Wednesday, 29 April 2020

Blindness - சரமகோ


BLINDNESS


(பதிவு 1500 வார்த்தைகள்)
 



ஒரு ஆள் சாலையில் தனது காரில் இருக்கும்போது சிக்னல் மாறும் அந்த நொடியில் திடீரென கண் பார்வையை பறிபோகிறது. அதாவது திடீரென பார்வை பறிபோய்விடுகிறது. அவ்வளவுதான். இது தெரியாமல் எல்லோரும் ஹார்ன் அடித்து அவசரப்படுத்த ஒரு ஆள் உதவிக்கு வந்து ஓரமாக காரை நிறுத்த உதவி செய்கிறான். பார்வை போயிற்று. ஆனால் எல்லாமே பால் வெள்ளையாக இருக்கின்றன. உருவங்கள் கூட தெரிவதில்லை. ஒரு பால் அருவி போல என்று எழுதுகிறார்.  வீட்டிற்கு கூட்ட செல்லப்பட்டு அங்கே தடவி தடவி சென்று சோபாவில் உட்காருகிறார். மனைவி வருகிறார். தனக்கு பார்வை போயிற்று என்பதை நம்ப முடியாமல் மனைவியிடம் சொல்ல ஒரு டாக்டரிடம் செல்கின்றனர். அவர் எல்லாம் சோதித்து விட்டு ஒரு  பிரச்சனையும் இல்லையே என்கிறார். மீண்டும் மீண்டும் கண்ணை கருவி மூலம்  சோதிக்கிறார்.

இதனிடையே சாலையில் உதவி செய்த ஆசாமி இவரை வீட்டில் விட்டுவிட்டு போகும்போது காரை திருடிக்கொண்டு போய் விடுகிறார். இந்த விஷயம் இவர் மனைவி வீட்டுக்கு வந்த பிறகுதான் தெரிய வருகிறது. மறுபடி கண் மருத்துவ மனையில் பலரும் வரிசையில் காத்திருக்கின்றனர். சிறுவன். பெண். முதியவன் என. அந்த கண் மருத்துவர் புத்தகத்தை படித்து விட்டு படுக்க போகிறார். கண் விழித்து பார்த்தால் அவருக்கும் கண் தெரிவதில்லை. எல்லாம் வெள்ளையாக தெரிகிறது. இதற்குள் இப்படி நிறைய பேருக்கு பார்வை போகிறது என்றும் இது ஒரு கொள்ள நோய் என்றும் சுகாதார நிறுவனம் முடிவு செய்கிறது. மருத்துவ துறை வந்து இவரை வேனில் அழைத்து போகிறது. தன் கணவனுக்கு உதவும் பொருட்டு, தனக்கும் கண் தெரியவில்லை என்று நடித்து அவர் மனைவியும் உடன் செல்கிறார்.  அந்த திருடனுக்கு கண் போகிறது. அந்த சிறுவன். பெண். முதியவர் எல்லோருக்குமே பார்வை பறிபோகிறது. அரசாங்கத்தின் மருத்துவ துறை இது ஒரு கொள்ளை  நோய் Epidemic என்று அறிவித்து வெள்ளை  வைரஸ் தாக்குதல் white sickness என்று பெயரிடுகிறது. பார்வை போனவர்களையும், லேசாக அறிகுறியோடு பாதிக்கப்பட்டவர்களையும் வண்டி வண்டியாக ஏற்றிக்கொண்டு வந்து  காப்பகம் என்ற பெயரில் ஒரு குடோனில் அடைக்கிறார்கள். பார்ப்பதன் மூலம் பரவும் கொள்ளை நோயாக இருக்கிறது. விடுதியின் வாசலில் நீளமாக ஒரு வழிகாட்டி கயிறு கட்டப்பட்டு எல்லோரும் அதை பிடித்துக்கொண்டே உள்ளே போகவேண்டும். மீண்டும் திரும்ப இயலாது. தனிமைப் படுத்தப்பட்டு ராணுவ வீரர்களை காவலுக்கு வைக்கிறது அரசு. வெளியே வந்தால் கேள்வியின்றி  சுடு என்று சொல்கிறது. 

முதலில் இருவர் மூவர் என்று ஆரம்பித்து ஏழு பேர் அடைக்கப்படுகிறார்கள்.  ஊருக்கு வெளியே ஆட்களில்லாமல் போன மனநல விடுதி ஒன்றை அவசரமாக திறந்து பார்வை போனவர்களை  அனுப்புகிறார்கள். ஒரு விடுதியில் ஒரு ஆளோடு ஆடையின்றி சுகித்திருந்த ஒரு பெண்ணுக்கும் பார்வை போகிறது.  எல்லோரும் இந்த காப்பகத்துக்கு கொண்டு வரப்படுகிறார்கள். வாசலில் இருந்து ஒரு கயிறு கட்டப்பட்டு அதை பிடித்துக்கொண்டு இவர்கள் உள்ளே சென்று விடவேண்டும். படுக்கைகள் இருக்கின்றன.  உணவுகள் அனுப்பப்படும். விடுதி இரண்டு பாகமாக பிரிக்கப்பட்டு ஒரு புறம் பார்வை முற்றிலும் போனவர்கள் மறுபுறம் பாதிப்புக்கு உட்பட்டவர்கள். பாதிப்பு ஆனவர்களுக்கு முழுதும் பார்வை போனால் அவர்கள் இந்த பக்க விடுதிக்கு அனுப்பப்படுவார்கள்.
ஆனால் உதவிக்கு என்று யாரும் அருகே வர மாட்டார்கள். தங்களது எல்லா தேவைகளையும் தாங்களே கவனித்து கொள்ளவேண்டும். சாப்பிட்ட பிறகு மீதி இருப்பவை பார்சல் குப்பைகள் எல்லாவற்றையும் எரித்து விட வேண்டும். என்ன நடந்தாலும் யாரும் வர மாட்டார்கள். உள்ளே தீவிபத்து நடந்தால் அவர்களேதான் அணைத்துக்கொள்ளவேண்டும். இதெல்லாம் ஒரு ஒலி பெருக்கி மூலம் அவர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது. 

இப்படி வண்டி வண்டியாக சுமார் முன்னூறு பேர்வரை அடைக்கப்படுவது வரை இருந்து பிறகு நிரம்பி விடுகிறது. அங்கே அவர்கள் படும் இன்னல்கள், உரையாடல்கள், முரண்கள், சண்டைகள், தவிப்புகள், உதவிகள், பசி, இச்சைகள், உடல் உபாதைகள், மரணங்கள், ஆலோசனைகள்,பரஸ்பர உதவிகள் என்று நீள்கிறது நாவல். இறுதி அத்தியாயம் வரை நாமும் குடோனுக்குள்ளேயே இருக்கிறோம். அங்கே வெவ்வேறு சிக்கல்களால் உருவாகும் மரணங்கள் தவிப்பை உண்டாக்கினாலும், பிணம் ஒரு பக்கம் இருக்க சற்று தள்ளி அவரவர்கள் படுத்து தூங்கிக்கொண்டு இருக்கிறார்கள். பிணத்தை நாமேதான் புதைக்க வேண்டும் என்று டாக்டரின் மனைவிஅழைத்தாலும் பலரும் வருவதில்லை. சிலரின் உதவியுடன் அந்த பிணம் உள்ளேயே புதைக்கப்படுகிறது.

சரி அவர் யார் ? ஏன் சாகிறான் ? அந்த கார் திருடன்தான் அவன். இப்போது குருடனாகி போனவன். தான் திருடவில்லை என்று சாதிக்கிறான். காரை பறிகொடுத்த அந்த குருடர் கேட்க சண்டை வலுக்கிறது. அடித்துக் கொள்கிறார்கள். (அடிக்க முற்பட்டு காற்றில் கையை வீசிக்கொள்கிறார்கள் ). பிறகு உருண்டு புரண்டு சண்டை. ஒரு நாள் சிறுநீர் கழிக்க எப்படி செல்வது எங்கே செல்வது என்று தவித்து கழிவறையை டாக்டர் மனைவி கண்டுபிடித்து சொல்ல, வழி தவறி விடாமல் இருக்க ஒருவர் தோளை மற்றவர் தொட்டபடி வரிசை ஏற்படுத்தி நகர்ந்து செல்கிறார்கள். இந்த திருடன், கண் நோயால் பாதிக்கப்பட்ட பெண்ணின் பின்னால் நிற்கும்போது அவளை தகாத முறையில் தொடுகிறான். முதலில் கண் தெரியாமல் தொடுவதாக நினைக்கிறாள். பிறகு அவன் நோக்கம் புரிந்து அவனுடைய காலை தனது குதி செருப்பு காலால் உதைக்கிறாள். காயம் உண்டாகி ரத்தம் வழிகிறது.  உனக்கு எங்கே காலை வைக்க வேண்டும் என்று தெரியாத என்று கூச்சலிடுகிறான். பதிலுக்கு அவள் உனக்கு எங்கே கையை வைக்க வேண்டும் என்று தெரியாதா என்று கத்துகிறாள். இந்த காயம் மருத்துவம் இல்லாமல் சீழ் பிடித்து அந்த இடமே நாற்றம் வீசுகிறது. கால் வீங்கி மரத்து போய் அழுகி அவன் இறந்து போகிறான். அவன் மேல் கோபமுற்று அவனை உதைத்த பெண் இப்போது குற்ற உணர்ச்சி கொள்கிறாள். நான் அப்படி உதைத்திருக்க வேண்டியதில்லை என்று. இறப்புக்கு முன் அவனும் தனது செய்கைக்கு மன்னிப்பு கோரி விடுகிறான்.  பார்வை பறிபோன நிலையில் கூட தன்னைப்போலவே பார்வை இழந்த பெண் என்ற நாகரிகம் கூட  இல்லாமல் இச்சைக்கு உட்பட்ட போது, அதனால் சம்மந்தப்பட்ட இருவரின் உணர்வும் மரணத்தின் முன்னால் மெதுவாக மாறிவருவதை பார்க்க முடிகிறது ஒரு சிறுவனுக்கு பார்வை போகிறது. அம்மா அம்மா என்று பிதற்றி அழுது கொண்டே இருக்கிறான். கண்சிவப்பு நோயுற்ற பெண் அவனை ஆதரவுடன் கவனித்து கொள்கிறாள்.

நாவலில் அனைவருமே பார்வையற்றவர்கள். டாக்டரின் மனைவி மட்டுமே கண் தெரிந்து ஆனால் குருடராக இருப்பதாக பொய் சொல்லி செயல்படுகிறார். ஓரிருவருக்கு அதை ஊகிக்க முடிகிறது. ஆனால் அவர்கள் அதை வெளியே சொல்வதில்லை. 'பொய்மையும் வாய்மை இடத்த'.  உலகம் எல்லோரும் குருடர்களாக இருக்கும்போது நான் மட்டும் அனைத்தையும் பார்க்க முடிவது என்பது பெரும் வலி என்று ஒரு அருமையான வரி வருகிறது.

இப்படி பலவித இன்னல்கள், நிகழ்வுகள், உணவு மறுக்கப்படும்போதும் அநியாயங்கள் செய்யப்படும்போதும் உருவாகும் போராட்ட நிலை, உள்ளேயே பொறுக்கித்தனங்கள் செய்யும் ரவுடிகள் கூட்டம், பாலியல் சுரண்டல்கள் உருவாகின்றன. டாக்டரின் மனைவி மட்டுமே கைக்கெடிகாரம் கட்டிக்கொண்டிருக்கிறாள். மற்றவர்களுக்கு இரவு பகல் என்பதே தெரிவதில்லை. பின்னால் வந்து சேர்ந்து கொள்ளும் ஒரு கண் கட்டுப்போட்டிருக்கும் முதியவர் ஒரு ரேடியோவை கொண்டு வருகிறார். அதன் மூலம் வெளியுலக செய்திகள் சிறிது நாட்களுக்கு தெரிகிறது.
பின்னால் வரும் பார்வை போன நோயாளிகளில்  ஒரு ரவுடி கைத்துப்பாக்கியால் கூரை நோக்கி சுட்டு எல்லோரும் தங்களிடம் இருக்கும் பணம் பொருள் எல்லாம் தன்னிடம் தந்துவிடவேண்டும். விடுதிக்கு வரும் உணவை தான்தான் அவரவர் பணத்துக்கு தகுந்தபடி விநியோகிப்பேன். பதுக்கி வைத்திருப்பது தெரிந்தால் அடுத்த நிமிடம் மரணம்தான் என்கிறான்.  என்று அக்கிரமம் செய்ய அனைவரும் உயிருக்கு  பயந்து கொடுத்து விடுகிறார்கள். டாக்டரின் மனைவி ஒரு சிறிய நகம் வெட்டும் கத்திரிக்கோல் தவிர பிற அனைத்தையும் கொடுத்து விடுகிறாள்.

அந்த டாக்டர் ஒரு சமயம் எழுந்து வந்து அந்த கண்சிவந்த நோயுற்ற பெண் அருகில் வருகிறார். அவளருகே அமர்ந்து தொடுகிறார். அவர்கள் உடலுறவு கொள்வதை தூரத்தில் இருந்து டாக்டர் மனைவி பார்த்துவிடுகிறாள். இவர்கள் அருகில் வந்து அவளை மெல்ல தழுவி கொடுக்கிறாள். அவளுக்கு தெரியும் இவளுக்கு கண் பார்வை உண்டு என்பது.  பின்னொரு சமயம் துப்பாக்கி சூடு முடிந்து திரும்புகையில் ஒரு ஓரமாக இருவர் தரையில் சல்லாபிப்பது இவளுக்கு தெரிகிறது. கண்கள் இல்லாதவர்கள் உலகில் கண்கொண்டு இருப்பது விதவிதமான சங்கடங்களை தருகிறது.
ஒரு நாள் அவன் உணவுகளை தரும்போது நாளை முதல் உங்கள் கூட்டத்தில் இருந்து எங்கள் சுகத்துக்கு பெண்கள் வரவேண்டும் என்கிறான். அனைவரும் கொதிக்கின்றனர். வராவிட்டால் சுடப்படுவார்கள் என்கிறான். இதற்கு முன்பு துப்பாக்கி சூட்டில் சிலர் இறக்கிறார்கள். யார் இறந்தார்கள் என்று யாருக்கும் தெரிவதில்லை. 

பெண்களை அனுப்பும் கேவலத்தை செய்ய மாட்டோம் எனும்போது சிலர் பெண்களின் உடலமைப்பு ஆண்களை திருப்தி செய்வதற்குதானே. அதனால் தப்பென்ன என்று சொல்லும்போது, கண்சிவப்பு நோய்க்கு வந்து குருடான அந்த பெண் "அவர்கள் ஆண்களை வரச்சொன்னாள் நீங்கள் யார் போவீர்கள் என்று கேட்கிறாள். அனைத்து பெண்களும் பிறரும் சிரிக்கிறார்கள். ஆனால் உயிர் முக்கியம்.  கடைசியில் தூக்கமின்மை நோயால் அவதியுறும் ஒரு நடுவயது பெண் நான் போகிறேன் என்கிறாள். டாக்டரின் மனைவி தானும் செல்வதாக சொல்ல அந்த பெண்ணும் சொல்ல அனைவரும் தட்டு தடுமாறி அவர்கள் பகுதிக்கு செல்கிறார்கள். இவர்கள் வரும் சப்தம் கேட்டு அவர்கள் குதூகலித்து கேலி செய்து அனைவரையும் வன்புணர்வு செய்கின்றனர். மனித தன்மையற்ற ஆணின் குரூரம் வெளிப்படுகிறது. அந்த ரவுடி தலைவன் ஒவ்வொரு பெண்ணையும் தனது கைகளால் தடவி உணர்ந்து தரப்படுத்துகிறான். பிறகு தனக்கு  பிறகுதான் மற்றவர்கள் என்று சொல்லி  இருவரை அழைத்து போகிறான். அதில் டாக்டரின் மனைவியும் ஒருத்த மோசமாக வீணடிக்கப்பட்ட தேகங்களுடன் அவர்கள் தள்ளாடியபடி ஒருவரை ஒருவர் பற்றிக்கொண்டு வெளியே வரும்போது, கால்கள் நடக்க முடியாமல் ரத்தம் வெளியேறி மயங்கி விழுகிறாள் அந்த நடுத்தர வயதுப்பெண். தூங்க முடியாமல் அவதியுற்ற இந்த பெண் இனி நிம்மதியாக தூங்குவாள். ஏனென்றால் அவள் இறந்து விட்டாள் என்று அறிவிக்கிறான் டாக்டர் மனைவி.அவளையும் எப்படியோ ஒருவழியாக குழி தோண்டி புதைக்கிறார்கள்.
மீண்டும் ஒருமுறை அவர்களை அப்படி அழைக்கும்போது கையில் அந்த கத்தரிக்கோலுடன் செல்லும் டாக்டரின் மனைவி அவனை கழுத்தில் ஆவேசமாக குத்தி கொலை செய்கிறாள். கொலை நடந்தது என்றால் பார்வை தெரிந்த யாரோ ஒருவர் இருக்கவேண்டும் என்று சந்தேகம் அவர்கள் கும்பலில் எழுகிறது. ஆனால் முன்வந்து கண்டுபிடிக்க அனைவருக்கும் அச்சம்.
உணவு சரியாக தராமல் இருப்பதால் கோபமுற்ற இவர்கள் கதவு அருகே சென்று போராட முயல்கிறார்கள். ஆனால் வெளியிலிருந்து காவலர்களால் பொத்தாம் பொதுவாக சுடப்படுகிறார்கள். துப்பாக்கி சூட்டினால் சாவுகள் . இறுதியில் ஒரு செயற்கை தீவிபத்தை உண்டாக்கி எல்லோரும் வெளியே வரும்போது, காவல் நின்ற ராணுவத்தினர் காணவில்லை. அவர்களுக்கும் வெள்ளை நோய் தாக்கி விடுகிறது. மொத்த ஊரே  குருடர்களால் நிரம்பி கிடக்கிறது. வீடுகள் கடைகள் சூறையாடப்படுகின்றன. 

டாக்டரின் மனைவி மட்டும் வெளியே போய் உணவு தேடுகிறாள். எங்கும் பார்வையற்றவர்கள் திரிகிறார்கள். தெரு ஓரமாய்  கிடக்கிறார்கள். ஒரு கடைக்கு சென்று பின்புற கதவு வழியாக ஸ்டோர் ரூமில் இருந்து  பைகளில் சுமந்து கொண்டு வருகிறாள். கதவு திறந்து கிடப்பதால் அதை மூடிவிட்டு வருகிறாள். உணவுப்பொருள் வாசனை அறிந்து சில பார்வையற்றவர்கள் தடுமாறி எழுந்து வரும்போது லாவகமாக அவர்களை தவிர்த்து விட்டு ஓடுகிறாள். மழை வருகிறது. விடுதி செல்லும் வழி தெரியாமல் பிறகு கண்டு பிடிக்கிறாள்.அனைவருக்கும் உணவு தருகிறாள்.
இந்த ஆரம்ப நண்பர்கள் மட்டும் ஒன்றாக கிளம்பி தங்கள் வீடுகள் நோக்கி போகிறார்கள். அந்த கண் சிவந்த பெண் வீட்டில் பெற்றோர்கள்  யாருமில்லை. பக்கத்து வீட்டு கிழவி முயல்களை கோழிகளை  சமைக்காமல் பச்சையாக தின்று உயிர்வாழ்கிறாள். வீட்டின் உணவு மேசையில் ரத்தம் படித்த தட்டுக்கள் இருக்கின்றன. அந்த கிழவர் வீடு தனியாள் என்பதால் போவதே இல்லை. ஒரு வழியாக டாக்டரின் வீட்டில் அனைவரும் தடுமாறி வந்து சேர்ந்து தங்குகிறார்கள்.
மழை நீரில் குளிக்கிறார்கள். துணி துவைக்கிறார்கள். இருப்பதை வைத்து சாப்பிடுகிறார்கள். பிறகு டாக்டரின் மனைவி பழைய கடைக்கு சென்று மறுபடி உணவுப்பொருள் எடுக்க செல்லும்போது உடன் வரும் நாய் ஊளையிடுகிறது. வர மறுக்கிறது. மீறி இவள் செல்லும்போது உள்ளே போக முடியாமல் நாற்றம் வீச குமட்டி வாந்தி எடுக்கிறாள். ஏனென்றால் உள்ளே உணவு பொருள் எடுக்க சென்றவர்கள் கதவு மூடி இருக்கவே திரும்பி வர வழி தெரியாமல் அப்படியே செத்து அழுகி இருக்கிறார்கள். அந்த கதவை தான்தான் மூடிவிட்டு வந்தோம் என்பது நினைத்து குமுறி அழுகிறாள்.

அவரவர் தங்களை இஷ்டத்துக்கு ஒரு வீட்டில் சென்று தங்குகிறார்கள். சாலைகளில் பிணங்கள் கிடக்கின்றன. நாய்கள் அவற்றை குதறுகின்றன. பின்னொரு சமயம் நாய்களை நாய்களை கொன்று தின்கின்றன. டாக்டர் மனைவி பசிக்கு உணவிட்டதால் ஒரு நாய் மட்டும் இவர்களோடு கூடவே வருகிறது.  நகரமெல்லாம் குருடர்கள் மயம். அரசாங்கத்திலும் நோய் பரவி விடுகிறது. குருடர்களை நிர்வகிக்கும் குருட்டு அரசாங்கம் என்று ஒரு வரி வருகிறது.
ஒரு நாள் இரவு ஒரு ஆளுக்கு பார்வை கிடைக்கிறது. பிறகு வெவ்வேறு சமயத்தில் ஒவ்வொருக்கும் பார்வை வருகிறது. இதை அறிந்தபின் அந்த டாக்டரின் மனைவி - ஊரெல்லாம் குருடாக இருந்த போது அனைவரின் கண்ணாக இருந்தவள்  - வெளியே வந்து வானத்தை பார்க்கிறாள். வெண்மையாக இருக்கிறது என்று முடிகிறது நாவல். அவளுக்கு இப்போது பார்வை போகிறதா இல்லையா என்று ஊகிக்க முடிவதில்லை.  ஒரு விதமாக சரமாகோ அதை வாசகரின் மன நிலைக்கு தள்ளிவிடுகிறாரோ என்று தோன்றுகிறது.

நாவல் இறுதியில் எப்படி முடிகிறது என்பதை வாசித்து அனுபவிக்கலாம். இறுதியில் டாக்டர் சொல்கிறார். நமக்கெல்லாம் பார்வை பறிபோகவில்லை. ஆனால்  நாம் குருடர்களாகத்தான் இருக்கிறோம் என்று நினைக்கிறேன். பார்க்க முடிந்த குருடர்கள். ஆனால் பார்ப்பதில்லை. இங்கே நாவல் முழுதும் சொல்லப்படும் குருடு என்பதும், நோய் என்பதும் வெறும் கண்கள் சம்மந்தப்பட்ட விஷயம் அல்ல என்று பொறி தென்படுகிறது.  இப்போது நாவலை அசை போடும்போது நாவல் வேறு ஒன்றாக தென்படுகிறது.

அதெப்படி வெள்ளையான குருடு. அதற்கு மருந்து இல்லையா. அப்படி ஒரு நோய் சாத்தியமா? ஒருவர் மற்றொருவரை கண்கொண்டு பார்த்தாலே நோய் தொற்று என்பது உண்டா? என்றெல்லாம் நிதர்சன கேள்விகளுக்கு இங்கே இடமில்லை. ஏனென்றால் நாவலில் அதற்கெல்லாம் ஒரு சம்மந்தமும் இல்லை.

2 comments:

  1. இது `பார்வை தொலைத்தவர்கள்” என்கிற பெயரில் சங்கரநாராயணின் மொழியாக்கத்தில் வெளிவந்திருக்கிறது... சரமாகோவின் எழுத்து நடை வித்தியாமனது... யார் எப்போது பேசுகிறார்கள் என்பதைப் புரிந்து கொள்வது சற்று கடினம்... வாக்கியங்கள் தொடர்ந்து வந்தவாறு இருக்கும்... 1998 ஆம் ஆண்டு இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்ற போர்த்துக்கீசிய நாவல் இது. நன்றி ரமேஷ் கல்யாண்! தொடரட்டும் பதிவுகள்... படித்தேன், பகிர்ந்தேன் என்பதற்குப் பதில் `படித்தேன், பகிர்கிறேன்’ என்று இருந்தால் நன்றாக இருக்குமென நினைக்கிறேன்.

    ReplyDelete
  2. பாரதி புத்தகாலம் வெளியிட்டிருக்கிறது... பார்வை தொலைத்தவர்கள் எனத் தமிழில் நான் செய்திருக்கிறேன்... முடிந்தவரை வாசகர் புரிந்துகொள்கிற முயற்சிகள் மேற்கொள்ளப் பட்டன.

    ReplyDelete

கொடை மடம் - சிந்தாந்தப் பின்னணியி (யா)ல் கை நழுவும் காதலைப் போலொன்று

    கொடை மடம் - நாவல் சாம்ராஜ் பிசகு வெளியீடு, சென்னை   சிந்தாந்தப் பின்னணியி (யா)ல் கை நழுவும்   காதலைப் போலொன்று ஒரு நாவல் எ...