில் வானத்தை பார்த்து சில நட்சத்திர புள்ளிகளை இணைத்து ஒரு உருவத்தை நாம் உருவாக்கிக் கொள்ள முடியும். இந்த நாவல் சிறந்த ஒன்று என்பவர்கள் அப்படி இணைத்து பார்த்துக் கொள்ளும் திறன் கொண்டவர்களாக இருக்கலாம். ஆனால் இப்போதைக்கு நிறைய மேகங்கள் எனக்கு மறைக்கின்றன.

No comments:

Post a Comment

இயற்பியலின் தாவோ - பிரிட்ஜாஃப் காப்ரா

இயற்பியலின் தாவோ பிரிஜாப் காப்ரா Fritjof Capra மொ பெ போன். சின்னத்தம்பி முருகேசன் சந்தியா பதிப்பகம் #இயற்பியலின்_தாவோ படிக்கத்  துவங்கி இர...